31 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஎருக்கத்தம்புலியூர்

                                    - நாடியவான்
அம்புலியூர் சோலை அணிவயல்கள் ஓங்கு எருக்கத்
தம்புலியூர் வேத சமரசமே -

வெண்மை நிறம் கொண்ட எருக்கம்பூ சிவபெருமானுக்கு மிகவும் உகந்ததாகும். தலமரம் வெள்ளெருக்கு ஆதலால் எருக்கத்தம்புலியூர்.  வானில் உலாவரும் நிலா(அம்புலி)
இங்குள்ள சோலைகளில் பவனிவருகிறது. வயல்கள் மண்மகள் அணிந்த ஆபரணம் போல் அழகு செய்யும். வேதங்களின் சாரமாகிய சமத்துவத்தை உணர்த்திக்கொண்டு இங்கு சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

இவ்வூர் இராசேந்திரப்பட்டினம் என்று வழங்கப்படுகிறது. வியாக்ரபாதர் தரிசித்த தலம். அவர் தரிசித்த தலங்கள் 'புலியூர்' என்ற பெயருடன் முடிவடையும். இவ்வூர் இறைவியின் பெயர் நீலமலர்க் கண்ணி,
நீலோற்பலாம்பாள்.

திருவருட்பிரகாசவள்ளலார் -  விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

30 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருக்கூடலை யாற்றூர்
                                     - நீங்காது
நீடலை யாற்றூர் நிழல்மணிக்குன்று ஓங்கு திருக்
கூடலை யாற்றூர்க் குணநிதியே -

திருமணிமுத்தாறும்  வெள்ளாறும் ஒன்று சேரும் கூடல்.  இந்தக் கூடலில் அலைகள் ஓயாது முத்தும், மணியுமாகக் கொணர்ந்து குன்று போல் குவித்துள்ளது. இங்கு சிவபெருமான் அடியாருக்கு அருட் செல்வம் வழங்கும் குணக்குன்றாய்  அமர்ந்துள்ளான்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


29 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பெண்ணாகடம்
                                                            -  பூங்குழலார்
வீங்கானை மாடஞ்சேர் விண்ணென்று அகல்கடந்தைத்
தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே -

(தேவகன்னியர், காமதேனு, வெள்ளை யானையாகிய ஐராவதம் - வழிபட்டதால் (பெண்+ ஆ+ கடம்)
பெண்ணாகடம் என்ற பெயர் பெற்றது இவ்வூர்.  தூங்காத ஆனைமாடம் -  படுத்துக் கிடக்கும் பெரிய யானையைப் போன்ற பெரிய மாடங்கள் உள்ளதால் பெண்ணாகடம்). கடந்தை ஊர்ப்பெயர்.

இந்த ஊருக்கு மலர்களைச் சூடிய பெண்கள் வந்தார்கள். பெரிய ஆனைகள் கட்டப்பட்ட மாடங்களைக் கண்டார்கள். ஓ இது தேவர்கள் உலகம் போலும் என்று  வியந்து அங்கிருந்து திரும்பிப் போனார்கள்.   தூங்காத ஆனைகள் என்று இங்குள்ள பெரிய மாடங்களைப் புகழ்கிறார் வள்ளலார். படுத்துக் கிடக்கும்
ஆனைகள் போன்ற மாடங்கள் உடைய இவ்வூரில் சிவபெருமான் சுடர்விட்டு ஒளிரும் தீபமாய் பிரகாசிக்கிறான்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



                                       

28 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

நடுநாட்டுத்தலங்கள் - திருவரத்துறை
                                          - தங்களற்றின்
தீங்கார்  பிறதெய்வத் தீங்குழியில் வீழ்ந்தவரைத் 
தாங்கா அரத்துறையில் தாணுவே -

அளறு என்றால் நரகம். நல்ல நெறிகளைக் காண்பிக்காத தெய்வ வழிபாடு துன்பம் தரும் நரகத்தில் புகச்செய்யும். அவ்வாறு வீழ்ந்தவரை பிற தெய்வங்கள் தாங்கா!. தாணு என்றால் தூண். திருஅரத்துறையில் வீற்றிருக்கும் இறைவனோ தன்னை வழிபடுபவர்களின் துயரங்களைத் தூணெனத் தாங்குகிறான். அருள் செய்கிறான்.

