31 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஎருக்கத்தம்புலியூர்

                                    - நாடியவான்
அம்புலியூர் சோலை அணிவயல்கள் ஓங்கு எருக்கத்
தம்புலியூர் வேத சமரசமே -

வெண்மை நிறம் கொண்ட எருக்கம்பூ சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாகும். தலமரம் வெள்ளெருக்கு ஆதலால் எருக்கத்தம்புலியூர்.  வானில் உலாவரும் நிலா(அம்புலி)
இங்குள்ள சோலைகளில் பவனிவருகிறது. வயல்கள் மண்மகள் அணிந்த ஆபரணம் போல் அழகு செய்யும். வேதங்களின் சாரமாகிய சமத்துவத்தை உணர்த்திக்கொண்டு இங்கு சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

இவ்வூர் இராசேந்திரப்பட்டினம் என்று வழங்கப்படுகிறது. வியாக்ரபாதர் தரிசித்த தலம். அவர் தரிசித்த தலங்கள் 'புலியூர்' என்ற பெயருடன் முடிவடையும். இவ்வூர் இறைவியின் பெயர் நீலமலர்க் கண்ணி,
நீலோற்பலாம்பாள்.

திருவருட்பிரகாசவள்ளலார் -  விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

30 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருக்கூடலை யாற்றூர்
                                     - நீங்காது
நீடலை யாற்றூர் நிழல்மணிக்குன்று ஓங்கு திருக்
கூடலை யாற்றூர்க் குணநிதியே -

திருமணிமுத்தாறும்  வெள்ளாறும் ஒன்று சேரும் கூடல்.  இந்தக் கூடலில் அலைகள் ஓயாது முத்தும், மணியுமாகக் கொணர்ந்து குன்று போல் குவித்துள்ளது. இங்கு சிவபெருமான் அடியாருக்கு அருட் செல்வம் வழங்கும் குணக்குன்றாய்  அமர்ந்துள்ளான்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


29 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பெண்ணாகடம்
                                                            -  பூங்குழலார்
வீங்கானை மாடஞ்சேர் விண்ணென்று அகல்கடந்தைத்
தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே -

(தேவகன்னியர், காமதேனு, வெள்ளை யானையாகிய ஐராவதம் - வழிபட்டதால் (பெண்+ ஆ+ கடம்)
பெண்ணாகடம் என்ற பெயர் பெற்றது இவ்வூர்.  தூங்காத ஆனைமாடம் -  படுத்துக் கிடக்கும் பெரிய யானையைப் போன்ற பெரிய மாடங்கள் உள்ளதால் பெண்ணாகடம்). கடந்தை ஊர்ப்பெயர்.

இந்த ஊருக்கு மலர்களைச் சூடிய பெண்கள் வந்தார்கள். பெரிய ஆனைகள் கட்டப்பட்ட மாடங்களைக் கண்டார்கள். ஓ இது தேவர்கள் உலகம் போலும் என்று  வியந்து அங்கிருந்து திரும்பிப் போனார்கள்.   தூங்காத ஆனைகள் என்று இங்குள்ள பெரிய மாடங்களைப் புகழ்கிறார் வள்ளலார். படுத்துக் கிடக்கும்
ஆனைகள் போன்ற மாடங்கள் உடைய இவ்வூரில் சிவபெருமான் சுடர்விட்டு ஒளிரும் தீபமாய் பிரகாசிக்கிறான்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி                                       

28 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

நடுநாட்டுத்தலங்கள் - திருவரத்துறை
                                          - தங்களற்றின்
தீங்கார்  பிறதெய்வத் தீங்குழியில் வீழ்ந்தவரைத் 
தாங்கா அரத்துறையில் தாணுவே -

அளறு என்றால் நரகம். நல்ல நெறிகளைக் காண்பிக்காத தெய்வ வழிபாடு துன்பம் தரும் நரகத்தில் புகச்செய்யும். அவ்வாறு வீழ்ந்தவரை பிற தெய்வங்கள் தாங்கா!. தாணு என்றால் தூண். திருஅரத்துறையில் வீற்றிருக்கும் இறைவனோ தன்னை வழிபடுபவர்களின் துயரங்களைத் தூணெனத் தாங்குகிறான். அருள் செய்கிறான்.

திருவிட்டுறை என்று வழங்கப்படும் இவ்வூர் நிவா என்ற நதிக்கரையில் உள்ளது. சம்பந்தருக்குச் சிவபெருமான் முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் கொடுத்த தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

27 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கருவூர்

                             -- தீண்டரிய
வெங்கருவூர்  வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே -

மனிதனுடைய பிறப்புக்குக் காரணமாக விளங்குவது அவரவர் செய்த வினைப் பயன் என்கின்றனர்.
ஆராய்ச்சிக்குரிய இக்கருத்துக்கு முடிவான முடிவு இன்னும் காணப்படவில்லை. கருப்பை வாசம் கொடுமையானது. இறைவனின் கருணையால் நமக்கு அந்தத் துன்பம் மறைக்கப்படுகிறது. இவ்வாறு கருப்பையில் மீண்டும் அவதியுறா வண்ணம்  புண்ணியம் செய்த பெருந்தகையோர் சூழ்ந்து விளங்கும் இறைவன் கருவூர் ஈசன். அவன் எத்தகையவன்? நவரசங்கள் ததும்பும் பாடல்களுக்கு உரியவன்.
விண்ணப்பக்கலிவெண்பாவின் பாடல்கள் அனைத்திலும் இறைவனை நவரசமே, செழுங்கதிரே, குணநிதியே என்றெல்லாம் சிறப்பிக்கிறார் வள்ளலார்.

இவ்வூர் ஆனிலை என்றும் வழங்கப்படுகிறது. கரூர் என அழைக்கப்படும் இத்தலம் எறிபத்த நாயனார் பிறந்த இடம்.திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் அவதரித்து முக்தியடைந்த தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி.

26 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாண்டிக் கொடுமுடி
                                          - துன்னியருள் 
வேண்டிக் கொடுமுடியாம் மேன்மைபெறு மாதவர்சூழ்
பாண்டிக் கொடுமுடியின் பண்மயமே -

இறைவனை அருள்செய வேண்டுமென்று வேண்டிக் கொண்டு , அதனைப் பெற்று, மேன்மை அடைந்த மிக்க தவமுடையவர் சூழ்ந்து விளங்கும் சிறப்பு மிக்கவன் இசை மயமாய் விளங்கும் கொடுமுடி ஆண்டவன்.

இத்தலம் காவிரியின் தென் கரையில் உள்ளது. காவிரி இங்கு வளைந்து ஓடுவதால் கொடுமுடி. ஈரோட்டிலிருந்து 40 கி.மீ தூரம்.சுந்தரர் நமச்சிவாயத் திருப்பதிகம் பாடியருளிய தலம். 'திரிமூர்த்தித் தலம் '

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


25 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநணா

                                    - துஞ்சலெனும்
இன்னல் அகற்ற இலங்குபவா னிக்கூடல்
என்னு நணாவினிடை இன்னிசையே -

காவிரியாறும் பவானியாறும் கூடும் இடம் பவானிக்கூடல். இதன் வேறு பெயர்கள் திருநணா, பூவாணி.
மரணம் எனும் துன்பத்தை அகற்ற பவானிக் கூடலில் கோயில் கொண்டிருக்கும் இன்பமயமான இறைவனை வணங்குவோம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

24 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

வெஞ்சமாக்கூடல்

                              - தங்குமன
வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும்
வெஞ்சமாக் கூடல் விரிசுடரே -
மனிதனுக்கு முதல் எதிரியாக விளங்குவது அவனுடைய மனம்தான். வள்ளல் பெருமான் மனதைப் பற்றி
பல இடங்களிலும் பாடியுள்ளார். 'தெய்வமணிமாலை'யில் மனத்தை ஒரு சிறுவனாக உருவகிக்கிறார்.
மனமாகிய சிறுவன் என் சொல்லைக் கேட்க மாட்டான், கைக்கு அகப்படவும் மாட்டான். அவனை அடக்க என்னால் முடியாது.நீதான் எனக்குத் துணை செய்ய வேண்டும் என்பார். மிக மிக அழகான பாடல் அது.

வஞ்சம் செய்யும்  மனம் தீய நினைவுகளோடு கூடுகிறது. அந்தக் கூடலுக்கு இடம் தராதவர்கள்
வெஞ்சமாக்கூடலில்  ஒளிமயமாய்க் காட்சியளிக்கும் சிவபெருமானைத் துதிக்கிறார்கள்.
இவ்வூர் வெஞ்சமாங்கூடலூர் என்று வழங்கப்படுகிறது. சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

23 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருகொடிமாடச் செங்குன்றூர்

                                        - செம்மையுடன்
அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச்
செங்குன்றூர் வாழும்சஞ் சீவியே -

கொடிமாடச் செங்குன்றூரில் நெடிது வாழச் செய்யும் சஞ்சீவி மருந்தாய் சிறந்த அழகு குறையாமல் அருள் செய்து வரும் சிவபெருமானை வணங்குகிறேன்.

திருச்செங்கோடு, நாமகிரி  என்று வழங்கப்படும் இத்தலம் சங்கரி துர்க்கம் புகை வண்டி நிலையத்திலிருந்து ஆறு கல் தொலைவில் உள்ளது. அர்த்தநாரித் தலம். 1200 செங்குத்தான படிகளை ஏறினால் மலைஉச்சிக்குச் செல்லலாம். முருகப் பெருமானுக்கு உகந்த தலம். அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

22 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமுருகன் பூண்டி

                             - சான்றவர்கள்
தம்முருகன்  பூணுள் தலம்போல வாழ்கின்ற
எம்முருகன் பூண்டி இருநிதியே -

முருகப் பெருமானைத் துதிக்கும் அன்பர்கள் தங்கள் உள்ளத்தையே அவனுக்குக் கோயில் ஆக்கித்
துதிப்பார்கள். அதே போல திருமுருகன் பூண்டியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை பக்தர்கள்
தம் இதயத்தில் பெரு நிதியாக வைத்து வழிபடுகிறார்கள்.

திருப்பூர் புகைவண்டி நிலையத்துக்கு  வடக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. பிரசித்தி பெற்ற தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

21 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கொங்குநாடு - அவிநாசி - திருப்புக்கொளியூர்

                                          - நெஞ்சடக்கி
ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர்த்
தோன்றும்அவி நாசிச் சுயம்புவே - 

ஊர் பெயர் திருப்புக்கொளியூர். இறைவன் அவிநாசி லிங்கேஸ்வரர். அவிநாசி என்றால் நாசங்களை நீக்கும் தலம் என்று பொருள். கோயம்புத்தூரிலிருந்து  35 கி.மீ. தொலைவில் உள்ளது.

அவிநாசியப்பனான சுயம்பு மூர்த்தி அருள் செய்யும் தலம் திருப்புக்கொளியூர்.
மனதை அடக்குவது என்பது மிகவும் கடினமானது என்பதை அனைவரும் அறிவோம். புலனடக்கம் உள்ளோராலேயே அது முடியும். நெஞ்சடக்கும் சான்றோர்க்கு அருள் அளிப்பவன், தீய குணங்களை நாசம் செய்பவன் அவிநாசிச் சிவபெருமான்.

திருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

திருவருட்பா - சிவத்தலங்கள்

சேரநாடு - திருஅஞ்சைக்களம்
                                                - வல்வேலை
நஞ்சைக் களத்துவைத்த நாதனெனத் தொண்டர்தொழ
அஞ்சைக் களம்சேர் அருவுருவே -

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது தோன்றியது ஆலகாலவிஷம்.
இந்த விஷத்தைக் கழுத்திலே தாங்கிய தலைவன் எனத் தொண்டர்கள் தொழ
அஞ்சைக்களம் எனும் திருத்தலத்தில் அருவமாகவும் உருவமாகவும் வீற்றிருக்கும்
இறைவனே உம்மை வணங்குகிறேன்.

சேரநாட்டுத் தலம்.ஶ்ரீ வாஞ்சிக்குளம் என வழங்கப்படுகிறது. சுந்தர மூர்த்தி நாயனார்
வெள்ளை யானையின் மீதும், அவருடைய தோழர் சேரமான் பெருமாள் நாயனார்
குதிரையின் மீதும் ஏறிக் கைலாயத்திற்குச் சென்ற தலம் .

