30 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடைமுடி

                                                              - மாவின்
இடைமுடியின் தீங்கனிஎன்று எல்லின் முசுத்தாவும்
கடை முடியில் மேவும் கருத்தா -

திருக்கடைமுடி என்ற ஊரில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.
அவ்வூரில் மாமரங்கள் உண்டு. விடியற்போதில் இளங்கதிரவனின் ஒளி மாமரத்தின்
உச்சியிலும், கிளைகளுக்கு இடையேயும்  தோன்ற அவ்வொளியை இனிய மாம்பழம்
என்று நினைத்துப் பறிக்க கருங்குரங்குகள் தாவி ஓடுமாம். (பொன்னிறமான காலைச்
சூரிய ஒளியை மாங்கனி என எண்ணி கருங்குரங்குகள்  தாவி ஓடும்)
எல்லி - என்றால் சூரியன். முசு- கருங்குரங்கு

இப்பதி இப்பொழுது கீழையூர் என்றும் கீழூர் என்றும் வழங்கப் பெறுகிறது.

இறைவன் : கடைமுடி நாதேஸ்வரர்
இறைவி    : அபிராமியம்மை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

29 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கண்ணார் கோயில்

                                      - கள்ளிருக்கும்
காவின் மருவும் கணமும் திசைமணக்கும்
கோவின் மருவு கண்ணார் கோயிலாய்.

திருக்கண்ணார் கோயிலின் தேன் நிறைந்த சோலைகளில் படிகின்ற மேகங்கள் கூட,
எந்தத்திசையில் சென்றாலும் நல்ல மணத்தைப் பரப்பும். இத்தகைய சிறப்பு வாய்ந்த
திருக்கண்ணார் கோயிலில் அரசாட்சி செய்யும் சிவபெருமானே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
கள்-தேன்; கணம்- முகில்

இத்தலம் வைத்தீஸ்வரன் கோயிலுக்குத் தென்கிழக்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில்
உள்ளது. தற்போதைய பெயர் - குறுமாணக்குடி என்பதாகும்.சம்பந்தர் பதிகம் ஒன்று உளது.

இறைவன் : கண்ணாயிரேஸ்வரர்
இறைவி    : முருகு வளர் கோதையம்மை
தலமரம்     : சரக்கொன்றை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 



28 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புள்ளிருக்கு வேளூர்

                                          - கோலக்கா
உள் இருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ்வாய்ந்த
புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய் -

புள்(பறவை) இருக்கும் வேளூரின் அழகிய சோலைகளில் வாழும் பறவை இனங்கள்
ருக்கு வேதத்தை ஓதும்! இத்தகைய  புகழ் வாய்ந்த புள்ளிருக்கும் வேளூரில் கோயில்
கொண்டிருக்கும் புரிசடைப் பெருமானே உன்னை வணங்குகிறேன்.
கோலக்கா - கோலம் +கா; அழகிய சோலை

வைத்தீஸ்வரன் கோயில் என்பது இப்போதைய பெயர்.நவக்கிரகத் தலங்களில் அங்காரகத்தலம்.
இறைவன் : வைத்தியநாதேஸ்வரர்
இறைவி    : தையல் நாயகி
தலமரம்     : வேம்பு
செல்வ முத்துக்குமரசாமி வழிபாடு சிறந்தது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா.