திருவிட்டுறை என்று வழங்கப்படும் இவ்வூர் நிவா என்ற நதிக்கரையில் உள்ளது. சம்பந்தருக்குச் சிவபெருமான் முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் கொடுத்த தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

27 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கருவூர்

                             -- தீண்டரிய
வெங்கருவூர்  வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே -

மனிதனுடைய பிறப்புக்குக் காரணமாக விளங்குவது அவரவர் செய்த வினைப் பயன் என்கின்றனர்.
ஆராய்ச்சிக்குரிய இக்கருத்துக்கு முடிவான முடிவு இன்னும் காணப்படவில்லை. கருப்பை வாசம் கொடுமையானது. இறைவனின் கருணையால் நமக்கு அந்தத் துன்பம் மறைக்கப்படுகிறது. இவ்வாறு கருப்பையில் மீண்டும் அவதியுறா வண்ணம்  புண்ணியம் செய்த பெருந்தகையோர் சூழ்ந்து விளங்கும் இறைவன் கருவூர் ஈசன். அவன் எத்தகையவன்? நவரசங்கள் ததும்பும் பாடல்களுக்கு உரியவன்.
விண்ணப்பக்கலிவெண்பாவின் பாடல்கள் அனைத்திலும் இறைவனை நவரசமே, செழுங்கதிரே, குணநிதியே என்றெல்லாம் சிறப்பிக்கிறார் வள்ளலார்.

இவ்வூர் ஆனிலை என்றும் வழங்கப்படுகிறது. கரூர் என அழைக்கப்படும் இத்தலம் எறிபத்த நாயனார் பிறந்த இடம்.திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் அவதரித்து முக்தியடைந்த தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி.

26 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாண்டிக் கொடுமுடி
                                          - துன்னியருள் 
வேண்டிக் கொடுமுடியாம் மேன்மைபெறு மாதவர்சூழ்
பாண்டிக் கொடுமுடியின் பண்மயமே -

இறைவனை அருள்செய வேண்டுமென்று வேண்டிக் கொண்டு , அதனைப் பெற்று, மேன்மை அடைந்த மிக்க தவமுடையவர் சூழ்ந்து விளங்கும் சிறப்பு மிக்கவன் இசை மயமாய் விளங்கும் கொடுமுடி ஆண்டவன்.

இத்தலம் காவிரியின் தென் கரையில் உள்ளது. காவிரி இங்கு வளைந்து ஓடுவதால் கொடுமுடி. ஈரோட்டிலிருந்து 40 கி.மீ தூரம்.சுந்தரர் நமச்சிவாயத் திருப்பதிகம் பாடியருளிய தலம். 'திரிமூர்த்தித் தலம் '

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


25 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநணா

                                    - துஞ்சலெனும்
இன்னல் அகற்ற இலங்குபவா னிக்கூடல்
என்னு நணாவினிடை இன்னிசையே -

காவிரியாறும் பவானியாறும் கூடும் இடம் பவானிக்கூடல். இதன் வேறு பெயர்கள் திருநணா, பூவாணி.
மரணம் எனும் துன்பத்தை அகற்ற பவானிக் கூடலில் கோயில் கொண்டிருக்கும் இன்பமயமான இறைவனை வணங்குவோம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

24 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

வெஞ்சமாக்கூடல்

                              - தங்குமன
வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும்
வெஞ்சமாக் கூடல் விரிசுடரே -
மனிதனுக்கு முதல் எதிரியாக விளங்குவது அவனுடைய மனம்தான். வள்ளல் பெருமான் மனதைப் பற்றி
பல இடங்களிலும் பாடியுள்ளார். 'தெய்வமணிமாலை'யில் மனத்தை ஒரு சிறுவனாக உருவகிக்கிறார்.
மனமாகிய சிறுவன் என் சொல்லைக் கேட்க மாட்டான், கைக்கு அகப்படவும் மாட்டான். அவனை அடக்க என்னால் முடியாது.நீதான் எனக்குத் துணை செய்ய வேண்டும் என்பார். மிக மிக அழகான பாடல் அது.