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

19 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெல்வேலி

                                                 -பொற்றாம 
நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
நெல்வேலி உண்மை நிலயமே -

செஞ்சாலி - உயர்ந்த நெல்வகை.பொன்+ தாமம் - பொன் மாலை.
தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள திருநெல்வேலி எங்கெங்கு நோக்கினும் உயர்ந்த நெல்விளையும் வயல்களால் சூழப்பெற்றது.  நெற்பயிர் முதிர்ந்து வயல் வரப்புகள்  பொன்னால் கட்டப்பட்ட மாலையைப் போல் காட்சி தருகிறது. இங்கு சத்தியத் திரு உருவமாய்க் காட்சியளிக்கிறார் நெல்லையப்பர்.

பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை உடைய தலம். தம்முடைய நைவேத்யத்திற்காக வேதசர்மா என்னும் பிராமணர் யாசித்துக் கொண்டு வந்து உலர்த்தி வைத்திருந்த நெல்லை வெள்ளம் அடித்துக் கொண்டு போகாது வேலி கட்டிக் காத்து அருளியதால் இத்தலம் திருநெல்வேலி  எனப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி  

                                   

18 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்
திருக்குற்றாலம்


                              - பண்செழிப்பக்
கற்றாலங் குண்மைக் கதிதரும் என்று அற்றவர்சூழ்
குற்றாலத் தன்பர்  குதூகலிப்பே -

 பண்ணிசை சிறப்புறுமாறு திருமுறைப் பாடல்களைக் கற்றால் அது சிவகதியை 
எய்துவிக்கும் என்று பற்று அற்ற பெரியோர் சூழ்ந்திருக்கும் குற்றாலத்து இறைவன் 
அன்பர்களுக்குக் குதூகலத்தை (மிகுந்த மகிழ்ச்சியை) அளிக்கிறான். 
(கற்றால்+ அங்கு+உண்மைக்+கதிதரும்) 

இறைவனுக்குரிய  பஞ்ச சபைகளில் இத்தலம் சித்திர சபை. இது சங்கு வடிவில் அமைந்த திருக்கோயில். மகாமேரு உள்ளது. தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் நடுவில் உள்ளது.

இறைவன் - குறும்பலாநாதர்
இறைவி - குழல்வாய் மொழியம்மை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா,205
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி  

17 December 2013

திருவருட்பா -சிவத்தலங்கள்

திருச்சுழியல்

                                                   - தீவணத்தில்
கண்சுழியல் என்று கருணையளித் தென்னுளம்சேர்
தண்சுழியல் வாழ்சீவ சாட்சியே -

நெருப்பின் பொன் வண்ணமேனியுடையவன் இறைவன். அதாவது ஒளிமயமாய் இருப்பவன். அவன் திருமேனியைக் கண்களைச் சுழற்றாமல், கண்ணிமைக்காமல் காண முடியாது! அதனால் கருணையோடு, நான் உன் அகக் கண்களால் காணுமாறு தோற்றமளிக்கிறேன் என வள்ளல் பெருமானின்  உள்ளத்தில் சேர்ந்தானாம் இறைவன்.
உள்ளத்தில் சேர்ந்தவனை எப்படிக் காண்பது? கண்களுக்குத் தெரியாமல் இறைவன் ஜீவாத்மாவுக்கு சாட்சியாய் இருக்கிறானாம்! ஜீவன் - உயிர். ஆத்மா - சாட்சி.

ஶ்ரீ ரமணபகவான் அவதரித்த இவ்வூர் திருச்சுழி, அருப்புக் கோட்டையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது.பார்வதி தேவியார் தம்மைச் சிவபெருமான் மணம் புரியும்படி வழிபட்ட தலம்.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா, 204.
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

16 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பூவணம்
                                 - மோனருளே
பூவணமும் பூமணமும் போல அமர்ந்ததிருப்
பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே -

தங்கள் யோக சக்தியால் மோன நிலையை அடைவர் ஞானிகள். அவர்கள் தங்கள் இதயத்தில் இறைவனை அழகிய பூவின் நிறமும், மணமும் இரண்டறக் கலந்து விளங்குவது போலக் காண்கிறார்கள். அது போல திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் அடியார்கள் இதயத்தில் ஆனந்தம் தரும் பொக்கிஷமாய் இரண்டறக் கலந்து விளங்குகிறான் சிவபெருமான்.

இவ்வூர் வைகையின் தென்கரையில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருக்கும்
வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியதால் மூவரும் இத்தலத்தை மிதிக்காது மறுகரையில் இருந்தே இறைவனை வணங்கினராம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா, 203.
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


15 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கானப்பேர்

                               - சேடான
வானப்பேர் ஆற்றை மதியை முடிசூடும்
கானப்பேர் ஆனந்தக் காளையே -

(சேடு - பெருமை) பகீரதன் தவத்தால் வானத்திலிருந்து தோன்றிய கங்கையையும், திங்களையும்
முடியில் சூடியவனாக ஆனந்த மயமாய், திருக்கானப்பேர் என்னும் பதியில் இறைவன் காட்சி அளிக்கிறான். அவனை வாழ்த்தி வணங்குவோம்.

காளையார் கோயில் என வழங்கப்படுகிறது. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு காளைவடிவில் தோன்றி
'நம்முடைய வாசஸ்தலம் திருக்கானப் பேர்,' என்று சொல்லி அழைத்து தரிசனம் கொடுத்த தலம்.
மருது பாண்டியன் கட்டிய பெரிய ராஜ கோபுரம் சோமேசர் சந்நிதிக்கு எதிரில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

14 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாடானை
                                            -  பூமீது
நீடானை சூழும் நிலமன்னர் வாழ்த்துதிரு
வாடானை மேவுகரு ணாகரமே -

கருணையே வடிவான திருவாடனை என்னும் பதியில் எழுந்தருளியுள்ள இறைவனை யார்
வாழ்த்துகிறார்கள்? இப்பூவுலகில் பெரிய யானைப் படை சூழ வரும் மண்ணக வேந்தர்கள்
ஈசனை வாழ்த்தி வணங்க அவன் அருள் செய்கிறான்!

திருஆடானை என்று வழங்கப்படும் இத்தலம் தேவகோட்டையிலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது. துர்வாச மகரிஷி வந்தபோது பிருகு முனிவர் அவருக்கு மரியாதை செய்யாமல் இருந்ததால்
துர்வாசர் அவரை ஆட்டுத் தலையும், யானையின் உடலும் உள்ள உரு எய்தும்படிச் சபித்தார்.
(ஆடு + ஆனை =ஆடானை) சாபத்தோடு பிருகு முனிவர் வழிபட்டதால் இத்தலம் ஆடானை!
இறைவன் ஆடானை நாதர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

13 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

இராமேசுவரம்

                                     - சித்தாய்ந்து
நாம் ஈச ராகும் நலந்தருமென்று உம்பர் தொழும்
ராமீசம் வாழ்சீவ ரத்தினமே -

தேவர்கள் இராமேசுவரத்து ஒப்புயர்வற்ற ரத்தினமான சிவனைத் தொழுகிறார்கள்.
எதற்காக? தாங்களே இறைவனாகும் தகுதியை அவன் தருவான் என்ற நம்பிக்கை!
ராமீசம் -இராமேசுவரம். இது ஒரு தீவு. இராமன் பூசித்த காரணத்தால் இராமேசுரம்
எனப்படுகிறது.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் இது ஒன்று.கோயில் 865 அடி நீளம் உடையது.மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோயில்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

12 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பரங்குன்றம்
                                 -மாப்புலவர்
ஞானபரங் குன்றம்என நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
வானபரங் குன்றிலின்பா னந்தமே -

மிகச் சிறந்த  புலவர்கள் கூடி, ' ஞானமயமான பரங்குன்றம் என்று  மகிழ்ச்சியோடு
போற்றும்' திருப்பரங்குன்றம்! இம்மலையில் இன்பம்தரும் ஆனந்த வடிவினனாகி
அருள் செய்கிறான் இறைவன். இங்கு இறைவன் பெயர் பரங்கிரிநாதர். இறைவி
ஆவுடைநாயகி.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
ஆலவாய் அழகனை,'சொக்கழகானந்தமே' என்றும், ஆப்பனூர் சிவனை,'சதானந்தமே,'
என்றும் போற்றியவர் பரங்குன்றத்து இறைவனை 'இன்ப ஆனந்தமே,' எனக் கூறி
மகிழ்கிறார்.
இன்பம்- இனிமை தருவது!(sweetness)
ஆனந்தம் - பேரின்பம், பெரு மகிழ்ச்சி!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புத்தூர்
                                      - முற்றுகதி
இத்தூரம் அன்றி இனித்தூரம் இல்லைஎனப்
புத்தூர் வருமடியார் பூரிப்பே -

மிகுந்த மகிழ்ச்சியினால் வரும் மன நிறைவுதான் பூரிப்பு! இந்த பூரிப்பைத் தருபவன் திருப்புத்தூர் இறைவன். யாருக்கு இந்த நிறைவைக் கொடுக்கிறான்? தன்னை நாடி வரும் அடியார்களுக்கு!
எதற்காகக் கொடுக்கிறான்? 'உன்னை நாடி, வந்து விட்ட எங்களுக்கு இனி பிறவாத மோட்சகதி கிடைக்க வெகுதூரம் இல்லை,' என்று நம்பிக்கையோடு வருவதால் கொடுக்கிறான்.
இறைவனை நாடி வணங்குவோருக்குத் துயரம் இல்லையன்றோ?

இவ்வூர் புதுக்கோட்டை மதுரை சாலையில் உல்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

11 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கொடுங்குன்றம்
                                     - பூமீதில்
நற்றவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி
உற்ற கொடுங் குன்றத்தெம் ஊதியமே -

இப்பூவுலகில் நல்ல தவம் செய்தவரும், நவ சித்தர்களும் வாழ்த்தி வாழ்கின்ற திருக் கொடுங்குன்றத்து கோயில் கொண்டுள்ள இறைவனே உம்மை வாழ்த்தி வணங்குகிறேன்.

பிரான் மலை என வழங்கும் இத்தலம் மதுரை மாவட்டத்துத் திருப்புத்தூருக்கு வடமேற்கில் உள்ளது, வேள் பாரியின் பறம்பு நாடு இதுவே என்பர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

10 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேடகம்
                                   - வானவர்கோன்
தேமே டகத்தனோடு சீதரனும் வாழ்த்தும்சீர்
ஆமேட கத்தறிவா னந்தமே -

வானவர் தலைவனான இந்திரனும், ஆட்டு வாகனத்துக்கு உரியவனான முருகப் பெருமானும்,
சீதரனான திருமாலும் வாழ்த்தும் சிறப்பு மிக்க திருவேடகம் என்னும் ஊரில் அறிவானந்த மயமாய் வீற்றிருக்கும் இறைவனே உம்மை வணங்குகிறேன் என்றவாறு.

இவ்வூர் வைகைக் கரையில் உள்ளது. சம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டபோது ,''வாழ்க அந்தணர்,'
என்ற பதிக ஏட்டை வைகையில் இட அது நீரை எதிர்த்துச் சென்றது. பின்னர் 'வன்னியும் மத்தமும்' என்ற பதிகம் பாடியதும் அந்த ஏடு இத்தலத்தில் ஒதுங்கி நின்றதால் திரு ஏடகம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

9 December 2013

திருப்பரங்குன்றம் -முருகன் பாடல்திருப்பரங்குன்றம்
                                 -மாப்புலவர்
ஞானபரங் குன்றம்என நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
வானபரங் குன்றிலின்பா னந்தமே -

மிகச் சிறந்த  புலவர்கள் கூடி, ' ஞானமயமான பரங்குன்றம் என்று  மகிழ்ச்சியோடு
போற்றும்' திருப்பரங்குன்றம்! இம்மலைமேல் இன்பம்தரும் ஆனந்த வடிவினனாகி
அருள் செய்கிறான் இறைவன். இங்கு இறைவன் பெயர் பரங்கிரிநாதர். இறைவி
ஆவுடைநாயகி.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
ஆலவாய் அழகனை,'சொக்கழகானந்தமே' என்றும், ஆப்பனூர் சிவனை,'சதானந்தமே,'
என்றும் போற்றியவர் பரங்குன்றத்து இறைவனை 'இன்ப ஆனந்தமே,' எனக் கூறி
மகிழ்கிறார்.
இன்பம்- இனிமை தருவது!(sweetness)
ஆனந்தம் - பேரின்பம், பெரு மகிழ்ச்சி!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி8 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஆப்பனூர்

