31 December 2012

76.பெரிய புராணம்


               வாழ்த்து

     உலகெலாம்  உணர்ந்து  ஓதற்கு  அரியவன்

     நிலவுலாவிய  நீர்மலி   வேணியன்

     அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

     மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

              திருச்சிற்றம்பலம்


      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
               -------------------------

      வாடுதல் நீக்கிய மணிமன்று இடையே
      ஆடுதல் வல்ல அருட்பெருஞ்சோதி.

      அருட் பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி
      தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி.    -1.1. 2013

75. திருவருட்பா - சிவ நேச வெண்பா


                   நினைப்பித்தா     நித்தா      நிமலா   எனநீ

                   நினைப்பித்தால்     ஏழை    நினைப்பேன் - நினைப்பின்

                   மறப்பித்தால்    யானும்    மறப்பேன்   எவையும்

                   பிறப்பித்தாய்    என்னாலென்  பேசு.


                   உருவாய்    உருவில்      உருவாகி   ஓங்கி

                   அருவாய்     அருவில்    அருவாய்  -  ஒருவாமல்

                   நின்றாயே   நின்ற   நினைக்காண்ப    தெவ்வாறோ

                   என்தாயே    என் தந்தை   யே.

                                       திருச்சிற்றம்பலம்

                      

30 December 2012

74. திருவருட்பா -சிவநேச வெண்பா


       கண்ணப்பன்  ஏத்துநுதற்  கண்ணப்ப  மெய்ஞ்ஞான

       விண்ணப்ப   நின்தனக்கோர்  விண்ணப்பம் - மண்ணில்சில

       வானவரைப்  போற்றும்  மதத்தோர்  பலருண்டு

       நானவரைச்  சேராமல்  நாட்டு.


       பொன்னின்  றொளிரும்  புரிசடையோய்  நின்னையன்றிப்

       பின்னொன்   றறியேன்   பிழைநோக்கி - என்னை

       அடித்தாலும்  நீயே  அணைத்தாலும்   நீயே

       பிடித்தேனுன்  பொற்பாதப் பேறு.

               

                             திருச்சிற்றம்பலம்

29 December 2012

73. ஶ்ரீ ரமண ஜெயந்தி.

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே.

பிராணன் ஒடுங்கில் பிரக்ஞை ஒடுங்கும் என்போன் பாதம் வாழ்கவே;
பிராணா  யாமம்  சாதனம் என்னும் பெரியோன் பாதம் வாழ்கவே.

பெண் ஆண் பேதம் போக்கிடு என்று பகர்வோன் பாதம் வாழ்கவே;
பிறருக்கு ஈவது தமக்காம் என்னும் பெருமான் பாதம் வாழ்கவே.

குற்றம் செயினும் குணமாக் கொள்ளும் குரவன் பாதம் வாழ்கவே;
அணியார் அருணா சலத்தில் வாழும் அமலன் பாதம் வாழ்கவே.

திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.

                         -- ஶ்ரீ ரமண பாத மாலை, ஶ்ரீ சிவப்பிரகாசம் பிள்ளை.

                            திருச்சிற்றம்பலம்28 December 2012

72. ஆருத்ரா தரிசனம் --திருவருட்பா

கங்கைச் சடையழகும் காதன்மிகும்  அச்சடைமேல்
திங்கட் கொழுந்தின் திருவழகும் -திங்கள்தன் மேல்

சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்

நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் -தேக்குதிரி

புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்
கண்டவர்பால் ஊற்றுகின்ற கன்ணழகும் - தொண்டர்கள்தம்

நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த
நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற

முல்லை முகையாம் முறுவலழ கும்பவள
எல்லை வளர் செவ் விதழழகும் - நல்லவரைத்

தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
வாவென் றருளும் மலர் வாயழகும்

சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மேனி யினழகும்
பார்த்திருந்தால் நம்முட் பசி போங்காண்.
27 December 2012

71. திருவருட்பா - வள்ளலார்


அற்புதப் பொன்  அம்பலத்தே ஆடுகின்ற அரசே

                ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே

கற்புதவு    பெருங்கருணைக் கடலே என் கண்ணே

                 கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே

வெற்புதவு  பசுங்கொடியை  மருவுபெருந்  தருவே

                  வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே

பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்

                   பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.


                             திருச்சிற்றம்பலம்

                  

26 December 2012

70. திருவாய்மொழி--நம்மாழ்வார்.

       என்னுள்  கலந்தவன்  செங்கனிவாய் செங்கமலம்

       மின்னும்  சுடர்மலைக்குக்  கண்பாதம் கைகமலம்

       மன்னுமுழு வேழுலகும் வயிற்றினுள்

       தன்னுள் கலவாதது எப்பொருளும் தானிலையே.


       பலபலவே  ஆபரணம்  பேரும் பலபலவே

       பலபலவே  சோதிவடிவு  பண்பெண்ணில்

       பலபல கண்டுண்டு  கேட்டுற்று மோந்தின்பம்

       பலபலவே ஞானமும்  பாம்பணை மேலாற்கேயோ!

25 December 2012

69. கடல் ஞாலம் - நம்மாழ்வார்

                 


            கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்

            கடல் ஞாலம் ஆவேனும்  யானே  என்னும்

            கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்

            கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்

            கடல்  ஞாலம் உண்டேனும் யானே என்னும்

            கடல் ஞாலத்து ஈசன்  வந்தேறக் கொலோ?

            கடல்  ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?

            கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே. 

24 December 2012

68. திவ்யப் பிரபந்தம் - நோற்ற நோன்பு


                  நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும்
                                                     இனியுன்னை விட்டொன்று

                  ஆற்றகிற்கின்றிலேன் அரவினணையம்மானே!

                  சேற்றுத்தாமரை செந்நெலூடுமலர் சிரீவரமங்கலநகர்

                  வீற்றிருந்த எந்தாய்! உனக்குமிகையல்லேனங்கே.


