18 June 2014

34. அருணாசல அட்சரமணமாலை

சேராய் எனின் மெய் நீராய் உருகிக் கண்
  ணீரால் அழிவேன்  அருணாசலா

சேராய் - ஒன்றாகாவிட்டால் ; மெய் - ஆன்மா.

அருணாசலனே, நீ என்னோடு , என் ஆன்மாவோடு இரண்டறக் கலக்காவிட்டால், உன்மீது கொண்ட பக்தி மேலீட்டால் என் உடல் உருகிவிடும். நினைந்து, உருகி, நெகிழ்ந்து அதன் காரணமாக கண்ணீர் ஆறெனப் பெருகும். அழுது அழுது நான் அழிந்துவிடுவேன்.

அருணாசலனே, நீ என்னோடு சேர்ந்து விட்டால்,  என்மெய் உருகி, அந்த ஆனந்த பரவசத்தில் கண்களில் பெருகும் கண்ணீரால் 'நானென்ற' உணர்வு அழியும். ஞானம் விளையும்!

எனது உள்ளம் அன்பில் உருகிப் பக்குவப் பட்டுள்ளது. நீயோ என் மனதை நீராய் உருகச் செய்து உயிராய் நிலைத்திருக்கிறாய் என்கிறது சிவபுராணம்.''நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே"-
திருவாசகம்.

'' ஊற்றெழுங் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து, நனைந்து'' என்கிறார் வள்ளலார்.  - திருவருட்பா

''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி'' தேவாரம்.
அன்பர்கள் முருகப் பெருமானை எப்படிப் பாடித் தொழுவார்கள் என்று அருணகிரியார் கூறுவதையும் கேட்போம்.
''அறுமுக குக குமர சரணமென அருள்பாடி யாடிமிக
  மொழி குழற அழுது தொழுது உருகும் அவர் விழியருவி முழுகுவதும்........" திருப்புகழ்
இறைவனை அடைய முடியும் என்கிறது பக்தி இலக்கியம். முயல்வோமாக.








No comments:

Post a Comment