30 June 2014

46. அருணாசல அட்சரமணமாலை

துப்பறிவுஇல்லா இப்பிறப்பு என்பயன்
ஒப்பிட வாயேன் அருணாசலா

துப்பறிவு - துப்பு- உளவு செய்யும் அறிவு, இரகசியமாக செய்யப்படும் சோதனை.
ஆராயும் அறிவு இல்லாத இப்பிறப்பால் என்ன பயன்?என் பிறப்பை நான் எதனோடு
ஒப்பிட்டுப் பார்க்க இயலும்?ஒப்பிட சக்தியற்றவன் நான். நீயே விரைந்து வந்து ஒப்பிட்டுப் பார்!

பிறப்பைப் பற்றிய சோதனையா? அதுவும் துப்புத் துலக்க வேண்டுமா? அது என்னவோ?
இன்பமோ துன்பமோ ஒருவன் எப்போதும் அமைதியும் ஆனந்தமும் உடையவனாக
இருக்க வேண்டுமென்றால் தன்னைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். தான் யார் என்ற
ஆன்ம விசாரம் செய்து, 'நான்' என்பது இந்த உடலா, மனமா, உயிரா அல்லது வேறு ஏதாவதா?
என்ற ஆராய்ச்சியே 'துப்பறிவு'. தன்னைத்தான் அறியாவிட்டால் இப்பிறவியால் ஒரு பயனும் இல்லை.என்னை அறிந்து கொள்ள அருள் செய்வாய் அருணாசலா!

29 June 2014

45. அருணாசல அட்சரமணமாலை

தீரமில் அகத்தில் தேடி உந்தனை யான்
   திரும்ப உற்றேன் அருள் அருணாசலா

தானாக நம் அகத்திலே ஒளிரும் ஆன்மப் பொருள் எல்லையற்றது. அது நம்முடனே எப்போதும் இருப்பினும் நாம் அதனை உணர்வதில்லை.
எல்லையற்ற பரம்பொருளாம் உந்தனை என் அகத்திலே தேடி உன் அருளாலே யான் திரும்பவும் அடைந்தேன். அருணாசலனே உனக்கு நமஸ்காரம்.

28 June 2014

44.அருணாசல அட்சர மணமாலை

திரும்பி அகந்தனைத் தினம்அகக் கண்காண்
   தெரியும் என்றனைஎன் அருணாசலா

'தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய்,' என்றார் முந்தைய கண்ணியில்!
அருணாசலர் பதில் சொல்கிறார்;
உனக்குள்ளே மனதைத் திருப்பி உன் உள்முகக் கண்ணால் பார்! தெரியும்!
திரும்பி - உடலைத் திருப்புதல் அல்ல.
அகம்- உள்ளே! உனக்கு உள்ளே, எல்லா எண்ணங்களையும் ஒதுக்கிவிட்டு, அமைதியாய் கவனி

 உலக விஷயங்களைத் தள்ளிவைத்துவிட்டு, உனக்குள்ளே உன்னைத் தேடு!அகக் கண்காண் தெரியும் - தேடியது கிடைக்கும். இதனை உள்ளுணர்வால் உணரமுடியுமே அல்லாது வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

''முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தை சொல்லென்றார் சொல்லுமா றெங்கனே''
                                                              - திருமந்திரம்27 June 2014

43.அருணாசல அட்சர மணமாலை

தானே தானே தத்துவம்  இதனைத்
தானே காட்டுவாய் அருணாசலா

'நான்' என்பது தன்மை ஒருமைப் பெயர்.
'தான்' என்பது படர்க்கை ஒருமைப் பெயர்.

நீ யார்? நான், எனக்கு ஒரு உருவம், பெயர் என்று பல சுட்டுதல்கள் உள்ளன. தான் என்பது என்ன?
அட, தானே எல்லாம் நடக்கும் என்று விட்டுவிட்டேன், என்கிறோம். அதாவது என்னைச் சாராமல், தனித்து நின்று, இயங்காமல் இயங்கும் 'அது' தான் 'தான்'.
''அது என்ற சொல் தத்வமஸி என்ற சாமவேத வாக்கியத்தில் வரும் தத் என்ற பதமாகும். தத்-அது; த்வம் -நீ; அஸி- ஆகின்றாய். இது ஆசாரியன் சீடனுக்கு உபதேசிப்பது.'' கந்தரநுபூதி, க்ருபானந்த வாரியார்.

அதுவாக நீயே ஆகின்றாய்! ''தானே தானே தத்துவம்'' இதனை என்னுள் தானாக நிற்கும் நீயே காட்டுவாய் அருணாசலா.

26 June 2014

42. அருணாசல அட்சர மணமாலை

தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய்
   தத்துவம் இது என் அருணாசலா


தத்துவம்: உண்மை, மெய்ப்பொருள், பரமாத்மா
தத்: அது, த்வம் - நீ,
அத்தன்: கடவுள், மூத்தோன்
சாதாரணமாக இறைவனப் பற்றிய உண்மைகளை அறிய வேண்டுமானால், அனைத்தையும் துறந்து குருவை அடைந்து, மந்திர உபதேசங்களைப் பெற்று, பன்னெடுங்காலம் சாதனைகள் புரிந்துதான் அறிய முடியும் என்கின்றனர்.
ஆனால் 'அதுவே நீயாகிறாய்' என்ற தத்துவத்தை அறியாமலே இறைவனை அடையச் செய்தாய், இது என்ன புதிய தத்துவம் சொல் என்னுடைய அருணாசலனே!
இது- அருகாமையில் இருப்பதைக் குறிக்கும். இது, தானே அவனாகி நிற்பது.
ஆன்ம அனுபவம் நேரடியான அனுபவம். தெரிந்தது 'இது'. தெரியாதது 'அது'.
தெரியாத 'அது',உன்னிடமே இருக்கும் 'இது'தான்.
தெரியாது என்று நீ நினைக்கின்ற இறைவன் உன்னிடத்திலேயே அருகாமையில் 'தானாக' விளங்குகிறான்.

