31 March 2013

திருவருட்பா - பிரார்த்தனைமாலை


போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும்
புவி நடையாம்
சேற்றே விழுந்து தியங்கு கின்றேனைச்
சிறிதும் இனி
ஆற்றேன் எனது அரசே அமுதே என்
அருட்செல்வமே
மேற்றேன் பெருகு பொழில் தணிகாசல
வேலவனே.                  -திருவருட்பிரகாசவள்ளலார்
                                 

பொருள்: என் அரசே, அமுதமே, என் அருளாகிய செல்வமே! தேன் பெருகி வழியும் சோலைகளை உடைய திருத்தணிகை மலை வேலவனே, உலக வாழ்வாம் சேற்றிலே அறிவு மயங்கி வீழ்ந்து உன்னைப் போற்றாதிருந்த  என் குற்றத்தைப் பொறுத்து அருள் செய்ய வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

30 March 2013

திருவருட்பா - பிரார்த்தனை மாலை


அன்னே எனைத்தந்த அப்பா என்றேங்கி

அலறுகின்றேன்

என்னே இவ்வேழைக்கு இரங்காது நீட்டித்து

இருத்தல் எந்தாய்

பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப்

பொருப்பமர்ந்த

மன்னே கலப மயில் மேல் அழகிய

மாமணியே.

பொருள்: என் செல்வமாகிய பொன்னெ,  நற் குணங்களாகிய மலையே, திருத்தணிகைமலையில் கோயில் கொண்டிருப்பவனே, அரசே,தோகைமயில்மீது அழகிய உயர்ந்த ஒளிவீசும் மணியாய் வீற்றிருப்பவனே!உன் தரிசனம் பெற வேண்டி அன்னையே, அப்பா என்று மிகுந்த ஏக்கத்துடன் அலறி அழைக்கின்றேன், அது உன் செவிகளில் விழவில்லையா? இந்த ஏழை மீது   ஏன் இன்னும் இரக்கம் கொள்ளாது இருக்கின்றாய்? விரைவில் வந்து தரிசனம் தருவாயாக!

29 March 2013

திருவருட்பா

பிரார்த்தனை மாலை


கண்  மூன்றுறு செங்கரும்பின் முத்தே
          பதம் கண்டிடுவான்
மண்  மூன்றுலகும் வழுத்தும் பவள
          மணிக் குன்றமே
திண் மூன்று நான்கு புயங்கொண் டொளிர்
          வச்சிர மணியே
வண்மூன்றலர் மலைவாழ் மயில் ஏறிய
           மாணிக்கமே

                      -திருவருட்பிரகாச வள்ளலார்

27 March 2013

ஆறு திருப்பதி தரிசனம்


திருவாவினன்குடி   பங்காள  ரெண்முது    சீரூரைத்

திருவாவினன்குடி   வானார்  பரங்குன்று    சீரலைவாய்

திருவாவினன்குடி   யேரகங்  குன்றுதொ  றாடல்சென்ற

திருவாவினன்குடி   கொண்ட  தண் கார்வரை  செப்புமினே


                                                       திருப்புகழ் - (க - அந்) 230
    

26 March 2013

கந்தரந்தாதி


உண்ணா    முலையுமை  மைந்தா  சரணம்  பரருயிர்சேர்

உண்ணா    முலையுமை  மைந்தா  சரண  மருணைவெற்பாள்

உண்ணா    முலையுமை  மைந்தா  சரணந்  தனமுமொப்பில்

உண்ணா    முலையுமை  மைந்தா  சரணஞ்  சரணுனக்கே

                                                        -திருப்புகழ், அருணகிரிநாதர்


25 March 2013

திருப்புகழ்


வாரணத்தானை அயனை விண்ணோரை மலர்க்கரத்து

வாரணத்தானை மகத்து வென்றோன் மைந்தனைத் துவச

வாரணத்தானைத் துணை நயந்தானை வயலருணை

வாரணத்தானைத் திறை கொண்ட யானையை வாழ்த்துவனே

                                                         -அருணகிரிநாதர்

23 March 2013

அப்பர் தேவாரம்


சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன்

உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்

உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்

உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்

அலந்தேனடி   யேனதி கைக்கெடில

வீரட்டா னத்துறை யம்மானே.

