15 June 2014

31. அருணாசல அட்சர மணமாலை

சுகக் கடல் பொங்க சொல்லுணர்வு அடங்கச்
   சும்மா பொருந்திடு அங்கு அருணாசலா

சென்ற பாடலில் ,'எனது எல்லா தற்பெருமைகளையும், அகந்தையையும் அழித்து அருளாகிய சீர்வரிசையைத் தா' என்றார்.
ஆகா,  அருட்சீர் கிடைத்தால் எப்படி இருக்கும் தெரியுமா?
சுகக் கடல் பொங்க - கடல் அலைகள் கண நேரமும் ஓய்வின்றி பொங்கிப் பொங்கி வீழ்கின்றன. இடைவெளியற்ற அலைகளின் தாலாட்டு! அதுபோல சுகம் (இன்பம்) கடலலைகள் போலப் பொங்கிப் பொங்கி  இன்பத்தில் ஆழ்த்துகிறது!

சொல்லுணர்வு அடங்க- இன்பக் கடலில் ஆழ்ந்து வீழும்போது பேசமுடியுமா? உணர்வு இருக்குமா? உணர்ச்சிகள் அற்று, பேச்சற்று சுகக் கடலில் ஆழ்த்தும் அருட்சீர்!
அதன் பின்?

''சும்மா பொருந்திடு" - மோன நிலையில் இணைந்துவிடு!
அருட் சீர்  விளைவிக்கும் இன்ப அலைகள்!
அதனால்சொல்லும், உணர்வும் அடங்க எல்லையில்லாப் பேரமைதியில் ஆழ்த்தும் அருணன்!

"சும்மா இரு" என்பது முருகப் பெருமான் அருணகிரியாருக்கு குருநாதனாகத் தோன்றி உபதேசம் செய்த அருள் வாக்கு.
"சும்மா இருக்கின்ற திறமரிது,'' என்கிறார் தாயுமானவர்.
''சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நானறியேன்'' பட்டினத்தார்.

 இன்றுவருமோ நாளைக்கே வருமோ அல்லதுமற்
 றென்றுவருமோ அறியேன் எங்கோவே - துன்றுமல
 வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
 சும்மா இருக்கும் சுகம் - வள்ளலார்
சும்மா இரு - வேலையின்றி இருத்தல் அல்ல. பேரின்ப மோன நிலையில் இருத்தலே சும்மா இருத்தலாகும்!

அருணாசலனே!
சுகக் கடல் பொங்கவும், சொல்லுணர்வு அடங்கவும்,
அருள் நிறைந்த மோன நிலையில் என்னப் பொருந்திடச் செய்வாய்.








No comments:

Post a Comment