வஞ்சம் செய்யும்  மனம் தீய நினைவுகளோடு கூடுகிறது. அந்தக் கூடலுக்கு இடம் தராதவர்கள்
வெஞ்சமாக்கூடலில்  ஒளிமயமாய்க் காட்சியளிக்கும் சிவபெருமானைத் துதிக்கிறார்கள்.
இவ்வூர் வெஞ்சமாங்கூடலூர் என்று வழங்கப்படுகிறது. சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

23 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருகொடிமாடச் செங்குன்றூர்

                                        - செம்மையுடன்
அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச்
செங்குன்றூர் வாழும்சஞ் சீவியே -

கொடிமாடச் செங்குன்றூரில் நெடிது வாழச் செய்யும் சஞ்சீவி மருந்தாய் சிறந்த அழகு குறையாமல் அருள் செய்து வரும் சிவபெருமானை வணங்குகிறேன்.

திருச்செங்கோடு, நாமகிரி  என்று வழங்கப்படும் இத்தலம் சங்கரி துர்க்கம் புகை வண்டி நிலையத்திலிருந்து ஆறு கல் தொலைவில் உள்ளது. அர்த்தநாரித் தலம். 1200 செங்குத்தான படிகளை ஏறினால் மலைஉச்சிக்குச் செல்லலாம். முருகப் பெருமானுக்கு உகந்த தலம். அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

22 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமுருகன் பூண்டி

                             - சான்றவர்கள்
தம்முருகன்  பூணுள் தலம்போல வாழ்கின்ற
எம்முருகன் பூண்டி இருநிதியே -

முருகப் பெருமானைத் துதிக்கும் அன்பர்கள் தங்கள் உள்ளத்தையே அவனுக்குக் கோயில் ஆக்கித்
துதிப்பார்கள். அதே போல திருமுருகன் பூண்டியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை பக்தர்கள்
தம் இதயத்தில் பெரு நிதியாக வைத்து வழிபடுகிறார்கள்.

திருப்பூர் புகைவண்டி நிலையத்துக்கு  வடக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. பிரசித்தி பெற்ற தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

21 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

கொங்குநாடு - அவிநாசி - திருப்புக்கொளியூர்

                                          - நெஞ்சடக்கி
ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர்த்
தோன்றும்அவி நாசிச் சுயம்புவே - 

ஊர் பெயர் திருப்புக்கொளியூர். இறைவன் அவிநாசி லிங்கேஸ்வரர். அவிநாசி என்றால் நாசங்களை நீக்கும் தலம் என்று பொருள். கோயம்புத்தூரிலிருந்து  35 கி.மீ. தொலைவில் உள்ளது.

அவிநாசியப்பனான சுயம்பு மூர்த்தி அருள் செய்யும் தலம் திருப்புக்கொளியூர்.
மனதை அடக்குவது என்பது மிகவும் கடினமானது என்பதை அனைவரும் அறிவோம். புலனடக்கம் உள்ளோராலேயே அது முடியும். நெஞ்சடக்கும் சான்றோர்க்கு அருள் அளிப்பவன், தீய குணங்களை நாசம் செய்பவன் அவிநாசிச் சிவபெருமான்.

திருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

திருவருட்பா - சிவத்தலங்கள்

சேரநாடு - திருஅஞ்சைக்களம்
                                                - வல்வேலை
நஞ்சைக் களத்துவைத்த நாதனெனத் தொண்டர்தொழ
அஞ்சைக் களம்சேர் அருவுருவே -

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது தோன்றியது ஆலகாலவிஷம்.
இந்த விஷத்தைக் கழுத்திலே தாங்கிய தலைவன் எனத் தொண்டர்கள் தொழ
அஞ்சைக்களம் எனும் திருத்தலத்தில் அருவமாகவும் உருவமாகவும் வீற்றிருக்கும்
இறைவனே உம்மை வணங்குகிறேன்.

சேரநாட்டுத் தலம்.ஶ்ரீ வாஞ்சிக்குளம் என வழங்கப்படுகிறது. சுந்தர மூர்த்தி நாயனார்
வெள்ளை யானையின் மீதும், அவருடைய தோழர் சேரமான் பெருமாள் நாயனார்
குதிரையின் மீதும் ஏறிக் கைலாயத்திற்குச் சென்ற தலம் .

