11 July 2014

57. அருணாசல அட்சரமணமாலை

நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
      எண்ணலை இறும் என்ற அருணாசலா

நுண்ணுரு - நுட்பமான உரு, ஆன்ம உணர்வு; விண் - ஆகாசம்;  நண்ணுதல் - ஒன்றுதல்;
இறும்- அற்றுப் போகும்.

நுண்மையான ஆன்ம உணர்வான உன்னை நான் மன ஆகாயத்தில் அடைந்து ஒன்றிட
எண்ணங்களாகிய அலைகள் ஓய்ந்து நான் அமைதி அடைவேன் அருணாசலா.
ஒவ்வொரு மனிதனிடத்தும் நுண்மையான அணு வடிவில் ஆன்ம உணர்வாய் விளங்கும்
அருணாசலன் பிரபஞ்சம் முழுமையும் தாங்கி நிற்கும் ஆகாய வடிவினனாகவும் விளங்குகிறான்.

''விண்உறு விண்ணாய் விண்நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ் சோதி''
உறு விண் அணுக்களாகவும்  அவற்றைத் தாங்கி நிற்கின்ற நிலை விண் அணுக்களாகவும்
பொருந்தி அவற்றை இயக்கும் அருட்பெருஞ் சோதியே.
                                                           (  வள்ளலார், அகவல் -விளக்கம் சேலம் திரு. இரா. குப்புசாமி)

  

No comments:

Post a Comment