23 June 2014

39. அருணாசல அட்சர மணமாலை

ஞமலியின் கேடா(ம்) நானென் உறுதியால்
 நாடி நின்னுறுவேன் அருணாசலா

ஞமலி - நாய்.
மாணிக்க வாசகர்  சிவபுராணத்தில்,
'' நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத்
      தாயிற் சிறந்த தயா வானதத்துவனே'' என ஈசனை வணங்குகிறார்.

வள்ளல் பெருமானோ,''நாயினுங் கடையேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ் சோதி,'' என அகவலில் பரம்பொருளைப் போற்றுகிறார்.

'ஞ'கர மலர் என்ன சொல்கிறது?
அறிவில் நாயினும் கேடானவன் நான்! எப்படி?
நாய் மோப்ப சக்தி ஒன்றையே  கொண்டு மனிதர்களையும், பொருட்களையும் கண்டுபிடிக்கிறது.

ஆனால் மனிதனோ ஐம்புலன்கள் எல்லா பக்கங்களிலும் சிதறிக் கிடப்பதால் ஒருமுகப்பட்டவன்
இல்லாதவன் ஆகிறான்.  எனவே தன்னைத்தான் அறிய முடியாதவனாய் இருக்கிறான். எனவே "ஞமலியின் கேடாம் நான்'' என்றார்.

ஆனாலும் உன்னை அடைய வேண்டும் என்ற என் மன உறுதியால், வைராக்யத்தால் பெருமுயற்சி செய்தாகிலும் உன் அருள் கிடைக்கப் பெறுவேன்.
 ஶ்ரீ ரமணர் ஆன்மானுபவம் பெற்றவர். ஆயினும் தன் அன்பர்களுக்கு உறுதியுடன்  வைராக்யத்துடன் நடக்க வேண்டிய ஆன்ம விசாரப் பாதையைக் காட்டுகிறார்.
என்னுடைய முயற்சி, உன்னுடைய அருள் இரண்டும் சேர்ந்தால் உன்னை 'உறுவேன்'. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி'( சிவபுராணம்)அவன் தாளை அவன் அருள் இருந்தால்தான் வணங்க முடியும்.



  

No comments:

Post a Comment