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

19 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெல்வேலி

                                                 -பொற்றாம 
நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
நெல்வேலி உண்மை நிலயமே -

செஞ்சாலி - உயர்ந்த நெல்வகை.பொன்+ தாமம் - பொன் மாலை.
தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள திருநெல்வேலி எங்கெங்கு நோக்கினும் உயர்ந்த நெல்விளையும் வயல்களால் சூழப்பெற்றது.  நெற்பயிர் முதிர்ந்து வயல் வரப்புகள்  பொன்னால் கட்டப்பட்ட மாலையைப் போல் காட்சி தருகிறது. இங்கு சத்தியத் திரு உருவமாய்க் காட்சியளிக்கிறார் நெல்லையப்பர்.

பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை உடைய தலம். தம்முடைய நைவேத்யத்திற்காக வேதசர்மா என்னும் பிராமணர் யாசித்துக் கொண்டு வந்து உலர்த்தி வைத்திருந்த நெல்லை வெள்ளம் அடித்துக் கொண்டு போகாது வேலி கட்டிக் காத்து அருளியதால் இத்தலம் திருநெல்வேலி  எனப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி  

                                   

18 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்




திருக்குற்றாலம்


                              - பண்செழிப்பக்
கற்றாலங் குண்மைக் கதிதரும் என்று அற்றவர்சூழ்
குற்றாலத் தன்பர்  குதூகலிப்பே -

 பண்ணிசை சிறப்புறுமாறு திருமுறைப் பாடல்களைக் கற்றால் அது சிவகதியை 
எய்துவிக்கும் என்று பற்று அற்ற பெரியோர் சூழ்ந்திருக்கும் குற்றாலத்து இறைவன் 
அன்பர்களுக்குக் குதூகலத்தை (மிகுந்த மகிழ்ச்சியை) அளிக்கிறான். 
(கற்றால்+ அங்கு+உண்மைக்+கதிதரும்) 

இறைவனுக்குரிய  பஞ்ச சபைகளில் இத்தலம் சித்திர சபை. இது சங்கு வடிவில் அமைந்த திருக்கோயில். மகாமேரு உள்ளது. தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் நடுவில் உள்ளது.

இறைவன் - குறும்பலாநாதர்
இறைவி - குழல்வாய் மொழியம்மை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா,205
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி  

17 December 2013

திருவருட்பா -சிவத்தலங்கள்

திருச்சுழியல்

                                                   - தீவணத்தில்
கண்சுழியல் என்று கருணையளித் தென்னுளம்சேர்
தண்சுழியல் வாழ்சீவ சாட்சியே -

நெருப்பின் பொன் வண்ணமேனியுடையவன் இறைவன். அதாவது ஒளிமயமாய் இருப்பவன். அவன் திருமேனியைக் கண்களைச் சுழற்றாமல், கண்ணிமைக்காமல் காண முடியாது! அதனால் கருணையோடு, நான் உன் அகக் கண்களால் காணுமாறு தோற்றமளிக்கிறேன் என வள்ளல் பெருமானின்  உள்ளத்தில் சேர்ந்தானாம் இறைவன்.
உள்ளத்தில் சேர்ந்தவனை எப்படிக் காண்பது? கண்களுக்குத் தெரியாமல் இறைவன் ஜீவாத்மாவுக்கு சாட்சியாய் இருக்கிறானாம்! ஜீவன் - உயிர். ஆத்மா - சாட்சி.

ஶ்ரீ ரமணபகவான் அவதரித்த இவ்வூர் திருச்சுழி, அருப்புக் கோட்டையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது.பார்வதி தேவியார் தம்மைச் சிவபெருமான் மணம் புரியும்படி வழிபட்ட தலம்.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா, 204.
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

16 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பூவணம்
                                 - மோனருளே
பூவணமும் பூமணமும் போல அமர்ந்ததிருப்
பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே -

தங்கள் யோக சக்தியால் மோன நிலையை அடைவர் ஞானிகள். அவர்கள் தங்கள் இதயத்தில் இறைவனை அழகிய பூவின் நிறமும், மணமும் இரண்டறக் கலந்து விளங்குவது போலக் காண்கிறார்கள். அது போல திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் அடியார்கள் இதயத்தில் ஆனந்தம் தரும் பொக்கிஷமாய் இரண்டறக் கலந்து விளங்குகிறான் சிவபெருமான்.