                                 - சீலர்தமைக்
காப்பனூர் இல்லாக் கருணையால் என்றுபுகும்
ஆப்பனூர் மேவுசதா னந்தமே -

நல்ல ஒழுக்கம் உடையவர்கள் கருணை மிகுதியால் தங்களைத் துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான் என்று திருஆப்பனூர் சிவனிடம் தஞ்சமடைவார்கள். ஆப்பனூர் சிவன் எத்தகையவன்? எப்போதும்
நீங்குதல் இல்லாத ஆனந்தமயமாய் இருப்பவன்! அவனுடைய அன்பர்களும் ஆனந்தமாக இருப்பார்கள். இக்கோயில் திருவாப்புடையார் கோயில் என்ற பெயரில் மதுரை நகரின் வைகை வடகரையில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


7 December 2013

மந்திரமாவது நீறு
திருஆலவாய் - மதுரை

                                   - ஓதுகின்றோர்
பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை
ஆலவாய் சொக்கழகா னந்தமே -

மதுரைமாநகரில் சிவபெருமான் சொக்கலிங்கனாய், சொக்க வைக்கும் அழகனாய், ஆனந்தமாய்
அருள் செய்கிறான். ஞானநூல்களை ஓதுபவரிடம் கருணை கொண்டு ஆதரிக்கும் பரையாகிய
மீனாட்சியம்மையோடு வாழும் ஆலவாய் அழகனை வணங்குவோம்.
பரை - உமையம்மை

மதுரை  அன்னை மீனாட்சியம்மை சமேதர சோமசுந்தரப் பெருமாள் திருக்கோயில் புகழ் பெற்ற கோயிலாகும்.திருஞானசம்பந்தர் சமண சமயத்தைத் தழுவியிருந்த கூன் பாண்டியனின் சுர நோயை
'மந்திரமாவது நீறு' என்ற திருநீற்றுப் பதிகம் பாடித் தீர்த்தருளினார்.
பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

6 December 2013

ஈழ நாடு

ஈழ நாடு - திருக்கோணமலை / திருக்கேதீச்சரம்

                                           - நீடுலகில்
நாட்டும் புகழீழ நாட்டில் பவ இருளை
வாட்டும் திருக்கோண மாமலையாய்  -வேட்டுலகில்
மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக்
கேதீச் சரத்தில் கிளர்கின்றோய் -

பெரிய இந்த உலகில் நிலையான புகழ் உடைய ஊர் ஈழநாட்டில் உள்ள திருக்கோணமாமலை.
இங்கு பிறவிப் பிணிக்குக் காரணமான அறியாமை இருளை நீக்குபவனாக  இறைவன் கோயில் 
கொண்டுள்ளான்.
முன்னோர்கள் இவ்வுலகில் மிகப் பழமையான சிவன் கோயில் என்று கூறி வணங்கும்  பெருமையுடைத்து  திருக்கேதீச்சரம் ஆகும். இவ்வூர் இலங்கையில் தலைமன்னார் என்ற புகை வண்டி நிலையத்துக்குக் கிழக்கில் 7 கி.மீ. தொலைவில் பாலாவிக்கரையில் மா தோட்டம் என்ற ஊரில்
உள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

4 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திரு அகத்தியான் பள்ளி, திருக்கோடிக் குழகர்

                                       - நாடுமெனை
நின் அகத்தி யான்பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட
தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே -தொன்னெறியோர்
நாடிக் குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற
கோடிக் குழகர் அருள் கோலமே -

என்னை நாடி வந்த,  'நின் அகத்தில் யான் பள்ளி கொண்டேன்' என்று ஆட்கொண்டவன்
அகத்தியான் பள்ளியில் கோயில் கொண்டுள்ள செம்பொன்னாய் ஒளிவீசும் திருமேனிச் சிவன்.
தொன்மையான நல்ல நெறிகளைப் பின்பற்றும் சான்றோர் இறைவனை நாடி,''குழகனே நலம் அருள்''
என வேண்டி வழிபட அவர்களுக்கு அருட் கோலத்துடன் காட்சிதரும் குழகன் சிவன்.
(குழகன் -இளைஞன், அழகன், முருகக் கடவுள்)
அகத்தியான் பள்ளியில் அகத்தியர் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண தவம் செய்தார்.
கோடிக்கரையில் உள்ள இறைவர் ஆதலின் 'கோடிக்குழகர்.'
இவ்விரு கோயில்களும் அருகருகே உள்ளன.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

3 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமறைக்காடு ( வேதாரண்யம்)

                                                        - நேயமுணத்
தேடெலியை மூவுலகும் தேர்ந்துதொழச் செய்தருளும்
ஈடில்மறைக் காட்டில் என்தன் எய்ப்பில் வைப்பே -

இந்த ஆலயத்துத் தீபநெய்யினை ஒரு எலி உண்ணும் பொழுது அச்சுடர் மூக்கில் பட்டது.
அதனால் தீபம் பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. தீபம் மங்குகிற நேரத்தில் எலி இப்படிச்
செய்ததால்  மறுபிறப்பில் மாவலிச் சக்கரவர்த்தியாய்ப் பிறந்தது. இது நடந்த இடம் திருமறைக்காடு.

விரும்பிய நெய்யை உண்ண வந்த எலியை மூவுலகும் தொழும்படியான சக்கரவர்த்தியாய்ப்
பிறப்பித்த  இறைவன் எத்தகையவன்? வறுமையில் கிடைத்த செல்வம் போல் அன்பர்களுக்கு
அருட்செல்வம் அளித்து மகிழ்விப்பவன்.

மறைகள் வழிபட்டு மூடிவைத்த  கோயில் திருக்கதவுகளை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும்
திறக்கவும், மூடவும் பாடிய வரலாற்றுச் சிறப்புடையது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

2 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாய்மூர்
                                  - நீளுலகம்
காய்மூர்க்க ரேனும் கருதிற் கதிகொடுக்கும்
வாய்மூர்க்கு அமைந்த மறைக்கொழுந்தே -

துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பது பழமொழி! இவ்வுலக மக்கள் மூர்க்கர்களை வெறுக்கிறார்கள். இந்த மூர்க்கர்கள்  மனதில் உண்மையுடன் இறைவனை நினைப்பரேயானால்
அவர்களுக்கு நற்கதி கிடைக்குமா?  திருவாய்மூரில் மறைகளாலும் போற்றிப் புகழப்படும் சிவனை
வழிபட்டால் மூர்க்கருக்கும் நற்கதி கிடைக்கும் என்கிறார் வள்ளல் பெருமானார்.

இவ்வூர் திருக்குவளைக்குத் தென்கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

1 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கோளிலி
                                  - நெல்சுமக்க
ஆளிலைஎன்று ஆரூர னார்துதிக்கத் தந்தருளும் 
கோளிலியின் அன்பர்குலம் கொள்ளுவப்பே -

குண்டையூரில்  தாம்பெற்ற  நெல்லைச் சுமக்க ஆள் இல்லை என்று நம்பியாரூரர் திருக்கோளிலிப் பெருமானைத்  துதித்தார்.
'நீள நினைந்தடி யேன்உமை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே
கோளிலி யெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை யெம்பெருமா னவையட்டித் தரப்பணியே'

சிவபெருமானும் பூத கணங்களைக் கொண்டு அந்த நெல்லைத் திருவாரூர் கொண்டு சேர்த்தார்.
அதனால் கோளிலிப் பெருமானை அன்பர் கூட்டம் உவகையுடன் வழிபட்டு மகிழ்கிறது.
திருக்குவளை என வழங்கப்படும் இத்தலம் திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நவக்கிரகங்களுக்கு உண்டான குற்றங்களை நீக்கி அருளியதால் கோளிலி என்று பெயர் வந்தது. (கோள்- கிரகம்)
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி  

30 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கைச்சினம்

                                    - நையுமன
மைச்சினத்தை விட்டோர் மனத்தில் சுவைகொடுத்துக் 
கைச் சினத்தின் உட்கரையாக் கற்கண்டே-

வாயில் இட்டால் கரையாத கற்கண்டு எனும் இனிப்புக் கட்டி இவ்வுலகில் எங்கேனும் கிடைக்குமா?
ஆம் கிடைக்கும்!
இதயத்தில் சிவமாகிய, கரையாத கற்கண்டின் அருளைச் சுவைக்க வல்லாருக்கு எப்போதும் இன்பமே!
மனிதனின் தரத்தைக் குறைக்க வல்லது சினமெனும் குணம்! 'தன்னைத்தான் காக்கின் சினம் காக்க' என்கிறது வள்ளுவம். தன்னிலை இழக்கும்போது சினம், பல பாதகங்களுக்குக் காரணமாகிறது.
எனவே மனதில் எழும் குற்றமான சினத்தைக் கைவிட்டவர்களுடைய இதயத்தில் கற்கண்டின் சுவையாய் இன்பம் தரும் சிவம். திருக்கைச் சினம் எனும் ஊரில் கரையாத கற்கண்டாய் இன்பம் அளிக்கிறான் சிவபெருமான்.
கச்சனம் என்றும் அழைக்கப்படும் இவ்வூர் திருவாரூர்- திருத்துறைப்பூண்டிச் சாலையில் உள்ளது.
இங்கு இந்திரன் மணலினால் லிங்கம் அமைத்துப் பூசித்து, அதனைக் கையினால் எடுத்து அப்புறம் வைக்கும் பொழுது அவனுடைய கைவிரல்கள் சின்னமாக அதில் பதிந்ததால் இறைவன் கைச்சி னநாதர்  என அழைக்கப்படுகிறார்.தலம்  கைச்சின்னம். சினமாகிய குணத்தை விட்டொழித்தால்,
கைச்சின்னநாதர் அருள் பொழிவார். ஓரெழுத்தில் விளையாடும் இன்பத்தமிழ்!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி29 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவலிவலம்

திருவாரூருக்குத் தென்கிழக்கில் உள்ள இத் தலத்தை,        
''தொண்டனேன் அறியாமை அறிந்து
கல்லியல்  மனத்தைக் கசிவித்துக் கழலடி
காட்டி என் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானை
வலிவலம் தனில் வந்து கண்டேனே'' என்று சுந்தரர் மனம் உருகிப் பாடியுள்ளார்.
மாடக்கோயில் வலியன் என்ற கரிக்குருவி வழிபட்டதால் வலிவலம் என்று பெயர். மூவர் பாடல் பெற்ற இத்தலத்தை வள்ளல் பெருமானர் என்ன சொல்லிப் பாடுகிறார்?

                                   - துன்றாசை
வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க்கு இன்னருள் செய்
துய்ய வலிவலத்துச் சொல்முடிபே -

மனித மனம் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசைகளால் நிறைந்து கிடக்கிறது. இந்த
ஆசைகள் வலிமையானவை. மனிதனை வீழ்த்தும் தன்மையுடையவை. இவ்வாசைகளை எல்லாம்
'வீட்டி' (அழித்து) அன்பர்களுக்கு இன்னருள் செய்து அருள் மயமாய் விளங்குகிறான் திருவலிவலத்து
சிவபெருமான்.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் -அருட்பெருஞ் சோதி


28 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கன்றாப்பூர்
                                   - வீறாகும்
இன்று ஆப்பூர் வந்தொட் டிருந்தது இவ்வூர் என்னவுயர்
கன்றாப்பூர் பஞ்சாக்கரப் பொருளே -

பஞ்சாக்கரப் பொருள்- 'நமசிவாய' என்ற திருவைந்தெழுத்தின் பொருள்.
ஆப்பு - முளைக்கம்பு ( மாடு, கன்றுகளைக் கட்டும் கம்பு)
வலிமையுடன்  ஆப்பிலிருந்து தோன்றிய காலம் முதல் இன்று வரை சிறந்து விளங்கும் ஊர் என அறிந்தவர் கூறும் சிறப்புடையது திருக்கன்றாப்பூர்  என்னும் இவ்வூர்.