                  அங்குற்றேனல்லேன் இங்குற்றேனல்லேன் உன்னைக்
                                                         காணுமவாவில் வீழ்ந்து  நான்

                  எங்குற்றேனுமல்லேன் இலங்கை செற்றவம்மானே!

                  திங்கள்சேர் மணிமாட நீடு  சிரீவரமங்கல நகருறை

                  சங்குசக்கரத்தாய்! தமியனுக்கருளாயே.


                                                                           --   நம்மாழ்வார்

23 December 2012

67.திருவருட்பா- வள்ளலார்பாடற்  கினிய  வாக்களிக்கும்  பாலும்  சோறும்  பரிந்தளிக்கும்

கூடற்  கினிய  அடியவர்தம்    கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்

ஆடற்  கினிய   நெஞ்சேநீ      அஞ்சேல் என் மேல்  ஆணை கண்டாய்

தேடற்  கினிய சீர் அளிக்கும்  சிவாயநம என்று இடு நீறே. 


                     திருச்சிற்றம்பலம்

22 December 2012

66. திருவருட்பா -வள்ளலார்


ஓடு  கின்றனன் கதிரவன் அவன்பின்

ஓடு  கின்றன ஒவ்வொறு நாளாய்

வீடு  கின்றன என்செய்வோம் இனிஅவ்

வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே

வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே

மார்க் கண்டேயர் தம் மாண்பறிந்திலையோ

நாடு கின்றவர் நாதன் தன்   நாமம்

நமச்சிவாயம் காண் நாம்பெறும் துணையே. 

                    ........................

நமச்சிவாயத்தைத்  துணையாக்கிக்  கொண்டால் காலன் அணுக மாட்டான்.


        திருச்சிற்றம்பலம். 

21 December 2012

65. நமோ நம ஓம் சக்தி

   செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்

        சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

  கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்

        கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்

  தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்

       துணையென்று நின் அருளைத் தொடரச் செய்தே

   நல்லவழி  சேர்ப்பித்துக்  காக்க வேண்டும்

      'நமோ நம ஓம் சக்தி' என நவிலாய் நெஞ்சே!


                                                           -   பாரதியார்.

20 December 2012

64.நாச்சியார் திருமொழி

                    கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?

                      திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?

                    மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

                       விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.


                    செங்கமல நாண்மலர்மேல்  தேன் நுகரும் அன்னம்போல்

                         செங்கண் கருமேனி வாசுதேவனுடைய

                    அங்கைத்தலமேறி அன்னவசஞ்செய்யும்

                         சங்கரையா! உன்செல்வம் சாலவழகிதே.

19 December 2012

63. சரணாகதி


மனமகிழ்ந்து   திருமகளும்  மண்மகளும்  நப்பின்னையும்

நனிவிழைந்து  துளிர் தளிக்கும்  தன்ரோஜாத் திருக்கரத்தால்

தினம்வருட அவர் கரத்துத் திருச்சிவப்புத் தொற்றியதோ

எனச் சிவந்த நினதடியை வேங்கடவா சரண்புகுந்தோம்.

18 December 2012

62. சரணாகதி


வேங்கடத்தான் விரிமார்பில் விழைந்தமர்ந்த கருணையளே

பூங்கமலத்  தளிர்க் கரத்தால் பொறுமை வளர் பூதேவி

ஓங்கியசீர் குணம் ஒளிரும் உயர்தனிப்பேர் தவத்தாயே

வேங்கடத்தான் திருத்தேவி நின்பாதம் சரண் புகுந்தோம்.கருணைஎனும் திருக்கடலே  காத்தளிக்கப் படைத்தவனே

பெருந்தாயைப் பிரிந்தறியா பெரியோனே வல்லவனே

ஒரு முதல்வா பாரிஜாத உயர்மலரே துயர் களையும்

திருவடிகள் பற்றி உய்ய வேங்கடவா சரண் புகுந்தோம்.
                              ------------
திருவேங்கடத்தான் திருவடிகளே சரணம்.

17 December 2012

61.திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி

அருணனும்தான் வந்துதித்தான்  அலர்ந்தனவால் தாமரைகள்

பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்

திருமார்பா வைணவர்கள் மங்கலங்கள் மிக மொழிந்தார்

அறுதியிலேன் அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்.


விழித்துஎழு நற்காலையில் இத்திருப்பள்ளி எழுச்சிதனை

விழைந்துணர்ந்து படிப்பவரைக் கேட்பவரை நினைப்பவரை

வழுத்துகின்றார் எவரெவர்க்கு வரங்களொடு முக்திதர

எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்.
16 December 2012

60.திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி.

         பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா

         சத்தியனே  மாதவனே  ஜனார்த்தனனே சக்ரபாணி

         வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே

         உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்.


        மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிங்கா

        நற்சிவந்த  வாமனனே பரசுராமா ரகுராமா

       மெச்சுபுகழ் பலராமா திருக்கண்ணார் கல்கியனே

       இச்சகத்து வைகுண்டா வேங்கடவா எழுந்தருள்வாய்.

15 December 2012

59.திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி

நல்கமுகு  தென்னைகளில் பாளைமணம் நெகிழ்ந்தனவால்

பல்வண்ண மொட்டுகள்தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்

புல்லரிக்கும்  மெல் ஈரப் பூந்தென்றல் தவழ்கிறதால்

எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்/


நின்  திருப்பேர் பலகேட்டு நின்னடியார் மெய்மறக்க

நின் கோயிற் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி

நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும்புகழை மிழற்றிடுமால்

நின்செவியால் துய்த்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்.

14 December 2012

58. திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி

தொலைவிடத்தும்  பலவிடத்தும் சுழன்றுதிரி ஏழ் முனிவர்

சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியாவந்தனம் முடித்து

நிலைபெறுநின்  புகழ்சொல்லி   நின்பாதம்  சேவிக்க

மலையடைந்து காத்துளர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்.


