31 July 2014

77. அருணாசல அட்சர மணமாலை

மானங் கொண் டுறுபவர் மானத்தை அழித்துஅபி
 மானமில் லாதொளிர் அருணாசலா

மானம் என்பது உடற்பற்று, பொருட்பற்று, உலகப் பற்று. இப்பற்றுகளை அழித்து தன்னை நாடிவருவார்க்கு பற்றின்மையையும், பணிவையும் அளித்து ஒளிர்கின்றவன் அருணாசலன்.

இறைநாட்டம் உடையவர்க்கு  மான அபிமானங்கள் இல்லையாம்.

30 July 2014

76. அருணாசல அட்சர மணமாலை

மலை மருந்திட நீ மலைத்திடவோ அருள்
   மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா

மலைத்தல் - திகைப்புறல், மயங்குதல், மலை மருந்து - மலைப்புக்கு மருந்து, மலையாகிய மருந்து

மலை மருந்து,  ஒளிர் மருந்து, அருள் மலை,  மருந்து மலை, ஒளிர் மலை, அருணாசலம்!
நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பது இமய மலை. இமவானின் மகள், மலைமகள் உமாதேவியார்.
பர்வத புத்திரியை இடப்பாகம் கொண்டதால் அம்மையப்பனாய்த் திகழ்பவன் சிவன்.

அண்ணாமலை வடிவில் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாய், ஞானச் சுடராய்த் திகழ்பவனே!
எனது அகந்தைப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாய் இருப்பதற்கு நீ மலைக்காலாகுமோ?
விரைவில் அருள் செய்!

எனது அகந்தையை  அழிக்கும் மருந்தாகிய ஆன்ம விழிப்புணர்வை  எனக்கு நீ அருளிய  பின்னும் நான் மயங்குவேனோ? மாட்டேன்.

மலை மருந்தாகிய  உமாதேவியார் இடப்பாகத்தில் வீற்றிருக்க எனக்கு அருள் செய்ய நீ தயங்கலாமா?

மனிதர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து இறைவனே.
29 July 2014

75. அருணாசல அட்சரமணமாலை

பெளதிகமாம்  உடல் பற்றற்று நாளுமுன்
    பவிசுகண் டுறவருள் அருணாசலா

 பஞ்ச பூதங்களாகிய  மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனது மானிட உடல். பஞ்சேந்திரியங்களும் நம் உடலுக்கு அவசியமாகின்றன. அதனால் நான் என்பது உடல், உடலின் அழகு, குடிப்பிறப்பு, செல்வம், புகழ், உறவுகள் ஆகியவையால் உண்டாகும் எனது, என்னுடைய என்ற அகங்காரம் ஏற்படுகிறது. எனவே இந்த உடல் மீது நான் கொண்டுள்ள பற்றினை நீக்கி நாள்தோறும் உன்னுடைய செவ்விய திருவருள் இன்பத்தைத் துய்க்க அருள் புரிவாய் அருணாசலா.

உடல் இல்லாமல் 'நான் ஏது' என்ற கேள்வி உண்டாகிறது! இந்த 'நான் யார்' என்ற கேள்விக்கு, பதில் காண முயலும் போது இந்த உடம்பு மட்டுமே 'நான் அல்ல', அதற்கும் மேற்பட்ட ஒன்று என்பது தெளிவாகும்.  இந்த உடலைத் தாண்டி 'தான் யார்' என்பதை அறிவதே இறைவன் மனிதர்க்கு வைத்துள்ள தேர்வாகும்!

கந்தரனுபூதியில் அருணகிரிநாதர்,''விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய்,'' என்றும், ''மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினை ஒழிவாய், கதிர்வேல் முருகன் கழல் பெற்றுய்வாய்,'' என்கிறார்.
உடல் எடுத்ததன் பயன் இறைவனை அறிதலேயாகும்.
  

28 July 2014

74. அருணாசல அட்சரமணமாலை

போக்கும் வரவுமில் பொதுவெளியினில் அருட்
      போராட்டம் காட்டு அருணாசலா

போக்கும் வரவும் - தோன்றி மறைதல்.
இல் பொது வெளி - இல்லாத பரவெளியில்
அருட் போராட்டம் - நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போர்
முடிவில் வெற்றி பெறுவது சிவனருட் சக்தியே!

தோன்றி மறைதல் இல்லாத இறைவன் சிவப்பர வெளியினில் ஆனந்தத்திருநடனம் புரிகின்ற காட்சியைக் காணவேண்டுகிறார் மகரிஷி.
அகந்தை அழிதலும், ஆன்ம விழிப்புணர்வுக்கும் இடையே நடப்பதே போராட்டம்.

இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறவே பல கட்டுப் பாடுகளுடன் யோக வாழ்வை மேற்கொண்டு
சாதனைகள் செய்கின்றனர் யோகியர்.