சைவ சமயத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி வைணவ சமயத்தைச் சார்ந்த ஒருவரை மணந்தாள்.
அவள் தன் கணவன் வீட்டாருக்குத் தெரியாமல் சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். எப்படியோ
கணவனுக்கு இது தெரியவர அவன் அச்சிவலிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விடுகிறான்.
அந்தப் பெண்ணோ விடாமல் கன்றுக்குட்டி கட்டியிருந்த முளைக்கம்பையே (ஆப்பு) சிவனாகப்
பாவித்து பூஜை செய்து வந்தாள். அதைக் கண்ட அவள் கணவன் அந்த ஆப்பை வெட்ட
சிவபெருமான் அந்த ஆப்பிலிருந்து வெளிப்பட்டார் எனவும், அதனால் ஊரின் பெயர் கன்றாப்பூர் (கன்று+ ஆப்பூர்) என்றும் சொல்கிறார்கள். இறைவனுக்கு 'நடு தறி நாதர்' எனப் பெயர். கோடாரியால் வெட்டிய குறி இறைவன் மேல் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி
  

26 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்காறாயில்

                          - நாட்டுமொரு
நூறாயில் அன்பர்தமை நோக்கி அருள்செய் திருக்
காறாயின் மேலோர் கடைப்பிடியே -

ஆராய்ந்து பார்க்கும் போது நூல்கள் சொல்லும் செய்தி என்ன?
தன்னை வழிபடும் அன்பர்களைத் தாய் போலக் கருணையுடன்
பார்த்து இறைவன் அருள் செய்வான் என்பதாகும்.
( அன்பர் தமைத் தாய் போல் நோக்கி)
 இதனை உணர்ந்து தன்னை வழிபடும் அன்பர்களுக்கு
 திருக்காறாயிலில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான்
 அருள்புரிகிறான்.

இவ்வூர் திருக்காறாவாசல் என அழைக்கப்படுகிறது.
ஆதி விடங்கத் தலம்.நடனம் குக்குட நடனம். மரகத
லிங்கம் சிறப்பு.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

25 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநாட்டியத்தான்குடி

                                   - எல்லைக்கண்
சேட்டியத்  தானேதெரிந்துசுரர்  வந்தேத்தும்
நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே -

சேட்டியம்- படைத்தல், காத்தல், அழைத்தல் ஆகிய முச்செயல்களையும் செய்தலும், செய்விப்பதும் ஆகும்.
உலகம் அழியும் ஊழி முடிவின் போது (முச்செயல்களையும் )செய்கிறார் இறைவன்.உலகத்து உயிர்களை ஒழுங்கு படுத்துவதன் முதன்மை அறிந்து தேவர்கள் வந்து திருநாட்டியத்தான் குடியில் கோயில் கொண்டிருக்கும்  சிவபெருமானை வணங்குகின்றனர்.

இவ்வூர் மாவூர் புகை வண்டி நிலையத்திலிருந்து 6 கி.மீ. தெற்கில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

24 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெல்லிக்கா

                                                - ஓங்குமலை
வல்லிக்காதார மணிப்புயவென்று அன்பர் தொழ
நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே -

ஓங்கி நெடிதுயர்ந்த மலையரசனின் மகளான உமையம்மைக்கு ஆதாரமாகத் தன் அழகிய மணித் தோள்களை அளித்தவன் என்று அன்பர் தொழ திருநெல்லிக்கா என்னும் திருப்பதியில் மெய்ப்
பொருளான இறைவன் வாழ்கிறான்.

நெல்லி மரங்கள் சூழ்ந்த சோலையாக இருந்ததால் நெல்லிக்கா என்று பெயர் வந்தது. திருநெல்லிக்காவல் என்றும் வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

23 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தேங்கூர்
                                -  நீட்டும் ஒளி
ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே -

கூர்மையான இலை போன்ற அமைப்பை உடையது முருகப் பெருமானின் வேல்.ஒளி பொருந்திய அவ்வேலைக் கையில் ஏந்திய முருகப் பெருமானுடன் தொண்டர் குழாம் சூழ்ந்து வழிபட தேங்கூர் எனும் பதியில் கம்பீரமாக வாழும் சிவபெருமானே உம்மை வணங்குகிறேன்.

இவ்வூர் தெங்கூர் எனவும் வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

22 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கொள்ளிக்காடு
                                       - தாம்பேரா
வீட்டிலன்பர் ஆனந்தம் மேவச் செயும் கொள்ளிக்
காட்டில் அம்ர்ந்த என்கண் காட்சியே -

பேரா வீடு -நிலையான பேரின்ப வீடு, பெயர்தல் அற்றது.
நிலையான பேரின்ப வீட்டில் என்ன கிடைக்கும்? எப்பொழுதும் அனுபவிக்கக் கூடிய சிவானந்தம் கிடைக்கும்!
 தரிசனம் செய்யும் கண்களுக்கு ஆனந்தம் நல்கும் சிவபெருமான் திருக்கொள்ளிக்காடு எனும் பதியில் அமர்ந்து, அடியார்களை நிலையான பேரின்பம் அனுபவிக்கச் செய்கிறான்.

கள்ளிக்காடு என்று வழங்கப்படுகிறது. அக்னி வழிபட்ட தலம் என்பதால் கொள்ளிக்காடு எனப் பெயர் பெற்றது. இங்கு சனிபகவான் சன்னதி சிறப்பு.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

21 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

பேரெயில்
                              -வெள்ளிடைவான்
வாம்பேர் எயில்சூழ்ந்த மாண்பால் திருநாமம்
ஆம்பேர் எயில்ஒப்பி லாமணியே -

வானவாம் பேரெயில் - வானத்தைத் தொடத் தாவும் பெரிய மதில் சுவர்.
'வாவும்' என்பது 'வாம்' என விகாரப்பட்டது. எயில்- கோட்டைச் சுவர்.

ஆகாயப் பெரு வெளி! கீழே பார்த்தால் வானைத் தொடத் தாவும் பெரிய மதில்சுவர்.
இத்தகைய பெரிய மதில் சுவரால் சூழப்பட்டிருக்கும் பெருமையுடைத்து பேரெயில்
எனும் இவ்வூர்.  இவ்வூரின் திருக்கோயிலில் எதனோடும் ஒப்பிடுவதற்கு அரியவரான
சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். வானளாவிய மதிற்சுவரால்
பேரெயில் எனும் பெயர் வந்தது.
இவ்வூர் 'ஓகைப்பேரையூர்' எனவும் வழங்கும்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


20 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெண்டுறை

                                          - தென்கூட்டிப்
போய்வண்டு உறைதடமும் பூம்பொழிலும் சூழ்ந்தமரர்
ஆய்வெண் டுறைமாசி லாமணியே -

 இனிமையாக ரீங்காரம் செய்யும் வண்டுகள் வசிக்கும் நீர் நிலைகள், மலர்ச்சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெண்துறையில் வீற்றிருக்கும் மாசு இலா மணியான  இறைவனைத் தேவர்கள் வணங்குவர்.

திருக்கொள்ளம்பூதூர்

                             - தோய்வுண்ட
கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர் சூழ்
கொள்ளம்பூ தூர்வான் குலமணியே -

பூதங்களை அடிப்படையாகக் கொண்டதத்துவக் கூறுகளில் தோய்ந்துள்ள பொய்மையை  உணர்ந்த,
மெய்யுணர்வு கொண்டவர்கள் திருக்கொள்ளம்பூதூர் குலமணியை வணங்குவர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


  

19 November 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தென்கோட்டூர்
                              - கொண்டலென
மன்கோட்டூர் சோலை வளர்கோட்டூர் தண்பழனந்
தென்கோட்டூர் தேவ சிகாமணியே -

மேகம் போல் பெருமை மிக்க நீர்க்கரைச் சோலை மரங்கள் அடர்ந்து வளர்ந்து காட்சியளிக்கின்றன.வரப்பினுள்ளே தண்மையான வயல்கள் மல்கிய அழகிய கோட்டூரில்
தெய்வ சிகாமணியான சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

திருத்துறைபூண்டி நிலையத்திலிருந்து 12 கி.மீ.தொலைவில் உள்ளது. கொழுந்தீசர் கோயில், மணியம்பலம் என இரு கோயில்கள் உள்ளன. மூலமூர்த்தியாக பிரதோஷ மூர்த்தி இருப்பது விசேஷமானது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

30 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவீழிமிழலை

                                      - முன்னரசும்
காழி  மிழலையருங்  கண்டுதொ ழக்காசளித்த
வீழி   மிழலை  விராட்டுருவே -

எல்லாராலும் நினைக்கப்படும் திருநாவுக்கரசரும், சீர்காழியில் தோன்றிய  திருஞானசம்பந்தரும்
தம்மைக் கண்டு வணங்கிய காலை அவர்களுக்குப் படிக்காசு தந்த, திருவீழிமிழலையில்  வீற்றிருக்கும்
பிரபஞ்ச ரூபமான பரம்பொருளாகிய சிவனே!

பூந்தோட்டத்திலிருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது. சம்பந்தர் 15 பதிகங்கள், அப்பர் 8 பதிகங்கள்.
வீழி என்பது ஒரு வகைச் செடி. வீழிச் செடிகள் நிறைந்திருந்த காரணத்தால் வீழிமிழலை. பல சிறப்புகள் உடைய தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

29 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

சிறுகுடி
                                     
                                -ஆம்புவனம்
துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலம் செய்து வகை
மன்னும் சிறுகுடிஆன் மார்த்தமே-

ஆன்மாவின் பொருளாய் சிறுகுடி என்னும் ஊரில் வீற்றிருக்கும் சிவபெருமானை
உலகிலுள்ள பெருங்குடி மக்கள் சூழ்ந்து வலம் வந்து வணங்குவர்.
செவ்வாய் தோஷம் நீக்கும் ஊர். கும்பகோணத்திலிருந்து நாச்சியார்
கோயில் வழி கடகம்பாடி சென்று அங்கிருந்து 3 கி. மீ செல்ல வேண்டும்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

28 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாம்புரம்

                                                       - ஆடுமயில்
காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற
பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே -

பாம்புபுரம் - பாம்புரம் எனப்படுகிறது.
காம்பு உரங்கொள் தோளியர் - மூங்கில் போன்ற அழகிய வலிமை பொருந்திய தோள்களை உடைய மகளிரும், தோகை விரித்து ஆடுகின்ற மயில்களும்  நிறைந்துள்ள சோலையுடைத்து திருப்பாம்புரம்
என்னும் பதி. இங்கே மெய்ப் பொருளாய் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

இத்தலம் பேரளம் புகை வண்டி நிலையத்துக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
ராகு,கேது போன்ற சர்ப்பதோஷங்கள் விலக ஒரு பிரார்த்தனைத் தலம்.
சம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் :பாம்புரேஸ்வரர்
இறைவி   : வண்டார்குழலி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

27 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்திலதைப்பதி

                              - வளங்கோவை
நாடும் திலத நயப்புலவர் நாடோறும்
பாடும் திலதைப் பதிநிதியே -

செல்வ வளம் உடைய தலைவர்களை தினந்தோறும் நாடிச் செல்லும் திலத நயப் புலவர்கள்
நாள்தோறும் திருத்திலதைப் பதியில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் பாடிப்
பரவுவார்கள்.

இவ்வூர் சிதிலைப்பதி, திலதர்ப்பணபுரி, மதிமுத்தம் என்று வழங்கப்படுகிறது. திலதர்ப்பணபுரியே திலதைப்பதி என மருவிற்று. அரிசிலாற்றங்கரையில் உள்ளது. திலம் என்றால் எள்.இறந்த முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய கடமைகளைச் செய்வதற்கு
உரிய தலம் .

இறைவன் :முக்தீஸ்வரர்
இறைவி   : பொற்கொடிநாயகி
தலமரம்   : மந்தாரை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் -அருட்பெருஞ் சோதி

26 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமீயச்சூர்
மீயச்சூர் தஞ்சை பேரளம் நிலையத்துக்கு மேற்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

                                  - ஓகாளக்
காயச் சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்
மீயச்சூர் தண்என்னும் வெண் நெருப்பே -

திருமீயஞ்சூரில் ஒளிவடிவாய் விளங்கும் இறைவன் குளிர்ச்சி பொருந்திய வெண்ணீற்றை அணிந்திருக்கிறான். காண்பவர்கள் வெறுத்து ஓகாளிக்கும் தன்மையுடைய உடல் பற்றை விட்டொழித்து நல்ல கதியை அடைய விரும்புபவர்  திருமீயச்சூரில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானைச் சூழ்வர்.

திருஇளங்கோயில்
                                  - மாயக்
களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா
இளங்கோயில் ஞான இனிப்பே -

பொய் முதலிய குற்றங்கள் கோயில் கொண்டிருக்கும் நெஞ்சமுடைய கயவர்களால் நெருங்க முடியாதவன் திருஇளங்கோயிலில் ஞானவடிவாய் இனிமை மயமாய் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமான்.
திருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

25 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

அம்பர் பெருந் திருக்கோயில், அம்பர் மாகாளம்

மாயூரத்திலிருந்து திருவாரூர் போகும் இருப்புப்பாதை வழியில் அம்பர் பெருங்கோயில் உள்ளது.
இக்கோயிலின் மேற்கே 2 கி. மீ தூரத்தில் திருமாகாளம் உள்ளது. மாகாளம்- கொடிய நஞ்சு.
தேவர்கள் சிவபெருமானுக்கு நஞ்சு தந்த பாவம் போக வழிபட்ட தலம் ஆதலால் அம்பர் மாகாளம் எனப்பட்டது.

