28 October 2012

16.வடிவுடை மாணிக்க மாலை

கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே

உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே

அடல்விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே

மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே.

மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே

கானேர் அளகப்பசுங்  குயிலே அருட் கரும்பே

தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே

வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே. -வள்ளலார்
               
                  திருச்சிற்றம்பலம்

26 October 2012

15. நமச்சிவாய சங்கீர்த்தன லஹிரி

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
     
 பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
       
உயிரை மேவிய உடல்மறந் தாலும்

கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
       
 கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்

நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
       
 நமச்சி வாயத்தை நான்மற வேனே.

            திருச்சிற்றம்பலம்

25 October 2012

14. போற்றித் திருப்பதிகம்

நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
         
           நீறுபூத்து ஒளிர்குளிர் நெருப்பே

நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி

           நெற்றியங் கண்கொளும் நிறைவே

நின்வசமாதல் வேண்டும்நான் போற்றி

            நெடியமால் புகழ்தனி நிலையே

நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி

            நெடுஞ்சடை முடித்தயா  நிதியே
                     

                  திருச்சிற்றம்பலம்

23 October 2012

13. போற்றித் திருப்பதிகம்

அருள்தரல் வேண்டும் போற்றிஎன்  அரசே
            அடியனேன் மனத் தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றி எந்தாயே
            ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருளுறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
            சிந்தை நைந் துலகிடை மயங்கும்
மருளறல் வேண்டும் போற்றிஎன் குருவே
            மதிநதி வளர்சடை மணியே.

மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
            வாழ்விக்க வேண்டுவல் போற்றி
அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
            அருளமுது அருளுக போற்றி
பணி அணி புயத்தோய் போற்றி நின்சீரே
          பாடுதல் வேண்டும் நான் போற்றி
தணிவில் பேரொளியே போற்றி என் தன்னைத்
          தாங்குக போற்றிநின் பதமே.
                     
                   திருச்சிற்றம்பலம்
              


16 October 2012

12. தேவாரம்

         

உருவமும் உயிருமாகி ஓதிய உலகுக் கெல்லாம்

பெருவினைப்பிறப்பு வீடாய் நின்ற எம் பெருமான்மிக்க

அருவி பொன் சொரியும் அண்ணாமலையுளாய் அண்டர்கோவே

மருவிநின் பாதமல்லால் மற்றொறு மாடிலேனே.


பைம்பொன்னே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீற்றாய்

செம்பொன்னே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க

அம்பொன்னே கொழித்து வீழும் அணியணா மலையுளானே

எம்பொன்னே உன்னை அல்லால் யாது நான் நினைவிலேனே.
                         

                           திருச்சிற்றம்பலம்

12 October 2012

11. தேவாரம்

ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துலங்கும் எண்தோள் சுடர் மழைப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணி அண்ணாமலை உள்ளானே
நீதியா நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே.

பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்கா நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமலபாதா
அண்டனே அமரர் கோவே அணி அண்ணாமலை உள்ளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல்லிலேனே.

                     
                        திருச்சிற்றம்பலம்

6 October 2012

10. திருவாசகம்

                           திருச்சிற்றம்பலம்

ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி

மூவா நான்மறை முதல்வா போற்றி
சே ஆர் வெல்கொடிச் சிவனே போற்றி

மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி

காவாய் கனகக் குன்றே போற்றி
ஆ ஆ என் தனக்கு அருளாய் போற்றி
                                                            - போற்றித் திருவகவல்

2 October 2012

9. திருவருட்பா


தேன்என இனிக்கும் திருவருட் கடலே

தெள்ளிய அமுதமே சிவமே

வான் என நிற்கும் தெய்வமே முல்லை

வாயில்வாழ் மாசிலா மணியே

ஊன் என நின்ற உணர்விலேன் எனினும்

உன் திருக் கோயில்வந் தடைந்தால்

ஏன் எனக் கேளா திருந்தனை ஐயா

ஈதுநின் திருவருட் கியல்போ.

       திருச்சிற்றம்பலம்