31 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஇன்னம்பர்

                                        - இட்டமுடன்
என்னம்பர் என்று அயன்மால் வாதுகொள
இன்னம்பர் மேவிநின்ற என் உறவே -

திருமாலும், நான்முகனும் மிகுந்த விருப்பத்தோடு என்சிவ பெருமான் வீற்றிருக்கும்  கோயில் என வாது செய்கிறார்களாம். இத்துணை சிறப்பு வாய்ந்த இன்னம்பர் என்ற பதியில் எழுந்தருளிய்இருக்கும் என் உறவே! சிவனே உம்மை வணங்குகிறேன்.

இவ்வூர் கொட்டையூருக்கு மேற்கில்  உள்ளது. அகத்தியரும், ஐராவதமும் வழிபட்ட தலம். அகத்தியர் இங்கு இலக்கண உபதேசம் பெற்றார். அப்பர், சம்பந்தர் பதிகங்கள் உள்ளன.
இறைவன் : எழுத்தறிநாதேஸ்வரர்
இறைவி    : கொந்தார் பூங்குழலம்மை
தலமரம்      : பலா

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்

30 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கொட்டையூர்

                                                           -  அயலாம்பல்
மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்து கொளும்
கொட்டையூருள் கிளரும் கோமளமே -

கொட்டையூர் எனும் திருத்தலத்தில்  அன்பர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம்
அழகே உருவாய் எழுந்தருளியிருக்கிறார் சிவபெருமான். அவ்வூரில் நிறைய நீர் நிலைகள் உள. அவற்றில் ஆம்பல் மலர்கள் பூத்துள்ளன. இந்த ஆம்பல் மலர்களின் இதழிலே அமர்ந்து ஊர்ந்து
சென்று அதிலுள்ள தேனை விருந்தாக வந்த மற்ற வண்டினங்களுடன் கூடி உண்ணும் சிறப்பு
வாய்ந்தது.

இவ்வூர் கும்பகோணத்திலிருந்த்உ திருவையாறு செல்லும் சாலையில் உள்ளது. வில்வாரண்யம்,
ஏரண்டபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆமணக்குச் செடியின்கீழ் லிங்கம் வெளிப்பட்டதால்
கொட்டையூர் எனப்படுகிறது. சோழ மன்னன் ஒருவனுக்கும், ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்க
மாக இறைவன் காட்சி அளித்ததால் ஈஸ்வரன் கோடீஸ்வரன் எனவும், கோயில் கோடீச்சுரம்
எனவும் வழங்கப்படுகிறது. இங்கு மார்க்கண்டேயர் வழிபட்டுள்ளார். அப்பர் பதிகம் ஒன்றுள்ளது.

இறைவன் : கோடீஸ்வரர்
இறைவி    : பந்தாடுநாயகி அம்மை
தலமரம்     ஆமணக்கு.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம் 


29 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருந்து தேவன் குடி

                                      - வாஞ்சையுறும்
சீவன் குடியுறஇச் சீர்நகர்ஒன் றேஎனும்சீர்த்
தேவன் குடிமகிழ்ந்த தெள்ளமுதே -

அமுதனைய சிவபெருமானிடம் நீங்காத அன்புடைய சீவன்கள் குடியேறுவதற்குரிய சிறந்த ஊர் எனப்
புகழ் பெற்ற தேவன்குடியில் வீற்றிருக்கும் இனியவனே உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் தற்போது 'திருத்தேவன்குடி' எனப்படுகிறது. நண்டு பூசித்த தலம் ஆதலால் 'நண்டாங்கோயில்'
என அழைக்கப்படுகிறது. கற்கடகம் என்றால் நண்டு எனப் பொருள்.
இறைவன்: கற்கடேஸ்வரர்
இறைவி   : அருமருந்தம்மை

திருவியலூர்

                                          - ஓவில்
மயலூர் மனம்போல் வயலில் கயலூர்
வியலூர் சிவானந்த வெற்பே -
ஓவுஇல் - இடைவிடாது மயக்கத்தில் இருப்பவர் மனதைப் போல் வயல்களில் கயல் மீன்கள் துள்ளிப்
பாயும் திருவியலூரில் கோயில் கொண்ட சிவானந்த மலையாம் உன்னை வணங்குகிறேன்.

