29 July 2014

75. அருணாசல அட்சரமணமாலை

பெளதிகமாம்  உடல் பற்றற்று நாளுமுன்
    பவிசுகண் டுறவருள் அருணாசலா

 பஞ்ச பூதங்களாகிய  மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனது மானிட உடல். பஞ்சேந்திரியங்களும் நம் உடலுக்கு அவசியமாகின்றன. அதனால் நான் என்பது உடல், உடலின் அழகு, குடிப்பிறப்பு, செல்வம், புகழ், உறவுகள் ஆகியவையால் உண்டாகும் எனது, என்னுடைய என்ற அகங்காரம் ஏற்படுகிறது. எனவே இந்த உடல் மீது நான் கொண்டுள்ள பற்றினை நீக்கி நாள்தோறும் உன்னுடைய செவ்விய திருவருள் இன்பத்தைத் துய்க்க அருள் புரிவாய் அருணாசலா.

உடல் இல்லாமல் 'நான் ஏது' என்ற கேள்வி உண்டாகிறது! இந்த 'நான் யார்' என்ற கேள்விக்கு, பதில் காண முயலும் போது இந்த உடம்பு மட்டுமே 'நான் அல்ல', அதற்கும் மேற்பட்ட ஒன்று என்பது தெளிவாகும்.  இந்த உடலைத் தாண்டி 'தான் யார்' என்பதை அறிவதே இறைவன் மனிதர்க்கு வைத்துள்ள தேர்வாகும்!

கந்தரனுபூதியில் அருணகிரிநாதர்,''விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய்,'' என்றும், ''மெய்வாய் விழிநாசி யொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினை ஒழிவாய், கதிர்வேல் முருகன் கழல் பெற்றுய்வாய்,'' என்கிறார்.
உடல் எடுத்ததன் பயன் இறைவனை அறிதலேயாகும்.
  

No comments:

Post a Comment