17 July 2014

63. அருணாசல அட்சரமணமாலை

நோக்கியே கருதி மெய்தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டருள் அருணாசலா

(நோக்கி - பார்த்தல்; கருதி -எண்ணுதல் செய்; தாக்கு -மோது, எதிர், தீண்டு; பக்குவம் தகுதியுடையதாகச் செய்தல், முதிர்ச்சி;)

அருணாசலனே, நீ உன் அருட் கண்கள் கொண்டு என்னைப் பார்த்தாய்.
கருணையுடன் இவன் நமக்கு உரியவன் எனக் கருதினாய்.
என் உடலினை ஆளும் ஐம்புலன்களாகிய கள்வர்களைத் தாக்கி அழித்தாய்.
உன்னுடைய அருட் சக்தியைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் உடையோனாய் என்னை ஆக்கினாய்.
என்னை உனக்கு அடிமையாக்கி ஆண்டு கொண்டாய்.
ஐயனே உன் கருணையே கருணை!

 சரியாக பக்குவம் செய்யப்படாத உணவினை உண்ண முடியாது! அதுபோல மனப் பக்குவம் அடையாத மானுடர்களால் இறைவனின் அருட் சக்தியை இப் பூத உடலில்  தாங்க முடியாது. அதனால்தான் தகுந்த குருவின் மேற்பார்வையில் யோக வாழ்வை மேற்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

'ஆண்டருள் ' என்ற சொல் 'ஆண்டு அருள் செய்தாய்' எனவும், 'உன் பக்தர்களுக்கு அருள் செய்
 என்ற பொருளிலும் வருதல் காண்க.

'நோக்குதல்' என்ற சொல் திருக்குறள் - குறிப்பு அறிதல் அதிகாரத்தில் 16 முறை வருகிறது.

'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்,' என்ற கம்பனின் வரிகளை அறியாதார் யார்?

வள்ளல் பெருமானோ  மூன்றாம்  திருமுறைப் பாடலான 'நெஞ்சறிவுறுத்தலில்' சிவபெருமானின் செம்மேனியழகை வர்ணிக்கும்போது,''தேர்ந்தவர்க்கும் நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்,''
என்று ஆனந்தப் படுகிறார்.

No comments:

Post a Comment