எண்ணங்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன. நன்கு கவனித்து  ஒரு எண்ணம் தோன்றி
மீண்டும் மற்றொரு எண்ணம் தோன்றும் இடை வெளியில் ஆழ்ந்து மனதை நிறுத்தினால், அது
நம்மை அமைதியில், ஆனந்தத்தில் ஆழ்த்தும்! இதுவே பொது வெளி! இந்தப் பொது வெளியில்
 உலக எண்ணங்கள் நம்மை ஒரு புறம் இழுக்க, ஆனந்த அனுபவம் மற்றொரு பக்கம் ஈர்க்க  ஒரு போராட்டம் நிகழ்கிறது. இதனை நிகழ்த்தி நம்மை ஆட் கொள்பவன் அருணாசலன்.

27 July 2014

73. அருணாசல அட்சரமணமாலை

பொடியான் மயக்கியென் போதத்தைப் பறித்துன்
      போதத்தைக் காட்டினை அருணாசலா

பொடி - சொக்குப் பொடி( நயமாகப் பேசி நம்ப வைப்பது))
போதத்தைப் பறித்து - அறிவைப் பறித்து
போதத்தைக் காட்டினை - ஞானத்தை தந்தனை

சொக்குப் பொடி போட்டு உன் திருநாமத்தால் என்னை மயக்கினாய்!
உலக விஷயங்களில் நின்று நிலைதடுமாறும் என் அறிவைப் பறித்துக் கொண்டாய்.
ஆன்ம ஞானமாகிய பேருண்மையை எனக்கு காண்பித்தாய்.

அருணாசல நாமம் காதில் விழுந்தவுடன் தனக்கு விவரிக்க இயலாத இன்பம் தோன்றியதையும்,
அண்ணாமலை வந்து ஆன்ம ஞானம் பெற்றதையும் இக்கண்ணிகளால் உணர்த்தினார்.


26 July 2014

72. அருணாசல அட்சர மணமாலை


பைங்கொடி  யாநான் பற்றின்றி வாடாமற்
பற்றுக்கோ டாய்க்கா அருணாசலா

பைங்கொடி நான், பற்றுக்கோடு  நீ!
பசுமையான கொடிக்குப் பற்றிப் படர பந்தல் இல்லாவிடினும், ஒரு கொம்பாவது தேவை.
அது போல எனக்கு, என் வாழ்வுக்கு ஆதாரமாய், துணையாய் என் வாழ்வைப் பயனுள்ளதாகச் செய்து
எனைக் காப்பாய்  அருணாசலா.
'தாவிப் படரக் கொழுகொம்பு இல்லாத தனிக் கொடி போல் பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே" என்று அருணகிரியின் கந்தரலங்காரப் பாடல் நெஞ்சை நெகிழ்விக்கின்றது!25 July 2014

71.அருணாசல அட்சர மணமாலை

பேய்த்தனம் விடவிடாப் பேயாய்ப் பிடித்தெனைப்
     பேயனாக்கினை யென் அருணாசலா

பேய்த்தனம் விட - அகந்தைப் பேய் என்னை விட்டு அகல
விடாப்பேய் - என்றும் விட்டு அகலாத அருணாசலப் பித்து
பேயனாக்கினை - உன்மீது பைத்தியமாக்கினை

அருணாசலனே! அகந்தைப் பேய் என்னை விட்டு அகலவும், உன்மீது பக்திப் பித்து என்னைப் பீடிக்கவும்,
நான் உன் மீது பைத்தியமானேன்.

அவரே வியப்புறும் வகையில் அவருக்கு ஆன்ம ஞானம் நொடிப் பொழுதில் சித்தித்ததை இவ்வாறு ஶ்ரீ ரமணர் குறிப்பிடுகிறார். 

24 July 2014

70. அருணாசல அட்சரமணமாலை

பெயர் நினைத்திடவே பிடித்திழுத்தனை உன் 
           பெருமை யாரறிவார் அருணாசலா

நினைத்தாலே அருணாசல நாமம் சொன்னாலே   முக்தியருளும் பெருமையுடைத்து திருவண்ணாமலை.

அருணாசலம் என்ற உன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நான் உன்பால் ஈர்க்கப்பட்டேன்.
காந்தம் இரும்பைக் கவர்வதுபோல நீ என்னைப் பிடித்து உன்பால் சேர்த்துக் கொண்டனை.
உன் பெருமையை யாரே எடுத்துச் சொல்ல வல்லவர்? யாரும் இல்லை .

''அருணாசலமென அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய்'' என்றுதானே தொடங்கினார்?
அருணாசலத்தை நினைத்தாலே ஆண்டவன் அருள் கைகூடும்.