கும்பகோணத்துக்கு கிழக்கே அமைந்துள்ள இவ்வூர் தற்போது திருவிசலூர், திருவிசைநல்லூர் என்று
அழைக்கப்படுகிறது.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

28 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சேய்ஞலூர்

                                              -  ஏழ்புவிக்குள்
வாய்ஞ்ஞலூர் ஈதே மருவ என வானவர் சேர் 
சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே -

ஏழு உலகங்களிலும் சிறந்து, நாம் வந்து வழிபட ஏற்ற நல்ல ஊர் இதுவேயாகும் என வானவர்கள்
வந்து வழிபடும் சேய்நல்லூர்ச் சிவனே உன்னை வணங்குகிறேன்.

வாய்ஞ்ஞலூர் - வாய்ந்த நல்லூர். இவ்வூர் சேய்ஞல், சேங்கனூர்,சண்டேஸ்வரபுரம், குமாரபுரி, சத்தியகிரி எனவும் வழங்குகிறது. வைணவப் பெரியவர் பெரியவாச்சான் பிள்ளை அவதரித்த தலம்.அரிச்சந்திரன், சிபி வழிபட்டதலம்.சூரனை அழிக்க வந்த முருகப் பெருமான் இத்தலத்தில் சிவனை வழிபட்டு சர்வ சங்கார படைக்கலத்தைப் பெற்றார். சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
இறைவன் : சத்தியகிரீஸ்வரர்
இறைவி    : சகிதேவியம்மை
தீர்த்தம்     : மண்ணியாறு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

27 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாய்ப்பாடி

                                                  -  தினந்தாளில்
சூழ்திருவாய்ப்  பாடியங்குச் சூழ்கினுமா மென்றுலகர்
வாழ்திருவாய்ப்  பாடி இன்ப வாரிதியே -

'தினமும் தாளில் சூழ் வந்து வாயால் பாடிச் சூழ்கினும்,' பூமி மீது கால் பதிந்து நடவாத இலக்குமி தேவியும், வாயால் பாடி, காலால் நடந்து வருவதற்குரிய இடம் என்று உலகர் போற்றும் திருவாப்
பாடியில் இன்பமயமாக வீற்றிருக்கும் எம்பெருமானே உம்மை வாழ்த்தி வணங்குகிறேன்.

இவ்வூர் கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில் உள்ளது.

இறைவன் : பாலுகந்தநாதர்
இறைவி    : பிருகந்நாயகி
தலமரம்     : ஆத்தி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்

26 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பனந்தாள்

                                          - தரும
மனம்தாள்  மலரை மருவுவிப்போர் வாழும்
பனந்தாளில் பாலுகந்த பாகே -

அறம் செய்ய விரும்பும் நல்லவர்கள்  தங்கள் மனதை இறைவன் திருமலரடியில் சமர்ப்பணம்
செய்வர். அத்தகையோர் வாழும் திருப்பனந்தாள் என்னும் பதியில் பாகுபோல் இனிக்கும்  பரம்
பொருளாம்  சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.
இவ்வூர்த்  திருக்கோயிலை தாடகையீச்சரம் எனத் திருப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன.
பனைமரம் தலமரம். அதனால் பனந்தாள் எனப்பட்டது. சம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

இறைவன் : தாலவனேஸ்வரர், அருணஜடேஸ்வரர், செஞ்சடையப்பர்.
இறைவி    : பிருகந்நாயகி, தாலவனேஸ்வரி
தலமரம்     : பனை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்







25 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமங்கலக்குடி

                                                 - ஓடிக்
கருமங்க லக்குடியில் காண்டுமென ஓதும்
திருமங்கலக் குடியில் தேனே.

மன்னனுக்காக வரிவசூல் செய்யும் சிவபக்தர் ஒருவர் தாம் திரட்டிய பணம் அனைத்தையும்
இறைவன் பணியில் செலவிட்டார். பிறகு மன்னன் தண்டனைக்கு பயந்து தன்னை மாய்த்துக் கொண்டார். அவரைச் சார்ந்தவர் அவர் உடலை மங்கலக்குடி எல்லைக்குள் அடக்கம் செய்யக்
கூடாது எனக் கொண்டு சென்றனர்.  ஆனால் மங்கலக்குடி இறைவன் அவரை உயிர்ப்பித்தார். இறந்தவர் எழக்கண்டு அனைவரும் பயந்து ஓட, இறைவன் காட்சி அளித்ததாக தலபுராணம்
கூறுகிறது. இந்நிகழ்ச்சியே இங்கு கூறப்பட்டுள்ளது. திருமங்கலக்குடியில் தேனெனத் தித்திக்கும்
சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். அவரை வணங்கி உய்வோமாக.