                                   - கூட்டாக்
கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்
திருவம்பர் ஞானத் திரட்டே 
                                       - ஒருவந்தம்
மாகாளம் கொள்ள மதனைத் துரத்துகின்ற
மாகாளத்து அன்பர் மனோல யமே -

மேன்மையுடையவர்கள் கருவிலேயே தீமை செய்யும் தீய பண்பினரைச் சேரமாட்டார்கள்.
இவர்கள் முழுமையான ஞானத் திரட்டாய் விளங்கும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள
திருவம்பர் எனும் தலத்தில் வாழ்கிறார்கள்.

கொடிய நஞ்சு உண்டவரைத் திண்ணமாகக் கொல்லும் தன்மையுடையது. கொடிய நஞ்சைக்
கொடுத்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, மதனைத் துரத்துகின்ற மாகாளம் எனும் பதியில் அன்பர்கள்
மனதில் ஒடுங்கி வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்குகிறேன்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


24 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கோட்டாறு

                                  -  தெள்ளாற்றின்
நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்
கோட்டாறு மேவும் குளிர் துறையே -

தெளிவான நீரையுடைய ஆற்றங்கரை.அதில் நீண்ட தாறுகளைச் சுமந்து நிற்கும் வாழை மரங்கள்.
உயர்ந்து காணப்படும் இந்த வாழை மரங்கள் ஆற்றங்கரையை அலங்கரிக்கின்றன.
கோடை காலத்தில்  ஆற்றங்கரை, மென்மையான தென்றல் காற்றுடன் குளிர்ச்சியைத் தந்து சுகமளிப்பது போல தன்னை நாடி வந்தார்க்கு மகிழ்வளிப்பவன் திருக்கோட்டாறு
என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமான்.

கோட்டாறு என்பது கொட்டாறு என வழங்கப்படுகிறது. திருநள்ளாறு புகை வண்டி நிலையத்துக்கு வட மேற்கில் 4 கி. மீ. தொலைவில் உள்ளது. மூலவர் சந்நிதிக்கு முன்பாகத் தேன்கூடு உள்ளது.
இறைவன் : ஐராவதீஸ்வரர்
இறைவி   : வண்டமர் பூங்குழலி
தீர்த்தம்    : வாஞ்சியாறு
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

23 September 2013

இதுவரை.....

திருவருட்பிரகாச வள்ளலார் திரு .இராமலிங்க அடிகளார் அருளிய அருட்பா பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் திருமுறையின் இரண்டாம் நூல் விண்ணப்பக்
கலிவெண்பா. இதில் வள்ளலார் அவர்கள் தேவாரப் பதிகங்கள் அன்பு நிறைந்து புகழும் இறைவனுடைய சிவமூர்த்தங்களை எல்லாம் தனித்தனியாக சிந்தித்தும், பொதுவில் வழி பட்டும்,
இறை வழிபாட்டிற்குத் தடங்கலாய் இருக்கும் செய்கைகளையும், குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது இறைவன் அருள்மழை பொழிவதையும், அருளை இறைஞ்சியும், திருவடி இன்பம் தந்துஅருள் புரியவேண்டும் என விழைந்தும் தம் கோரிக்கைகளையெல்லாம் என்புருக நெகிழ்ந்து
விண்ணப்பித்துக் கொள்கிறார்கள். நாமும் உள்ளம் நெகிழ இறைவன் திருத்தாளில் மனம் நெகிழ விண்ணப்பித்துக் கொண்டால் இறைவன் நமக்கும் அருள் புரிவான்.
இதுவரை 117 கண்ணிகளின் பொருளைப் பார்த்தோம். 279 வது கண்ணிவரை திருத்தலங்களின் தரிசனம் கிடைக்கிறது. பின்னர் 290வது கண்ணியிலிருந்து தன் விண்ணப்பத்தை பலவாறு வனைந்து
வனைந்து எடுத்துச் சொல்கிறார்.
 ''நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து
நிறைந்து,'' படித்துப் படித்து இன்புற வேண்டிய நூல் திருவருட்பா.

மீண்டும் தொடரவும், முழுமையடையச் செய்வதையும், அவன் கரங்களில் ஒப்படைக்கிறேன்.

''நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலந்தரல் வேண்டுவன் போற்றி
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்குஉன் இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
ஊன்செய் நாவாலுன் ஐந்தெழுத்து எளியேன் ஓதநீ உவந்தருள் போற்றி
மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள் வள்ளலே போற்றி நின் அருளே''
                     அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை.


6 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்தருமபுரம்

                                         - நீக்கும்
கரும புரத்திற் கலவாது அருள்செய்
தரும புரம்செய் தவமே -

நாங்கள் செய்த தவப்பயனாய் திருத்தருமபுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே
விலக்குதற்குரிய தீவினைகள் எம்மோடு கலவாது காத்து அருள் புரிவீராக.

மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த குறை நீங்க எமன் வழிபட்டதலம்.
சம்பந்தர் யாழ்மூரிப் பதிகம் பாடிய தலம். யாழ்ப்பாணர் யாழில் அமைத்துப் பாட இயலாத
இசைப் பாடல் யாழ்மூரி.

இறைவன் - யாழ்மூரிநாதர்
இறைவி   -  தேன் அமுதவல்லி
தலமரம் - வாழை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


5 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்தெளிச்சேரி

                                             - நாட்டமுற்ற
வாக்குந் தெளிச்சேரி மாதவர்க்கு இன்பநலம்
ஆக்கும் தெளிச்சேரி அங்கணனே -

வாக்குச்சுத்தம் உடையவர்கள் மாதவம் புரிந்தவர்கள் ஆவர். இத்தகைய பெருந்தவம் உடையவர்களுக்கு இன்பத்தையும் நன்மையையும் அளிக்கும் திருத்தெளிச்சேரி சிவனை
வணங்குவோம்.

இப்பகுதி கோயிற்பத்து எனவும் வழங்கப்படுகிறது. சோமவார வழிபாடு இங்கு சிறப்பு.

இறைவன் : பார்வதீஸ்வரர்
இறைவி   : சத்தியம்மை
தலமரம்    : வன்னி, வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

4 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேட்டக்குடி

                                              - வற்கடத்தும்
வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே இல்லை எனும்
வேட்டக் குடிமேவு மேலவனே -

வற்கடம் - பஞ்சம்; வாட்டம் - பஞ்சத்தால் உண்டாகும் துன்பம்.
திருவேட்டக் குடியில் அனைவருக்கும் மேலான சிவபெருமான் அருள்புரிந்து வருகிறார்.எனவே பஞ்சம் ஏற்பட்டாலும் இவ்வூர் மக்கள் சற்றும் துன்பப்பட வாய்ப்பில்லாத ஊர் திருவேட்டக்குடியாகும்.

இத்தலம் காரைக்காலுக்கு வடகிழக்கில் 10 கி.மீ தொலைவில் உள்ளது.

இறைவன் : திருமேனியழகர், சுந்தரேஸ்வரர்
இறைவி    : சவுந்தர நாயகி, சாந்தநாயகி
தீர்த்தம்     : தேவதீர்த்தம்

திருவருட்பிரகாசவள்ளலார்  - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

3 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடவூர் மயானம்

                                 - வன்மையிலாச்
சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதுஓங்கும்
நற்கடவூர் வீரட்ட நாயகனே -

மேன்மை பொருந்திய நற்கடவூர் வீரட்டத்தில் வீற்றிருக்கும் நாயகனாம்  சிவபெருமானை
மென்மையான சொற்களைச் சொல்லித் துதிக்கும் உயர்ந்த பண்புடையவர்கள் எப்போதும்
துதிப்பார்கள்.

இங்கு கோயில் உண்டேயன்றி ஊர் இல்லை. இயமனைச் சினந்து வீழ்த்திய காரணத்தால்' மயானம்'
என்கின்றனர்.திருமயானம், திருமெய்ஞானம் என வழங்கப்படுகிறது.

இறைவன் :பிரமபுரீஸ்வரர்
இறைவி   : மலர்க்குழல் மின்னம்மை
தீர்த்தம்    : காசிதீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

2 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடவூர்

                                  - மாறகற்றி
நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
தென்கடையூர் ஆனந்தத் தேறலே -

சிவானந்தத் தேனை அளிப்பவர் தென்கடையூர் சிவபெருமான். அவரை யார் போற்றுகிறார்கள்?
அறத்துக்கு மாறான பாவங்களைச் செய்வதிலிருந்து விடுவித்து, அறமானவற்றையே அடையச்
செய்யும் பல ஊரிலும் இருக்கும் அன்பர்கள் நன்றி மறவாமல் துதித்துப் போற்றுகிறார்கள்.

மாயூரம் தரங்கம்பாடி புகை வண்டிப் பாதையில் உள்ள ஊர். சிவபெருமான் மார்க்கண்டேயனைக்
காப்பாற்ற இயமனைக் காலால் உதைத்து வீழ்த்திய தலம்.

இறைவன் : அமிர்தகடேஸ்வரர்
இறைவி   : அபிராமி
தலமரம்    : பிஞ்சிலம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

1 September 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்( தொடர்கிறது)


திருஆக்கூர்

                                                   - பொங்குமிருள்
கூறுதிரு ஆக்கூர் கொடுப்பனபோல் சூழ்ந்து மதில்
வீறுதிரு  வாக்கூர் விளக்கமே -

செல்வம் இருக்கும் இடத்தை பிறர் அறியாமல் காப்பது இருள். அதுபோல பொன்னும் மணியும் செறிந்து  பேரொளி விளங்கும் திருவாக்கூரின் ஒளியைக் குறைத்துக் காட்டுகின்றன அவ்வூரின் மதிற்சுவரும், வானளாவிய மரங்கள் நிறைந்த சோலையும்!  மனிதர்களுடைய மன இருளை நீக்கி தெளிவு தரும்  ஒளி விளக்காய் சிவபெருமான் திருவாக்கூரில் வீற்றிருக்கிறார்.

சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ளது. கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்.
இறைவன் : தாந்தோன்றீஸ்வரர்
இறைவி   : வான்நெடுங்கண்ணி
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி


26 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்தலைச்சங்காடு

                                        - தூயகொடி
அங்காடு கோபுரம் வா னாற்றாடு கின்றதலைச்
சங்காடு மேவும் சயம்புவே --

தூய்மையான கொடியானது கோபுரத்தின் மேலே நின்று, கதிரவன் செல்லும் வீதியைத் தொடுகின்ற ஊர்! சுயம்புவாக தானே எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருச்சங்காடு
தான் அத்தலம்.

தலைச்சங்காடு  திருவலம்புரத்திற்கு தென்மேற்கில் உள்ளது. தேவாரத்தில் தலைச்சங்கை எனப்படுகிறது.

இறைவன் :சங்கருணாதேஸ்வரர்
இறைவி    : சவுந்தரநாயகி
தீர்த்தம்     : புரசு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

25 August 2013

புள்ளிருக்கு வேளூர் அருட்கூத்தனே


பரிதிபுரி என்ற புள்ளிருக்கு வேளூரில் வீற்றிருக்கின்ற அருட் கூத்தனே!
உன் திருவருளாலன்றி என் உடல் நோய் நீங்குமோ?
பொன்னேர் புரிசடை எம் புண்ணியனே!
இறைவனாம் என் அருமை  அப்பா,
சேவார் கொடி எம் சிவனே,
மையார் மிடற்று எம் மருந்தே, மணியே,
செம்மான் மழுக்கரங்கொள் செல்வச்சிவமே, என் அம்மா,
விரை சேரும் கொன்றை விரிசடையாய்,
விண்ணவர் தம் அரசே,
கொத்தார் குழலி ஒரு கூறுடைய கோவே,
தொண்டர் சிந்தைதனில் ஓங்கும் அறிவே,
இன்பே அருள்கின்ற என் ஆருயிரே,
என் அன்பே
உன்றன் நல்லருள் இல்லையேல் நோதல் தரும் எந் நோயும் நீங்குமோ?
என்னை வருத்தும் நோய்கள் வருந்துமாறு எனக்குத் திருவருள் புரிவீராக.