27 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள் - 15

திருக்கோலக்கா

                                                      - ஓர்காழிப்
பாலற்கா வன்று பசும் பொன்தா ளங்கொடுத்த
கோலக்கா மேவும் கொடையாளா -

ஒப்பில்லாத சீர்காழிப் பதியில் தோன்றிய பாலனாகிய
திருஞானசம்பந்தருக்கு அன்று தூயதங்கத்தாலான தாளத்தைக்
கொடுத்து அருள் புரிந்த 'திருக்கோலக்கா' என்ற பதியில்
வீற்றிருக்கும் கொடை வள்ளலே, உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் சீர்காழிக்கு அருகில் 1 கி. மீ தொலைவில் உள்ளது.
சிறுவனான திருஞானசம்பந்தர் தாளம் கொட்டிப் பாடுவதைப்
பொறுக்காத சிவபெருமான் திருவைந்தெழுத்து பொறித்த
பொன் தாளத்தை  இப்பதியில் அவருக்குத் தந்து அருள்புரிந்தார்.
இறைவி அதற்குத் தெய்விக ஓசையைத் தந்தருளினார். சீர்காழி
நகருக்குள் சிவன் கோவிலுக்கு மேற்கில் இரண்டு கிலோ
மீட்டர் தொலைவில் தாளமுடையார் கோயில் இருக்கிறது.
சம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக
இரண்டு பதிகங்கள் உள்ளன.
இறைவன் : சத்தபுரீஸ்வரர்
இறைவி    : ஓசைகொடுத்த நாயகி.
(தாளம் என்பது கைத்தாளக் கருவி - timing in music)
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

26 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

சீர்காழி

                                                          - அருகாத
கார்காழில்  நெஞ்சக்  கவுணியர்க்குப்  போதமருள்
சீர்காழி  ஞானத் திரவியமே.

சீர்காழிப் பதியில் கோயில் கொண்டிருக்கும் சிவஞானச் செல்வமே!
சிவபெருமானே! சுருங்கி, காழ்ப்பு இல்லாத, அருள் நெஞ்சத்து திரு
ஞான சம்பந்தர்க்கு ஞானம் தந்து அருள் புரிந்தாய். உன்னை வணங்கு
கிறேன். (கவுணியர் -ஞானசம்பந்தர்)

ஞானசம்பந்தர் பிறந்த இடம். இத்தலத்திற்கு பிரமபுரம்,கழுமலம், வேணு
புரம், ஶ்ரீகாழி, கொச்சைவயம்,தோணிபுரம், வெங்குரு, புகலி, சிரபுரம்,
பூந்தராய், புறவம், சண்பை என்று பன்னிரு பெயர்கள் உண்டு.

இறைவன் : தோணியப்பர்
இறைவி    : பெரியநாயகி
தலமரம்     : பாரிஜாதம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

25 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக் குருகாவூர்  வெள்ளடை

                                           - பார்காட்டு
உருகாவூர் எல்லாம் ஒளிநயக்க ஓங்கும்
குருகாவூர் வெள்ளடை எம் கோவே -

கற்பாறைகள் நிறைந்து  கடலின் பேரலைகளால்
கரைந்து கெடாத ஊர்கள் அனைத்திலும் சிவ ஒளி
பெற்று எல்லோரும் விரும்பி வழிபடும் குருகாவூர்த்
திருவெள்ளடையில் எழுந்தருளி இருக்கும் எங்களுடைய
தலைவனே!
'
'திருக்கடாவூர்' என்பது  இப்போதைய பெயர். இத்தலம் சீர்காழிக்குக்
கிழக்கில் 6 கிலோ மீட்டர் அளவில் இருப்பது.

இறைவன் : வெள்ளடையீஸ்வரர்
இறைவி    : காவியங்கண்ணியம்மை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

24 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கீழைத் திருக்காட்டுப்பள்ளி

                                                                 - தண்காட்டிக்
கார்காட்டித் தையலர்தம் கண்காட்டிச் சோலைகள் சூழ்
சீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே -

தண்மை பொருந்திய கார்மேகம் போன்ற கூந்தலையுடைய மகளிரின்
கண்களைக் குளிர்விக்கும் சோலைகள் சூழ்ந்து அழகு மிக்கு விளங்கும்
சிவக்கொழுந்தே.

இத்தலம் திருவெண்காட்டுக்கு மேற்கில் 1 1/2கிலோமீட்டர் தொலைவில்
உள்ளது.