பல தத்துவங்களைப் பயின்றாலும் இறைவனை அடைய முடியாது. ஆன்ம விசாரத்தால்தான் அறிய முடியும்.
25 June 2014

41. அருணாசல அட்சர மணமாலை

ஞிமிறுபோல் நீயும் மலர்ந்திலை என்றே
   நேர்நின்றனை என் அருணாசலா


ஞிமிறு - வண்டு;
வண்டு தாமரை மலரை நோக்கி வருகிறது. தாமரையோ மலரவில்லை. மலர்ந்தால் தேன் அருந்தலாம்.எனவே மலரைச் சுற்றிச்சுற்றி வருகிறது.

''நீயும் மலர்ந்திலை என்றே நேர் நின்றனை"
என்னுடைய ஆன்மமலர் இன்னும் மலரவில்லை என்று நீயும் வண்டைப் போல் என்னுடைய அகந்தை நீங்கி விழிப்புணர்வு வருவதற்காக காத்திருக்கின்றாய்.

உன்னாலன்றி யாரால் என் இதயத்தை மலர்விக்கமுடியும்? உன் அருளாகிய சூரிய ஒளி என் அகந்தையை நீக்கட்டும். ஆன்ம ஒளி பரவச்செய்யட்டும்.

24 June 2014

40.அருணாசல அட்சர மணமாலை

ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வற
  ஞானம் தெரித்து அருள் அருணாசலா

உன்மேல் ஆசை, ஞானம் இல்லை, தளர்வுற்றேன்!
அருள் கூர்ந்து  ஞானம் கொடுப்பாய்!

இறைவனே உன்னைக் காண வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும், ஆனந்தத்தில் திளைக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை. எப்படி என்ற அறிவு எனக்கு இல்லை!எடுத்துச் சொல்லுவாரும்  இல்லை.அதனால் நான் மனம் நொந்தேன், தளர்வடைந்தேன்.
என் தளர்ச்சி நீங்குமாறு எனக்கு அருள் கூர்ந்து                                                                                         ஆன்ம ஞானத்தை கொடுத்து அருள்வாயாக.23 June 2014

39. அருணாசல அட்சர மணமாலை

ஞமலியின் கேடா(ம்) நானென் உறுதியால்
 நாடி நின்னுறுவேன் அருணாசலா

ஞமலி - நாய்.
மாணிக்க வாசகர்  சிவபுராணத்தில்,
'' நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத்
      தாயிற் சிறந்த தயா வானதத்துவனே'' என ஈசனை வணங்குகிறார்.

வள்ளல் பெருமானோ,''நாயினுங் கடையேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ் சோதி,'' என அகவலில் பரம்பொருளைப் போற்றுகிறார்.

'ஞ'கர மலர் என்ன சொல்கிறது?
அறிவில் நாயினும் கேடானவன் நான்! எப்படி?
நாய் மோப்ப சக்தி ஒன்றையே  கொண்டு மனிதர்களையும், பொருட்களையும் கண்டுபிடிக்கிறது.

ஆனால் மனிதனோ ஐம்புலன்கள் எல்லா பக்கங்களிலும் சிதறிக் கிடப்பதால் ஒருமுகப்பட்டவன்
இல்லாதவன் ஆகிறான்.  எனவே தன்னைத்தான் அறிய முடியாதவனாய் இருக்கிறான். எனவே "ஞமலியின் கேடாம் நான்'' என்றார்.

ஆனாலும் உன்னை அடைய வேண்டும் என்ற என் மன உறுதியால், வைராக்யத்தால் பெருமுயற்சி செய்தாகிலும் உன் அருள் கிடைக்கப் பெறுவேன்.
 ஶ்ரீ ரமணர் ஆன்மானுபவம் பெற்றவர். ஆயினும் தன் அன்பர்களுக்கு உறுதியுடன்  வைராக்யத்துடன் நடக்க வேண்டிய ஆன்ம விசாரப் பாதையைக் காட்டுகிறார்.
என்னுடைய முயற்சி, உன்னுடைய அருள் இரண்டும் சேர்ந்தால் உன்னை 'உறுவேன்'. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி'( சிவபுராணம்)அவன் தாளை அவன் அருள் இருந்தால்தான் வணங்க முடியும்.  

22 June 2014

38. அருணாசல அட்சர மணமாலை

செளரியம் காட்டினை சழக்கற்றது என்றே
 சலியாது இருந்தாய் அருணாசலா

செளரியம் - வீரம்; சழக்கு - குற்றம், தளர்ச்சி; சலியாது - அசையாது.

சூரிய ஒளிக் கிரணங்கள் இருளகற்றுவது போல அறியாமையாகிய இருளை நீக்குபவன் செம்மலையாகிய அருணாசலன். தன்னைக் காண்பவர்க்கு காண்பவரின் மன நிலைக்கேற்றவாறு
அருள் செய்பவன்.
அருணாசலன் தன் வீரத்தைக் காட்டினன்! எப்படி? என் அறியாமை இருளகற்றி, அகந்தையை நீக்கினான். அதனால் என் சழக்கற்றது. தளர்ச்சி நீங்கி நான் உயிர்த்தெழுந்தேன். ஆன்ம ஞானம் பெற்றேன். அதுதான் வேலை முடிந்தது என்று  மீண்டும் அசைதல் இன்றி நீ அமைதியாய் இருக்கிறாய்.
நீ வீரம் காட்டி எனக்கு அருள் செய்யாவிட்டால், எனக்குத் துணையாகாவிட்டால் நான் என்ன செய்வேன்? எனவே அருள் புரிவாயாக.
21 June 2014

37. அருணாசல அட்சர மணமாலை

சோம்பியாய்ச் சும்மா சுகமுண்டு உறங்கிடின்
    சொல் வேறு என் கதி அருணாசலா

சுகக்கடல் பொங்க சொல்லும் உணர்வும் அடங்க சும்மாஇருக்க வைத்தாய்; சொல்லற சும்மா ஒன்றும் செய்யாமல்  சச்சிதானந்தத்தை அனுபவிக்கிறேன்.  இதைவிட வேறு என்ன  நற்கதி எனக்குக் கிடைக்கப் போகிறது?  சொல்வாய் அருணாசலா!