                                                                           - திருவருட்பா
                                                                           - திருவருட்பிரகாச வள்ளலார்

22 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவலம்புரம்

                                          - எள்ளுறு நோய்
ஏய வலம்புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர்
மேய வலம்புரத்து மேதகவே -

பிறரால் இகழ்ந்தும், வெறுத்தும் நோக்கக்கூடிய நோய்களை அடையக் கூடியது மானிட உடல்.
இவ்வுடலின் நிலையாமையையும், நோயுற்றுப் படக் கூடிய அவலத்தையும்  உணர்ந்து கொண்டு
உடற்பற்று நீங்கி, உள்ளத்துறையும் திருவலம்புரத்து சிவனை வழிபடுவீராக.

தற்பொழுது 'மேலப்பெரும்பள்ளம்' என வழங்கப்படுகிறது. காவிரி நதிக்கு வலப்புறம் இருப்பதால் வலம்புரம் என்ற பெயர். திருமால் வழிபட்டு வலம்புரிச் சங்கினைப் பெற்ற தலம்.

இறைவன் : வலம்புரநாதர்
இறைவி    : வடுவகிர்க்கண்ணி
தலமரம்     : பனை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

21 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி

                                            - நெறி கொண்டே
அன்பள்ளி ஓங்கும் அறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
பொன்பள்ளி வாழ்ஞான போதமே -இன்புள்ளித்
தெள்ளியார் போற்றித் திகழும் திருநன்னிப்
பள்ளியார்ந்து ஓங்கும் பரசிவமே -

நன்னெறியில் இயங்கி, அன்பு  நிறைந்தோங்கும் அறிவுடையவர் திருச்செம்பொன்பள்ளியில்  சிவஞானத் திருவுருவமாய்  எழுந்தருளியுள்ள  சிவபெருமானை வாழ்த்துவர்.

தெளிவான உள்ளம் உடையவர் விரும்பும் இன்பம் சிவபோகம்! திருநனிபள்ளியில் நிறைந்து விளங்கும் பரசிவத்தை தெளிந்த மனம் உடையவர் போற்றித் துதிப்பர்.

திருச்செம்பொன்பள்ளி செம்பனார் கோயில்,செம்பொன்னார் கோயில் என்று வழங்கப்படுகிறது.
இறைவன்: சொர்ணபுரீஸ்வரர், இறைவி: மருவார்குழலி.

திருநனிபள்ளி 'புஞ்சை' என்று வழங்கப்படுகிறது. இறைவன்:நற்றுணையப்பர்
இறைவி: மருவார்குழலி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


                   

19 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பறியலூர்

                                         - இளமைச்
செறியலூர் கூந்தல் திருவனையார் ஆடும்
பறியலூர் வாழ்மெய்ப் பரமே -

 அடர்த்தியான கருங்கூந்தலையுடைய இளமங்கையர் திருமகளை ஒத்திருக்கிறார்கள்
 மெய்ப்பொருளாய் சிவபெருமான்  வாழும் திருப்பறியலூரில் இவர்கள் மனமகிழ்வோடு
விளையாடுகிறார்கள்.

இப்போது இதன் பெயர் பரசலூர். அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.

இறைவன் : வீரட்டேசுரர்
இறைவி    : இலங்கொடியாள்
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

18 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிளநகர்

                                                        - தேயா
வளநகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப் படும்சீர்
விளநகர்  வாழ் எங்கண் விருந்தே -

குறைவுபடாத செல்வம் மிக்க வளமான நகர் என்று எல்லோரும் வாழ்த்துகின்ற திருவிளநகரில் வாழ்கின்ற சிவபெருமான் எவ்விடத்தும் நீங்காது நிறைந்து நின்று கண்ணுக்கும், கருத்துக்கும்,
விருந்தாவான்.

மாயூரத்துக்கு கிழக்கில் ஐந்து கி. மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்:  துறைகாட்டு வள்ளலார்
இறைவி   : வேயுறு தோளி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  -  அருட்பெருஞ் சோதி

17 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமயிலாடுதுறை

                                        - வேளிமையோர்
வாயூரத் தேமா மலர்சொரிந்து வாழ்த்துகின்ற
மாயூரத் தன்பர் மனோரதமே -

தன்னை வணங்கி வாழ்த்துகின்ற அன்பர்களின் மனமாகிய தேரில் வீற்றிருந்து அருள் புரிபவன் மாயூரம் எனும் பதியில் கோயில் கொண்டள்ள சிவபெருமான். மன்மதனும், வானவரும் வாயினிக்க அவன் நாமம்
சொல்லி வாழ்த்த, மாயூரத்து மாமரங்கள் மலர் சொரிந்து வாழ்த்தும்.

காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்று. மாயூரம் என்றும் வழங்கப்படுகிறது. அம்பாள் மயில் வடிவில் வழிபட்ட தலம். மயில் வடிவம் கொண்டு ஆடிய தாண்டவம் கெளரி தாண்டவம் எனப்படும். எனவே கெளரி
மாயூரம் என்றும் பெயர் பெற்றது.

இறைவன் : மயூரநாதர்
இறைவி    : அபயாம்பிகை
தலமரம்     : மா, வன்னி

திருவர்ட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


16 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவழுந்தூர்

                                                      - வருத்துமயல்
நாளும் அழுந்தூர்  நவையறுக்கும்  அன்பர் உள்ளம்
நீளும் அழுந்தூர் நிறைதடமே -

நிறை தடம் என்பது தண்ணீர் நிறைந்து காணப்படும் தடாகம் அல்லது குளம். தண்ணீரில் அழுந்தி நீராடுவது தூய்மையைத் தரும். தன்னை வணங்கித் துதிக்கும் அன்பர்களின் உள்ளத் தடாகத்தில் நிறைந்து அருளாகிய ஆனந்தம் தருபவர் திருவழுந்தூர் சிவபெருமான். இவ்வுலக வாழ்க்கையில் துன்பத்தைத்தரும் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களை நீக்கி  அருள் புரிகிறார்.

தேரழுந்தூர் என்று வழங்கப்படுகிறது. கம்பர் பிறந்த ஊர். இரும்பிடர்த் தலையார் என்ற தமிழ்ச் சான்றோர் வாழ்ந்த தலம்.

இறைவன் : வேதபுரீஸ்வரர்
இறைவி    : செளந்தராம்பிகை
தலமரம்     : சந்தனம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

14 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்துருத்தி

                                           - பேராக்
கருத்திருத்தி  ஏத்தும்  கருத்தர்க் அருள்செய்
திருத்துருத்தி இன்பச் செழிப்பே -

 தன்னை வணங்குவார்க்கு  இதயத்தில்  பக்தி இன்பம் நாளும் செழித்து வளருமாறு செய்பவன் திருத்துருத்தி என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான்.
இறைவனை வழிபட வேண்டும் என்ற உறுதிப் பாட்டில் பிறழாது அவனை வணங்குவார்க்கு  அவன் அருள்
செய்வான்.

இப்போது குத்தாலம் என வழங்கப்படுகிறது. உத்தாலவனம் என்பது மருவி குத்தாலம் ஆனது. உடற்பிணி தீர்க்கும் தலம். கார்த்திகை மாதம் ஞாயிறு இத்தலச் சிறப்பு.

இறைவன் : உக்தவேதீஸ்வரர்
இறைவி    : அமிர்தகிழாம்பிகை
தலமரம்     : உத்தாலமரம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி13 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாவடுதுறை

                                         - வீழும் பொய்
தீரா வடுவுடையார் சேர்தற்கு அருந்தெய்வச்
சீரா வடுதுறைஎம் செல்வமே -

பொய்க்கு அழிக்கும் தன்மை உண்டு.  வடு - எப்போதும் அழியாத அடையாளம் .  பொய் சொல்பவர்களை வடுவுடையார் என்கிறார் வள்ளலார். பொய் சொல்வார் இறைவனை அடைய முடியாதவர். கிடைத்தற்கரிய தெய்வச் செல்வமாய்  திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானை பொய்யுரைப்பார் அடையமாட்டார்.

கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ளது. இங்குள்ள நந்தி மிகப் பெரியது. திருமூலர், திருமந்திரம் அருளிய ஊர். தரும தேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனம் ஆனது.
சம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்காக பொற்கிழி பெற்றார். போகருடைய மாணவர் திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய ஊர். சுந்தரர் உடற்பிணிதீர பிரார்த்தித்துக் கொண்ட தலம்.

இறைவன் : மாசிலாமணிநாதர்
இறைவி    : ஒப்பிலாமுலையாள்
தலமரம்     : படர் அரசு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  : அருட்பெருஞ் சோதி

''கிறிமொழிக் கிருதரை,'' எனத் தொடங்குகிறது ஒரு திருப்புகழ்.
கிறி என்றால் பொய். கிருது - செருக்கு, கர்வம், அகங்காரம்
அகங்காரம் மிக்கவர் வாய் கூசாமல் பொய் சொல்வர்.

நீதி வெண்பா என்ன சொல்கிறது?
ஆனந் தணர் மகளிர் அன்பாம் குழந்தைவதை
மானந் தரும்பிசித  வார்த்தையிவை - மேனிரையே
கூறவரும் பாவம் குறையாதொவ் வொன்றுக்கு
நூறதிக மென்றே நுவல்.

நூறு பசுக்களைக் கொன்ற பாவம் ஒரு அந்தணனைக் கொன்றால் வரும். நூறு அந்தணர்களைக் கொன்ற பாவம் ஒரு பெண்ணைக் கொன்றால் வரும்.நூறு பெண்களைக் கொன்ற பாவம் ஒரு குழந்தையைக் கொன்றால் வரும். நூறு குழந்தைகளைக் கொன்ற பாவம் ஒரு பொய் சொன்னால் வரும். எனவே பொய் சொல்லக் கூடாது.
11 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருக்கோழம்பம்

                                   - இல்லமயல்
ஆழம்பங் கென்ன அறிந்தோர் செறிந்தேத்தும்
கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே -

இந்த இல் வாழ்க்கையில் ஏற்படும் விருப்பம் ஆழமான சேற்றில் இறங்குவது போல் ஆகும். உள்ளே இழுக்கும் சேற்றிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம். அதனாலேயே அதனை மாயை என்பர்.
இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மயக்கம் தெளிந்து, ஒன்று சேர்ந்து, கருணைக்கடலாய் திருக்
கோழம்பத்தில் அருள்மழை பொழியும் சிவபெருமானை வழிபடுவர்.

இவ்வூர் கொளம்பியூர், திருக்குழம்பியம்  எனவும் அழைக்கப்படுகிறது. பசுவின் கால் குளம்பு இடறிய போது வெளிப்பட்ட மூர்த்தி. இந்திரன் வழிபட்டதலம். கோகிலம் வழிபட்டமையால் இறைவன் பெயர் 
கோகிலேஸ்வரர்.

இறைவன் : கோகிலேஸ்வரர்
இறைவி    : செளந்தரநாயகி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

10 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநல்லம்

                                                 - பாடச்சீர்
வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்கு திரு
நல்லமகிழ் இன்பநவ வடிவே -

புதுமை வடிவாய், இன்ப மயமாய் திருநல்லத்துப் பெருமான் அருள் புரிந்தவாறு வீற்றிருக்கிறார்.  பாடும் திறமை மிக்க  தமிழ்ப்புலவர்கள் அவரை  நாளும் வணங்குகிறார்கள்.

கோனேரிராஜபரம் என வழங்கப்படுகிறது. இங்கு நடராஜர்  மிகப்பெரிய உருவத்தில் காட்சியளிக்கிறார்.

இறைவன் : உமாமகேஸ்வரர்
இறைவி    : அங்கவளைநாயகி
தலமரம்     : அரசு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  -  அருட்பெருஞ் சோதி


9 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவைகல் மாடக்கோயில்

                                                     - ஞாலத்து
நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல்
மாடக்கோ யிற்குள் மதுரமே -

திருவைகல் மாடக்கோயிலில் வீற்றிருக்கும் இனிமையே வடிவான சிவபெருமானை தகுதி வாய்ந்தவர்கள் நாள்தோறும் நினைந்து துதிக்கிறார்கள்.

இந்த ஊரின்பெயர் வைகல் - கோயில் மாடக்கோயில்.

இறைவன் :வைகல்நாதர்
இறைவி    : கொம்பில் இளங்கோதை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


8 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநீலக்குடி

                                                - புன்குரம்பை
ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மைதரு
நீலக் குடியிலங்கு நிட்களமே -

துன்பம் நிறைந்தை இவ்வுடற் கூட்டை ஏற்றுக்கொண்டு வாழ்கிற என் போன்றவர்க்கு உண்மை ஞானம் தந்து அருள்புரிய திருநீலக்குடியில் களங்கமற்ற தூய வடிவினனாய் வீற்றிருக்கும் சிவபெருமானே, உம்மை வணங்குகிறோம்.