திருச்சிற்றம்பலம்

22 March 2013

கந்தர் சரணப்பத்து

சென்னை கந்த கோட்டம்

அருளா ரமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா வெனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.

                          - வள்ளலார்

திருச்சிற்றம்பலம்

21 March 2013

அப்பர் தேவாரம்

கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானே

வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர்  பாகத் தானே

அடியிணை  பரவ    நாளும் அடியவர்க் கருள்செய் வானே

கொடியணி விழவ தோவாக் கோடிகா வுடைய கோவே


காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானே

நீலமார் கண்டத் தானே நீண்முடி யமரர் கோவே

ஞாலமாம் பெருமை யானே நளிரிளந் திங்கள் சூடுங்

கோலமார் சடையினானே கோடிகா வுடைய கோவே.


திருச்சிற்றம்பலம்

19 March 2013

தேவாரம் - அப்பர்


திருக்கோடிகா

நெற்றிமேற்  கண்ணி  னானே  நீறுமெய்  பூசி னானே
கற்றைப்புன்  சடையி  னானே  கடல்விடம்  பருகி னானே
செற்றவர்  புரங்கள்  மூன்றுஞ்  செவ்வழல் செலுத்தி  னானே
குற்றமில்  குணத்தி  னானே  கோடிகா வுடைய கோவே

திருச்சிற்றம்பலம்

18 March 2013

அற்புதத் திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்


இறைவனே  எவ்வுயிருந்  தோற்றுவிப்பான்  தோற்றி

இறைவனே  ஈண்டிறக்கஞ்  செய்வான் - இறைவனே

எந்தாய் என இரங்கும்   எங்கள்மேல் வெந்துயரம்

வந்தால் அதுமாற்று வான்

திருச்சிற்றம்பலம்

17 March 2013

அற்புதத்திருவந்தாதி - காரைக்காலம்மையார்


ஆளானோம்  அல்லல்  அறிய   முறையிட்டாற்

கேளாதது  என் கொலோ  கேளாமை  - நீளாஆகம்

செம்மையான்  ஆகித்  திருமிடறு மற்றொன்றாம்

எம்மையாட்  கொண்ட  இறை

திருச்சிற்றம்பலம்

16 March 2013

அற்புதத்திருவந்தாதி - காரைக்காலம்மையார்


இடர் களையா ரேனும்  எமக்கிரங்கா ரேனும்

படரும் நெறி பணியாரேனும் - சுடருருவில்

என்பறாக் கோலத் தெரியாடும் எம்மனார்க்கு

அன்பறாது  என்நெஞ் சவர்க்கு

திருச்சிற்றம்பலம் 

14 March 2013

அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்


பிறந்து மொழிபயின்று பின்னெல்லாம் காதல்

சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்பது இடர்


திருச்சிற்றம்பலம்

13 March 2013

தேவாரம் - அப்பர்

திருக்கச்சியேகம்பம்

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே

திருச்சிற்றம்பலம்

12 March 2013

அப்பர் தேவாரம்


திருவாரூர் - பழமொழி.


மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே

உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்

கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலு  மாரூரரைக்

கையினாற் றொழா தொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேனே

 திருச்சிற்றம்பலம்

10 March 2013

சிவத்தியானம் - அகவல்

சிவாயநமவென்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.
திருச்சிற்றம்பலம்

பிரமமே பிரமப் பெருநிலை மிசை யுறும்
பரமமே பரம பதந்தரும்  சிவமே

அவனோடு அவளாய் அதுவாய் அலவாய்
நவமா நிலைமிசை  நண்ணிய சிவமே

எம்பொருளாகி எமக்கு அருள் புரியும்
செம்பொருளாகிய சிவமே சிவமே

ஒருநிலை இதுவே உயர்நிலை எனும் ஒரு
திருநிலை மேவிய சிவமே சிவமே

மெய் வைத்து அழியா வெறு வெளி நடுவுறு
தெய்வப் பதியாம் சிவமே சிவமே

புரைதவிர்த்து எனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே - திருஅருட்பிரகாச வள்ளலார்


9 March 2013

பிரார்த்தனை மடல்


 செங்காடு மேவிய ஆறுமுகவா அமரர் பெருமாளே!