ஆண்டவனின் அருட்பார்வையால் உயர் நிலை அடைந்தவர்களை சாதாரணமனிதர்கள் புரிந்து கொள்வதில்லை! அதையே இங்கு பகவான் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

வேளா வேளைக்குச் சாப்பிடுபவனுக்கு நல்ல  தூக்கம் வரும். உண்ட மயக்கத்தில் உறங்குவான்! அவனை சோம்பேறி என்கிறோம்.

ஞானிகளோ ஆன்ம ஞானமாகிய சுகத்தை உண்கிறார்கள். ஞானத்திற்கு எல்லை மெளனம். பேசா அனுபூதி கிடைத்தவர்க்கே  சுகம் கிடைக்கும். அதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் ஶ்ரீரமணர்.
அருணாசலத் தந்தை ரமண மகனுக்கு மெளன உபதேசம் செய்தார். அருணகிரியாருக்கு ஆறுமுகன், குருவாய் உபதேசம் செய்தார்.

சொன்ன கிரெளஞ்ச கிரியூ  டுருவத் தொளைத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லாமொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
                                                                     - கந்தரலங்காரம், பாடல் 19.
கிரவுஞ்ச மலையை வேலால் துளைத்தவனே! கடம்ப மலர் மாலை அணிந்தவனே! மெளனத்தை உற்று
உன்னை உணர்ந்து, ஐம்புலன்களும் அடங்கிய மேல் நிலையை அடைந்து,என்னையே மறந்துவிட்டேன்! இவ்வுடலின் நினைவும் அற்றேன்.

எத்தனை அருமையான பாடல். ஆண்டவனின் அருள் இருந்தால்தான் இந்த நிலை சித்திக்கும்.
20 June 2014

36. அருணாசல அட்சரமணமாலை

சொல்லாது சொலி நீ சொல்லற நில்லென்று
 சும்மா இருந்தாய் அருணாசலா

சொல்லற நில் - சொற்களற்ற அமைதி நிலை!
மனம் ஒருமுகப்படும் போது அமைதி உண்டாகிறது.அந்த அமைதியில் எண்ணங்கள் நின்று விடும். எண்ணங்கள் இல்லா நிலை அடைவது என்பது சாதாரணமான மனிதனுக்கு மிகக் கடினமானது.

ஶ்ரீ ரமணர் அருணாசலம் வந்தவுடன் சொல்லற நின்றார். பல ஆண்டு மவுனத்திற்குப் பிறகே பேச ஆரம்பித்தார்! அதையே ''சொல்லற நில்லென்று சொல்லாது சொலி நீ சும்மா இருந்தாய்'' என்கிறார்.

இறைவனாம் அருணாசலன் ஶ்ரீ ரமணருக்குச் செய்தது மவுன உபதேசம். அதையே ஶ்ரீ ரமணரும் கடைப் பிடித்தார்.
முதன் முதலில் பால் பிரண்டன் அவரை சந்திக்க வந்த போது பல கேள்விகளைக் கேட்க, அவற்றைக் குறித்துக் கொண்ட நோட்டுப் புத்தகத்துடன் வந்தார். ஆனால் ஶ்ரீரமண சந்நிதியில் சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு அவருடைய மனதில் இருந்த எல்லாக் கேள்விகளும் மறைந்தன!

" சொல்லற நில்லென்று சொல்லாது சொல்லி நீ சும்மா இருந்தாய் அருணாசலா.''
மனதை எண்ணங்களற்ற நிலைக்குக் கொண்டு செல்லுதல்தான் ஆன்ம விசாரத்தின் முதற்படி!

அருணாசல சிவ அருணாசலசிவ அருணாசல சிவ அருணாசலா.
19 June 2014

35. அருணாசல அட்சர மணமாலை

சையெனத் தள்ளிற் செய்வினை
    சுடுமலால் உய்வகை ஏதுரை அருணாசலா

கிரிவலம் வருகையில் திடீரென உனர்ச்சி வயப்பட்டுப் பாடிய பாடல் தொகுப்பு அட்சரமணமாலை. ஒரு குழந்தை தாயிடம் கெஞ்சுவது, நட்புரிமை காட்டுதல், கேலி செய்தல், பயத்தை வெளிப்படுத்துதல், எனப்  பல்வேறுவகை உணர்ச்சி வெளிப்பாடுகளை நாம் அட்சர மணமாலையில் காண்கிறோம்!

சூது செய்து சோதியாதே, செப்படி வித்தை காட்டாதே, சோதி உருக்காட்டு, உருப்படு வித்தை காட்டு, என்றெல்லாம் சொன்னவர், கல்லினுள் தேரைக்கும் அருள் செய்பவனாம் இறைவனிடம்,''நீயே என்னை
சையென்று கைவிட்டுவிட்டால் என்வினைகள் எனக்கு தீங்கு விளைக்குமேயன்றி என்னை யார் காப்பாற்றுவார்கள்? எனவே என்னைக் கைவிடேல், எனக்கு அருள் புரிவாய்.'' என வேண்டுவார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. செய்வினை, செய்த வினை, செய்யப்போகும் வினை எல்லாமே துன்பம் விளைவிக்கும்.

''தீது நினைக்கும் பாவிகட்கும் கருணை செய்தவன் நீ! என்னளவில் சூது நினைப்பாய் எனில் யாரைத் துணை கொள்வேன்?''
''குற்றம் புரிதல் எனக்கியல்பே, குணமாக் கொள்ளல் உனக்கியல்பே'' என்று கருணை மயமானவன்
இறைவன் என்பார் வள்ளல் பெருமான்.

18 June 2014

34. அருணாசல அட்சரமணமாலை

சேராய் எனின் மெய் நீராய் உருகிக் கண்
  ணீரால் அழிவேன்  அருணாசலா

சேராய் - ஒன்றாகாவிட்டால் ; மெய் - ஆன்மா.

அருணாசலனே, நீ என்னோடு , என் ஆன்மாவோடு இரண்டறக் கலக்காவிட்டால், உன்மீது கொண்ட பக்தி மேலீட்டால் என் உடல் உருகிவிடும். நினைந்து, உருகி, நெகிழ்ந்து அதன் காரணமாக கண்ணீர் ஆறெனப் பெருகும். அழுது அழுது நான் அழிந்துவிடுவேன்.

அருணாசலனே, நீ என்னோடு சேர்ந்து விட்டால்,  என்மெய் உருகி, அந்த ஆனந்த பரவசத்தில் கண்களில் பெருகும் கண்ணீரால் 'நானென்ற' உணர்வு அழியும். ஞானம் விளையும்!

எனது உள்ளம் அன்பில் உருகிப் பக்குவப் பட்டுள்ளது. நீயோ என் மனதை நீராய் உருகச் செய்து உயிராய் நிலைத்திருக்கிறாய் என்கிறது சிவபுராணம்.''நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே"-
திருவாசகம்.

'' ஊற்றெழுங் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து, நனைந்து'' என்கிறார் வள்ளலார்.  - திருவருட்பா

''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி'' தேவாரம்.
அன்பர்கள் முருகப் பெருமானை எப்படிப் பாடித் தொழுவார்கள் என்று அருணகிரியார் கூறுவதையும் கேட்போம்.
''அறுமுக குக குமர சரணமென அருள்பாடி யாடிமிக
  மொழி குழற அழுது தொழுது உருகும் அவர் விழியருவி முழுகுவதும்........" திருப்புகழ்
இறைவனை அடைய முடியும் என்கிறது பக்தி இலக்கியம். முயல்வோமாக.
17 June 2014

33. அருணாசல அட்சரமணமாலை

செப்படி வித்தை  கற்றுஇப்படி  மயக்குவிட்டு
     உருப்படு வித்தை காட்டு அருணாசலா

வித்தை - கலை; செப்படி வித்தை- கண்கட்டு வித்தை அல்லது மாயாஜாலவித்தை, தந்திரம். (magic)
உருப்படு வித்தை - ஆன்ம வித்தை, நல்வழிகாட்டும் கலை.

சோதிக்காது உன் சோதி உருவைக் காட்டு என்றவர் மீண்டும் அருணாசலனிடம் மன்றாடுகிறார்.

முதலில் சுகக்கடல் பெருக, சொல் உணர்வு அடங்க என்னோடு பொருந்தி என்னை இன்பத்தில்
ஆழ்த்தினாய்!
என்ன வித்தை செய்து என்னை மிக உயர்ந்த அந்த  நிலைக்குக் கொண்டு சென்றாய்?
இப்போது மீண்டும் சுய உணர்வு அடைந்தேன்! அது கனவா நனவா தெரியவில்லை?

கண்கட்டு வித்தை செய்பவனைப் போல் என்னை மயக்கினாய்!  இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்! நான் உருப்பட ஒரு வித்தையைக் காட்டு, வழிகாட்டு.

மாய வித்தையைப் பார்க்கும் போது அது உண்மை என்று நம்பி விடுகிறோம். இவ்வுலக வாழ்விலும் இறைவன் எங்கெங்கோ இருக்கிறான் என்று மயங்கி வெளியிடங்களில் தேடுகிறோம்.புனித இடங்களுக்கு யாத்திரை செல்கிறோம். எத்தனையோ தோத்திரங்களை, வழிபாடுகளைச் செய்கிறோம்.

 ஆனால் நம்முள்ளே குடி கொண்டிருக்கும் ஆண்டவனைக் காண முயல்வதில்லை! ஆண்டவனைக் காணமுயலும் வழிதான் ''உருப்படு வித்தை''.
ஆன்மாவை அறியும் வித்தை!அது என்ன? அதுதான் ஆன்ம விசாரம்! ஆன்மாவைத் தேடுதல்!16 June 2014

32. அருணாசல அட்சர மணமாலை

சூது செய்து என்னைச் சோதியாது இனியுன்
       சோதி உருக் காட்டு அருணாசலா

சோதி - பரிசோதனை செய்து பார்த்தல்; சோதி - ஒளி;
சூது என்றால் உபாயம், ஒரு வழி.
கலப்படம் செய்திருப்பதைக் கண்டு பிடிக்க பல உபாயங்கள் உள்ளன.
தங்கத்தைக் கல்லில் உரைத்துப் பார்ப்பார்கள்!
ஆனால் மனிதனை எப்படி உரைத்துப் பார்ப்பது? இயற்கையின் சூட்சுமத்தைப் பாருங்கள்!
ஐந்து புலன்களாகிய குதிரைகள்! அதனை செலுத்தும் மனமாகிய ஓட்டுனர், சாரதி!

முந்தைய கண்ணியில் 'சுகமாகிய கடல் அலைத் தாலாட்டில், சொல்லும், உணர்வும் அடங்க சும்மா இருக்கும் ஆனந்தத்தை சொன்னார் அல்லவா?
இப்போது மீண்டும் பிரார்த்தனை! வேண்டுதல்!
அப்பனே, இந்த ஆனந்த பரவசத்தில் இருந்து, ஏதாவது வழி கண்டுபிடித்து என்னை அடுத்த உயர்ந்த நிலைக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று சோதனை செய்து பார்க்காமல் உன்னுடைய ஒளி பொருந்திய உருவத்தைக் காட்டி என்னை ஆட்கொள்வாயாக! இதுவரை சோதித்தது போதும்!
இனி அருள் செய்.

தவ வாழ்க்கையை மேற்கொள்வதன் சிரமங்களை பல யோகியரின் வாழ்விலிருந்து அறிந்து கொள்கிறோம்! கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதை அது.

நாளை இறைவனின் செப்படி வித்தை மலர் மணத்தை நுகர்வோம்.
15 June 2014

31. அருணாசல அட்சர மணமாலை

சுகக் கடல் பொங்க சொல்லுணர்வு அடங்கச்
   சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா

சென்ற பாடலில் ,'எனது எல்லா தற்பெருமைகளையும், அகந்தையையும் அழித்து அருளாகிய சீர்வரிசையைத் தா' என்றார்.
ஆகா,  அருட்சீர் கிடைத்தால் எப்படி இருக்கும் தெரியுமா?
சுகக் கடல் பொங்க - கடல் அலைகள் கண நேரமும் ஓய்வின்றி பொங்கிப் பொங்கி வீழ்கின்றன. இடைவெளியற்ற அலைகளின் தாலாட்டு! அதுபோல சுகம் (இன்பம்) கடலலைகள் போலப் பொங்கிப் பொங்கி  இன்பத்தில் ஆழ்த்துகிறது!

சொல்லுணர்வு அடங்க- இன்பக் கடலில் ஆழ்ந்து வீழும்போது பேசமுடியுமா? உணர்வு இருக்குமா? உணர்ச்சிகள் அற்று, பேச்சற்று சுகக் கடலில் ஆழ்த்தும் அருட்சீர்!
அதன் பின்?

''சும்மா பொருந்திடு" - மோன நிலையில் இணைந்துவிடு!
அருட் சீர்  விளைவிக்கும் இன்ப அலைகள்!
அதனால்சொல்லும், உணர்வும் அடங்க எல்லையில்லாப் பேரமைதியில் ஆழ்த்தும் அருணன்!

"சும்மா இரு" என்பது முருகப் பெருமான் அருணகிரியாருக்கு குருநாதனாகத் தோன்றி உபதேசம் செய்த அருள் வாக்கு.
"சும்மா இருக்கின்ற திறமரிது,'' என்கிறார் தாயுமானவர்.
''சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நானறியேன்'' பட்டினத்தார்.

 இன்றுவருமோ நாளைக்கே வருமோ அல்லதுமற்
 றென்றுவருமோ அறியேன் எங்கோவே - துன்றுமல
 வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
 சும்மா இருக்கும் சுகம் - வள்ளலார்
சும்மா இரு - வேலையின்றி இருத்தல் அல்ல. பேரின்ப மோன நிலையில் இருத்தலே சும்மா இருத்தலாகும்!

அருணாசலனே!
சுகக் கடல் பொங்கவும், சொல்லுணர்வு அடங்கவும்,
அருள் நிறைந்த மோன நிலையில் என்னப் பொருந்திடச் செய்வாய்.
14 June 2014

30. அருணாசல அட்சர மணமாலை

சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருட்
  சீரை அளித்தருள் அருணாசலா

எனது அகந்தையை அழித்து அருட் சீரை அளித்து அருள்வாயாக.

சீரை என்றால் சீலை (ஆடை) மரவுரி, கந்தை, தராசுத்தட்டு என பல பொருள்கள் உண்டு.

சீர் என்றால் செல்வம், சிறப்பு. திருமணங்களில் சீர் வரிசை செய்வார்கள்!

என்னிடம் என்ன சீர், சிறப்பு இருக்கிறது? பிறந்த பரம்பரையின் சிறப்பு, பொருளால், பொன்னால்,உடைமைகளால், கல்வியால், பதவியால் அழகால் வந்த சிறப்புகள் எல்லாம் இருக்கிறது.
அதனால் என்னுடையது, நான் என்ற அகந்தை, கர்வம் இருக்கிறது.

இந்த என்னுடையது என்ற அகந்தை அழிந்து, இருகரங்களால் வணங்கி, எல்லாம் உனதே என நிர்மலமான, சுதந்திரமான உணர்வு ஏற்படுதல்தான் நிர்வாணம்!அதுவே சச்சிதானந்தப் பேருணர்வு. ஆடையற்று இருப்பது அல்ல!

அருணாசலன் நமக்குத் தரக் கூடிய சீர் வரிசை என்ன?
சச்சிதானந்தமாகிய அருட்செல்வம்!


13 June 2014

29. அருணாசல அட்சர மணமாலை

சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத

   வாயைத் திற அருள்மதி அருணாசலா

'ச'கர வரிசை முதல் பாடலில், 'சகலமும் விழுங்கும் கதிரொளியானவனே மனத் தாமரையை மலர்விப்பாய்,' என்றவர் அருணாசலனை இப்பாடலில்  குளிர்ச்சி பொருந்திய ,'அருள்மதி' என்கிறார்.

அருணாசலன்  அருள்நிலவு, மனம் ஆம்பல் மலர். நிலவின் குளிர்ச்சி பொருந்திய அமுத கிரணங்களாகிய கரங்களால் என்மனதை ஆனந்தத்தில் ஆழ்த்துவாயாக!
அகந்தையால் மூடப்பட்டிருக்கும் அமுத கலசத்தைத் திறக்க அருணாசலனாலேயே முடியும்.

இறைவனின் அருள் இருந்தால்தான் ஆன்ம ஆனந்தானுபவம் கிடைக்கும். ' All can be done only when the God touch is there' என்பார் ஶ்ரீஅரவிந்தர்.


12 June 2014

28.அருணாசல அட்சர மணமாலை

சாப்பா டுன்னைச் சார்ந்த உணவாய்
   யான்சாந்தமாய்  போவன் அருணாசலா

சாப்பாடு = உணவு; சா- பாடு = சா-இறந்துபோ, மரணம்; பாடு= அனுபவம்; அதாவது மரண அனுபவம்

ஆன்ம ஞானம் வேண்டி நான் உனக்கு உணவாய்,''நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்,'' என்று உன்னை அடைந்தேன். நீயோ எனக்கு மரண அனுபவத்தைக் கொடுத்து உன்னுடன் என்னைத் தன் மயமாக்கி 'நான் யாரென' உணரச்செய்தாய்! அந்த அனுபவம் காரணமாக அகந்தை நீங்கி ஆன்மானுபவம் பெற்று நான் சாந்தமயமானேன். முற்றிலும் அமைதியடைந்தேன்.

பிறந்த உயிர்கள் எல்லாம் இறக்கின்றன. உடலில் இருந்து உயிர் வெளியேறுகிறது. மரணதேவனுக்கு உணவாகிறது. உயிரற்ற சடலம் அக்னிக்கும், வாயுவுக்கும், நீருக்கும், பூமிக்கும் அர்ப்பணமாகிறது. எஞ்சியிருக்கும் ஆன்மா அமைதியாய் இறை சக்தியுடன் இரண்டறக் கலந்து அமைதியடைகிறது.

தன்னிடம் அடைக்கலம் அடைந்தவர்களின் அகந்தையை நீக்கி ஆன்மானுபூதி அடையச்செய்வதால் 'நினைத்தாலே முக்தியருளும் தலம்' எனப்படுகிறது அருணாசலம்.

11 June 2014

27. அருணாசல அட்சர மணமாலை

சகலமும் விழுங்கும் கதிரொளி யின மன
சலச மலர்த்திவிடு அருணாசலா

கதிரொளியினன் - சூரியன்; சலசம் -தாமரை; விழுங்குதல் - முழுமையாக உட்கொள்ளுதல்.

சூரியன் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் தன் ஒளிக்கதிர்களால் கவர்ந்து மாசுகளை நீக்கும்.
தாமரை மலரை மலரச்செய்யும்!

அதுபோல நான் ஆன்ம ஞானம் பெறத் தடையாய் இருக்கின்ற அகந்தையால் மூடப் பெற்றிருக்கும்
அஞ்ஞான இருளை நீக்குவாய்! என் இதயத் தாமரையை மலரச் செய்வாய். ( மன சலசம்)

அகத்தில் உள்ள அகந்தையாகிய அறியாமை இருளை நீக்குவது அருணாசலக் கதிரொளியே.

10 June 2014

26.அருணாசல அட்சர மணமாலை

கெளதமர்  போற்றும் கருணை மாமலையே
          கடைக் கணித்தாள்வாய் அருணாசலா

 கெளதம முனிவரால் போற்றப்படும் கருணைமாமலை அருணாசலன்!
முனிவரின் பக்திக்கு மகிழ்ந்து அவருக்கு அருள் புரிந்தான் இறைவன்.

அது மட்டும் அல்லாது உமையம்மையை,''அருணாசலம் சென்று கெளதமரை குருவாக ஏற்று அவர் உபதேசப்படி தவம் செய்வாயாக,'' என்று பணித்தார்.  எனவே உமையம்மைக்கே குருவானவன் கெளதம முனிவன்.
அருணாசலனே!
உன் கடைக்கண் பார்வையால் என்னையும் பார்த்து முக்தி தந்து அருள் புரிவாயாக, என வேண்டுகிறார்.

9 June 2014

25. அருணாசல அட்சர மணமாலை

25. கோபமில் குணத்தோய் குறியாய் எனைக் கொள
            குறை யென் செய்தேன் அருணாசலா

கோபமில் குணத்தோய் -சாந்த குணமுடையவனே,
குறியாய் எனைக் கொள -  குறிப்பாக ( தனியாகத் தேர்வு செய்து) ஆன்ம ஞானம் தந்து ஆட்கொள,
என் குறை -தகுதியுடையவனாகதானே இருக்கிறேன்?/ குறையற்றவனாக தானே உள்ளேன்?

குறை என் செய்தேன் -என்ன பிழை செய்தேன்? (ஶ்ரீ ரமணர் அருணாசலம் வந்துற்றபோது சகலத்தையும் அருணாசலேஸ்வரரிடம் சரணாகதி செய்தார். இனி உன் பொறுப்பு என தியானத்தில் அமர்ந்தார்.

குறையெதுவும் இல்லை ஆதலால் அருணாசலன் அருள் செய்தான்.
இங்கே இறைவனைப் பழிப்பது போலப் புகழ்கிறார் ஶ்ரீரமணர்.

சாந்த குணக் குன்றே! இப்பரந்து விரிந்த உலகில் என்னைத் தேர்ந்தெடுத்து எனக்கு ஆன்ம ஞானம் வழங்கியமைக்கு நான் என்ன தவம் செய்தேனோ? அருணாசலா!8 June 2014

24. அருணாசல அட்சரமணமாலை      
கொடியிட்டு அடியரைக் கொல்லுனைக் கட்டிக்
கொண்டு எங்கன் வாழ்வேன் அருணாசலா


கொடி என்ற சொல்லுக்கு, கொப்பூழ்க் கொடி 2. படரும் தாவரம் 3. நாட்டுக்கு அடையாளமானது 4.ஆடை உலர்த்தும் கொடி என பல  பொருள்கள்!
இங்கு கொடியிட்டு என்பது அடையாளம் காட்டி எனப் பொருள்படும்.
தனது அடியார்களை அடையாளம் வைத்துக் கொண்டு அவர்களைக் கொல்கிறானாம்! யார்? அருணாசலன்!
எப்படி?
'நான் நான்' என்று சொல்கின்ற அகந்தையைக் கொன்று அடியார்களைத் தானாக ஒன்றாக்கிக் கொள்கிறான்!
அது போல என்னையும் தன்மயமாக்கிக் கொள்ளாவிட்டால் எங்ஙனம் வாழ்வேன்?

'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்கிறது சிவபுராணம்.
''என்னால் உனக்கு ஆகப் போவது யாதும் இல்லை! ஆனால் நீயோ எதற்காக என்னை வலிய வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தாய்,'' என்கிறார் வள்ளலார்.
''ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன்,''என்று
உருகுகிறார் அபிராமிப் பட்டர்.

மானிடப் பிறவியில் தாய்க்கும் குழந்தைகளுக்கும் ஆன பந்தம் 'கொப்பூழ் கொடி'யால் ஆனது. அது அறுபடும் போது ஒரு குழந்தை தனியாகிறது. அக்குழந்தைகளுக்கு ஆன்ம ஞானம் வழங்க இறைவன் அவர்களைத் தன் அருளாகிய கொடியால் கட்டி இழுக்கிறான்.
தனக்கு அருணாசலனால் ஆன்ம வாழ்வு வழங்கப்பட்டதை மனமுருகி நினைவு கூர்கிறார் ஶ்ரீரமணர்.7 June 2014

23. அருணாசல அட்சர மணமாலை

கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவ
கை வெறி கொளவருள் அருணாசலா

கையினில் கனி- கையில் உள்ள கனிக்கு இருக்கிறது என்ற சாட்சி தேவையில்லை. அதை அனைவரும் அறிவர்.
கையில் உள்ள கனி எது? -அருணாசலன்
மெய்ரசம் கொண்டு - கையில் உள்ள கனியைப் பார்த்துக்  கொண்டிருந்தால் சுவை தெரியுமா? கனியின் சுவை அதை உண்ணும் போதுதான் தெரியும்.அதேபோல அருணாசலக் கனியான உன்னை பக்தியினால் அனுபவித்தால்தான் உன்னுடைய உண்மையான பரசிவ ஆன்ம ஞானத்தை அறிய முடியும்! அதனால் ஏற்படக்கூடிய ஆனந்த பரவசத்தில் என்னையே மறக்கமுடியும்1
உவகைவெறி கொளவருள் அருணாசலா-உன்னை அறிந்த இன்ப வெறியில் திளைக்கச் செய்வாய் அருணாசலா!
தன்னில் தானேயாகி நிற்கின்ற அருணாசல தரிசனமே இன்பத்திற்கு வழி.

6 June 2014

22. அருணாசல அட்சர மணமாலை

கேளாது அளிக்கும் உன் கேடில் புகழை
   கேடு செய்யாது அருள் அருணாசலா

மனிதன் கேட்காமலே எத்தனை செல்வங்களை இறைவன் கொடுத்திருக்கிறான்! வானும், நிலவும்,
ஆதவனும், கடலும், மலையும் ஆறும், காடும், பசுமைப் புல்லும்.....இன்னும் எத்தனையோ!
தனி மனிதனுக்கு அவன் வழங்கியுள்ள செல்வங்கள் தான் எத்தனை? அன்பும், கருணையும்
மனித வாழ்வுக்குத் தேவை என்பதற்காகவே தாயும், தந்தையும்,குருவும், சுற்றமும் அளித்துள்ளான்.

இங்கு இதுவரை தலைவி பிரார்த்தனை செய்கிறாள்! அருள் செய்வாய், கிருபை செய்வாய் என்றெல்லாம் சொல்லிவிட்டு,' கேட்காமலே அனைத்தையும் கொடுப்பவன் என்ற அழியாப் புகழ் பெற்றவனே, ஜாக்கிரதை, உன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே! நான் வேண்டியது உன் அருள்.
கருணை மழை பொழிவாய் என வேண்டுகிறாள்.
( ஶ்ரீ ரமணர் கேட்காமலே அவருக்கு ஆன்ம ஞானம் அளித்ததை நினைவு கூர்கிறார்)

5 June 2014

21. அருணாசல அட்சர மணமாலை

கெஞ்சியும் வஞ்சியாய் கொஞ்சமும் இரங்கிலை
     அஞ்சல் என்றே அருள் அருணாசலா

கெஞ்சுதல்- மீண்டும் மீண்டும் வற்புறுத்தல்; வஞ்சி - ஏமாற்றுதல், பெண்; இரங்கிலை - இரக்கம் கொள்ளவில்லை; அஞ்சல் - பயம் வேண்டாம்

அருணாசலனே! நீ உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்பவரை, வேண்டுபவரை 'வஞ்சியாய்'- ஏமாற்றமாட்டாய்!
'கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவன் அருணாசலன்' என எவருமே சொல்லமுடியாதவாறு கருணை மிகுந்தவன் நீ!
ஒரு பெண் அழுது அரற்றி கருணை செய் என்று உன்னிடம் கெஞ்சும் போது 'கொஞ்சமும் இரங்காமல்,'
கல் போல் இருப்பாயோ? அஞ்சாதே என அருள் புரியும் கருணை வடிவானவன் நீ!
'அஞ்சல் என்றே அருள்வாய்! வஞ்சியாய்!'
'கொஞ்சமும் வஞ்சியாய்! அஞ்சல் என்றே அருள்வாய்!'
'இரங்கிலை அஞ்சல் என்றே' என எவரும் சொல்லா வண்ணம் 'அஞ்சல் என அருள்வாய்.' 

4 June 2014

20. அருணாசல அட்சர மணமாலை

கூர்வாட் கண்ணியர் கொடுமையிற் படாதருள்
கூர்ந்தெனைச் சேர்ந்தருள் அருணாசலா

'கூர்' என்பது கூரிய, மிக எளிதில் அறுக்கக்கூடிய தன்மையைக் குறிக்கும்.கூர்மையான வாளைப் போன்ற கண்களையுடைய கயவர்களின் கொடுமையில் அகப்பட்டுக் கொள்ளாதவாறு அருள் கூர்ந்து என்னைக் காப்பாற்று.  
ஒரு பொருளை அறுக்க கூர்மையான பொருள் தேவை.  ஒரு மனிதனின் மனதை புண்படுத்த கூரிய சொற்கள் ஆயுதமாகும்.
'சால,உறு, தவ, நனி, கூர், கழி, மிகல்'என்னும் சொற்கள் அனைத்துமே மிகுதல் அல்லது அதிகரித்தல் என்னும் பொருளைக் குறிக்கும். இங்கு 'கூர்ந்து' என்பது மிகுதியான அருளை வழங்கி- எனப் பொருள்படும்.

'கண்ணி' என்பது வலையையும், கண்களையும் குறிக்கும்.

ஐம்புலன்கள்   கூரிய வாளைப் போன்று மனிதனுக்கு கேடு விளைக்கும்.
ஐம்புலன்கள் கண்ணி வைத்துப் பிடிக்கும் காம, மோக, க்ரோத, மத, மாச்சர்யங்களாகிய கொடுமையில் சிக்கிக் கொள்ளாதவாறு அருள் கூர்ந்து எனைச் சேர்ந்து அருள்வாய்.

17வது கண்ணியில் கிருபை கூர்ந்தருள்வாய் என்றார். இங்கு அருள் கூர்ந்தெனைச் சேர்ந்தருள் என்றார்.

ஐம்புலன்களின் கொடுமையிலிருந்து என்னை உன்னுடைய 'அருளாகிய வலையை' வீசி காப்பாயாக எனவும் பொருள் கொள்ளலாம்.

கொடுமையான மனம் உடையவர்களின் வஞ்சகச் சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொள்ளாமல் அருள் கூர்ந்து எனைச் சேர்ந்து அருள்க.

3 June 2014

19.அருணாசல அட்சர மணமாலை

குற்றமுற்று அறுத்தெனைக் குணமாய்ப் பணித்தாள் 
    குருவுருவாய் ஒளிர் அருணாசலா

மன இருளை நீக்குபவர் குரு. குரு உருவாய் விளங்குபவன் அருணாசலன்.
நான் இதுவரை செய்த எல்லாக் குற்றங்களையும் அறுத்து, வேருடன் நீக்கி,
என்னை நற்குணங்கள் உடையவனாகச் செய்து, என்னை ஆட்கொள்வாயாக.

முந்தைய கண்ணியில் 'கீழ்மையைப் பாழ் செய்' என்றார். இக்கண்ணியில் எல்லாக்
குற்றங்களையும் நீக்கி, குணவானாக்கி, ஆட்கொள்வாய் என்கிறார்.

அருணாசலசிவ அருட்பெருஞ் சோதி.

2 June 2014

18. அருணாசல அட்சர மணமாலை

கீழ் மேல் எங்கும் கிளரொளி மணி என்
     கீழ்மையைப் பாழ் செய் அருணாசலா

கீழ், கீழ்மை என்பது என்ன?  மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும்  இயற்கையிலேயே ஆன்மசக்தி உடையவர்கள்தான். ஆனால் மாயை, அல்லது அகங்காரத்தால் அதனை மறந்து தன்னுடைய உடலே தான் என்று கருதுவது கீழ் எனப்படும் அகந்தையாகும். தான் என்ற அகந்தை நீங்கினால் ஆழ்மனத்தின்
அதிசய சக்தியான ஆன்ம தரிசனம் பெறலாம்.
பிரபஞ்சம் முழுதும் பரவி நிற்கும் ஒளி பொருந்திய மணியே, அருணாசலனே எனது
அஞ்ஞானத்தை அழித்து நின் ஒளியால் அருள்வாயாக.
"உருக்கி அமுதூற்றெடுத்து என் உடல் உயிரோடு உளமும் ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ," என்பது வள்ளல் வாக்கு.1 June 2014

17. அருணாசல அட்சர மணமாலை

கிரியுரு  வாகிய  கிருபைக் கடலே
        கிருபை கூர்ந்தருள்வாய் அருணாசலா

மலை உருவாக அமர்ந்திருக்கும் கருணைக் கடல் அருணாசலேஸ்வரர். எல்லா ஊர்களிலும் கோயிலின் உள்ளே வீற்றிருக்கும் இறைவனை வழிபடுவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் மலையே இறைவனாய் வணங்கப் படுகிறது. வெகு தூரத்திலிருந்து திருவண்ணாமலையை தரிசிக்கும் போதே மனம் பரவசப்படுகிறது என்பது உண்மைதான்.

பார்ப்பதற்கு சிவந்தும், மரங்கள் அடர்ந்தும், கல்லும் மண்ணுமாகக் காட்சியளிக்கும் அண்ணாமலை பூமியின் இதயம் எனப்படுகிறது. இங்கே சிவபெருமான் தன் கணங்களோடும், உமையம்மையோடும்
வாசம் செய்கிறாராம்.

கல்லும் முள்ளும் நிறைந்த மலைத் தோற்றம் உடையவராக இருந்தாலும் எல்லாஇடங்களிலும், எந்நேரத்திலும், எப்போதும் இறைவனுடைய கருணை இருப்பதால் கிருபைக் கடல் என்றார்.
கிருபைக் கடல் - ஆனால் மீண்டும் கிருபை கூர்ந்து அருள்வாய் என்கிறாரே!
கூர்ந்து - மிகுதல், அதிகரித்தல்,பெருகுதல். மேலும் மேலும் உன் கருணை அதிகரிக்குமாறு அருள்வாய்.