இறைவன் : ஆரண்யசுந்தரேஸ்வரர்
இறைவி    : அகிலாண்டநாயகி
தீர்த்தம்     : அமிர்த தீர்த்தம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

23 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெண்காடு

                                             - நல்லவர்கள்
கண்காட்டு  நெற்றிக் கடவுளே என்றுதொழ
வெண்காட்டில்  மேவுகின்ற மெய்ப்பொருளே -

நல்லமனிதர்கள், நெற்றிக்கண்ணுடைய இறைவனே
என்று தொழுது துதிக்குமாறு திருவெண்காட்டில்
வீற்றிருக்கும் மெய்ப் பொருளே, உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் சீர்காழிக்குத் தென்கிழக்கில் 10 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது.
சுவேதவனம், சுவேதாரண்யம் என்ற பெயர்களை உடையது.
நவக்கிரகத் தலங்களில் புதன் கிரகத் தலம்.
சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
இவை மூன்றிலும் நீராடி இறைவனை வழிபட்டால் நினைத்த
காரியம் கை கூடும்.
நடராச சபை, சிதம்பர ரஹஸ்யம் ஆகியவை உள்ளன.
சம்பந்தர் பதிகம் மூன்றும், அப்பர் பதிகம் இரண்டும், சுந்தரர்
பதிகம் ஒன்றும் ஆக ஆறு பதிகங்கள் உள்ளன.
பட்டினத்தார் பிறந்த ஊர்.
இறைவன் : சுவேதாரண்யேஸ்வரர்
இறைவி    : இறைவி
----------------------------
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

22 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பல்லவனீச்சரம்

                                                    - வாய்க்கமையச்
சொல்லவ  னீச்சரங்கு தோயஉம்ப ராம்பெருமைப்
பல்லவ  னீச்சரத்தெம்  பாவனமே -

வன்னீச்சர் - வன்மை+ நீச்சர்; நீசர் என்பது நீச்சர் என வந்தது.

தம் வாய்க்குப் பொருந்திய சொற்களைச்
சொல்லும் நீசர் ஆனாலும்  அங்கு  நீராடினால் தேவராகும் பெருமையை
அளிக்கும் பல்லவனீச்சரத்தில் கோயில் கொண்டருளும் தூய்மை வடிவான
பரம்பொருளே தங்களை நமஸ்கரிக்கிறேன்.

காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) இப்போதைய பெயர். சம்பந்தர் பதிகங்கள்
இரண்டு உள்ளன.

இறைவன் : பல்லவனேஸ்வரர்
இறைவி    : செளந்தரநாயகி
தீர்த்தம்     : காவிரி

திருவருட்பிரகாச வள்ளலார்  -  விண்ணப்பக் கலிவெண்பா

21 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருசாய்க்காடு

                                                 -வலிக்கா இல்
பாய்க்காடு கின்றவொரு பச்சை முகில் பரவும்
சாய்க்காடு மேவும் தடங்கடலே -

வலிமையுடைய கால் இல்லாத
பாம்பணையில் சாய்ந்து அசைகின்ற பச்சைநிற மேக வண்ணனாம் திருமால்
வழிபாடு செய்கின்ற திருச்சாய்க் காட்டில் கோயில் கொண்டுள்ள அருட் கடலே
உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் சாலையில் உள்ளது. சாயாவனம் என்று
அழைக்கப்படும் இத்தலம் காசிக்கு சமமானது.திருவெண்காடு, மயிலாடுதுறை,
திருவிடைமருதூர், திருவையாறு, ஶ்ரீவாஞ்சியம் ஆகிய தலங்களும் காசிக்கு
சமமானவை. சம்பந்தர் இரு பதிகங்களும், அப்பர் இரு பதிகங்களும் பாடியுள்
ளனர்.

இறைவன் : சாயாவனேஸ்வரர்
இறைவி    : குயிலினும் நன்மொழியம்மை
தீர்த்தம்     : காவிரி

பஞ்சாய்க் கோரை இங்குக் காடுபோல் பெருகி இருந்ததால் 'சாய்க்காடு'
எனப்பட்டது என்பர்.

திருஅருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

20 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கலிக் காமூர்

                                                           - மேய
பலிக்காவூர்  தோறும்  பதஞ்சேப்பச்  சென்று
கலிக்காமூர்  மேவும்   கரும்பே -

உணவுக்காக ஊர்தோறும் கால் சிவப்பச் சென்று, பின்
கலிக்காமூரிலே கோயில் கொண்டிருக்கும் கரும்பனைய
பெருமானே உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் தென்திருமுல்லை வாயிலுக்கு தென்மேற்கில் ஐந்து கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. தற்போது இவ்வூருக்கு  'அன்னப்பேட்டை' எனப் பெயர்.

