கொடியிட்டு அடியரைக் கொல்லுனைக் கட்டிக்
கொண்டு எங்கன் வாழ்வேன் அருணாசலா
கொடி என்ற சொல்லுக்கு, கொப்பூழ்க் கொடி 2. படரும் தாவரம் 3. நாட்டுக்கு அடையாளமானது 4.ஆடை உலர்த்தும் கொடி என பல பொருள்கள்!
இங்கு கொடியிட்டு என்பது அடையாளம் காட்டி எனப் பொருள்படும்.
தனது அடியார்களை அடையாளம் வைத்துக் கொண்டு அவர்களைக் கொல்கிறானாம்! யார்? அருணாசலன்!
எப்படி?
'நான் நான்' என்று சொல்கின்ற அகந்தையைக் கொன்று அடியார்களைத் தானாக ஒன்றாக்கிக் கொள்கிறான்!
அது போல என்னையும் தன்மயமாக்கிக் கொள்ளாவிட்டால் எங்ஙனம் வாழ்வேன்?
'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்கிறது சிவபுராணம்.
''என்னால் உனக்கு ஆகப் போவது யாதும் இல்லை! ஆனால் நீயோ எதற்காக என்னை வலிய வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தாய்,'' என்கிறார் வள்ளலார்.
''ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லல்பட இருந்தேனை நின் பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன்,''என்று
உருகுகிறார் அபிராமிப் பட்டர்.
மானிடப் பிறவியில் தாய்க்கும் குழந்தைகளுக்கும் ஆன பந்தம் 'கொப்பூழ் கொடி'யால் ஆனது. அது அறுபடும் போது ஒரு குழந்தை தனியாகிறது. அக்குழந்தைகளுக்கு ஆன்ம ஞானம் வழங்க இறைவன் அவர்களைத் தன் அருளாகிய கொடியால் கட்டி இழுக்கிறான்.
தனக்கு அருணாசலனால் ஆன்ம வாழ்வு வழங்கப்பட்டதை மனமுருகி நினைவு கூர்கிறார் ஶ்ரீரமணர்.
No comments:
Post a Comment