நீலக்குடி ஆடுதுறைப் புகைவண்டி நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்பொழுது
'தென்னலக்குடி' என்று பெயர். நஞ்சை உண்டு இறைவன் நீலகண்டராய் விளங்கும் தலம். மரணபயம்,
 ராகு தோஷம் உள்ளவர்கள் வழிபடுகின்றனர்.

இறைவன்: நீலகண்டேஸ்வரர்
இறைவி  : அநூபமஸ்தனி, பக்தாபீஷ்டதாயினி
தலமரம்   : பஞ்சவில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

7 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தென்குரங்காடுதுறை

                                                   - நீக்கமிலா
நன்கு உரம் காணும் நடையோர் அடைகின்ற
தென்குரங் காடுதுறைச் செம்மலே -

நீங்காத நல்ல ஒழுக்கம் எனும் உயர் பண்பில் ஊறித்திளைக்கின்ற நல்லோர்கள் தென்குரங்காடு துறையில் சேர்ந்து வாழ்கின்றனர். செம்மையான பண்பால் தலைமை உடையவனாய்த் திகழ்கின்ற
இறைவனாம் சிவ பெருமான் அவர்களுக்கு அருள் செய்கின்றார்.

இஃது ஆடுதுறை என வழங்கப்படுகிறது. திருவிடை மருதூருக்குக் கிழக்கில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. சுக்ரீவன் வழிபட்டதலம்.

இறைவன் : ஆபத்சகாயேச்வரர்
இறைவி    : கொம்பில் இளங்கோதை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  - அருட்பெருஞ் சோதி

6 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிடைமருதூர்

                                                             - ஓகையுளம்
தேக்கும் வரகுணனாம் தென்னவன்கண் சூழ்பழியைப்
போக்கும் இடைமருதின் பூரணமே -

நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தென்னவன் வரகுணபாண்டியனுக்கு ஏற்பட்ட பழியைப் போக்கி ஆட்கொண்டவன் திருவிடைமருதூர்ச் சிவன். அவனை வணங்குவோம்.

வரகுணபாண்டியன் வேட்டையாடித் திரும்பி வரும் வழியில் அவன் குதிரையின் குளம்பினால் ஒரு அந்தணன் மாண்டான். அதனால் அவனுக்குப் பழி ஏற்பட்டது. ஆலவாய் அண்ணல் அருளியபடி விடைமருதூர் கிழக்கு வாயிலைக் கடந்து உள்ளே புகுந்ததும் அவனைப் பற்றிய பழி நீங்கிற்று.

பட்டினத்தார் பக்தியுடன் பணிந்த இப்பதி கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மஹாலிங்கத்தலம் எனப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


5 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநாகேச்சரம்

                                      - சீரோங்கும்
யோகீச் சுரர்நின்று வந்து வணங்குதிரு
நாகீச் சுரமோங்கு நங்கனிவே -

சிறப்புப் பொருந்திய யோகத்தால் விளையும் நன்மைகள் அனைத்தையும்  பெறும் யோகியர்கள் திருநாகேச்சரத்து இறைவன் முன் சென்று நின்று வணங்கி வழிபடுவர்.

திருநாகேஸ்வரம் எனப்படுகிறது.சேக்கிழார் பெருமானுக்கு அபிமானம் மிக்க தலம். நவக்கிரகத் தலங்களுள் ராகுவுக்கு உரிய தலமாகக் கருதப்படுகிறது.

இறைவன்: நாகநாதர்
இறைவி  : குன்றமா முலையம்மை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

4 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

குடந்தைக் காரோணம்

                                        - வாழ்க் கோட்டத்
தேரோண மட்டுந் திகழ்குடந்தை மட்டுமன்றிக்
காரோண மட்டும் கமழ் மலரே -

நம்முடைய உடல் தேர் போன்றது. அதிலே வீற்றிருந்து இறைவன் நம்மை நடத்திச் செல்கிறான்.
அதே போல குடந்தையிலும், குடந்தைக் காரோணத்திலும் சிவமணம் வீசும் வாடாமலராய் அனைவருக்கும் அருள் புரிகிறான்.
காயாரோகணம் என்பது காரோணம் எனவும், தேரோகணம் தேரோணம் எனவும் சிதைந்து
வந்துள்ளது. இவ்வுடம்புடன் மேல் உலகு செல்வது  காயாரோகணம் ஆகும். இவ்வாறு ஒருவர் சித்தி அடைந்த இடம் குடந்தைக் காரோணம்.

மகாமகக் குளத்தின் வடகரையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயில் இதுவாகும். இங்கு சப்த கன்னியர் சந்நிதி விசேடமானது.

இறைவன் : காசிவிசுவநாதர்
இறைவி   : விசாலாட்சி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

3 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

குடந்தைக் கீழ்க் கோட்டம்

                                            - மாணுற்றோர்
காழ்க்கோட்ட நீங்கக் கருதும் குடமூக்கில்
கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே -

பிற உயிர்களிடம் கொண்டுள்ள வெறுப்பு நீங்கி, ஜீவகாருண்யம் தழைத்து ஓங்கவேண்டும் என்று விரும்புவோர் மாண்புடையவர்கள். அவர்களுடைய நண்பனாய் விளங்குகிறான் குடந்தைக் கீழ் கோட்டத்துச் சிவன்.

கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் என வழங்கப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள நடராசரை
திருநாவுக்கரசர் தாண்டகப் பாடல்கள்தோறும் ,''குடந்தைக் கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே'' என்று பாடிப் பரவியுள்ளார்.

இறைவன்: நாகேஸ்வரநாதர்
இறைவி : பெரியநாயகி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி


2 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கும்பகோணம்

                                                  - நிலஞ்சுழியாது
ஓணத்தில்  வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
கோணத்தில் தெய்வக் குலக் கொழுந்தே -

இப்பூவுலகில் வாழ்பவர் வருந்தாது ஆனந்தமாய் இருக்க வேண்டும் என்பதற்காக திருவோண நட்சத்திரத்தில் பிறந்த திருமால் தன் அடியாருடன் வழிபடும் கும்பகோணத்தில் தெய்வகுலம்
தழைக்குமாறு குலக்கொழுந்தாய் விளங்குபவனே!

இவ்வூர் 'குடந்தை,' எனவும், 'திருக்குடமூக்கு,' எனவும் அழைக்கப்படுகிறது. கும்பகோணம் என்பது
குடமூக்கு என்பதன் வடமொழிபெயர்ப்பு. குடம் - கும்பம்; கோணம் - மூக்கு.

குடந்தை நகர் கும்பேஸ்வரன் கோயிலே திருக்குடமூக்கு ஆகும். இத்தலப் பெருமையை அப்பர்,''குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுகலாமே,'' என்று பாடியுள்ளார்.

இறைவன்: கும்பேஸ்வரர்
இறைவி   : மங்களாம்பிகை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  - அருட்பெருஞ்சோதி

1 August 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவலஞ்சுழி

                                            - சேர்ந்த
மலஞ்சுழி கின்ற மனத்தர்க்கு அரிதாம்
வலஞ்சுழி  வாழ் பொன் மலையே -

பொன்னால் செய்யப்பட்ட  மலையைப் போல் கோடி சூரியப் பிரகாசனாய் விளங்குபவர் சிவபெருமான்.
பல்வேறு பிறவிகளினாலும் சேர்ந்துள்ள பாவங்களால் இறைவனைத் துதிக்க விரும்பாதவர்களுக்கு கிடைத்தற்கரியவவனாக திருவலஞ்சுழியில் கோயில் கொண்டுள்ள இறைவா உன்னை வணங்குகிறோம்.

கும்பகோணத்துக்கு மேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூரில்  காவிரியாறு வலமாய் சுழித்து ஓடுதலால் வலஞ்சுழி எனப் பெயர் பெற்றது. இது விநாயகருக்கு உரிய தலம். கடல் நுரையினால் ஆன வெள்ளைப் பிள்ளையார் இங்கு சிறப்பு.

இறைவி : பெரியநாயகி
இறைவன்: கற்பகநாதர்
தலமரம்  : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி


31 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பழையாறை வடதளி

                                              - துட்டமயல்
தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க
ஓங்குபழை  யாறையிலென் உள் உவப்பே - பாங்குபெற
ஆர்ந்த  வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
சார்ந்த வடதளிவாழ் தற்பரமே - 

பட்டீச்சரத்துக்கு கிழக்கே உள்ளது, பழையாறை. சோழர்களின் தலைநகரங்களில் ஒன்று. வடதிசையில்
அமைந்த சிவாலயம் பழையாறை வடதளி. இரண்டும் வேறு வேறாக உள்ளன. சமணரால் வடதளிக் கோயில் மறைக்கப்பட்டிருந்தது. அதை அறிந்த திருநாவுக்கரசர் அங்கு உண்ணாவிரதம் இருந்ததாகவும், மன்னன் முயற்சியால் மறைக்கப் பட்டிருந்த கோயில் வெளிப்பட்டதாகவும் தல
புராணம் கூறுகிறது.
இனி வள்ளல் பெருமான் கூறுவதைக் கேட்போம் - தீயசெயல்கள் அறிவின்மையால் ஏற்படும் மயக்கத்தாலேயே உண்டாகின்றன.  தீமைபுரியாத நன்மக்களை வான் உலகு சென்று உள்ளமெல்லாம் இன்பவெள்ளம் பாயுமாறு  வாழ்விப்பவர் பழையாறை நகரிலே, வீற்றிருக்கும்  சிவபெருமான்!
ஆலிலைமேல் துயின்ற திருமாலும், அன்னப் பறவையை ஊர்தியாகக் கொண்ட பிரமனும் நாள்
தோறும் வந்து வடதளி ஈசனை வணங்கிச் செல்கிறார்கள்.

இறைவன்:தர்மபுரீஸ்வரர்
இறைவி   : விமலநாயகி
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி.

30 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பட்டீச்சரம்

                                          - பத்தியுற்றோர்
முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
பட்டீச் சரத்துஎம் பராபரமே -

(ஈச்சுரம் - இறைவன் உறையும் கோயில்) (பத்தி) பக்தி
சிவபக்தியுடையவர் பராபரமான சிவபெருமான் உள்ள திருக்கோயிலைக் காண எந்தத் தடையும் இல்லாவகை பட்டீச்சுரத்தில் கோயில் கொண்டு  அருள் பாலிக்கிறார்.

பட்டீச்சரத்திற்கும் சத்திமுற்றத்துக்கும் இடையே ஒரு தெருதான் உள்ளது.காமதேனுவின் புதல்வி
பட்டி பூசித்ததால் பட்டீச்சரம். இங்கு ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தர் அருளினார்.
ஞானசம்பந்தர் வரும் காட்சியைக்  கருவறையிலிருந்து  காண நந்தியை விலகி இருக்கச் சொன்னாராம். எனவே இத்தலத்தில் உள்ள ஐந்து நந்திகளும் சந்நிதியிலிருந்து விலகியுள்ளன.
வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அஷ்டபுஜ துர்க்கை விசேஷம். ஊர் பழையாறை. கோயில் பட்டீச்சரம். வாலியைக் கொன்றதால் இராமபிரானுக்கு ஏற்பட்ட சாயா தோஷம் இங்குதான் நீங்கியது.
இராமபிரான் ஸ்தாபித்த லிங்கம் இன்னும் வழிபாட்டில் உள்ளது. இக்கோயில் கிழக்கு மேற்கில் 650  அடி,தெற்கு வடக்கில் 295 அடி. இங்குள்ள துர்க்கை வரப்பிரசாதி. சம்பந்தர் பதிகம் உள்ளது.
இறைவன் :பட்டீச்சரர்,தேனுபுரீஸ்வரர்
இறைவி    : பல்வளை நாயகி, ஞானாம்பிகை
தலமரம்     : வன்னி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  - அருட்பெருஞ்சோதி

29 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சத்தி முற்றம்

                                           - ஓவாது
சித்திமுற்ற யோகம் செழும் பொழிலில் பூவைசெயும்
சத்திமுற்ற மேவும் சதாசிவமே -

திருச்சத்தி முற்றம் எனும் சோலைகள் சூழ்ந்த ஊரில் சதாசிவமாய் வீற்றிருக்கும் பரம்பொருளே! இவ்வூர்ப் பறவைகளான மைனாக்கள் சற்றும் நிறுத்தாமல் எண்வகை சித்திகளும் கிடைப்பதற்காக
யோகம் செய்யும் புண்ணியம் செய்துள்ளன!

கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சத்திமுத்தம் என்று வழங்கப்படுகிறது. இங்கு இறைவனை அம்பிகை வழிபட்டு லிங்கத்தைத் தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.  இங்கு  மனமார வேண்டிக்கொள்வதெல்லாம் நிறைவேறும்.

இறைவன் : சிவக்கொழுந்தீசர்
இறைவி    : பெரிய நாயகி
தீர்த்தம்     : சூலதீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

28 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

ஆவூர்ப் பசுபதீச்சுரம்

                                        - மல்லார்ந்த
மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
ஆவூரி லுற்ற எங்கள் ஆண்தகையே -

 உயர்ந்த சிகரங்களையுடைய   திருஆவூர்ப்பசுபதீச்சுரத்தில் ஆண்தகையாய்  பெருமையுடன் வீற்றிருக்கிறார் சிவபெருமான்!  வளம் மிக்க ஏழு குதிரைகளைப் பூட்டிய பொன்னிறத் தேரில்
கதிரவன் கடலிலிருந்து எழுந்து வந்து வையம் முழுவதையும், ஆவூரின் சிகரங்களையும் தழுவுகிறான்.

கும்பகோணம் புகை வண்டி நிலையத்திலிருந்து  13 கி.மீ தொலைவில் உள்ளது. ஆவூர் என வழங்கப்படுகிறது. காமதேனுவிற்கு வசிட்டரால் ஏற்பட்ட சாபம் நீங்க இங்கு வந்து வழிபட்டதால் நீங்கியது.எனவே ஆவூர். ஆ- பசு. பசுபதீச்சுரம் என்பது கோயில் பெயர்.

இறைவன் : பசுபதீஸ்வரர்
இறைவி    : மங்களநாயகி, பங்கஜவல்லி
தலமரம்     : அரசு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி


27 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநல்லூர்

                                                 - சீலத்தர்
சொல்லூர் அடியப்பர் தூயமுடி மேல் வைத்த
நல்லூர் அமர்ந்த நடுநாயகமே -

இந்த ஊர் நல்ல ஊர்! ஏன்? (சீலத்தார் சொல்லூர் அடி) சைவ ஒழுக்கமுடைய பெரியோர் புகழ்ந்து பேசும் இறைவனின் திருவடிகள் -  நடுநாயகமாகத் திகழ்கிறது இவ்வூரில்!அப்பர் பெருமானுடைய தூய
முடிமேல் தன் திருவடிகளை வைத்து சிவபெருமான் அருள் புரிந்தார். அப்பர் திருச்சத்தி முற்றத்தில்
தன் முடி மேல் அடி வைக்கும்படி வேண்டியதற்கு, இறைவன் இந்தத் திருநல்லூரில் தம் திருவடியை
அவரது முடி மேல் வைத்தருளினார்.
                 
மூலவர் சிவலிங்கத் திருமேனி சுயம்பு! ஒரு நாளில் ஆறு நாழிகைக்கு ஒரு முறை ஐந்து முறை நிறம்
மாறுகிறது.  இதனால் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயர் உள்ளது. வண்டு வடிவம் கொண்டு பிருங்கி முனிவர் வழிபட்டார்.அதனால் சிவலிங்கத்தில் துளைகள் உள்ளன.

கும்பகோணத்திலிருந்து  தஞ்சாவூர் செல்லும் பாதையில் வலங்கைமான் செல்லும் சாலையில் உள்ளது.
இறைவன் : பெரியாண்டேஸ்வரர்
இறைவி    : திரிபுர சுந்தரி
தீர்த்தம்     : சப்தசாகர தீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

26 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாலைத் துறை

                                                    - முருகார்ந்த
சோலைத் துறையில்  சுகஞ்சிவநூல் வாசிக்கும் 
பாலைத் துறையிற் பரிமளமே -

அழகும், மணமும், தேனும் நிறைந்த மலர்ச்சோலைகள்! அவை வளம்பெற நீர்த்துறைகள்! இங்கு
படிக்கப் படிக்க சுகம் தரும், இன்பமளிக்கும் சிவபெருமானைப் போற்றும் சைவ நூல்களை ஓதும்
அறிஞர்கள்!சிவஞான மணம் கமழும் ஊர் திருப்பாலைத் துறை.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திற்கு முன்பாக உள்ளது. பாண்டவர்கள் வனவாசத்தின்
பொழுது அர்ச்சுனன் இங்கு வந்து வில்வித்தை நுட்பங்களை உணர்ந்ததாக தலபுராணம் கூறுகிறது.
இறைவன் :பாலைவனநாதர்
இறைவி   : தவளை வெண்ணகையாள்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி.

24 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கருகாவூர்

                                              - மிக்க
அருகாவூர் சூழ்ந்தே அழகு பெற ஓங்கும்
கருகாவூர் இன்பக் கதியே -

மிக்க அண்மையில்  வளமான ஊர்கள் சூழ்ந்து அழகு பெற்று ஓங்கும் திருக்கருகாவூரின் இன்பமே. நீயே கதியென உன்னை வணங்குகிறோம்.

பாபநாசம் புகை வண்டி நிலையத்திலிருந்து தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பஞ்சாரண்யத் தலங்களில் ஒன்று.திருக்களாவூர் என்றும் வழங்கப்படுகிறது. இத்தலத்தை வழிபடும்
கருவுற்ற பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.

இறைவன் : முல்லைவனநாதர்
இறைவி   : கர்ப்பரட்சாம்பிகை
தலமரம்   : முல்லை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெரும்சோதி

23 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சக்கரப்பள்ளி

                                                       - கள்ளமிலஞ்
சக்கரப் பள்ளிதனில் தாம்பயின்ற மைந்தர்கள்சூழ்
சக்கரப் பள்ளிதனில்  தண்ணளியே -

(கள்ளமிலஞ் சக்கரப் பள்ளி - கள்ளம் + இல் + அஞ் சக்கரம் + பள்ளி
அஞ்சக்கரம் - நமசிவாய எனும் ஐந்து அட்சரங்கள்; திருவைந்தெழுத்து )
திருச்சக்கரப்பள்ளியில் சிவநெறித் திருமடங்கள் உள்ளன. இம்மடங்களில் கூடும் இளைஞர்கள்
நமசிவாய மந்திரத்தை ஓதுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சக்கரப் பள்ளியில் பக்தர்கள் மனதைக் குளிரச் செய்கிறார் சிவபெருமான். அவரை வணங்குகிறேன்.

இவ்வூர் தற்போது அய்யம்பேட்டை என வழங்கப்படுகிறது. இங்கு திருமால் வழிபட்டு சக்ராயுதம் பெற்றார். சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.

இறைவன் : சக்கரவாகீஸ்வரர்
இறைவி   :  தேவநாயகி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி!

22 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புள்ள மங்கை

                                               - நன்குடைய
உள்ள மங்கை மார்மேல் உறுத்த தவர்புகழும்
புள்ள மங்கை  வாழ்பரம போகமே -

நன்மை நிறைந்த தம் மனத்தை சான்றோர் சிற்றின்ப போகத்தில் செலுத்த மாட்டார்கள்.  அத்தகைய
மன உறுதி உடையவர் வாழும் ஊர் திருப்புள்ளமங்கை. இவ்வூரில் மேன்மையடையச் செய்யும் சிவபோகத்தைத்தருபவர் சிவபெருமான். சான்றோர் எப்போதும் திருப்புள்ளமங்கைச் சிவனை புகழ்ந்து போற்றுவர். நாமும் அவரைப் போற்றி, வாழ்த்தி வணங்குவோமாக.

இவ்வூர் திட்டையை அடுத்துள்ள புகைவண்டி நிலையமான பசுபதி கோயிலுக்கு வடமேற்கில் 2 1/2 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு மஹிஷாசுரமர்த்தினி (துர்க்கை) சிறப்புடையது. திருப்புள்ளமங்கை, பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம்  ஆகிய இம்மூன்று ஊர்களிலும் உள்ள துர்க்கைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை மூன்றும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. அமுதம் கடைந்த போது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்பது தலபுராணச்செய்தி. இது சக்கரப்பள்ளி சப்தமங்கைத் தலங்களுள் ஒன்றாகும்.

இறைவன் : ஆலந்தரித்தநாதர்
இறைவி    : அல்லியங்கோதை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி! 

11 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தென் குடித் திட்டை

                                      - கோதியலும்
வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
தென்குடித் திட்டைச் சிவபதமே -

(கோது - குற்றம். திட்டை - புன்செய் நிலம்)
குற்றம் செய்யும் வன்மனக் குடியினர் வாழும் இடத்தைச் சேராமல் நல்ல மனமுடைய சான்றோர் விரும்பியடையும் திருத்தென்குடித் திட்டை என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவனே உம்மை வணங்குகிறேன்.
நவக்கிரஹங்களில் குருவுக்கு உரிய தலம். காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் திட்டில் அமைந்துள்ளதால் திட்டை எனப்படுகிறது. தேனுபுரி என்ற பெயரும்
உண்டு. ஈஸ்வரன் சுயம்புத் திருமேனி. கருவறையின் சிவலிங்கம் இருக்கும் பகுதியின் மேல் சந்திரகாந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளதால் சிவலிங்கத்தின் மீது அரைமணிக்கு ஒரு சொட்டு நீர்
விழுகிறதாம். இங்குள்ள திருநீற்றுக் கோயில் காணத்தக்கது.

இறைவன் : பசுபதி நாதர்
இறைவி    : உலகநாயகி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

8 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேதிகுடி

                                    - ஆற்றலிலாத்
தீதிக் குடிஎன்று செப்பப் படார்மருவும்
வேதிக் குடியின்ப வெள்ளமே - 

இவர்கள் நல்லவர் அன்று. தீயவர்களான இவர்களுடன் வாழ்வது குற்றம் என்று சொல்லக்கூடிய அளவில் சிலர் இருப்பார்கள். அதனால்தான் 'துஷ்டரைக் கண்டால் தூர விலகு,' என்னும் பழமொழி வழங்குகிறது.
மேலும் 'தீயாரைக் காண்பதுவும் தீதே, திருவற்ற தீயோர் சொல் கேட்பதுவும் தீதே,' எனத் தீய குணமுடையாரிடமிருந்து  விலகிப் போகிறோம். இன்ப வெள்ளமாக விளங்கும் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் திருவேதிக்குடியில் நல்லவர்களே வந்து வழிபடுகிறார்கள். (குடி - குடியிருப்பு)

இவ்வூர் திருக்கண்டியூர்க்குக் கிழக்கில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. இங்கு இறைவன் அர்த்த நாரீஸ்வரர் வடிவில், வலப்புறம் உமையும், இடப்பால் சிவனுமாக அமர்ந்திருக்கிறார். இது ஒரு திருமணப் பிரார்த்தனைத் தலமாகும்.

இறைவன் : வேதபுரீஸ்வரர்
இறைவி    : மங்கையர்க்கரசி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

7 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சோற்றுத்துறை

                         - கொண்டியல்பின்
வேற்றுத் துறையுள் விரவா தவர் புகழும்
சோற்றுத் துறையுள் சுகவளமே -

 திருச்சோற்றுத் துறை என்னும் பதியில் தன்னை வணங்குபவர்க்கு சுகத்தையும், வாழ்க்கை வளத்தையும் தரும் சிவபெருமானை யார் புகழ்கிறார்கள்? சிவ நெறியை மட்டுமே பற்றிக் கொண்டு பிற சமயத் துறைக்
குள் கலவாத சிவபக்தர்கள் புகழ்கிறார்கள்! சோறு - முக்தியின்பம்.

இவ்வூர் கண்டியூர்க்குக் கிழக்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்று.
இறைவன் : தொலையாச்செல்லர்
இறைவி    : அன்னபூரணி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்6 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கண்டியூர்

                                          - காந்தருவத்
தண்டியூர் போற்றும் தகைகாசிக் கண் செய்து
கண்டியூர் வாழும் களைகண்ணே -

காந்தர்வர்கள் விரும்பும் அழகைக் காசி நகருக்குத் தந்தவர் சிவபெருமான். அதுபோன்ற சிறப்பை
திருக்கண்டியூர் பெரும் வண்ணம் கோயில் கொண்டு அனைத்து உயிர்க்கும் அருள் செய்யும் சிவமே!

இவ்வூர் திருவையாற்றுக்குத் தெற்கில் காவிரித் தென்கரையில் இருக்கிறது. மாசிமாதம் 13,14, 15 நாட்களில்மாலையில் சூரிய ஒளி ஈஸ்வரன் மீது படுகிறது.

இறைவன் : வீரட்டானேஸ்வரர்
இறைவி    : மங்களநாயகி
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்