இறைவன் :சுந்தரேஸ்வரர்
இறைவி    :அழகுவனமுலையம்மை

திரு அருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

19 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தென் திரு முல்லை வாயில்

                                                                      - கயேந்திரனைக்
காயலுறா  தன்றுவந்து  காத்தோன் புகழ்முல்லை
வாயிலின்  ஓங்கு  மணிவிளக்கே -

யானைகளின் அரசன் கஜேந்திரனைக்  கருணையால் காத்து 
உதவிய திருமால் துதிக்கும் திருமுல்லைவாயில் என்ற தலத்தில் 
வீற்றிருக்கும்  ஒளி பொருந்திய மணிவிளக்கானவனே, உன்னை
வணங்குகிறேன்.

கஜேந்திர மோட்ச வரலாறு: ஆகாயத்தை அளாவி உயர்ந்த  திரிகூடமலைக்
காடுகளில் யானைக் கூட்டங்களுக்கு  எல்லாம் இந்திரன் (தலைவன்) ஆன 
ஓர் ஆண்யானை வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அங்குள்ள தாமரை மலர்கள் 
நிறைந்த பெரிய குளத்தில் யானைகள் எல்லாம் இறங்கி விளையாட, அங்கு
வெகுகாலமாக வசித்து வந்த முதலை கோபம் கொண்டு யானையின் காலைக் 
கவ்விக்கொண்டது. ஆயிரம் ஆண்டுகள் விடுபட முடியாது தவித்த யானை, முற்பிறவி
வாசனையால் ''ஹே ஆதிமூலமே , என்னைக் காப்பாற்று'' எனப் பிரார்த்தித்தது.

யானையின் அபயக் குரல் கேட்ட விஷ்ணுமூர்த்தி கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியவராய்
கருடன் மீது அமர்ந்து வந்து யானையைக் காப்பாற்றினார் என்பது வரலாறு.

இத்தலம் ' திருமுல்லை வாசல்' என்று அழைக்கப்படுகிறது. 
சீர்காழியிலிருந்து 13 கி. மீ.தொலைவில் உள்ளது.
 திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

இறைவன் : முல்லைவனநாதர்
இறைவி    : கோதையம்மை
தலமரம்     : முல்லை

இந்திரனும், கார்க்கோடகனும் வழிபட்டதலம்.  

18 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமயேந்திரப்பள்ளி

                                                -சொல்லும்
தயேந்திரர் உள்ளத் தடம்போல் இலங்கும்
மயேந்திரப் பள்ளி இன்ப வாழ்வே -

புலவர்கள் புகழ்ந்து பாடும் தயை நிறைந்தவர்களின் உள்ளமாகிய திருக்குளம் போல
விளங்கும் மயேந்திரப் பள்ளியில் ஆனந்தமாக வீற்றிருக்கும் இறைவனே.
உன்னை வணங்குகிறேன்.

மயேந்திரப்பள்ளி  என்பது இன்றைய பெயர். இத்தலம் ஆச்சாபுரத்துக்கு வடகிழக்கில்
3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஊரின் கடைக் கோடியில் உள்ளது. சம்பந்தர்
பதிகம் ஒன்று மட்டும் இத்தலத்திற்குரியது.

இறைவன் : திருமேனியழகர்
இறைவி    : வடிவாம்பிகை
தலமரம்     : தாழை

விண்ணப்பக் கலிவெண்பா - பாடல் 6 

17 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருநல்லூர்ப் பெருமணம்

                                                             -விழிப்பாலன்
கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதிரு
நல்லூர்ப் பெருமணம் வாழ் நன்னிலையே -
                                                                                           
 திருஞானசம்பந்தர் திருக்கழிப்பாலை சிவபெருமானைச் சிறப்பித்து  ''கல்லூர்ப் 
பெருமணம்'' என்ற  திருப்பதிகத்தைப்  பாடித்  துதித்த  போது சோதி உருவாய்க் 
காட்சி  அளித்த  நல்லூர்ப் பரமனே- உன்னை நமஸ்கரிக்கிறேன். 

ஊர்ப்பெயர் நல்லூர். கோயில் பெருமணம். திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் 
கோயிலுள்ளே புக சோதி தோன்றியது. அதனுள் சம்பந்தர் கலந்து மறைந்தார்.உடன் 
சென்ற அனைவரும் சிவலோகத்தை அடைந்தனர் என்பது வரலாறு.

இத்தலம் கொள்ளிடம் புகை வண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர் 
தொலைவில் உள்ளது.

16 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கழிப்பாலை

                                                              - செல்வாய்த்
தெழிப்பாலை வேலைத் திரையொலி போல் ஆர்க்கும்
கழிப்பாலை இன்பக் களிப்பே -

திருக்கழிப்பாலையின் இல்கள்தோறும் தயிர்கடையும் ஓசையானது அலையோசை போல்
ஒலிக்க அங்கே இன்ப வடிவாய்  எழுந்தருளியிருக்கும்  சிவபெருமானே உன்னை வணங்குகிறேன்.

சிவபுரிக்கு அரைக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பழைய தலம் கொள்ளிட நதி வெள்ளத்தில் போய்விட்டது.
இறைவன்: பால்வண்ண நாதேசுரர்
இறைவி: வேதநாயகி
தலமரம் : வில்வம்



15 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

3. திருநெல் வாயில்

                                            - வாழ்க்கைமனை
நல்வாயில் எங்கும் நவமணிக் குன்று ஓங்குதிரு
நெல்வா வாயின் நின்றொளிரும் நீள்ஒளியே -

வாழ்வுக்கு உரிய வீடுகளின் வாசல் எங்கும்( நவமணிகள்) ஒன்பது வகை  உயர்ந்த மணி
வகைகள் மலைபோலக் குவிந்திருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருநெல் வாயில்
என்ற தலத்தில்  நிலைபெற்ற ஒளியாய்  வீற்றிருக்கும்  சிவபெருமானே!
உன்னை வணங்குகிறேன்.

இத்தலம் சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் (பல்கலைக் கழகத்திற்குள்
நுழையாமல்) கவரப்பட்டு சாலை சென்று, பேரணாம்பட்டுச் சாலையில் உள்ளது. இதன் மற்றொரு பெயர் சிவபுரி என்பதாகும். திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று பாடியுள்ளார்.

இறைவன் திருநாமம் :உச்சிநாதேஸ்வரர்
இறைவி: கனகாம்பிகை

கண்வமகரிஷி வழிபட்டதலம்.
  

14 April 2013

திருவருட்பா- சிவத்தலங்கள்


 2, திருவேட்களம்

 ........................................................ .... மாயமிகும்
வாட் களமுற் றாங்கு விழி மாதர்மயல் அற்றவர் ஆம்,
வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே -

மயக்கத்தைத் தரக் கூடிய வாள் விழி மங்கையர்களின் மயக்கத்துக்கு ஆட்படாத பெரியோர் வணங்குவதற்கு விரைந்து வரும் திருவேட்கள நகரில் கோயில் கொண்டுள்ள விழுமிய பொருளே, 
சிவபெருமானே உன்னை வணங்குகிறேன்.

திருவேட்களம் அண்ணாமலை நகரில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து  அண்ணாமலைப் பல்கலைக் கழக
வளாகத்திற்குள் புகுந்து நேரே செல்லவேண்டும்.
திருஞானசம்பந்தரும்(1), திருநாவுக்கரசரும்(1)  பதிகம் பாடியுள்ளனர்.
இறைவன் -பாசுபதேஸ்வரர்
இறைவி - நல்லநாயகி
    
இங்கு சிவபெருமான் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். நாரதர் வழிபட்டதலம். 

திருவருட்பா- தில்லைச் சிற்றம்பலம் பெரும்பற்றப் புலியூர்



சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் 63.

தில்லைச் சிற்றம்பலம் பெரும் பற்றப்புலியூர் - தலவிளக்கம்

தில்லை - தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் 'தில்லைவனம்' எனப்பட்டது.
சென்னை- திருச்சி புகைவண்டி மார்க்கத்தில் உள்ளது.
பூலோக கயிலாயம், சிதாகாசத்தலம், புண்டரீகபுரம், பெரும்பற்றப்புலியூர், ஞானாகாசம் என்று பல பெயர்கள்  உண்டு.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் அதீத பக்தி கொண்டு வழிபட்ட தலமாதலால் பெரும்பற்றப்புலியூர் எனப் பெற்றது.


(விண்ணப்பக்கலிவெண்பாவின் முதல் இருவெண்பாக்களும் இத்தலத்தைக் குறித்தனவாம்.)

திருச்சிற்றம்பலம்

13 April 2013

திருவருட்பா - சிவத்தலங்கள் 1

தில்லைச் சிற்றம்பலம் பெரும்பற்றப் புலியூர்

1. சொற்பெறுமெய்ஞ்  ஞானச்  சுயஞ்சோதி யாம்தில்லைச்
    சிற்சபையில்  வாழ்தலைமைத்  தெய்வமே.

 புகழ் நிறைந்த உண்மை ஞானத்தின் இயற்கைச் சோதியாய் சிற்சபையில் வாழும் தலைமையான   தெய்வமே. 
 சிற்சபை - எல்லா இயக்கங்களையும் தன்னகத்தே கொண்ட அமைப்பு


2.                                                    - நற்சிவையாம்  
  தாயின்  உலகனைத்தும்   தாங்கும் திருப்புலியூர்க்
  கோயில் அமர்ந்தகுணக்  குன்றமே -

திருப்புலியூர்க் கோயிலிலே உமையம்மை தாயாய் விளங்கி உலகனைத்தையும்  தாங்கும் குணக்குன்றாய்   விளங்குகிறாள்.
சிற்றம்பலத்தில் கூத்தராய் விளங்கும் சிவன் பெரும்பற்றப்புலியூரில் அம்மையப்பனாய் விளங்குகிறார்.
சிவை - சிவம் என்பதற்குப் பெண்பால்.

தில்லையின் வடபகுதி பெரும்பற்று.அங்குள்ள சிவன் கோயில் புலியூர். எனவே பெரும்பற்றப்புலியூர்
எனப்பட்டது.

12 April 2013

திருவருட்பா - விண்ணப்பக் கலிவெண்பா

(திருவருட்பிரகாச வள்ளலார் பல சிவத்தலங்களையும் நினைந்து பாடி நம்மை அத்தலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்.நாமும் அவருடன் சென்று தரிசனம் செய்து மகிழலாம்)

 காப்பு - விநாயகர் வணக்கம்

அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
எவ்வெவ் இடையூறும் எய்தலிலம் - தெவ்வர்தமைக்
கன்றுமத  மாமுகமும் கண்மூன்றும் கொண்டிருந்த
ஒன்று அதுநம் உள்ளம் உறைந்து.

மதம் சொரியும் யானை முகமும், கண்மூன்றும் உடைய ஒரு பொருள் உள்ளத்தில் உறைந்து,
எந்த இடையூறுகளும் வராது, அவ்வப்போது தோன்றி  அருள்தருகிறது.  (அவரை வணங்குகிறேன்)

நாளை முதல் சிவதலங்களை தரிசிக்கலாம்.





11 April 2013

திருவருட்பா


அருள் திறத்து அலைச்சல்

செவ்வண்ண  மேனித்  திருநீற்றுப்  பேரழகா

எவ்வண்ணம்  நின்வண்ணம்  என்றறிதற்  கொண்ணாதாய்

உவ்வண்ணன்  ஏத்துகின்ற  ஒற்றிஅப்பா  உன்வடிவம்

இவ்வண்ணம்  என்றென்  இதயத்  தெழுதேனோ.

                       - திருவருட்பிரகாச வள்ளலார்

சிவந்த மேனியிலே திருநீற்றை அணிந்த ''திருநீற்றுப் பேரழகா"
உன்  இயல்பு எத்தகையது என்று யாரும் அறிய முடியாதவனே
கருடனை ஊர்தியாய் உடைய திருமால் துதிக்கின்ற ஒற்றி அப்பா
உன் வடிவம் இப்படிப் பட்டது என்று என் உள்ளத்தில் எழுதாது விடுவேனோ?

உன் வண்ணம் என் இதயத்தில் எழுதப்பட்டு விட்டது.