இவ்வூர் கும்பகோணம் - கதிராமங்கலம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது.
இது பஞ்சமங்கள ஷேத்திரம் என அழைக்கப்படுகிறது. மங்கள விமானம், மங்கள விநாயகர்,
மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம், மங்கலக்குடி என்ற ஐந்தும் மங்களம் என்பதால் இப்பெயர்
பெற்றது. சம்பந்தர், அப்பர் பதிகங்கள் உள்ளன.

இறைவர் : பிராணவரதேஸ்வரர்
இறைவி   : மங்கள நாயகி
தலமரம்    : வெள்ளெருக்கு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

20 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருக்கோடிகா

                                      - அஞ்சுகங்கள்
நாடிக்கா வுள்ளே நமச்சிவாயம் புகலும்
கோடிக்கா மேவும் குளிர் மதியே -

குளிர்ச்சி பொருந்திய சந்திரனைப் போல் அருள் பொழியும் சிவபெருமான் கோயில் 
கொண்டுள்ள திருக்கோடிக்காவிலுள்ள சோலைகளில் வாழும் கிளிகள் கூட நமச்சிவாய
என மிழற்றும் பெருமை வாய்ந்தது.

இவ்வூர் திருவிடை மருதூருக்கு கிழக்கில் உள்ளது.இப்பொழுது திருக்கோடிக்காவல் என்று 
பெயர். கண்ணமங்கலம் எனவும் வழங்குகிறது.
 அப்பர் பதிகங்கள் மூன்று இத்தலத்திற்குரியது.

இறைவன்  : கோடிகா ஈஸ்வரர்
இறைவி     : வடிவாம்பிகை அம்மை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா


திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கஞ்சனூர்

இத்தலம் கல்லணை - பூம்புகார் சாலையில் கோட்டூர் அருகில் உள்ளது. கோட்டூர் கஞ்சனூர் எனப்படும்.
இந்தத்தலத்தில் 1. பிரமனுக்கு இறைவன் திருமணக்காட்சி தந்தார்.
                           2. பராசரருக்குச் சித்தப்பிரமையைப் போக்கினார்.
                           3. அக்கினிக்கு ஏற்பட்ட சோகை நோயைத் தீர்த்தார்.
                           4. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கியது.
நவக்கிரகத் தலங்களில் சுக்கிரனுக்குரிய தலம் இது. சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து
பரிகாரம் செய்து கொள்ளலாம். இங்கு கொடி மரத்தை அடுத்துள்ள நந்தி புல் அருந்திய நந்தி
என்று சிறப்புப் பெயர் பெற்றது. 'நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திர மகிமைக்கு எடுத்துக் காட்டாக
உள்ள தலம்.

மானக்கஞ்சாற நாயனாரும், ஹரதத்த சிவாச்சரியாரும் அவதரித்த தலம்.
அப்பர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

(19 தேதியிட்ட பதிவிலுள்ள திருக்கஞ்சனூர் பற்றிய விவரங்கள் மட்டும் கொடுக்கப் பட்டுள்ளன)
                           

19 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கஞ்சனூர்

                                                   - கந்தமலர்
அஞ்சனூர் செய்தவத் தாலப் பெயர்கொண்ட
கஞ்சனூர் வாழும் என்தன் கண்மணியே.

நறுமணம் நிறைந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் பிரமனும் அங்கு வாழும் சிறப்பால் திருக்கஞ்சனூர் என்று பெயர் பெற்ற இத்தலத்தில் கோயில் கொண்டு விளங்கும் என் கண்மணியாம் சிவமே உன்னை வணங்குகிறேன்.

இறைவன்:அக்னீஸ்வரர்
இறைவி   :கற்பகாம்பிகை
தலமரம்    : பலாசமரம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

( வலைத்தளப் பிரச்சினை  உள்ளதால் இவ்வூரின் பிற சிறப்புகள் நாளை பதியப்படும்.) 

17 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பந்தணை நல்லூர்

                                                        -  தடம்பொழிலில்
கொந்தணவும் கார்க்குழலார் கோலமயில் போலுலவும்
பந்தண நல்லூர்ப் பசுபதியே.