ஆங்கந்த பிரம்மாவும் ஆறுமுகனும் தேவர்களும்

ஓங்கி உலகளந்த உயர்கதைகள் பாடுகின்றார்

ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்

தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய். 

13 December 2012

57. திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி.

போர் புரிந்து மதுகைடர் தமையழித்தான் உளத்தொளியே

பார் அனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே

பாரகத்தார்  விழைந்தேத்தும்   சீர்    சீலப்   பெருந்தாயே

கார் வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.


திங்கள் ஒளித் திருமுகத்தில் பொங்கும் அருள் பொழிபவளே

இங்கு கலை வாணியுடன்  இந்திராணி  அம்பிகையாம்

மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி

செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.

12 December 2012

56. திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி


வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்

சிந்துமொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது.

மந்திரங்கள் வாய் மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்

செந்திருக்கண் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்.


எழுந்தருள்வாய் வெங்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் திருக்கமலை விழை மார்பா எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் கோவிந்தா, வேங்கடவா எழுந்தருள்வாய்.11 December 2012

55.வெள்ளைத் தாமரை


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;

கொள்ளை யின்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;

உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத் துட்பொருளாவாள்.
10 December 2012

54. திருவாசகம்

             குயிற்பத்து

தேன் பழம் சோலை பயிலும் சிறுகுயிலே இதுகேள் நீ

வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட் கொண்ட வள்ளல்

ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்

மான் பழித்து ஆண்டமென் நோக்கி மணாளனை நீ வரக் கூவாய்.

பொருள்:  சோலைச் சிறுகுயிலே, வானுலகை விட்டு, பூமிக்கு வந்து, மனிதர்கள் உடல் உணர்வை விடுமாறு செய்து, அவர்களுடைய  உள்ளம் புகுந்து, உணர்வு மயமாகி ஆட் கொள்ளும் பார்வதி மணாளனை இங்கு வரும்படிக் கூவுவாய்.

          திருச்சிற்றம்பலம்

9 December 2012

53. திருவாசகம் -திருப்பொற்சுண்ணம்

முத்து அணி கொங்கைகள் ஆட ஆட

மொய்  குழல்  வண்டு இனம் ஆட ஆடச்

சித்தம் சிவனொடும் ஆட ஆடச்

செம் கயல் கண் பனி ஆட ஆடப்

பித்து எம்பிரானொடும் ஆட ஆடப்

பிறவி பிறரொடும் ஆட ஆட

அத்தன் கருணையொடு ஆட ஆட

ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

பொருள்: முத்துமாலைகள் அணிந்திருக்கும் முலைகள் குலுங்க,  அடர்ந்த  கூந்தலில் வண்டுகள் திரண்டிருக்க, மனமானது சிவபெருமானிடம் லயித்திருக்க, சிவந்த கெண்டை மீன் போன்ற கண்களில் நீர் அரும்ப, நான் என் இறைவனிடம் பித்துக் கொள்ள,பக்தர் அல்லாதார் பிறவிப் பிணியில் அழுந்திக் கிடக்க, என் தந்தை சிவபெருமான் யாண்டும் கருணையோடு கூடியிருக்க, அவன் நீராடுதற்கு  நாம் பொற்சுண்ணம் இடிப்போம்.

                                             திருச்சிற்றம்பலம்8 December 2012

52. திருவாசகம் -திருப்பொற்சுண்ணம்

[பலவகை வாசனைப் பொருட்களை உரலில் இட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். இது பொன் போன்ற நிறமுடையது. சிறிது பொன்னும் சேர்க்கப்பட்டு  இது   திருமஞ்சனத்திற்காக    உபயோகிக்கப்படுகிறது.]

சூடகம்  தோள்வளை  ஆர்ப்ப  ஆர்ப்பத்
தொண்டர்  குழாம் எழுந்து  ஆர்ப்ப ஆர்ப்ப
நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பரா பரனுக்கு
ஆடகம் மாமலை அன்ன கோவுக்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

பொருள்: கைவளையும், தோள்வளையும் ஒலிக்க,தொண்டர் கூட்டம் ஆரவாரம் செய்கிறது.    உலகமக்கள் இவையெல்லாம் பயன்படாத வேலை என ஏளனம் செய்ய, அவர்கள் அறிவீனர்கள்
என நாம் ஓலமிடுகிறோம். தன் மெல்லிய திருவடிகளில் பாடகம் அணிந்திருக்கும் பார்வதி தேவியின் மணாளனும், பெரிய பொன் மலை போன்ற பரம் பொருளுமாகிய சிவனாரைப் போற்றிப் பாடி ஆடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம்.

                                            திருச்சிற்றம்பலம்

7 December 2012

51. திருவாசகம் - திருச்சாழல்

(சாழல் என்பது ஒருவகை மகளிர் விளையாட்டு.
தடையும் தடைக்கு ஏற்ற விடையும் பாடுவது  இதில் 
இடம் பெறுகிறது)

கோயில் சுடுகாடு  கொல்  புலித் தோல் நல் ஆடை


தாயும் இலி  தந்தை இலி  தான் தனியன் காண் ஏடி


தாயும் இலி தந்தை இலி தான் தனியன் ஆயிடினும்


காயில் உலகு அனைத்தும் கல்பொடி காண் சாழலோ.

பொருள்: குடியிருப்பது சுடுகாட்டில். அணிவது புலித்தோல். தாய் தந்தை இல்லாதவன்.ஒற்றைஆள்!
இவனும் ஒரு தெய்வமா?
பிரபஞ்சம் அழியும் தன்மையுடையது என்பதைச் சுடுகாடு உணர்த்தும். ஆணவத்தை அழித்தற்கு அறிகுறி
கொல்புலித்தோல். அவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். முழுமுதற்பொருள். ஆதலால் அவன் தனியன்.
உலகம் இருப்பதும் போவதும் அவன் சங்கல்பத்தைப் பொறுத்து இருக்கிறது.
நிலையற்ற உலகில் எதையும் சொந்தம் பாராட்டாதே என்ற கோட்பாட்டைத் தன் வடிவில் வைத்துள்ளான் சிவன்! 
                                       திருச்சிற்றம்பலம்

6 December 2012

50. திருவாசகம் -திருச்சாழல்

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை

ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ.

                        பொருள்

பூசுவது வெண்ணீறு. அணிவது சீறுகிற பாம்பு. பேசுவது வேதம்.

தெய்வம் எனும் பொருளுக்கு இவையெல்லாம் பொருந்துமா?

ஈசன் தானே இயற்கையாகவும், அதில் உள்ள உயிர்கள்

அனைத்துமாகவும் இலங்குகின்றான்.அவனது இயல்பே

இப்படி மூன்று விதங்களில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.

                  திருச்சிற்றம்பலம்  

5 December 2012

49. திருவாசகம்


கடவுளே போற்றி என்னைக் கண்டு கொண்டு அருளு போற்றி

விட உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி

உடல் இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி

சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.

எல்லாமாகி நிற்கும் இறைவா!  உன் அருளுக்கு நான் தகுதி அற்றவன் என்பதை அறிந்தாலும் என்னை ஆட்கொள்.  நெகிழும்படி என் உள்ளத்தை  உருக்கு. உடலை உதிர்த்துவிட்டு நான் விரைவில் முக்தி அடையும்படிச் செய். கங்கையைச் சடாமுடி மேல் தாங்குபவனே, சங்கரனே உன்னை வணங்குகிறேன்.

                                                        திருச்சிற்றம்பலம்

4 December 2012

48. திருவாசகம்

போற்றி என்போலும் பொய்யர்

தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்

போற்றி நின்பாதம் போற்றி

நாதனே போற்றி போற்றி

போற்றி நின் கருணை வெள்ளம்

புதுமது புவனம் நீர் தீ

காற்று இயமானன் வானம்

இருசுடர்க் கடவுளானே.

பொருள்: பொய்யான இந்த உடலில் ஆசை வைத்துள்ள என் போன்றவர்க்கு அருள் புரிவதால் நீ வள்ளல் ஆகிறாய்!  உன் கருணையோ புத்தம் புதிய தேனுக்கு ஒப்பானது. ஐம்பெரும் பூதங்கள்,  சூரியன், சந்திரன், ஜீவாத்மா, ஆகிய எட்டு  மூர்த்திகளாய்  நீ  இருக்கின்றாய். உனக்கு  என் வந்தனங்கள்.

                                                திருச்சிற்றம்பலம்3 December 2012

47.திருவாசகம்

போற்றி ஓம் நமச்சிவாய                                

புயங்கனே மயங்கு கின்றேன்

போற்றி ஓம் நமச்சிவாய

புகல் இடம் பிறிது ஒன்று இல்லை

போற்றி ஓம் நமச்சிவாய

புறம் எனைப் போக்கல் கண்டாய்

போற்றி ஓம் நமச்சிவாய

சய சய போற்றி  போற்றி.

பொருள்:    ஓம் நமச்சிவாய என்னும் மந்திர வடிவானவனே. பாம்பை அணிந்திருப்பவனே. உலக வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கின்ற எனக்கு போக்கிடம் வேறில்லை. என்னைப் புறக்கணிக்காமல் எனக்கு  அருள் புரிவாய். உனக்கு வெற்றி உண்டாகுக.


                                                          திருச்சிற்றம்பலம்

2 December 2012

46. திருவாசகம்


                                                             காருண்யத்திரங்கல்


                                                தரிக்கிலேன்  காய வாழ்க்கை

                                                சங்கரா  போற்றி  வான

                                                விருத்தனே போற்றி எங்கள்

                                                விடலையே போற்றி ஒப்பு இல்

                                                ஒருத்தனே போற்றி உம்பர்

                                                தம்பிரான் போற்றி தில்லை

                                                நிருத்தனே போற்றி எங்கள்

                                                நின்மலா போற்றி போற்றி.


பொருள்; சங்கரா, சிதாகாசனே, அண்ணலே, ஒப்பில்லாத முழுமுதல் பொருளே, தேவதேவனே, 


தில்லையில் ஆனந்த தாண்டவம் செய்யும் நிர்மலனே உன்னையே வணங்குகிறேன்.
      

1 December 2012

45. திருவாசகம்


சிந்தனை நின்தனக்கு  ஆக்கி நாயினேன் தன்

கண் இணை நின்  திருப்பாதப் போதுக்கு ஆக்கி

வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்

மணி வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர

வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை

மால் அமுதம் பெரும் கடலே மலையே உன்னைத்

தந்தனை செம் தாமரைக்காடு அனைய மேனித்

தனிச்சுடரே இரண்டும் இல் இத்தனியனேற்கே.

பொருள்: அமிர்தப் பெருங்கடலே, மலையே, செந்தாமரை மேனியனே, ஜோதி வடிவே என் மனதை உனக்கு உரியதாக்கினாய்;  கண் இரண்டும், என் வழிபாடும்  உன் திருப்பாத மலர்களுக்கு.  பேச்செல்லாம்  உன்  பெருமையைப் புகழ, ஐம்புலன்களும் உன் அருட்பிரசாதம் பெற   அருளினாய்.   என் உள்ளே நீ புகுந்திருப்பது வியப்புக்கு உரியது. 

                                                  திருச்சிற்றம்பலம்

44. திருவாசகம்


                        வான் ஆகி  மண் ஆகி
                             
                                வளி ஆகி  ஒளிஆகி
                     
                        ஊன் ஆகி  உயிர் ஆகி

                                உண்மையும் ஆய்  இன்மையும் ஆய்க்

                        கோன் ஆகி யான் எனது என்று

                                அவர் அவரைக் கூத்தாட்டு

                        வான் ஆகி நின்றாயை

                                 என் சொல்லி வாழ்த்துவனே!

      ஐம்பூதங்களும், உடலும், உயிரும், தோற்றமும், தோன்றா நிலையும் ஆகி, இறைவனாகி, நான்

      எனது  என்று  அனைவரையும்  கூத்தாடச்  செய்கின்ற   உன்  மகிமையை    என்னால்   

      எப்படி  விளக்க முடியும்.

                                            திருச்சிற்றம்பலம்

29 November 2012

43. திருவாசகம்

                                     
                          ஆம் ஆறு  உன் திருவடிக்கே அகம் குழையேன்

                          அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன்

                          புகழ்ந்து உரையேன் புத்தேளிர் கோமான் நின்
                         
                          திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்

                          சாம் ஆறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

             யோகசாதனத்தால் அடையப்பெறும் மகாதேவனே! அடியேன்  உன் திருவடியை நினைந்து
             மனம் குழையவில்லை, அன்பு கொண்டு உருகவில்லை, பூமாலையால் அலங்கரித்து, புகழ்ந்து
             பாடவில்லை,உன் திருக்கோவிலை துப்புரவாக்கி, மெழுகி தூய்மை செய்யவில்லை. உன் திரு
             நாமத்தை உச்சரித்து மெய்மறந்து   ஆடவில்லை. வீணில் மரணத்தை நோக்கிப் போய்க்
             கொண்டிருக்கிறேன். நான் உய்யும் வண்ணம் எனக்கு அருள் புரிவாய்.

                                              திருச்சிற்றம்பலம்   

28 November 2012

42. திருவாசகம்

                         
                           நாடகத்தால்  உன்அடியார்  போல் நடித்து  நான் நடுவே

                           வீடு அகத்தே  புகுந்திடுவான்  மிகப் பெரிதும்  விரைகின்றேன்

                           ஆடு அகம் சீர்  மணிக்குன்றே  இடைஅறா அன்பு உனக்கு என்

                           ஊடு அகத்தே நின்று உருகத்  தந்தருள் எம் உடையானே.

                                                 திருச்சிற்றம்பலம்

                             உன்னிடம் பக்தி செய்வது போல் பாசாங்கு செய்து, 

                             முக்தி பெற விரும்பும் என் இதயத்திலே 

                             இடைவிடாத அன்பு செய்து உருகும்படி பக்குவப்படுத்துவாயாக.

                                              - மாணிக்கவாசகர் -

27 November 2012

41. திருவெம்பாவையில் அண்ணாமலை


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகை வீறுஅற்றால் போல்

கண் ஆர் இரவி கதிர்வந்து கார் கரப்பத்

தண் ஆர் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்

பெண் ஆகி ஆண் ஆய் அலிஆய்ப் பிறங்கு ஒளிசேர்

விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறாகிக்

கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணே இப்பூம் புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்.

                                                                        - பாடல் 18          

                 திருச்சிற்றம்பலம்

26 November 2012

40.அருணாசல மாகாத்மியம்

                 நந்தி வாக்கு

அதுவே தலம் அருணாசலம் தலம் யாவிலும் அதிகம்

அது பூமியின் இதயம் அறி; அதுவே சிவன் இதயப்

பதியாம் ஒரு மருமத்தலம் பதியாம் அவன் அதிலே

வதிவான் ஒளி மலையா நிதம் அருணாசலம் எனவே.

அருணாசல சிவ  அருணாசல சிவ 

அருணாசல சிவ  அருணாசல சிவ

திருவண்ணாமலை

25 November 2012

39. திருவாசகம்


உடைய நாதனே போற்றி நின் அலால்

      பற்று மற்று  எனக்கு ஆவது ஒன்று இனி

உடையனோ பணி போற்றி உம்பரார்

       தம் பரா பரா போற்றி யாரினும்

கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்

       கருணையாளனே போற்றி என்னை நின்

அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்

        அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே.

                                     --- திருச்சதகம், ஆனந்தாதீதம்

                                     ---மாணிக்கவாசகர் 

24 November 2012

38. திருவாசகம்


யானே பொய் என் நெஞ்சும்
         
            பொய்  என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால்

            உனைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

            தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

            உனைவந்து உறும் ஆறே.

                                --திருச்சதகம்-- ஆனந்த பரவசம்
     
                                --மாணிக்கவாசகர்23 November 2012

37.அன்னையே


எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்த நல்லறிவு வேண்டும்;

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதிமுன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்!  -பாரதியார்


22 November 2012

36.தாலேலோ


மன்னுபுகழ்க் கவுசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்

கன்னி நன்மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!

என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ  1
கொங்குமலி கருங்குழலாள்  கவுசலைதன் குலமதலாய்!

தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதி!

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!

எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ  2

21 November 2012

35. -ஆழ்வார் திருமொழி


தருதுயரம் தடாயேல் உன் சரணலலால் சரணில்லை

விரைகுழுவு  மலர்ப்  பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே!

அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே.1


வாளா லருத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத்துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா! நீ

ஆளாவுன தருளே பார்ப்பன் அடியேனே.

20 November 2012

34. திருவேங்கடமலையில்.....


ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்

ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்

கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே.  1


ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையெனாவேனே. 219 November 2012

33. பெருமாள் திருமொழி


மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்

வையந்தன்னொடும் கூடுவதில்லையான்

ஐயனே! அரங்கா! என்றழைக்கின்றேன்

மையல் கொண்டொழிந்தேன் என் தன்மாலுக்கே.1

தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய்

நீதியாரொடும் கூடுவ தில்லையான்

ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரைப்

பேதை மாமணவாளன் தன்பித்தனே. 2

எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச்

சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்

அத்தனே! அரங்கா! என்றழைகின்றேன்

பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே. 3
18 November 2012

32. திருமாலை -தொண்டரடிப் பொடியாழ்வார்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்

இச்சுவை தவிர யான் போய் இந்திரலோக மாளும்

அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்காமா நகருளானே!


வண்டினம் முரலும் சோலை மயிலினம் மாலும் சோலை

கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை

அண்டர் கோனமரும் சோலை அணிதிரு வரங்கமென்னா

மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே.


கங்கையிற் புனிதமாய காவிரிநடுவு பாட்டு

பொங்கு நீர்பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந்தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்

எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே.
17 November 2012

31. மாணிக்கக்கிண்கிணி

                                                     கைகொட்டி விளையாடுதல்

                           மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல்
                         
                           ஆணிப்பொன்னாற் செய்த ஆய்பொன்னுடை மணி

                           பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு

                           காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே! சப்பாணி.

                          பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி

                          தன்னரையாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட

                          என்னரை மேல் நின்றிழிந்து உங்களாயர்தம்

                          மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே! கொட்டாய் சப்பாணி


                                                                                                    ---- பெரியாழ்வார்      

16 November 2012

30. 9 ஆந் திருமொழி-வெண்ணெய் விழுங்கி

            வருக வருக வருக இங்கே
           
            வாமன நம்பி! வருக இங்கே

            கரியகுழற் செய்ய வாய் முகத்துக்

            காகுத்த நம்பி! வருகவிங்கே

            அரியனிவ னெனக்கின்று நங்காய்!

            அஞ்சனவண்ணா! அசலகத்தார்

            பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்
         
            பாவியேனுக்கு இங்கே போதராயே.

                                   - பெரியாழ்வார்

           

             

15 November 2012

29. திருப்பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.

                                   -----------------------

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டு இருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்து காணீரே.

                                             -பெரியாழ்வார் திருமொழி
         

14 November 2012

28.ஓம் வணக்கம்

எங்கும் நிறைவான பரம்பொருளே! மங்களக் காலையில் மலர்முகங் காட்டுகின்றாய்;

இள மணத் தென்றலில் இன்பக் குழலூதுகின்றாய்; 'அன்பு, அன்பு' என்று சோலைக்

குயிலில் அகவுகின்றாய்; அதோ பாயும் மலை அருவியில், '  ஓம் தத்-ஸத்-ஓம் என்று

வேதமுரசொலிக்கின்றாய்; திங்களில் அமுத நகை புரிந்து, எல்லையற்ற கடலைப்

பொங்கியெழுந்து  ஆனந்தக் கூத்தாடச் செய்கிறாய். வானரசை இலக்குகிறாய்;

மனைதொறும்  சவுந்தர்ய   சக்தியாக   விளங்கிக்      குலதர்மத்தை  வளர்க்கிறாய்.

வாழ்க்கை   எனும்  ஆசானைக்  கொண்டு   பாடங்  கற்பித்து,  எமது    மனத்தைப்

பக்குவப் படுத்தி,  முடிவில்   உனது  திருவடியே தஞ்சமென்று உணர வைக்கிறாய்.

நீ வாழ்க.                                                               - கவியோகி சுத்தானந்த பாரதி
                              திருச்சிற்றம்பலம்

13 November 2012

27.அன்பு

அன்பெனும்  பிடியுள்  அகப்படும் மலையே
       
           அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும்  வலைக்குள் படுபரம் பொருளே

           அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும்  கடத்துள் அடங்கிடும் கடலே

           அன்பெனும் உயிரொளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

           அன்புருவாம் பரசிவமே!

                 திருச்சிற்றம்பலம்.

அன்பே வடிவான ஆண்டவன் அனைவருக்கும் 

இந்த தீபாவளித் திருநாளில் ஆனந்தத்தையும்

அனைத்து  இன்பங்களையும் அருள்வானாக.

12 November 2012

26.தேவதேவன்

ஆறுமுகப் பெருங் கருணைக் கடலே தெய்வ

யானைமகிழ்  மணிக்குன்றே அரசே முக்கட்

பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்

பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்

வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்

விளக்கமே  ஆனந்த   வெள்ளமே    முன்

தேறுமுகப்  பெரியஅருட்    குருவாய்  என்னைச்

சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.------வள்ளலார்

                     திருச்சிற்றம்பலம்


11 November 2012

25.பதி விளக்கம்

                               
                       உரைவளர் கலையே கலைவள ருரையே

                       உரைகலை   வளர்தரு   பொருளே

                       விரைவளர்  மலரே மலர்வளர் விரையே

                       விரைமலர்   வளர்தரு    நறவே

                       கரைவளர்  தருவே  தருவளர்  கரையே

                       கரைதரு    வளர்கிளர்     கனியே

                       பரைவள  ரொளியே  யொளிவளர்  பரையே

                       பரையொளி   வளர்சிவ   பதியே.

                                  திருச்சிற்றம்பலம்.

10 November 2012

24.ஓம் நமச்சிவாயம்

                        ஓம் நமச்சிவாயமே  உணர்ந்து  மெய்  உணர்ந்த  பின்

                        ஓம் நமச்சிவாயமே  உணர்ந்து  மெய்  தெளிந்த  பின்

                        ஓம் நமச்சிவாயமே  உணர்ந்து   மெய்  உணர்ந்த  பின்

                        ஓம்  நமச்சிவாயமே  உட் கலந்து நிற்குமே.


                                     திருச்சிற்றம்பலம்.

9 November 2012

23.கந்தர் அலங்காரம்

                                 

                      விழிக்குத்  துணைதிரு  மென்மலர்ப்  பாதங்கள்; மெய்ம்மை குன்றா

                      மொழிக்குத்  துணைமுரு  காஎனும்  நாமங்கள்; முன்பு செய்த

                      பழிக்குத்  துணை அவன் பன்னிரு தோளும்;  பயந்த தனி

                      வழிக்குத்  துணைவடி  வேலும்  செங்கோடன்  மயூரமுமே.

                                          திருச்சிற்றம்பலம்.

                     

8 November 2012

22.அன்பு மாலை

அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே

அற்புதப் பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே

தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே

செங்கனியே மதிஅணிந்த செஞ்சடை எம்பெருமான்

மருள் நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு

மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே

இருள் நிறைந்த மயக்கம் இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்

என்னுடைய நாயகனே இது தருணங் காணே.

                              -அருட் பிரகாச வள்ளலார்


                திருச்சிற்றம்பலம். 

7 November 2012

21.சித்தர் பாடல்கள்

வாயிலே குதித்த நீரை எச்சிலென்று சொல்கிறீர்

வாயிலே குதப்பு வேதம் வரம் எனக்கடவதோ?

வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்

வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.


ஓதுகின்ற வேதம் எச்சில்; உள்ள மந்திரங்கள் எச்சில்,

போகங்களான எச்சில்: பூதலம் ஏழும் எச்சில்:

மாதிருந்த விந்து எச்சில்; மதியும் எச்சில், ஒளி எச்சில்

ஏதில் எச்சல் இல்லதிலை இல்லை இல்லை இல்லையே?

6 November 2012

20.சித்தர் பாடல்கள் -சிவவாக்கியர்

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்

ஐயன் வந்திங்கென்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்,

ஐயன் வந்திங்கென்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்

வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே.கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே,

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதுவும் இல்லை இல்லை இல்லையே.

                 திருச்சிற்றம்பலம் 

5 November 2012

19.சித்தர் பாடல்கள் -சிவவாக்கியர்

அஞ்செழுத்திலே பிறந்து அவ்வஞ்செழுத்திலே வளர்ந்து

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!

அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்துகூட வல்லீரேல்

அஞ்சலஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.


ஓடமுள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;

ஓடமுள்ள போதெல்லாம் உறுதி பண்ணிக் கொள்ளலாம்;

ஓடமும் உடைந்த போதங்கு ஒப்பில்லாத வெளியிலே

ஆடுமில்லை கோலுமில்லை ஆருமில்லை ஆனதே.

                                            திருச்சிற்றம்பலம்4 November 2012

18.சித்தர் பாடல்கள்- சிவவாக்கியர்

அஞ்சு மூணும் எட்டதாய் அநாதியான மந்திரம்

நெஞ்சிலே நினைந்து கொண்டு நீர் உருச் செபிப்பீரேல்

பஞ்சமான பாதகம் பண்ணூறு கோடி செய்யினும்

பஞ்சு போல் பறக்கும் என்று நான் மறைகள் பன்னுமே.அண்டவாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம்

ஆறிரண்டு நூறுகோடி யான வாசல் ஆயிரம்

இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாம்

எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே?


                 திருச்சிற்றம்பலம்

3 November 2012

17.சித்தர் பாடல்கள்--சிவவாக்கியர்

ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்

ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவல் உற்றவே.மண்ணும் நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும் நீ;

எண்ணும் நீ எழுத்துநீ இசைந்த பண்ணெழுத்தும் நீ

கண்ணும் நீ மணியும்நீ கண்ணில் ஆடும் பாவை நீ

நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.


                திருச்சிற்றம்பலம்

28 October 2012

16.வடிவுடை மாணிக்க மாலை

கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே

உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே

அடல்விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே

மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே.

மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே

கானேர் அளகப்பசுங்  குயிலே அருட் கரும்பே

தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே

வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே. -வள்ளலார்
               
                  திருச்சிற்றம்பலம்

26 October 2012

15. நமச்சிவாய சங்கீர்த்தன லஹிரி

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
     
 பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
       
உயிரை மேவிய உடல்மறந் தாலும்

கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
       
 கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்

நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
       
 நமச்சி வாயத்தை நான்மற வேனே.

            திருச்சிற்றம்பலம்

25 October 2012

14. போற்றித் திருப்பதிகம்

நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
         
           நீறுபூத்து ஒளிர்குளிர் நெருப்பே

நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி

           நெற்றியங் கண்கொளும் நிறைவே

நின்வசமாதல் வேண்டும்நான் போற்றி

            நெடியமால் புகழ்தனி நிலையே

நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி

            நெடுஞ்சடை முடித்தயா  நிதியே
                     

                  திருச்சிற்றம்பலம்

23 October 2012

13. போற்றித் திருப்பதிகம்

அருள்தரல் வேண்டும் போற்றிஎன்  அரசே
            அடியனேன் மனத் தகத் தெழுந்த
இருள்கெடல் வேண்டும் போற்றி எந்தாயே
            ஏழையேன் நின்றனைப் பாடும்
தெருளுறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
            சிந்தை நைந் துலகிடை மயங்கும்
மருளறல் வேண்டும் போற்றிஎன் குருவே
            மதிநதி வளர்சடை மணியே.

மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
            வாழ்விக்க வேண்டுவல் போற்றி
அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
            அருளமுது அருளுக போற்றி
பணி அணி புயத்தோய் போற்றி நின்சீரே
          பாடுதல் வேண்டும் நான் போற்றி
தணிவில் பேரொளியே போற்றி என் தன்னைத்
          தாங்குக போற்றிநின் பதமே.
                     
                   திருச்சிற்றம்பலம்
              


16 October 2012

12. தேவாரம்

         

உருவமும் உயிருமாகி ஓதிய உலகுக் கெல்லாம்

பெருவினைப்பிறப்பு வீடாய் நின்ற எம் பெருமான்மிக்க

அருவி பொன் சொரியும் அண்ணாமலையுளாய் அண்டர்கோவே

மருவிநின் பாதமல்லால் மற்றொறு மாடிலேனே.


பைம்பொன்னே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீற்றாய்

செம்பொன்னே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க

அம்பொன்னே கொழித்து வீழும் அணியணா மலையுளானே

எம்பொன்னே உன்னை அல்லால் யாது நான் நினைவிலேனே.
                         

                           திருச்சிற்றம்பலம்

12 October 2012

11. தேவாரம்

ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துலங்கும் எண்தோள் சுடர் மழைப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணி அண்ணாமலை உள்ளானே
நீதியா நின்னையல்லால் நினையுமா நினைவிலேனே.

பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்கா நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமலபாதா
அண்டனே அமரர் கோவே அணி அண்ணாமலை உள்ளானே
தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல்லிலேனே.

                     
                        திருச்சிற்றம்பலம்

6 October 2012

10. திருவாசகம்

                           திருச்சிற்றம்பலம்

ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி

மூவா நான்மறை முதல்வா போற்றி
சே ஆர் வெல்கொடிச் சிவனே போற்றி

மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி

காவாய் கனகக் குன்றே போற்றி
ஆ ஆ என் தனக்கு அருளாய் போற்றி
                                                            - போற்றித் திருவகவல்

2 October 2012

9. திருவருட்பா


தேன்என இனிக்கும் திருவருட் கடலே

தெள்ளிய அமுதமே சிவமே

வான் என நிற்கும் தெய்வமே முல்லை

வாயில்வாழ் மாசிலா மணியே

ஊன் என நின்ற உணர்விலேன் எனினும்

உன் திருக் கோயில்வந் தடைந்தால்

ஏன் எனக் கேளா திருந்தனை ஐயா

ஈதுநின் திருவருட் கியல்போ.

       திருச்சிற்றம்பலம்

30 September 2012

8. திருவருட்பா

               திருச்சிற்றம்பலம்

ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே

ஒளி உயிர் வளர் தரும் உணர்வே

வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே

வெளி நிறை வளர் தரு விளைவே

வளி வளர் அசைவே அசை  வளர் வளியே

வளியசை வளர் தரு செயலே

அளிவளர் அனலே அனல் வளர் அளியே

அளியனல் வளர்சிவ பதியே. -வள்ளலார்


29 September 2012

7. திருவருட்பா

                        திருச்சிற்றம்பலம்

என் இதயக்கமலத்தே இருந்தருளுந் தெய்வம்

என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்

பொன்னடியென் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்

பொய்யாத தெய்வமிடர் செய்யாத தெய்வம்

அன்னியமல் லாததெய்வம் அறிவான தெய்வம்

அவ்வறிவுக் கறிவாமென் அன்பான தெய்வம்

சென்னிலையிற் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

28 September 2012

6. திருவருட்பா

                                                                                    
                                                                                     திருச் சிற்றம்பலம்
                                                                    

    தாயாகித்  தந்தையுமாய்த்  தாங்குகின்ற தெய்வம்

    தன்னை நிகரில்லாத  தனித் தலைமைத் தெய்வம்
 
    வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

    மலரடியென் சென்னிமிசை வைத்த பெருந் தெய்வம்

    காயாது கனியாகிக் கலந்தினிக்கும் தெய்வம்

    கருணை நிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

    சேயாக எனை வளர்க்குந் தெய்வ மகாதெய்வம்

    சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
                                                                                                   
                                                                                                     
27 September 2012

5. திருப்பள்ளி எழுச்சி


                                  திருச்சிற்றம்பலம்

பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
               பூத்தது பொன்னொளி பொங்கியதெங்கும்
தொழுது நிற்கின்றனன் செய்பணி எல்லாம்
               சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே
முழுதும் ஆனான் என ஆகம வேத
               முறைகளெல்லாம் மொழிகின்ற முன்னவனே
எழுதுதல் அரிய சீர் அருட்பெருஞ் சோதி
                என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே!--திருஅருட்பா    

26 September 2012

4. தனித் திரு மாலைதொடுக்கவோ நல்ல சொன்மலர் இல்லை நான்

துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள்

ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை 

ஊடுற்ற ஆணவ மாதி மலங்களைத்

தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே
                                                                     
                                                                                    தயவு தான் நினக்கில்லை  உயிரையும்
                                                                                   
                                                                                    விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன்

                                                                                    விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.

                                                                                                                                         --திருவருட்பா

25 September 2012

3. Splendour


                                        Tat savitur varam rupam jyotih parasya dhimahi,
                                        yannah satyena dipayet.

      Let us meditate on the most auspicious form of Savitri 
on  the LIGHT of the Supreme which shall illumine us with the Truth.
-SriAurobindo's Gayatri

2. கண் மூன்றும் தழைத்த தேவன்

  என்னுயிர் நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
                 
இன்னுயிர்க்குத்  துணைவன் நீ என்னை ஈன்ற
                
அன்னைநீ என்னுடைய அப்ப நீ என்
                
அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
                 
 நன்னெறிநீ எனக்குரிய உறவுநீ என்
                 
 நற்குருநீ எனைக் கலந்த நட்புநீ என்
                  
 தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
                 
 தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே.
             
திருச்சிற்றம்பலம்

  -மகாதேவ மாலை, பாடல்[68]
                                                                                
 திருவருட்பா.

24 September 2012

1. அருட் பெருஞ்சோதி.

அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.-வள்ளலார்.


மனித மனத்தினால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாதது.
இவ்வளவு பெரியது என அளவிடமுடியாதது.
ஒளிப்பிழம்பு, பெரிய சோதி, தான் எந்த மாற்றமும் அடையாதது.
எல்லாத் திசைகளிலும் உள்ள அனைத்தும்  செயல்படக்  காரணமாக இருக்கிறது.
தனிப் பெருமை வாய்ந்தது.
மிகப் பெரிய கருணையுடையது.
இவ்வுலக உயிர்கள் அனைத்தையும் இன்பமுடன் வாழச் செய்கிறது.
சோதியே, உன்னை உள்ளத்தில் தியானித்து வணங்குகிறோம்.

                         திருச்சிற்றம்பலம்