21 June 2014

37. அருணாசல அட்சர மணமாலை

சோம்பியாய்ச் சும்மா சுகமுண்டு உறங்கிடின்
    சொல் வேறு என் கதி அருணாசலா

சுகக்கடல் பொங்க சொல்லும் உணர்வும் அடங்க சும்மாஇருக்க வைத்தாய்; சொல்லற சும்மா ஒன்றும் செய்யாமல்  சச்சிதானந்தத்தை அனுபவிக்கிறேன்.  இதைவிட வேறு என்ன  நற்கதி எனக்குக் கிடைக்கப் போகிறது?  சொல்வாய் அருணாசலா!

ஆண்டவனின் அருட்பார்வையால் உயர் நிலை அடைந்தவர்களை சாதாரணமனிதர்கள் புரிந்து கொள்வதில்லை! அதையே இங்கு பகவான் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

வேளா வேளைக்குச் சாப்பிடுபவனுக்கு நல்ல  தூக்கம் வரும். உண்ட மயக்கத்தில் உறங்குவான்! அவனை சோம்பேறி என்கிறோம்.

ஞானிகளோ ஆன்ம ஞானமாகிய சுகத்தை உண்கிறார்கள். ஞானத்திற்கு எல்லை மெளனம். பேசா அனுபூதி கிடைத்தவர்க்கே  சுகம் கிடைக்கும். அதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் ஶ்ரீரமணர்.
அருணாசலத் தந்தை ரமண மகனுக்கு மெளன உபதேசம் செய்தார். அருணகிரியாருக்கு ஆறுமுகன், குருவாய் உபதேசம் செய்தார்.

சொன்ன கிரெளஞ்ச கிரியூ  டுருவத் தொளைத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லாமொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
                                                                     - கந்தரலங்காரம், பாடல் 19.
கிரவுஞ்ச மலையை வேலால் துளைத்தவனே! கடம்ப மலர் மாலை அணிந்தவனே! மெளனத்தை உற்று
உன்னை உணர்ந்து, ஐம்புலன்களும் அடங்கிய மேல் நிலையை அடைந்து,என்னையே மறந்துவிட்டேன்! இவ்வுடலின் நினைவும் அற்றேன்.

எத்தனை அருமையான பாடல். ஆண்டவனின் அருள் இருந்தால்தான் இந்த நிலை சித்திக்கும்.




No comments:

Post a Comment