10 April 2013

திருவருட்பா

நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றிஅப்பா உன்னுடைய
மறைமணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.

                                         - திருவருட்பிரகாசவள்ளலார்

தேன் மணக்கும் கொன்றை மலர் மாலையையும், கங்கையையும் சடாமுடியில் தாங்கும் நாயகனே,
ஆலகாலநஞ்சு மணக்கும் நீலநிறக் கழுத்துடைய பெருமானே! தேன் சொரியும் மலர்ச்சோலைகள்
நிறைந்த திருவொற்றியூர் அப்பனே! உன்னுடைய வேதங்கள் துதிக்கும்  திருவடிகளை வாய் நிறைய வாழ்த்துவேன்.

திருச்சிற்றம்பலம்

9 April 2013

திருவருட்பா - கருணைமாலை


வண்ணனே அருள் வழங்கும் பன்னிரு
கண்ணனே அயில் கரங்கொள் ஐயனே
தண்ணனேர் திருத்தணிகை வேலனே
திண்ணம் ஈதருள் செய்யுங்  காலமே
               - திருவருட்பிரகாச வள்ளலார்

குளிர்ச்சி பொருந்திய திருத்தணிகை வேலனே!அழகனே! அருள் பொழியும் பன்னிரு கண்கள் உடையவனே!கூர்மையான வேலைக் கையில் ஏந்தியவனே! நீ எனக்கு அருள் செய்வதற்கு உரிய காலம் நிச்சயமாக இதுவேயாகும். உடன் வருவாய்!

திருச்சிற்றம்பலம்

8 April 2013

திருவருட்பா

புண்ணிய விளக்கம்

(சிவபெருமானை நோக்கிச் செய்கின்ற நல்ல வினையின் பயனைத் தெரிவிப்பது)

பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
                                        - திருவருட்பிரகாச வள்ளலார்


ஓ மனமே! என் மீது ஆணை! நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. 'சிவாயநம' என்று சொல்லி திருநீறை நெற்றியில் அணிவாயாக! அது நீ பாடுவதற்குரிய நல்ல கருத்தமைந்த சொற்களைத் தானே அளிக்கும்,
உன் பசி நீக்க பால் சோற்றினை மிகுந்த பரிவுடன் அளிக்கும். இனிமையான சிவனடியார்களின் நட்பினைப் பெற்றுத் தரும். பெற்றவிடத்து இனிய சிறப்பைத் தரும்.

7 April 2013

திருவருட்பா - தனித்திருத்தொடை


தேனே அமுதே சிவமே தவமே தெளிவேயெங்

கோனே குருவே குலமே குணமே குகனேயோ

வானே வளியே அனலே புனலே மலையே என்

ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.

                 - திருவருட்பிரகாசவள்ளலார்

இதய குகையில் அரசனாய், குருவாய், குணமாய், தேனாய், அமுதாய் தவமாய்,  சிவமாய்,
ஐம்பூதமாய், என் உடலாய், உயிராய், உணர்வாய் உறைகின்றாய். காத்தருள்க.

5 April 2013

திருவருட்பா - சண்முகர் வருகை


(முருகப் பெருமானின் வருகின்ற குறிப்பறிந்து விடியற்காலையில் இளமகளிர் அப்பெருமானை வரவேற்கும் பாடல்)

காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
கண்ணுதல் சேயரே வாரும்
ஒண்ணுதல் நேயரே வாரும்

செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வ ராயரே வாரும்
எங்குரு நாதரே வாரும்.

அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆறுமுகத் தோரே வாரும்
மாறில் அகத்தோரே வாரும்

சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூரசங் காரரே வாரும்
வீரசிங் காரரே வாரும்.

வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
வேலாயுதத் தோரே வாரும்
காலாயுதத் தோரே வாரும்.

                                 -- திருவருட்பிரகாச வள்ளலார்

4 April 2013

திருவருட்பா - சண்முகர் வருகை


வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே

வள்ளி மணாளரே வாரும்

புள்ளி மயிலோரே வாரும்.  1

சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று

சண்முக நாதரே வாரும்

உண்மை வினோதரே வாரும்.  2

பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று

பொன்னான வேலரே வாரும்

மின்னார்முந் நூலரேவாரும்.  3

                    - திருவருட்பிரகாச வள்ளலார்

3 April 2013

திருவருட்பா - சண்முகர் கொம்மி

(இரண்டு கைகளையும் குவித்துக் கொட்டுவது கொம்மி. கொம்மை, கும்மை,கும்மி, கொம்மி எனவும் வழங்கும்.)

மாமயிலேறி வருவாண்டி - அன்பர்
வாழ்த்த வரங்கள் தருவாண்டி
தீமையிலாத புகழாண்டி - அவன்
சீர்த்தியைப் பாடி அடியுங்கடி.

சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
செஞ்சுடர் தோன்றும் திறம்போல
கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் -வரும்
கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.

ஆறுமுகங்களில் புன்சிரிப்பும் -இரண்
டாறு புயந்திகழ் அற்புதமும்
வீறு பரஞ்சுடர் வண்ணமுமோர் -திரு
மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.

                            -திருவருட்பிரகாச வள்ளலார்


2 April 2013

திருவருட்பா - குறையிரந்த பத்து

தன் மனக்குறைகளைக் கூறி அருள் வேண்டி இரப்பது ஆதலின் ''குறையிரந்த பத்து''

சீர்பூத்த   அருட்கடலே  கரும்பே  தேனே
              செம்பாகே எனது  குலத்  தெய்வமேநல்
கூர்பூத்த  வேல் மலர்க்கை  யரசே  சாந்த
               குணக்குன்றே  தணிகைமலைக் கோவே ஞானப்
பேர்பூத்த  நின்புகழைக் கருதி யேழை
               பிழைக்கவருள் செய்வாயோ பிழையைநோக்கிப்
பார்பூத்த பவத்திலுற விடிலென் செய்கேன்
               பாவியேன் அந்தோ வன்பயந் தீரேனே.
                                             - திருவருட்பிரகாசவள்ளலார்

வள்ளல் பெருமான் தணிகைமலை முருகனை உள்ளம் உருகிக் குழைய அழைக்கிறார்!பரந்து விரிந்து ஆழ்ந்த கடல்போல் அருள் செய்பவனே,தித்திக்கும் கரும்பே, தேனே,  வெல்லப்பாகினைப்போல் இனிப்பவனே, குலதெய்வமே, மலர்க்கரங்களிலே வேலேந்திய அரசே, சாந்த குணமுடையவனே, நற்குணங்களாகிய மலையே, தணிகைமலை அரசே, ஞானவடிவானவனே!
முருகப் பெருமானே! கருணை மிக்க நீ என் பிழைகளை பொருட்படுத்தாது நான் வாழ அருள் செய்ய
வேண்டும். இந்த உலகவாழ்க்கைச் சேற்றில் துன்புற விட்டால் நான் என்ன செய்வேன்?  என்பயம் தீர்த்து
பிறவித் தளையிலிருந்து எனை விடுவிப்பாய்.

திருச்சிற்றம்பலம்




1 April 2013

திருவருட்பா - பிரார்த்தனை மாலை


வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும்
விளங்கு மயில்
மேல்கொண்ட வீறும் மலர்முக மாறும்
விரைக்கமலக்
கால்கொண்ட வீரக்கழலும் கண்டாலன்றிக்
காமனெய்யும் 
கோல்கொண்ட வன்மை யறுமோ தணிகைக்
குருபரனே.                          - திருவருட்பிரகாச வள்ளலார்

திருத்தணிகை மலைமீது எழுந்தருளியுள்ள குருபரனே! வேலேந்திய தங்கள் திருக்கரத்தையும்,வலிமை வாய்ந்த தோளையும், மயில் மீது அமர்ந்திருக்கும் பொலிவையும்,  மலர் முகங்கள்  ஆறினையும், மணங்கமழும் திருவடியில் அணிந்துள்ள வீரக் கழலையும் தரிசனம் செய்தால் அன்றி மன்மதன் செலுத்தும் காமபாணங்களிலிருந்து விடுபட முடியாது. எனவே விரைவில் வந்து தரிசனம் தந்தருள்வீராக.