பெரிய சோலைகளில் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூக்கும். நீண்ட கரிய கூந்தலை உடைய
பெண்கள் அழகான மயில் போல் உலாவருவார்கள்.( தோகை மயிலுக்கு அழகு ; நீண்ட கூந்தல்
பெண்ணுக்கு அழகு) இத்தகைய பந்தணை நல்லூரில் வீற்றிருக்கும் பசுபதியே வணங்குகிறேன்.

இங்கு பசுவுக்கு பதியாக ஈஸ்வரன் வந்து ஆட்கொண்டார். எனவே பசுபதி எனப் பெயர். இறைவன்
எற்றித் தள்ளிய பந்து வந்து அணைந்த இடம் என்பதால் பந்தணை நல்லூர் என்ற பெயர் உண்டானது.
இங்கு நவகிரஹங்கள்  எல்லாம் ஒரே வரிசையில் காட்சி கொடுக்கின்றன.

இப்பதி தற்போது பந்தநல்லூர் என வழங்கப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி
உள்ளது.

இறைவன் : பசுபதீஸ்வரர் (மூலவர் - புற்று -சுயம்புமூர்த்தி)
இறைவி    : காம்பன தோளியம்மை
தலமரம்     : சரக்கொன்றை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா


16 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடம்பூர்

                                                - பாரில்
உடம்பூர் பவத்தை ஒழித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என் இரண்டு கண்ணே -

இப்பூவுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து படும் துன்பத்திலிருந்து விடுவித்து, சிவஞானம் அருளி
மேன்மையடையச் செய்யும் திருக்கடம்பூர் வாழ் சிவனே, என் இரு கண் போன்றானே.

மேலைக்கடம்பூர் என வழங்கப்படும் இப்பதி காட்டுமன்னார் குடியில் இருந்து எய்யலூர் செல்லும்
வழியில் உள்ளது.
இக்கோயிலின் கருவறை அடிப்பாகம் சக்கரங்களுடன் குதிரை பூட்டிய தேர் போன்ற அமைப்பில்
உள்ளது.இத்தலத்து இறைவன் அமிர்தகடேஸ்வரரை இந்திரனின் தாய் வழிபட்டு வந்தாள். தன் தாயின் மூப்பு கருதித் தாய் எளிதாக வழிபட குதிரைகளைப் பூட்டி இந்தக் கருவறையை இழுத்துச் செல்ல முயன்றான். ஆனால் விநாயகரை வழிபட மறந்ததால் தன் முயற்சியில் தோல்வியடைந்தான் என தல வரலாறு கூறுகிறது.
கடம்ப மரங்கள் அதிகமானதால் கடம்பூர் எனப்பட்டது. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட
தோஷம் நீங்கப் பெறுவார்கள்.

இங்கு அப்பர் பாடிய பாடல்
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே.





15 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநாரையூர்

                                                                 - மேனாட்டும்
தேரையூர்ச் செங்கதிர்போல் செம்மணிகள் நின்றிலங்கு
நாரையூர் மேவு நடுநிலையே -

ஆகாய வீதியில் சிவந்த கதிரவன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஊர்ந்து செல்கிறான்.
செங்கதிரவன் போல் சிவந்த மணிகள் பொருந்தி ஒளிரும் திருநாரையூரிலே வீற்றிருக்கும்
சிவபெரூமானே உன்னை வணங்குகிறேன்.

இவ்வூர் சிதம்பரத்தின் தென்மேற்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது.இவ்விடத்தில் துர்வாசர் தவம் செய்துகொண்டிருந்தார். காந்தருவன் ஒருவன் அவர் தவத்திற்கு இடையூறு செய்தான். கோபமடைந்த
முனிவர் அவனை நாரையாகச் சாபமிட்டார். நாரையாகி அவன் வழிபட்ட தலம் ஆதலின் நாரையூர்.
இது நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த தலம். இங்கு பொல்லாப் பிள்ளையார் சிறப்பு. அவர் அருளால்
தான் சிதம்பரத்தில் இருந்த தேவாரப் பாடல்களை நம்பியாண்டார் நம்பிகள் வெளிக்கொணர முடிந்தது.
சம்பந்தர் மூன்று, அப்பர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளனர்.

இறைவன் : செளந்தரேஸ்வரர்
இறைவி    : திரிபுரசுந்தரியம்மை
தலமரம்     : புன்னாகம்
தீர்த்தம்     : காருண்ய தீர்த்தம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

14 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கானாட்டு முள்ளூர்

                                                        - நேமார்ந்த
வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
கானாட்டு முள்ளூர்க் கலைக் கடலே -

பூவுலகிலுள்ள திருக்கானாட்டு முள்ளூரில் கோயில் கொண்டிருக்கும் ஆடல் வல்லானான சிவபிரானை  வானாட்டு தேவர்கள் எல்லோரும் அன்புடன் வந்து போற்றி வணங்குகின்றனர்.

இத்தலம் கானாட்டாம்புலியூர்  என அழைக்கப்படுகிறது.ஓமாம் புலியூரிலிருந்து முட்டம் கிராமம்
சென்றால் 1 கி.மீ தூரத்தில் இத்தலத்தை அடையலாம்.

இறைவன் : பதஞ்சலி நாதேஸ்வரர்
இறைவி    : கானார் குழலி, கோல்வளைக்கையம்மை
தலமரம்     : வெள்ளெருக்கு

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

13 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவோமாம் புலியூர்

                                             - விண்ணினிடை
வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே -

வானை நோக்கித்தாவும் இயல்புடைய புலிகள் உலாவும் மலர்ச்சோலைகள் சூழ்ந்த ஊர்
வாமாம் புலியூர்! இங்கே கோயில் கொண்டிருக்கும் பரசிவத்தை வணங்குகிறேன்.

இப்பதி தில்லைக்கு தென்மேற்கில் 25 கி.மீ தொலைவில் கொள்ளிட வடகரைப்பகுதியில் உள்ளது.
உமையம்மைக்கு இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து பிரணவப் பொருளை உபதேசித்த தலம்
இது.

இறைவன் : துயர்தீர்த்தநாதர்
இறைவி    : அமிர்தவல்லியம்மை
தலமரம்     : இலந்தை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

இத்தலத்தை அப்பர் 9 பாடல்கள் அடங்கிய பதிகம் ஒன்றால் பாடி சிவபெருமானைப் போற்றியுள்ளார்.
ஒரு பாடலைப் பார்ப்போமா?

அருந்தவத்தோர்  தொழுதேத்தும் அம்மான் தன்னை ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியையென் மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவு வயல்நிலவு துங்கப் பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுந்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.





12 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பழமண்ணிப்படிக்கரை

                                                 - தாழ்வகற்ற
நண்ணிப் படிக்கரையர் நாடோறும் வாழ்த்துகின்ற
மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே -

உள்ளத்துக் கீழ்மைக் குணங்களை நீக்க வேண்டி படிக்கரை என்ற இவ்வூரின் பொலிவுக்குக் காரணமாய் விளங்கும் உன்னை இங்கு  வாழ்கின்ற மக்கள் நாள்தோறும் நாடி வந்து வாழ்த்திப் பாடுகின்றனர்.

தற்பொழுது இவ்வூர் 'இலுப்பைப்பட்டு' என்று வழங்கப்படுகிறது. சித்திரைப் பவுர்ணமியில்
பாண்டவர்கள் இங்கு வந்து பஞ்சலிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டதாக கூறப்படுகிறது.
சுந்தரர் பதிகம் ஒன்றுள்ளது.

இறைவன் : நீலகண்டேஸ்வரர்
இறைவி    : அமிர்தவல்லியம்மை
தலமரம்     : இலுப்பை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா


11 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாழ் கொளி புத்தூர்

                                                              - தாவுமயல்
காழ்கொள் இருமனத்துக் காரிருள்நீத் தோர்மருவும்
வாழ்கொளி புத்தூர் மணிச்சுடரே -

 உறுதியற்று, அலைபாய்ந்து ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தேடித் தாவும்
அறியாமை இருளற்ற நல்மனத்தவர் வாழும் வாழ்கொளிபுத்தூரில் கோயில்
 கொண்டிருக்கும்  மணிச் சுடரே, உன்னை வணங்குகிறேன்.

தற்போது திருவாளப்புத்தூர் என அழைக்கப்படும் இவ்வூர் திருப்புன்கூருக்கு
மேற்கில் 5 கி. மீ தொலைவில், மண்ணியாற்றங்கரையில் உள்ளது. திருமால்
இங்கு மாணிக்கலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார் எனவும், அதனால்
அரதனபுரம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு எனக் கூறுகின்றனர்.
இறைவன் : மாணிக்கவண்ணேஸ்வரர்
இறைவி    : வண்டார் பூங்குழலம்மை
தலமரம்     : வாகை
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

சுந்தரர் வாழ்கொளிபுத்தூர் இறைவனைப் பாடியுள்ள பதிகத்தின் ஒரு பாடல்.
மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை மெய்யி  லாதவர் தங்களுக் கெல்லாம்
பொய்யனைப் புரம் மூன்றெரித்தானைப் புனிதனைப் புலித் தோலுடையானைச்
செய்யனை வெளிய திருநீற்றில் திகழு மேனியன் மான் மறியேந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே - தேவாரம்



10 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்குரக்குக் கா

                                                       - மிக்கதிரு
மாவளரும்  செந்தா மரைவளரும் செய்குரக்கு
காவளரும் இன்பக் கன சுகமே -

(மிக்க திருமா) செல்வத்துக்கு அதிபதியாகிய திருமகள் எழுந்தருளும்
செந்தாமரை மலர்கள் மலரும் வயல்கள் உள்ளன. (குரக்குக் கா) குரங்குகள்
நிறைய வாழும் சோலைகள்  நிறைந்துள்ள ஊர் இது. இத்தலத்தில் மேலான
இன்பம் வளர்த்து ஆன்ம சுகத்தைச்,  சிவபோகத்தைத் தரும் சிவம்!

இவ்வூர் வைத்தீஸ்வரன் கோயிலுக்குத் தெற்கில் 10 கி.மீ தொலைவில் உள்ளது.
தற்போது 'திருக்கரக்காவல்' என அழைக்கப்படுகிறது.

இறைவன் : கொந்தளேஸ்வரர்
இறைவி    :  கொந்தளநாயகி
தீர்த்தம்     :  கணபதிநதி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

அப்பர் தேவாரம் - உடம்பெனு மனைய கத்து உள்ளமே தகளி யாக
                               மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி
                               இடம்படு ஞானத் தீயா லெரிகொள இருந்து நோக்கில்
                               கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
உடம்பெனும் வீட்டில், உள்ளமே அகலாக,உணர்வாய நெய் விட்டு, உயிரெனும் திரியிட்டு, ஞானத் தீயாகிய தீபம் ஏற்ற கடம்பணிந்த, கந்தப் பெருமானின் 'தாதை கழலடி'  தரிசனம் பெறலாம்.


9 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கருப்பறியலூர்

                                                                     - ஓரட்ட
திக்கும் கதிகாட்டிச் சீர்கொள்திருத் தொண்டருளம்
ஓக்கும் கருப்பறிய லூரரசே -

(அட்ட திக்கு) எட்டு திசைகளிலும் உள்ள மனிதர்கள் எல்லோருக்கும் நல்ல
வாழ்க்கை தந்து, சிறப்புமிக்க தொண்டர்களின் நல்ல உள்ளம் போல் வளம்
பொருந்திய கருப்பறியலூரில் வீற்றிருக்கும் அருள் அரசே.

இவ்வூர் 'தலைஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. கன்மநாசபுரி, மேலைக்காழி, ஆதித்யபுரி, முல்லைவனம், யூதிகாவனம் என்ற பெயர்களும் உண்டு.

இறைவன் : குற்றம் பொறுத்த நாதர்
   இறைவி : கோல்வளை அம்மை
   தலமரம்  : கொடிமுல்லை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

8 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்குறுக்கை வீரட்டம்

                                          -- மணஞ்சேர்ந்து
வாரட்ட கொங்கை மலையா ளொடுங்குறுக்கை
வீரட்ட மேவும் வியனிறைவே - 

நறுமணம் வீசும் கச்சு அணிந்த உமையம்மையுடன் திருக்குறுக்கையில்
கோயில் கொண்டு, எங்கும் நிறைந்திருக்கும் சிவபெருமானே.
__
தற்காலத்தில் 'கொருக்கை' எனப்படுகிறது. மயிலாடு துறையிலிருந்து 12 கி.மீ.தொலைவில்
உள்ளது. இறைவன் எண்வகை வீரச் செயல்களைப் புரிந்த இடங்கள் அட்ட வீரட்டத்தலங்கள் எனப்படும். அவற்றுள் ஒன்று இத்தலம்.இங்கு சிவபெருமான் காமனை எரித்தார். இதை நினைவு
படுத்தும் வகையில் கூத்தப்பெருமானின் மன்றம் அமைந்துள்ளது.

யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்ற பெயர்கள் உள்ளன. காமதகன விழா மாசி
மகத்தன்று நடைபெறுகிறது.

இறைவன் : வீரட்டேஸ்வரர்
இறைவி    : ஞானாம்பிகை
தலமரம்     : கடுக்காய்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

7 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமணஞ்சேரி

                                               - நண்ணும்
வணஞ்சேர் இறைவன் மகிழ்ந்து வணங்கும்
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே -

திருமணஞ்சேரி என்ற இப்பதியில் எழுந்தருளி அனைவருக்கும் ஆனந்தம் நல்கும்  இறைவனே,
உன் திருவருள் தனக்கு கிடைக்குமாறு அரசனும் உள்ள மகிழ்வோடு வந்து வணங்கும்
சிறப்புடைய உனக்கு நமஸ்காரம்.

மயிலாடு துறையிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் செல்கின்றன.
இங்கு ஈஸ்வரர் கல்யாணசுந்தரர் வடிவம் கொண்டு கோகிலாம்பிகையைத்
திருமணம் செய்து கொண்டார். எனவே இப்பெயர் பெற்றது. திருமணம்
தடைப்படுபவர்கள் இங்கு வந்து வணங்கினால் விரைவில் திருமணம் நடை
பெறும் என நம்புகிறார்கள்.
ராகு தோஷம் உடையவர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.சம்பந்தர், அப்பர்
பதிகங்கள் உள்ளன.

இறைவன் :அருள்வள்ளல்நாதர்
இறைவி    :கோகிலாம்பாள்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா



6 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஎதிர்கொள்பாடி - (மேலைத்திருமணஞ்சேரி)

                   
                                             -  சூழ்வுற்றோர்விண்
எதிர்கொண்டு இந்திரன் போல் மேவிநெடு நாள் வாழப்
பண் எதிர்கொண்டு பாடிப் பரம்பொருளே -

வீட்டிற்கு வரும் பெரியோர்களை, தவசீலர்களை எதிர்கொண்டு வரவேற்பது நம் பண்பாடு.
திருஎதிர்கொள்பாடியில் சிவபெருமான் தன்னை அன்புடன் வழிபட வரும் அடியார்களை
விண்ணவர்களைக் கொண்டு வரவேற்று, இந்திரனைப் போல் செல்வம் பொருந்தி, நெடு
நாள் வாழ அருள்புரிகிறாராம். எத்தனை அற்புதம்! திருஎதிர்கொள்பாடிச் சிவனை வணங்
குவோம்.

இப்பதி வேள்விக்குடிக்கு வடமேற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இறைவன் : ஐராவதேஸ்வரர்
இறைவி   :  மலர்க்குழல்மாதம்மை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா



5 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேள்விக்குடி

                                    -  மன்னர்சுக
வாழ்விக்   குடிகளடி மண்பூச லால் என்னும்
வேழ்விக்   குடியமர்ந்த  வித்தகனே -

மன்னர் சுக வாழ்வு இக்குடிகள் அடிமண் பூசலால் - நாட்டை ஆளும் மன்னர்களுடைய சுக வாழ்வு
உழவர்கள் மண்ணை நன்றாக உழுது, புழுதியாய் உலர்த்தி நீர் பாய்ச்சி எருவிட்டுக் காத்து விளைத்தலால்தான். இந்த உண்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் திருவேள்விக் குடியில் வீற்றிருக்கும் யாவற்றிலும் வல்லவனான சிவபெருமானே உம்மை நமஸ்கரிக்கிறோம்.

இத்தலம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது.இங்கு சிவபெருமான் திருமணக்கொஒலத்தில் காட்சியளிக்கிறார்.

இறைவன் : கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி : மங்கையர்க்கரசி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா  

4 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திரு அன்னியூர்

                                           - பீடுகொண்டு
மன்னி யூரெல்லாம் வணங்க வளம்கொண்ட
அன்னியூர் மேவும் அதிபதியே -

பெருமையுடன் ஊர்மக்களெல்லாம் வணங்கத்தக்கவாறு வளம் நிறைந்த
அன்னியூரில் எழுந்தருளியிருக்கும்  அதிபதியான சிவபெருமானே!

'பொன்னூர்' என்பது இன்றைய பெயர். மயிலாடுதுறையிலிருந்து மணல்
மேடு சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. பாஸ்கரத்தலம், பானுகேந்திரம்,
விகுசாரண்யம் என்ற வேறு பெயர்களும் உண்டு.

இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி    : பெரியநாயகியம்மை
தலமரம்     : எலுமிச்சை
தீர்த்தம்      : வருணதீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 

3 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநீடூர்

                        உருப்பொலிந்தே -
ஈடூரிலாதுயர்ந்த ஏதுவினால் ஓங்குதிரு
நீடூர் இலங்கு நிழல் தருவே -

அழகிய தோற்றத்தால், எதனோடும் ஒப்பிடமுடியாத மேன்மையுடைய
திருநீடுரில் பக்தர்களுக்கு அருள் செய்யும் குளிர்ச்சி பொருந்திய
நிழலளிக்கும் சிவமே !

நீடூர் புகை நிலையத்துக்கு 1 1/2கிலோ.மீ. தொலைவில் உள்ளது இப்பதி.
முனையடுவார் நாயனார் சிவத்தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். காவிரி
மணலைப் பிடித்து வைத்து இந்திரன் பூசித்த லிங்கம். இது இறுகி வெண்மை
நிறமாக மாறியது.

இறைவன் : அருள் சோமநாதேஸ்வரர்
இறைவி    : வேயுறு தோளியம்மை
தலமரம்    : மகிழமரம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

2 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புன்கூர்

                                         - ஒன்றிக்
கருப்புன்கூர் உள்ளக் கயவர் நயவாத்
திருப்புன்கூர் மேவும் சிவனே -

கயவர்கள் மனம் ஒன்றி தாயின் கருப்பையில் மீண்டும் மீண்டும் வசித்துப் பிறவியெடுக்க விரும்புவர். அவர்கள்  திருப்புன்கூரிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானை வணங்கி மீண்டும் பிறவாத மேல் நிலையை அடைய விரும்ப மாட்டார்கள்.
மீண்டும் பிறவா வரம் அருள்வாய் சிவனே! உன்னை வணங்குகிறேன்.
(கரு+புன்கு+ஊர் --கருப்புன்கூர்- கருத்தங்கும் அற்பமான ஊர்.)

வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் உள்ளது.
நந்தனார்( திருநாளைப் போவார்) வணங்குவதற்காக ஈஸ்வரன் நந்தியைச் சற்று
விலகி இருக்க அருள் செய்த தலம். தரிசனம் செய்த நந்தனார் கோயிலின் மேற்குப்
புறம் உள்ள ரிஷப தீர்த்தத்தை வெட்டிச் சீர்படுத்த எண்ணிய பொழுது தனக்கு உதவ
ஒருவரும் இல்லையே என ஈசனை வேண்டினாராம். ஈசனும் அவருக்கு உதவ கணபதியை
அனுப்பினாராம். இப்படி வெட்டப்பட்ட குளம் இன்று கணபதி தீர்த்தம் என்றும்,விநாயகர்
'குளம் வெட்டிய விநாயகர்' என்றும் வழங்கப்படுகிறார்கள்.
இறைவர் :சிவலோகநாதர்
இறைவி  :சொக்கநாயகிஅம்மை
தலமரம்   : புங்கமரம்
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா 


1 May 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநின்றியூர்

                                                     -கொடைமுடியா
நன்றியூர் என்றிந்த ஞாலமெல்லாம் வாழ்த்துகின்ற
நின்றியூர் மேவு நிலைமையனே -

கொடைவள்ளல்களால் நிறைந்த ஊர் என்று இந்த உலகமெல்லாம்
வாழ்த்துகின்ற   பெருமையுடையது    திருநின்றியூர்.     இப்பதியில்
எழுந்தருளியுள்ள பெருமானே.

இப்பதி மயிலாடுதுறையிலிருந்து  வைத்தீஸ்வரன் கோயில் செல்லும்
சாலையில் உள்ளது. (இது திருநின்றவூர் அல்ல)

இறைவன் : மகாலட்சுமீஸ்வரர்
இறைவி    : உலகநாயகி
தலமரம்     : விளாமரம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா