18 July 2014

64.அருணாசல அட்சரமணமாலை

பற்றிமால் விடத்தலை யுற்றிறு முனம் அருள்
  பற்றிட வருள் புரி அருணாசலா

(மால் விஷம் பற்றி தலை உற்றிடும்  முன்னால்  - மால் - மயக்கம்; மால்  விஷம் - மயக்கம் தரக்கூடிய அகந்தையாகிய நஞ்சு;)
 நான், என், எனது, என்னால், என்னுடைய என்ற மயக்கத்தால் உண்டாகும் அகந்தை நஞ்சு தலைக்கு ஏறி என்னை அழிக்கும் முன் உன் அருளாகிய அமுதம் என்னை அடைய அருள் புரிவாயாக.
அகந்தை - விஷம்;அருள் - அமுதம்.
என்னால்தான் எல்லாம் நிகழ்கின்றன என்ற எண்ணம் மயக்கத்தைத் தரும். அதனால் கர்வம் உண்டாகிறது. 'கர்வம் தலைக்கேறிவிட்டது' என்கிறோம்!

வள்ளல் பெருமான் சொல்கிறார், ''ஒருவனுடைய முதல் மனைவி: ஆணவம்! அவளது பிள்ளை அஞ்ஞானம்.
இரண்டாவது மனைவி மாயை. மாயையின் நான்காவது பிள்ளை அகங்காரம். அவனது இயல்பு என்ன?
அவன் செயலை கருதவும் பேசவும் வாய் கூசும். எல்லா ஆற்றலும் என்பால் உளதெனத் தருக்குவன், தன்னைத்தானே மதிப்பன், தரணியிற் பெரியார் தாம் இல்லை என்பான், தானே பிறந்த தன்மையிற் பேசுவன், விடியும் அளவு வீண்வாதிடுவன், சொல்லினுங் கேளாத் துரியோதனன் என வானவர் தமக்கும் வணங்கா முடியன்.''  ( திருவருட்பா ஆறாம் திருமுறை)

No comments:

Post a Comment