இவ்வூர் வைகையின் தென்கரையில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருக்கும்
வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியதால் மூவரும் இத்தலத்தை மிதிக்காது மறுகரையில் இருந்தே இறைவனை வணங்கினராம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா, 203.
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


15 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கானப்பேர்

                               - சேடான
வானப்பேர் ஆற்றை மதியை முடிசூடும்
கானப்பேர் ஆனந்தக் காளையே -

(சேடு - பெருமை) பகீரதன் தவத்தால் வானத்திலிருந்து தோன்றிய கங்கையையும், திங்களையும்
முடியில் சூடியவனாக ஆனந்த மயமாய், திருக்கானப்பேர் என்னும் பதியில் இறைவன் காட்சி அளிக்கிறான். அவனை வாழ்த்தி வணங்குவோம்.

காளையார் கோயில் என வழங்கப்படுகிறது. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு காளைவடிவில் தோன்றி
'நம்முடைய வாசஸ்தலம் திருக்கானப் பேர்,' என்று சொல்லி அழைத்து தரிசனம் கொடுத்த தலம்.
மருது பாண்டியன் கட்டிய பெரிய ராஜ கோபுரம் சோமேசர் சந்நிதிக்கு எதிரில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

14 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாடானை
                                            -  பூமீது
நீடானை சூழும் நிலமன்னர் வாழ்த்துதிரு
வாடானை மேவுகரு ணாகரமே -

கருணையே வடிவான திருவாடனை என்னும் பதியில் எழுந்தருளியுள்ள இறைவனை யார்
வாழ்த்துகிறார்கள்? இப்பூவுலகில் பெரிய யானைப் படை சூழ வரும் மண்ணக வேந்தர்கள்
ஈசனை வாழ்த்தி வணங்க அவன் அருள் செய்கிறான்!

திருஆடானை என்று வழங்கப்படும் இத்தலம் தேவகோட்டையிலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது. துர்வாச மகரிஷி வந்தபோது பிருகு முனிவர் அவருக்கு மரியாதை செய்யாமல் இருந்ததால்
துர்வாசர் அவரை ஆட்டுத் தலையும், யானையின் உடலும் உள்ள உரு எய்தும்படிச் சபித்தார்.
(ஆடு + ஆனை =ஆடானை) சாபத்தோடு பிருகு முனிவர் வழிபட்டதால் இத்தலம் ஆடானை!
இறைவன் ஆடானை நாதர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

13 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

இராமேசுவரம்

                                     - சித்தாய்ந்து
நாம் ஈச ராகும் நலந்தருமென்று உம்பர் தொழும்
ராமீசம் வாழ்சீவ ரத்தினமே -

தேவர்கள் இராமேசுவரத்து ஒப்புயர்வற்ற ரத்தினமான சிவனைத் தொழுகிறார்கள்.
எதற்காக? தாங்களே இறைவனாகும் தகுதியை அவன் தருவான் என்ற நம்பிக்கை!
ராமீசம் -இராமேசுவரம். இது ஒரு தீவு. இராமன் பூசித்த காரணத்தால் இராமேசுரம்
எனப்படுகிறது.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் இது ஒன்று.கோயில் 865 அடி நீளம் உடையது.மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோயில்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

12 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பரங்குன்றம்
                                 -மாப்புலவர்
ஞானபரங் குன்றம்என நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
வானபரங் குன்றிலின்பா னந்தமே -

மிகச் சிறந்த  புலவர்கள் கூடி, ' ஞானமயமான பரங்குன்றம் என்று  மகிழ்ச்சியோடு
போற்றும்' திருப்பரங்குன்றம்! இம்மலையில் இன்பம்தரும் ஆனந்த வடிவினனாகி
அருள் செய்கிறான் இறைவன். இங்கு இறைவன் பெயர் பரங்கிரிநாதர். இறைவி
ஆவுடைநாயகி.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
ஆலவாய் அழகனை,'சொக்கழகானந்தமே' என்றும், ஆப்பனூர் சிவனை,'சதானந்தமே,'
என்றும் போற்றியவர் பரங்குன்றத்து இறைவனை 'இன்ப ஆனந்தமே,' எனக் கூறி
மகிழ்கிறார்.
இன்பம்- இனிமை தருவது!(sweetness)
ஆனந்தம் - பேரின்பம், பெரு மகிழ்ச்சி!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புத்தூர்
                                      - முற்றுகதி
இத்தூரம் அன்றி இனித்தூரம் இல்லைஎனப்
புத்தூர் வருமடியார் பூரிப்பே -

மிகுந்த மகிழ்ச்சியினால் வரும் மன நிறைவுதான் பூரிப்பு! இந்த பூரிப்பைத் தருபவன் திருப்புத்தூர் இறைவன். யாருக்கு இந்த நிறைவைக் கொடுக்கிறான்? தன்னை நாடி வரும் அடியார்களுக்கு!
எதற்காகக் கொடுக்கிறான்? 'உன்னை நாடி, வந்து விட்ட எங்களுக்கு இனி பிறவாத மோட்சகதி கிடைக்க வெகுதூரம் இல்லை,' என்று நம்பிக்கையோடு வருவதால் கொடுக்கிறான்.
இறைவனை நாடி வணங்குவோருக்குத் துயரம் இல்லையன்றோ?

இவ்வூர் புதுக்கோட்டை மதுரை சாலையில் உல்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

11 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கொடுங்குன்றம்
                                     - பூமீதில்
நற்றவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி
உற்ற கொடுங் குன்றத்தெம் ஊதியமே -

இப்பூவுலகில் நல்ல தவம் செய்தவரும், நவ சித்தர்களும் வாழ்த்தி வாழ்கின்ற திருக் கொடுங்குன்றத்து கோயில் கொண்டுள்ள இறைவனே உம்மை வாழ்த்தி வணங்குகிறேன்.

பிரான் மலை என வழங்கும் இத்தலம் மதுரை மாவட்டத்துத் திருப்புத்தூருக்கு வடமேற்கில் உள்ளது, வேள் பாரியின் பறம்பு நாடு இதுவே என்பர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

10 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேடகம்
                                   - வானவர்கோன்
தேமே டகத்தனோடு சீதரனும் வாழ்த்தும்சீர்
ஆமேட கத்தறிவா னந்தமே -

வானவர் தலைவனான இந்திரனும், ஆட்டு வாகனத்துக்கு உரியவனான முருகப் பெருமானும்,
சீதரனான திருமாலும் வாழ்த்தும் சிறப்பு மிக்க திருவேடகம் என்னும் ஊரில் அறிவானந்த மயமாய் வீற்றிருக்கும் இறைவனே உம்மை வணங்குகிறேன் என்றவாறு.

இவ்வூர் வைகைக் கரையில் உள்ளது. சம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டபோது ,''வாழ்க அந்தணர்,'
என்ற பதிக ஏட்டை வைகையில் இட அது நீரை எதிர்த்துச் சென்றது. பின்னர் 'வன்னியும் மத்தமும்' என்ற பதிகம் பாடியதும் அந்த ஏடு இத்தலத்தில் ஒதுங்கி நின்றதால் திரு ஏடகம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

9 December 2013

திருப்பரங்குன்றம் -முருகன் பாடல்



திருப்பரங்குன்றம்
                                 -மாப்புலவர்
ஞானபரங் குன்றம்என நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
வானபரங் குன்றிலின்பா னந்தமே -

மிகச் சிறந்த  புலவர்கள் கூடி, ' ஞானமயமான பரங்குன்றம் என்று  மகிழ்ச்சியோடு
போற்றும்' திருப்பரங்குன்றம்! இம்மலைமேல் இன்பம்தரும் ஆனந்த வடிவினனாகி
அருள் செய்கிறான் இறைவன். இங்கு இறைவன் பெயர் பரங்கிரிநாதர். இறைவி
ஆவுடைநாயகி.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
ஆலவாய் அழகனை,'சொக்கழகானந்தமே' என்றும், ஆப்பனூர் சிவனை,'சதானந்தமே,'
என்றும் போற்றியவர் பரங்குன்றத்து இறைவனை 'இன்ப ஆனந்தமே,' எனக் கூறி
மகிழ்கிறார்.
இன்பம்- இனிமை தருவது!(sweetness)
ஆனந்தம் - பேரின்பம், பெரு மகிழ்ச்சி!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