23 July 2014

69. அருணாசல அட்சரமணமாலை

பூமண மாமனம் பூரண மணங்கொளப்
   பூரண மணம் அருள்  அருணாசலா

உலக விஷயங்களிலேயே நிலைத்திருக்கிறது  பூவின் வாசனையொத்து விளங்கும் மனித மனம்.
இம்மனமானது முழுமையானவனாய் விளங்கும் இறைவனை உணர்ந்து கொள்ளும் போது முழுமையடைந்து பிரகாசிக்கிறது. இத்தகைய முழுமையான, இரண்டறக் கலந்து நிற்கும் உன்னத நிலையடைய அருள் புரிவாய் அருணாசலா.
அட்சரமணமாலை இந்தப் பூரணத்துவ நிலையை அடைய விரும்பும் அன்பர்களுக்கு வரப் பிரசாதம்.

ஈசாவஸ்ய உபநிஷதத்தின் மந்திரம் இதோ;
''ஓம் பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
    பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேமாவ சிஷ்யதே||
இறைவன் முழுமையானவர். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது.( ஈசாவாஸ்ய உபநிஷதம், ஶ்ரீராம கிருஷ்ண மடம் வெளியீடு)

வள்ளல் பெருமானின் ஆறாம் திருமுறை, அனுபவ மாலைப் பாடலைப் பாருங்கள்.சிவபோக அனுபவத்தை  தலைவி, தோழி கற்பனைப் பாத்திரங்கள் மூலம் விளக்கும் ஆனந்த மயமான பாடல்.

''அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலரென் முடிமேல்
 அணிந்து கொண்டேன் அன்பொடுமென் ஆருயிர்க்கும் அணிந்தேன்
எம்பரத்தே மணக்கும் அந்த மலர்மணத்தைத் தோழி
என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவன் றதுவே''

பிறவியின் பயன் இறைவனை அறிதலும், அவனை அடைதலும் ஆகும்.
அருட்பெருஞ்சோதி அருணாசலம் வாழ்க.

22 July 2014

68.அருணாசல அட்சரமணமாலை

புல்லறிவு ஏதுரை நல்லறிவு ஏதுரை
   புல்லிடவே அருள் அருணாசலா

புல்லறிவு - மயக்கத்தைத் தரக்கூடிய பொய் உணர்வு, சிற்றறிவு, அஞ்ஞானம், அறியாமை
நல்லறிவு - மெய்யுணர்வு, ஞானம், பேரறிவு, தன்னைப் பற்றி விசாரித்து அறிந்த ஆன்ம ஞானம்

உன்னோடு இரண்டறக் கலந்து மெய்யறிவு அடைந்தபின், பொய்யறிவு, நல்லறிவு என்ற பேதங்கள் ஏது?
சொல்வாய் அருணாசலா. ஆன்ம அறிவு எது என்ற தெளிவு ஏற்பட்ட ஒருவனுக்கு நன்மை தீமை என்ற வேற்றுமைகள் இல்லை.

21 July 2014

67. அருணாசல அட்சர மணமாலை

பீதியில் உனைச்சார் பீதியில் எனைச் சேர்
     பீதி உன்றனுக்கு ஏன் அருணாசலா

பீதி +இல் - பயம் இல்லாத, பீதி - அச்சம்

அகில உலகங்களையும் ஆளும் பரமனுக்கு ஏது அச்சம்?  அச்சமற்ற உன்னை, வந்து சேர வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன். (பீதி இல் எனைச் சேர்)என் பயத்தைப் போக்கி என்னை உன்னுடன் சேர்த்துக் கொள்வாயாக.  என் அகந்தையை அகற்றி அருள்புரிவாயாக. அருணாசலா!

அருணாசல நாமத்தைக் கேட்டவுடன் சகலத்தையும் துறந்து , எந்த பயமும் இன்றி அண்ணாமலையை அடைந்து அருட் பேறு பெற்ற மகரிஷியின் வாழ்க்கையைக் குறிக்கிறது இக்கண்ணிகள்.   

20 July 2014

66. அருணாசல அட்சரமணமாலை

பித்துவிட்டுனை  நேர் பித்தனாக்கினை அருள்
     பித்தந் தெளி மருந்து  அருணாசலா

பித்து - மிகுந்த ஈடுபாடு, அறியாமை, பைத்தியம்.
பித்தம் -கல்லீரலில் சுரக்கும் நீர், மயக்கம்
பித்தன் - சிவபெருமான்

பித்தம் என்பது கல்லீரல் நோய். விரைவில் நீங்காதது. அது போல பொருட் பித்தும், காமினி, காஞ்சனப் பித்தும் விரைவில் நீங்காதது ஆகும். பிடித்தால் விடாதது.

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பொருட்கள் மீது பற்று உண்டு. அது அளவுக்கு மீறிப் போகும்போது அதனை, 'பித்துப்பிடித்து அலைகிறான்/ள்' என்கிறோம்.

இந்த உலகப் பொருட்கள் மீது  அதிகமான ஆசைவைத்து அலைகின்ற எளியவனான என்னுடைய
பித்தத்தை நீக்கினாய். ஆனால் பித்தத்தை நீக்கிய உன் மீது நான் பித்தனானேன்!'பித்தா பிறை சூடி'என உன்னையே எண்ணினேன். நீயோ பொருட்பித்தையும், உன்மீது ஏற்பட்ட பக்திப் பித்தையும் நீக்கும் மருந்தாகி என் சித்தந்தெளிவித்தாய் அருணாசலா!

'பித்தப் பெருமான் சிவபெருமான்,பெரிய பெருமான் தனக்கருமைப் பிள்ளைப் பெருமான்,' என முருகப் பெருமானைப் போற்றும் வள்ளல், ''நல்ல மருந்து இம்மருந்து-சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து
அருள்வடிவான மருந்து,''என்று சிவனே மருந்து என்று பாடுகிறார்.

'


19 July 2014

65. அருணாசல அட்சரமணமாலை

பார்த்தருள் மாலறப் பார்த்திலை யெனின் அருள்
    பாருனக் கார் சொல்வார் அருணாசலா

அருணாசலனே! என்னை உன் அருட் பார்வையால் பார்த்து, அகந்தை மயக்கத்தை நீக்குவது  உன் கடமை! உன் கருணை நிறைந்த பார்வையை என் மீது திருப்பவில்லையென்றால் உன்னிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்?
எதை எடுத்துச் சொல்ல வேண்டும்? கருணை செய்தல் வேண்டும் என்பதை!

'பார்த்திலை' என்ற சொல் 'பார்த்தாய்' என்ற பொருளிலும்  வரும்.
உன் அருட்பார்வையால் என் அகந்தை மயக்கத்தை நீக்கி அருளினையே. உன் திருவருளின் பெருமையை எவ்வாறு எடுத்துச் சொல்வேன் அருணாசலா!

இறைவனின் அருட்பார்வை இருந்தால்,''எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் செய வல்லான் தனையே ஏத்து,'' என்கிறார் வள்ளலார்.


18 July 2014

64.அருணாசல அட்சரமணமாலை

பற்றிமால் விடத்தலை யுற்றிறு முனம் அருள்
  பற்றிட வருள் புரி அருணாசலா

(மால் விஷம் பற்றி தலை உற்றிடும்  முன்னால்  - மால் - மயக்கம்; மால்  விஷம் - மயக்கம் தரக்கூடிய அகந்தையாகிய நஞ்சு;)
 நான், என், எனது, என்னால், என்னுடைய என்ற மயக்கத்தால் உண்டாகும் அகந்தை நஞ்சு தலைக்கு ஏறி என்னை அழிக்கும் முன் உன் அருளாகிய அமுதம் என்னை அடைய அருள் புரிவாயாக.
அகந்தை - விஷம்;அருள் - அமுதம்.
என்னால்தான் எல்லாம் நிகழ்கின்றன என்ற எண்ணம் மயக்கத்தைத் தரும். அதனால் கர்வம் உண்டாகிறது. 'கர்வம் தலைக்கேறிவிட்டது' என்கிறோம்!

வள்ளல் பெருமான் சொல்கிறார், ''ஒருவனுடைய முதல் மனைவி: ஆணவம்! அவளது பிள்ளை அஞ்ஞானம்.
இரண்டாவது மனைவி மாயை. மாயையின் நான்காவது பிள்ளை அகங்காரம். அவனது இயல்பு என்ன?
அவன் செயலை கருதவும் பேசவும் வாய் கூசும். எல்லா ஆற்றலும் என்பால் உளதெனத் தருக்குவன், தன்னைத்தானே மதிப்பன், தரணியிற் பெரியார் தாம் இல்லை என்பான், தானே பிறந்த தன்மையிற் பேசுவன், விடியும் அளவு வீண்வாதிடுவன், சொல்லினுங் கேளாத் துரியோதனன் என வானவர் தமக்கும் வணங்கா முடியன்.''  ( திருவருட்பா ஆறாம் திருமுறை)

17 July 2014

63. அருணாசல அட்சரமணமாலை

நோக்கியே கருதி மெய்தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டருள் அருணாசலா

(நோக்கி - பார்த்தல்; கருதி -எண்ணுதல் செய்; தாக்கு -மோது, எதிர், தீண்டு; பக்குவம் தகுதியுடையதாகச் செய்தல், முதிர்ச்சி;)

அருணாசலனே, நீ உன் அருட் கண்கள் கொண்டு என்னைப் பார்த்தாய்.
கருணையுடன் இவன் நமக்கு உரியவன் எனக் கருதினாய்.
என் உடலினை ஆளும் ஐம்புலன்களாகிய கள்வர்களைத் தாக்கி அழித்தாய்.
உன்னுடைய அருட் சக்தியைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் உடையோனாய் என்னை ஆக்கினாய்.
என்னை உனக்கு அடிமையாக்கி ஆண்டு கொண்டாய்.
ஐயனே உன் கருணையே கருணை!

 சரியாக பக்குவம் செய்யப்படாத உணவினை உண்ண முடியாது! அதுபோல மனப் பக்குவம் அடையாத மானுடர்களால் இறைவனின் அருட் சக்தியை இப் பூத உடலில்  தாங்க முடியாது. அதனால்தான் தகுந்த குருவின் மேற்பார்வையில் யோக வாழ்வை மேற்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

'ஆண்டருள் ' என்ற சொல் 'ஆண்டு அருள் செய்தாய்' எனவும், 'உன் பக்தர்களுக்கு அருள் செய்
 என்ற பொருளிலும் வருதல் காண்க.

'நோக்குதல்' என்ற சொல் திருக்குறள் - குறிப்பு அறிதல் அதிகாரத்தில் 16 முறை வருகிறது.

'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்,' என்ற கம்பனின் வரிகளை அறியாதார் யார்?

வள்ளல் பெருமானோ  மூன்றாம்  திருமுறைப் பாடலான 'நெஞ்சறிவுறுத்தலில்' சிவபெருமானின் செம்மேனியழகை வர்ணிக்கும்போது,''தேர்ந்தவர்க்கும் நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்,''
என்று ஆனந்தப் படுகிறார்.

16 July 2014

62. அருணாசல அட்சரமணமாலை

நொந்திடாது உன்றனைத் தந்தெனைக் கொண்டிலை
      அந்தகன் நீ எனக்கு அருணாசலா

நொந்திடாது - சலித்துக் கொள்ளாமல்; கொண்டிலை - கொண்டாய்; அந்தகன் - எமன்

அருள் நகையிட்டு, தாணுவாய் நின்று,என்னை இன்பமயமாக்கி, எண்ணங்கள் அற்றுப் போகச் செய்து,
பதமான கனியாய் விளங்கிய என்னை ஏற்றாய்!

என்னைப் பார்த்து சலித்துக் கொள்ளாமல் உன் அருளால் என்னை ஆட்கொண்டாய். என் ஐம்புலன்களால் ஏற்பட்ட அகந்தைக்கு நீ காலனானாய்.

''குற்றம் செய்தல் எனக்கு இயல்பே, குணமாக்கொள்ளல் உனக்கு இயல்பே'' என்பார் வள்ளலார்.
இறைவனது அருளைப் பெறவும், ஒரு தகுதி வேண்டும். தகுதியுடையவனாகச் செய்வதும் அவனே!
அவனருள் இருந்தால் அவனைப் பெறலாம்!
15 July 2014

61. அருணாசல அட்சரமணமாலை

61. நைந்துஅழி கனியால் நலன்இலை பதத்தின்
            நாடி உட்கொள் நலம் அருணாசலா

அருணாசலனே!
நினைந்து, உணர்ந்து,  அகம்குழைந்து உருகி உன்னைச் சரணடைந்தேன்.
 என் உள்ளக் கனியானது நீஆட்கொள்ள தகுதியுடையதாக இருக்கிறது.
நீ அதனை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!
நைந்து அழுகிப் போன கனி எதற்கும் பயன்படாது.
அதுபோல எனக்கு அருள் செய்ய நீ காலம் தாழ்த்தினால் என் வாழ்வும் வீணாகிவிடும்.
எனவே அருள்செய்வாயாக.
அழுகிய கனியால் பயன் இல்லாதது போல பக்தி நெறியினின்று வழுவி, ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் என் மனம் அடங்குமானால் இந்தப் பிறவியால் பயனில்லை.
'நாடி உட்கொள்' -நீயே என்னைத் தேடி வந்து ஆட்கொள்வாயாக.

14 July 2014

60. அருணாசல அட்சர மணமாலை

நேசமில் எனக்கு உன் ஆசையைக் காட்டிநீ
     மோசம் செய்யாதருள் அருணாசலா

உன்மீது எனக்கு சிறிதும் நேசம் அதாவது அன்பு இல்லாதிருந்தது.என்றாலும்
உன் மீது பக்தி செய்ய வைத்து அருள் செய்தாய்  அருணாசலா.

'ஆசை காட்டி மோசம் செய்தல்' என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே  இருக்கிறது. இது தினசரி வாழ்வில் காணப்படும் ஒன்றே. நாம் விரும்பத ஒன்றைத் தருவதாகக் கூறி பிறகு அதனைத் தர முடியாது என்று சொல்பவரை மோசம் செய்தான் என்கிறோம்.

இங்கு ஶ்ரீ ரமணர் உன்னை அறியாதிருந்த வயதில் உன்னைக் காண்பித்து, ஆசையை உண்டாக்கி
மோசம் செய்யாமல் அருள் செய்தாய் என்றும், மற்றுள பக்தர்களுக்கும் அருள் செய்ய வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.


12 July 2014

58.அருணாசல அட்சர மணமாலை

நூலறி வறியாப்  பேதையன் என்றன்
    மாலறி வறுத்தருள் அருணாசலா

(நூலறிவு - புத்தகங்களைப் படிப்பதால் வரும் அறிவு; மாலறிவு -குழப்ப அறிவு, அரைகுறை அறிவு; மால் - மயக்கம்.)
எந்த நூல்களையும் கற்றறியாத எனக்கு ஆன்ம ஞானத்தை அருளிய அருணாசலனே, உம்மை வணங்குகிறேன்.
ஆன்ம ஞானம் தரக் கூடிய நூல்கள் எதனையும் படித்து அறியாத பேதைமை உடையவன் நான். என் மனதினால் எனக்குள்ள அரை குறை அறிவினை நீக்கியருள் அருணாசலா.( இது பக்தர்களுக்கு)

புத்தகங்களைப் படிப்பதனால் ஆன்ம அறிவு உண்டாவதில்லை. அவை நமக்கு சந்தேகங்களையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. 
ஸ்ரி ராமக்ருஷ்ண பரம ஹம்சர் கல்வி கற்றவர் அல்ல. அவருடைய தூய உள்ளத்திலிருந்து தோன்றிய தெய்விகச் சொற்களைக் கேட்டு இன்புற்றது மானுடம்.

நூல்களைப் படிக்காமலேயே எனக்கு அனைத்தையும் உணரச் செய்த அருட்பெருஞ் சோதியே என்பார் வள்ளலார்.
'ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ் சோதி' - அகவல்

11 July 2014

57. அருணாசல அட்சரமணமாலை

நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
      எண்ணலை இறும் என்ற அருணாசலா

நுண்ணுரு - நுட்பமான உரு, ஆன்ம உணர்வு; விண் - ஆகாசம்;  நண்ணுதல் - ஒன்றுதல்;
இறும்- அற்றுப் போகும்.

நுண்மையான ஆன்ம உணர்வான உன்னை நான் மன ஆகாயத்தில் அடைந்து ஒன்றிட
எண்ணங்களாகிய அலைகள் ஓய்ந்து நான் அமைதி அடைவேன் அருணாசலா.
ஒவ்வொரு மனிதனிடத்தும் நுண்மையான அணு வடிவில் ஆன்ம உணர்வாய் விளங்கும்
அருணாசலன் பிரபஞ்சம் முழுமையும் தாங்கி நிற்கும் ஆகாய வடிவினனாகவும் விளங்குகிறான்.

''விண்உறு விண்ணாய் விண்நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ் சோதி''
உறு விண் அணுக்களாகவும்  அவற்றைத் தாங்கி நிற்கின்ற நிலை விண் அணுக்களாகவும்
பொருந்தி அவற்றை இயக்கும் அருட்பெருஞ் சோதியே.
                                                           (  வள்ளலார், அகவல் -விளக்கம் சேலம் திரு. இரா. குப்புசாமி)

  

10 July 2014

56. அருணாசல அட்சரமணமாலை

நீநானறப்  புலி  நிதங்களி  மயமா
      நின்றிடு  நிலையருள்  அருணாசலா

நீ நானற - நீ நான் அற; புலி - புல்லி(இடை எழுத்து குறைந்தது);களி -இன்பம்.

நீ நான் என்பது மறைந்து போய், இருவரும் ஒன்றாகக் கலந்து தினமும்,  சதாசர்வ காலமும்
சச்சிதானந்தத்தில் நிலைத்து நிற்க அருள் புரிவாய்.9 July 2014

55. அருணாசல அட்சரமணமாலை

நின்னெரி  எரித்தெனை  நீறாக்  கிடுமுன்
                 நின்னருள் மழை பொழி அருணாசலா
கருணைமயமானவன் இறைவன். அவனால் தன் பக்தர்களை எரித்து சாம்பலாக்க முடியுமா?
நம்முடைய மனதில் ஏற்படும் பல்வேறு உணர்வுகளும் நம் உடலின் நாடி நரம்புகளை பாதிக்கின்றன.
ஆன்ம சாதனை புரியும் ஒருவன் சரியான வழிகாட்டும், குருவின் துணை கொண்டே அப்பாதையில் நடக்கமுடியும். இல்லாவிடில் பல பாதிப்புகள் ஏற்படும்.ஆன்ம சாதனையின் உச்சத்தில் உடல் வெம்மையுறும்.

 உன்னை அடைய வேண்டும் என்ற என் தாபத்தால் ஏற்பட்ட உஷ்ணமானது என்னை எரித்து சாம்பலாக்கும் முன் உன் அருள் மழையால் என்னைக் குளிர்விப்பாய் என வேண்டுவதாகச் சொல்கிறது இக்கண்ணி.

நீறு -திருநீறு, விபூதி, வடிவம்


8 July 2014

54. அருணாசல அட்சரமணமாலை

நாணிலை  நாடிட நானாய்  ஒன்றிநீ
   தாணுவா நின்றனை அருணாசலா

குழந்தைகள் ஒளிந்து விளையாடுவார்கள். அந்த விளையாட்டில்  நடுநாயகமாக இருப்பது தாச்சிக் கம்பம்.  அந்தக் கம்பத்தில் சாய்ந்து கொண்டுதான் கண்ணை மூடிக் கொண்டு எண்ணுவார்கள்.
அதைப் போல மனிதர்களுக்குத் தாணுவாக, சாய்ந்து கொள்ளத் தூணாக இருப்பவன் அருணாசலன்!
ஆத்திகனோ, நாத்திகனோ நோய்க்கு மருந்தாய், ஆறுதல் அளிக்கும் நாயகனாய் நிற்பவன்!

அருணாசலனே! என் அகந்தையை விட்டொழித்து, சிறிதும் என் விருப்பத்தைச் சொல்ல வெட்கப்படாமல் உன்னை நாடி நின்றேன். மிகுந்த கருணையுடன் 'நீ'  என்னோடு கலந்து ' நானாகி' உறுதியுடன் நின்றாய். என்ன தவம் செய்தனன் !

நானாய் நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவாய் நின்றனை? எனக்கு நாணம் இல்லை, அருணாசலா.
உனக்கு ''நாணிலை"? நான் நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவாய் நின்றனையே?
இறைவனை நாடி அவனாய் ஒன்றி நிற்போம்!

7 July 2014

53. அருணாசல அட்சரமணமாலை

                                     
நகைக்கிட மிலைநின் நாடிய எனைஅருள்
நகையிட்டுப் பார் நீ அருணாசலா 

நகை - பரிகாசமாக சிரித்தல், ஆபரணம்.

அருணாசலனே! நீ யார்? ஆதியன், சோதியன்,காக்கும் காவலன், காண்பரியப் பேரொளி, தில்லைக் கூத்தன்! நானோ உன் கால் தூசு!  அப்படி இருக்கும்போது உன்னைக் காண வேண்டும், அடையவேண்டும், இரண்டறக் கலக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறேன் என்று என்னைப்
பரிகாசம் பண்ணிச் சிரிக்க இதுவா நேரம்?
என்னைப் பார்த்து நகைக்காமல், எனக்கு உன் அருளாகிய நகையை, சற்று அணிவித்து அழகு பாரேன்.

இறைவனின் அருள்நகையை அணிந்த அருளாளர்கள் அட்சரங்களால் ஆன மணமாலைகளை அவனுக்கு அணிவித்து அழகு பார்த்தனர். வள்ளலாரின் திருவருட்பா மாலை, அருணகிரியின் திருப்புகழ் மாலை, நாயன்மார்களின் தேவார மாலை, ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்த மாலை, ஶ்ரீஅரவிந்தரின் 'சாவித்ரி' மாலை எத்தனை எத்தனை சொல்மாலைகள்! அத்தனை மஹான்களின் பாதகமலங்களுக்கும் வந்தனங்கள்.

6 July 2014

52. அருணாசல அட்சரமணமாலை

தோடமில்  நீஅகத்  தோடொன்றி என்றுஞ்சந்
      தோடம் ஒன்றிட அருள் அருணாசலா

தோடம் என்பது 'தோசம்' -'தோஷம்';அகத்தோடொன்றி - அகத்துடன் இரண்டறக் கலந்து;
சந்தோடம் - சந்தோஷம்.

எந்தக் குற்றமும் அற்றவன் நீ! பல குற்றங்களும் குறையும் உள்ளவன் நான்.
அதனால் எனக்கு உன்னோடு ஒன்றுகின்ற சக்தியில்லை. ஆனால் அந்த உரிமை, சக்தி உனக்கு உண்டு.
நீ என்னோடு ஒன்றினால்  மகிழ்ச்சியானது என்னோடு ஒன்றும்! சதா சர்வ காலமும் நான் ஆனந்தத்தில் திளைத்திருப்பேன்!அருள்வாயாக அருணாசலனே!

5 July 2014

51.அருணாசல அட்சர மணமாலை

தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியான்
நட்டமாவேன் அருள் அருணாசலா

கைமெய் - மெய்கை உண்மையான கரங்கள்; கட்டிடாயெனில் -கட்டாவிட்டால், வேரொடு நீக்காவிட்டால்; நட்டமாவேன் - இப்பிறவிப் பயனை இழப்பேன்

அருள் நிறைந்த நின் திருக்கரங்களால் உண்மையான என் ஆன்மாவாய் விளங்கும் பரசிவத்தோடு, அகந்தையை வேரறுத்து என்னைக் கட்டியணைக்காவிடில், சேராவிடில் இந்தப் பிறவியால் என்ன பயன்?

உருவமற்ற இறைவனுக்கு கரங்கள் ஏது? எப்படி மெய்யைக் கட்டமுடியும்?
சூரிய ஒளியினால் எப்படி நமக்கு வெம்மை கிடைக்கிறது?ஒரு மலரில் உள்ள மென்மையான மணம் இருக்கும் இடத்தை நம்மால் காண முடியுமா? அது போல்தான் இறைவனின்'அருட்கை தொட்டு மெய் கட்டும்'.  காணமுடியாது!
''கருத்து மகிழ்ந்து என் உடலில் கலந்து,உளத்தில் கலந்து, கனிந்து உயிரில்கலந்து, அறிவில் கலந்து'' என்று இறையொளி தன்னோடு கலந்த பேரின்பத்தைப் போற்றுவார் வள்ளல் பெருமானார்.

4 July 2014

50.அருணாசல அட்சரமணமாலை

தைரிய  மோடுமுன்  மெய்யக  நாடயான்
   தட்டழிந்தேன் அருள் அருணாசல

அருணாசலனே,
நான் யார் என்பதை நீயே எனக்குக் காட்டிக் கொடுப்பாய்,
'தானே தானே தத்துவம்,
திரும்பி அகந்தனை அகக் கண்ணால் பார்,
உன்னை ஆன்மவிசாரத்தால் துப்பறிந்து கண்டுபிடி, ' என்றவர்,
 தூய மனம், மொழி உடையாருக்கே தரிசனம் தரும் உன் உண்மையான அகம் தோய வேண்டும் என்று சொன்னவர்,
இறைவனே நீ எத்தனை பெரியவன்? பரிபூரணனான உன்னை அடைய தைரியமோடுதான் வந்தேன்! உன்னை மறைத்திருந்த மாயத் திரையை நீக்கி,
என் அகந்தை அழியச் செய்து,  உன் அருளால் உன்னை அடையச்செய்தாய்.

3 July 2014

49. அருணாசல அட்சர மணமாலை

தேடா துற்றநல் திருவருள் நிதிஅகத்
 தியக்கம் தீர்த்தருள் அருணாசலா

நிதி - செல்வம்.
தேடாது உற்ற - தேடி அலையாமல் எனக்குக் கிடைத்த
திருவருள் நிதி - இறைவனுடைய அருளாகிய செல்வம்
அகத்து இயக்கம் - என் மனதின் எண்ணங்களின் வேகத்தை
தீர்த்தருள் - அடக்கி ஆளுதல்

எங்கும் தேடித் திரியாது தமக்கு இறையருள் ஆகிய செல்வம் கிடைத்ததையும்,
எண்ணங்கள் அடங்கி, மனம் அமைதியுற்று ஆனந்தபரிபூரணத்தில் ஒடுங்கியதையும்
இங்கு எடுத்துச் சொல்கிறார்.

2 July 2014

48. அருணாசல அட்சரமணமாலை

தெய்வமென்று உன்னைச்  சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாசலா


சார்தல் - புகலடைதல், சரணடைதல்.
தெய்வம் நீயே என்று நான் உன்னிடம் புகலடைந்தேன். என் சரணாகதியை ஏற்றுக் கொண்டு என் அகந்தையை அடியோடு ஒழித்து நானாகிய என்னைத் தானாக்கிக் கொண்டாய் அருணாசலா.

''யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ,''  நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ,''
''நான்ஆனான்  தான்ஆனான் நானும்தா  னும்                                                                                              ஆனான்,''  என்று ஆனந்தக் கூத்தாடுகிறார்                                                                                                வள்ளல் பெருமானார்.
                                                                                         

1 July 2014

47. அருணாசல அட்சரமணமாலை

தூய்மன  மொழியர்  தோயுமுன்  மெய்யகந்
     தோயவே  அருள்என்  அருணாசலா

தூய்மையான மனம் உடையவர்களே, தூய இன்சொற்களைப் பேசவல்லவர்.''மனத்துக்கண் மாசிலன் ஆதல்" என்றார் வள்ளுவப் பெருந்தகை.
(தோயுமுன் -தொடுதல் செய், மெய்யகம்- உண்மையான உட்பொருள், ஆன்மா)
தூயமனம் உடையவர்களின் இனிய மொழிகள் உன்னை அலங்கரிக்கின்றன. அத்தகைய உன் ஆன்மாவில் தோய்ந்து ஒன்றுபடும்படி அருள்வாயாக.
பாலில் மோர் சேர்த்தால் இரண்டும் தோய்ந்து தயிராகிறது. அதுபோல என்னை உன் அருட் சக்தியுடன் தோய்த்து, நானே நீயாகும்படி அருள்வாயாக.