சங்கோதை நாதமொடு கூடி,

வெகு மாயை இருள் வெந்தோட,

மூல அழல் வீச,

உபதேசமது தண்காதில் ஓதி,

இரு பாதமலர் சேர அருள் புரிவாயே.

                             -அருணகிரிநாதர்

                   - திருப்புகழ் இசை வழிபாடு

8 March 2013

திருப்புகழ் - மயில் விருத்தம் - 1


சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
சரணயுக ளமிர்தப்ரபா

சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்

சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வநசரோ தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
ரத்னக் கலாபமயிலே.  ( ரத்னக்கலாப மயிலே  ரத்னக்கலாபமயிலே)  - அருணகிரிநாதர்

7 March 2013

திருப்புகழ் - வேல்வகுப்பு


திருத்தணியில்  உதித்தருளும்  ஒருத்தன்மலை
விருத்தனென  துளத்திலுறை  கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.
                                       
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு  புறத்துமரு  கடுத்திரவு   பகற்றுணையதாகும் - திரு

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர்  சிவத்ததொடை யெனச்சிகையில்  விருப்பமொடு சூடும் - திரு

திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும்  உடைப்படைய  அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் - திரு

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் - திரு

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் -திரு

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே - திரு

திருச்சிற்றம்பலம்                                                   --அருணகிரிநாதர்




திருப்புகழ் - வேல்வகுப்பு


திருத்தணியில்  உதித்தருளும்  ஒருத்தன்மலை
விருத்த னெனதுளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு - மறத்தைநிலை காணும்
                                                                                         - திருத்தணியில்

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை - கழற்குநிக ராகும்
                                                                                          - திருத்தணியில்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை - விதிர்க்கவளைவாகும்
                                                                                             - திருத்தணியில்

திருச்சிற்றம்பலம்                                             - அருணகிரிநாதர்


5 March 2013

திருப்புகழ் - வேல் வகுப்பு

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தனென துளத்திலுறை  கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே

சுரர்க்குமுநி  வரர்க்குமக  பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர்  தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும் - திருத்தணி

சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்ப அலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் -  திருத்தணி

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர் துணை யாகும் - திருத்தணி

திருச்சிற்றம்பலம்

4 March 2013

திருப்புகழ் - வேல்வகுப்பு


திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.

பழுத்தமுது  தமிழ்ப்பலகை யிருக்குமொரு

கவிப்புலவன்  இசைக்குருகி  வரைக்குகையை  யிடித்துவழி காணும்  - திருத்தணியில்

பசித்தலகை  முசித்தழுது முறைப்படுதல்

ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும்  -  திருத்தணியில்

                                                                                                  - அருணகிரிநாதர்

3 March 2013

திருப்புகழ் - வேல் வகுப்பு

தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன தனத்ததன  தனத்ததன தான

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே!

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிகராகும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே!- திருத்தணியில்

பனைக்கைமுக படக்கரட மதத்தவள

கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் - திருத்தணியில் (தொடரும்)


                                                                       -அருணகிரிநாதர்

2 March 2013

அப்பர் தேவாரம் - திருவையாறு

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.


திருச்சிற்றம்பலம்

1 March 2013

திருஅங்கமாலை - தேவாரம்

(தொடர்ச்சி)

நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்.

கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர்.

ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கை யாலாட்டிப் போற்றி யென்னாதவிவ் ஆக்கை யாற்பயனென்

கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்

உற்றா ராருளரோ - உயிர் கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றா ரருளரோ

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா  னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் கிறுமாந் திருப்பன்கொலோ

தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
                                                                                 - அப்பர்

திருச்சிற்றம்பலம்