8 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஆப்பனூர்

                                 - சீலர்தமைக்
காப்பனூர் இல்லாக் கருணையால் என்றுபுகும்
ஆப்பனூர் மேவுசதா னந்தமே -

நல்ல ஒழுக்கம் உடையவர்கள் கருணை மிகுதியால் தங்களைத் துன்பங்களிலிருந்து காப்பாற்றுவான் என்று திருஆப்பனூர் சிவனிடம் தஞ்சமடைவார்கள். ஆப்பனூர் சிவன் எத்தகையவன்? எப்போதும்
நீங்குதல் இல்லாத ஆனந்தமயமாய் இருப்பவன்! அவனுடைய அன்பர்களும் ஆனந்தமாக இருப்பார்கள். இக்கோயில் திருவாப்புடையார் கோயில் என்ற பெயரில் மதுரை நகரின் வைகை வடகரையில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


7 December 2013

மந்திரமாவது நீறு




திருஆலவாய் - மதுரை

                                   - ஓதுகின்றோர்
பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை
ஆலவாய் சொக்கழகா னந்தமே -

மதுரைமாநகரில் சிவபெருமான் சொக்கலிங்கனாய், சொக்க வைக்கும் அழகனாய், ஆனந்தமாய்
அருள் செய்கிறான். ஞானநூல்களை ஓதுபவரிடம் கருணை கொண்டு ஆதரிக்கும் பரையாகிய
மீனாட்சியம்மையோடு வாழும் ஆலவாய் அழகனை வணங்குவோம்.
பரை - உமையம்மை

மதுரை  அன்னை மீனாட்சியம்மை சமேதர சோமசுந்தரப் பெருமாள் திருக்கோயில் புகழ் பெற்ற கோயிலாகும்.திருஞானசம்பந்தர் சமண சமயத்தைத் தழுவியிருந்த கூன் பாண்டியனின் சுர நோயை
'மந்திரமாவது நீறு' என்ற திருநீற்றுப் பதிகம் பாடித் தீர்த்தருளினார்.
பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

6 December 2013

ஈழ நாடு

ஈழ நாடு - திருக்கோணமலை / திருக்கேதீச்சரம்

                                           - நீடுலகில்
நாட்டும் புகழீழ நாட்டில் பவ இருளை
வாட்டும் திருக்கோண மாமலையாய்  -வேட்டுலகில்
மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக்
கேதீச் சரத்தில் கிளர்கின்றோய் -

பெரிய இந்த உலகில் நிலையான புகழ் உடைய ஊர் ஈழநாட்டில் உள்ள திருக்கோணமாமலை.
இங்கு பிறவிப் பிணிக்குக் காரணமான அறியாமை இருளை நீக்குபவனாக  இறைவன் கோயில் 
கொண்டுள்ளான்.
முன்னோர்கள் இவ்வுலகில் மிகப் பழமையான சிவன் கோயில் என்று கூறி வணங்கும்  பெருமையுடைத்து  திருக்கேதீச்சரம் ஆகும். இவ்வூர் இலங்கையில் தலைமன்னார் என்ற புகை வண்டி நிலையத்துக்குக் கிழக்கில் 7 கி.மீ. தொலைவில் பாலாவிக்கரையில் மா தோட்டம் என்ற ஊரில்
உள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

4 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திரு அகத்தியான் பள்ளி, திருக்கோடிக் குழகர்

                                       - நாடுமெனை
நின் அகத்தி யான்பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட
தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே -தொன்னெறியோர்
நாடிக் குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற
கோடிக் குழகர் அருள் கோலமே -

என்னை நாடி வந்த,  'நின் அகத்தில் யான் பள்ளி கொண்டேன்' என்று ஆட்கொண்டவன்
அகத்தியான் பள்ளியில் கோயில் கொண்டுள்ள செம்பொன்னாய் ஒளிவீசும் திருமேனிச் சிவன்.
தொன்மையான நல்ல நெறிகளைப் பின்பற்றும் சான்றோர் இறைவனை நாடி,''குழகனே நலம் அருள்''
என வேண்டி வழிபட அவர்களுக்கு அருட் கோலத்துடன் காட்சிதரும் குழகன் சிவன்.
(குழகன் -இளைஞன், அழகன், முருகக் கடவுள்)
அகத்தியான் பள்ளியில் அகத்தியர் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண தவம் செய்தார்.
கோடிக்கரையில் உள்ள இறைவர் ஆதலின் 'கோடிக்குழகர்.'
இவ்விரு கோயில்களும் அருகருகே உள்ளன.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

3 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமறைக்காடு ( வேதாரண்யம்)

                                                        - நேயமுணத்
தேடெலியை மூவுலகும் தேர்ந்துதொழச் செய்தருளும்
ஈடில்மறைக் காட்டில் என்தன் எய்ப்பில் வைப்பே -

இந்த ஆலயத்துத் தீபநெய்யினை ஒரு எலி உண்ணும் பொழுது அச்சுடர் மூக்கில் பட்டது.
அதனால் தீபம் பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. தீபம் மங்குகிற நேரத்தில் எலி இப்படிச்
செய்ததால்  மறுபிறப்பில் மாவலிச் சக்கரவர்த்தியாய்ப் பிறந்தது. இது நடந்த இடம் திருமறைக்காடு.

விரும்பிய நெய்யை உண்ண வந்த எலியை மூவுலகும் தொழும்படியான சக்கரவர்த்தியாய்ப்
பிறப்பித்த  இறைவன் எத்தகையவன்? வறுமையில் கிடைத்த செல்வம் போல் அன்பர்களுக்கு
அருட்செல்வம் அளித்து மகிழ்விப்பவன்.

மறைகள் வழிபட்டு மூடிவைத்த  கோயில் திருக்கதவுகளை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும்
திறக்கவும், மூடவும் பாடிய வரலாற்றுச் சிறப்புடையது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

2 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாய்மூர்
                                  - நீளுலகம்
காய்மூர்க்க ரேனும் கருதிற் கதிகொடுக்கும்
வாய்மூர்க்கு அமைந்த மறைக்கொழுந்தே -

துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பது பழமொழி! இவ்வுலக மக்கள் மூர்க்கர்களை வெறுக்கிறார்கள். இந்த மூர்க்கர்கள்  மனதில் உண்மையுடன் இறைவனை நினைப்பரேயானால்
அவர்களுக்கு நற்கதி கிடைக்குமா?  திருவாய்மூரில் மறைகளாலும் போற்றிப் புகழப்படும் சிவனை
வழிபட்டால் மூர்க்கருக்கும் நற்கதி கிடைக்கும் என்கிறார் வள்ளல் பெருமானார்.

இவ்வூர் திருக்குவளைக்குத் தென்கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலி வெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

1 December 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கோளிலி
                                  - நெல்சுமக்க
ஆளிலைஎன்று ஆரூர னார்துதிக்கத் தந்தருளும் 
கோளிலியின் அன்பர்குலம் கொள்ளுவப்பே -

குண்டையூரில்  தாம்பெற்ற  நெல்லைச் சுமக்க ஆள் இல்லை என்று நம்பியாரூரர் திருக்கோளிலிப் பெருமானைத்  துதித்தார்.
'நீள நினைந்தடி யேன்உமை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே
கோளிலி யெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை யெம்பெருமா னவையட்டித் தரப்பணியே'

சிவபெருமானும் பூத கணங்களைக் கொண்டு அந்த நெல்லைத் திருவாரூர் கொண்டு சேர்த்தார்.
அதனால் கோளிலிப் பெருமானை அன்பர் கூட்டம் உவகையுடன் வழிபட்டு மகிழ்கிறது.
திருக்குவளை என வழங்கப்படும் இத்தலம் திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நவக்கிரகங்களுக்கு உண்டான குற்றங்களை நீக்கி அருளியதால் கோளிலி என்று பெயர் வந்தது. (கோள்- கிரகம்)
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி