31 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமால் பேறு
                                    - சொல்லரிக்குக்
காற்பேறு கச்சியின்முக் காற்பேறு இவண்என்னும்
மாற்பேற்றின் அன்பர் மனோபலமே -

"திருமால்பூர்" என வழங்கப்படும் இவ்வூர் காஞ்சிபுரம் - அரக்கோணம்  ரயில் பாதையில் உள்ளது.
திருமால் கோயில்களுக்கு பெயர் பெற்றதலம் காஞ்சி. அங்கே உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.
அதை நினைவில் கொண்டு, "சொல் அரிக்கு கச்சியின் காற் பேறு," என்றார். காஞ்சியில் உலகளந்த
பெருமாளாய் 'கால் பங்கு' பெருமை பெற்றார் திருமால். " திருமாற் பேறு," என்ற இத்தலத்தில் மீதமுள்ள 'முக்கால் பங்கு' பெருமை கிடைத்ததாம்! அதனால் 'முக்காற்பேறு' இவண்- என்றார். இவண் என்பது - திருமால் பேறு - என்ற இடம். முக்கால் பேறு எப்படிப் பெற்றார்?

திருவீழிமிழலை என்ற தலத்திற்குரிய வரலாறு இங்கும் கூறப்படுகிறது. திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து சிவபெருமானை வழிபடும் போது ஒரு நாள் ஒருமலர் குறைய தன் கண்மலரை
அர்ப்பணித்து தன் சக்ராயுதத்தைப் பெற்றதாகவும் அதனால் 'முக்கால் பேறு' பெற்றதலம் "திருமாற்பேறு"எனவும் குறிப்பிடப்படுகிறது.  இவ்விடத்தில் சிவபெருமான் அன்பர்களுக்கு மனவலிமை தருபவனாய் வீற்றிருக்கிறான். இறைவன் பெயர் மால்வணங்கீசர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி












30 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவல்லம்
                         - பார்த்துலகில்
இல்லம் எனச்சென்று இரவாதவர் வாழும்
வல்லமகி ழன்பர் வசித்துவமே -

பரந்த இவ்வுலகில்  இல்லந்தோறும் சென்று, இல்லை எனக் கையேந்தி நிற்காதவர்கள் வாழும் சிறப்புப் பொருந்திய ஊர் வல்லம்.  இங்கே பக்தர்கள் ஆனந்தமாக வசித்து இறைவனை வழிபடுகின்றனராம். ஆச்சரியம்தானே?
அபிராமி பட்டர் பாடுகிறார், 'இல்லாமை சொல்லி ஒருவர்தம் பால்சென்று' நிற்காமல் எத்தனை உன்னதமான இடத்தில் என்னை வைத்திருக்கிறாய் என்று இறைவனின் பாதங்களைப் போற்றுகிறார்.

அருணகிரி நாதரின் பாடல் பெற்ற இத்தலம் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.
சுமார் 2000 ஆண்டு பழமை வாய்ந்த இத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. அம்மையப்பன் தான் உலகம் என விநாயகர் வலம் வந்தததை உணர்த்தியதால்  திருவலம். தற்போது திருவல்லம் என மருவியது.
சுயம்புலிங்கம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

29 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


வன்பார்த்தான் பனங்காட்டூ 
                                           - பூத்தவிசின்
ஆர்த்தான் பனகத்த வனிந் திரன் புகழ்வன்
பார்த்தான்  பனங்காட்டூர் பாக்கியமே -

'பூத் தவிசின் ஆர்த்தான்/ பனகத்தவன்/ இந்திரன்/ புகழ்' --பூத்தவிசு-தாமரைமலர், பனகத்தவன் -திருமால் (பன்னகம்- பாம்பு)
தாமரை மலரில் அமர்பவனாகிய பிரமனும், பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், இந்திரனும்
புகழ்கின்ற 'வன்பார்த்தான் பனங்காட்டூரில்' எழுந்தருளியிருக்கும் செல்வமே சிவபெருமானே!

இவ்வூர் திருப்பனங்காடு என்று வழங்கப்படுகிறது. பனைமரங்கள் நிறைந்த தலமாய் இருந்திருக்க வேண்டும். அகத்தியர் வழிபட்ட தலம். இறைவன் -பனங்காட்டீசர், தலமரம் - பனை.

திருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி







28 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

என்னுள்ளே மறைந்து கொண்டு உன்னை எங்கும் தேடச் செய்கின்றாய்.
உன்னை என்னுள் தேடித் தேடிக் களைத்தேன் எம்பெருமானே!
நீ மனம் வைத்தால்தான் உன்னை அறிய முடியும் என அறிந்தேன்.

                             திருவோத்தூர்
                                                  - ஓகையிலா
வீத்தூர மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்த திரு
ஓத்தூரில் வேதாந்த உண்மையே -

இறைவன் வேதத்திற்குப் பொருள் கூறிய இடம் என்பதால் 'ஓத்தூர்' ( ஓதும் ஊர் ) என்ற பெயர் வந்தது.
தவ வாழ்க்கையை மேற்கொள்வது என்பது எல்லோராலும் இயலாத ஒன்று. அது கட்டுப்பாடான நெறிமுறைகளைக் கொண்டது. அவ்வழியைப் பின்பற்ற முடியாதவர்களின் மன வலிமை அழிய, மகிழ்ச்சி
தூரஓடுகிறது. வேதங்களுக்கு பொருள் கூறிய இறைவன் எழுந்தருளியுள்ள திருவோத்தூர் இறைவனை மெய்யான தவம் செய்யும் வலிமை உடையவர்கள் சூழ்ந்திருக்கின்றனர்.

இவ்வூர் ஆலயம் செய்யாற்றின் வடகரையில் உள்ளது. இறைவன் - வேதபுரீஸ்வரர்.
இறைவி - திரிபுவனநாயகி.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி






27 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

மாகறல்
                                      - தோயுமன
யோகறல் இலாத்தவத்தோர் உன்ன விளங்குதிரு
மாகறலில் அன்பர்அபி மானமே -

(தோயும் மனம் யோக அறல் இலா தவத்தோர்) யோகம் என்றால் ஒன்று சேர்தல் என்று பொருள். மனமானது இறைவனுடன் தோய்தல், அதாவது இரண்டறக் கலத்தல்- ஒருமைப் படுதல். அதுவே யோகம். தவம் செய்வோர் அந்நிலையிலிருந்து நீங்குவது இல்லை. அத்தகையவர் வாழ்வதால் சிறப்புப் பெற்று விளங்கும்  'மாகறல்' என்னும் தலத்தில் அன்பர்களுக்கு அன்பனாய் விளங்குகிறான் சிவபெருமான்.

செய்யாற்றின் கரையில் உள்ள தலம். சுயம்பு மூர்த்தி. திங்கள் தரிசனம் சிறப்பு. இறைவன் பெயர்
அடைக்கலங்காத்த நாதர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

26 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

அழகிய பொன்னம்பலத்தின் நடுவே ஞான இன்பக்கூத்தை நிகழ்த்தும் பெருமானே
நின் திருமுகத்தில் விளங்கும் இளமுறுவல் நகையைக் கண்டு மகிழ்ந்தேன்.

குரங்கணில் முட்டம்
                                - முச்சகமும்
ஆயுங் குரங்கணில் முட்டப்பெயர் கொண்டோங்கு புகழ்
ஏயும் தலம் வா ழியல்மொழியே -

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாலாற்றின் தென் கரையில்  'தூசி' என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 2 கி. மீ தொலைவில் உள்ளது இவ்வூர். குரங்கு வடிவில் வாலியும், அணில் வடிவில் இந்திரனும், காக(முட்டம்) வடிவில் எமனும் வழிபட்ட தலமாதலால் (குரங்கு+ அணில் +முட்டம் ) குரங்கணிமுட்டம்.
இதன் பழைய பெயர் பல்லவபுரம்.

வள்ளல் பெருமான் சொல்வது என்ன? மூவுலகத்தில் இருப்பவர்களும் இந்த ஊரின் பெருமையை
ஆராய்ந்து காண முயல்கின்றனராம். உயர்ந்த புகழ் விளங்கும் குரங்கணிமுட்டத்தில் இயற்றமிழ் வல்லானாக விளங்கும் இறைவனே வாழ்க.
திருஞானசம்பந்தர் இத்தலத்தை தக்கராகப் பண்ணிசையில் பாடியுள்ளார்.
'சூலப்படையான் விடையான் சுடுநீற்றான்
காலன்தனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து
ஏலங்கமழ் புன்சடை எந்தைபிரானே'

இறைவன் பெயர் -வாலீஸ்வரர். இறைவி- இறையார் வளையாள்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி



25 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

கச்சி நெறிக் காரைக்காடு
                                              - மங்காது
மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
கச்சி நெறிக்காரைக்  காட்டிறையே -

சிவபெருமானை வழிபட மிகவும் விரும்பி, ஆகம வழி முறைகளை  விதிப்படி அறிந்து, பின்பற்றும் ஆர்வலர்கள் சூழ்ந்து  போற்றும் கச்சிநெறிக்காட்டில் வீற்றிருக்கும் சிவபெருமானே உம்மை
வணங்குகிறேன்.

காஞ்சியில் உள்ள ஐந்து பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. காஞ்சியின் வட கிழக்கில் புன்செய்
காட்டில் இக்கோயில் உள்ளது. திருக்காலிமேடு, எனவும் வழங்கப்படும். இறைவன் காரைத் திருநாதர்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

24 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

கச்சி அனேகதங்காவதம்
                                          - சேர்ந்தவர்க்கே
இங்கார் பதஞ்சற்றும் இல்லாத அனேக
தங்கா பதஞ்சேர் தயாநிதியே -

அனேகதம் என்றால் யானை. யானை முகத்தை உடைய விநாயகர் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார்.
இறைவன் பெயர் அனேகதங்காபதேஸ்வரர்.
அனேகதங்காவதம் என்ற தலத்தில் கோயில் கொண்டிருக்கும் கருணைக்கடலான இறைவனின்
பாதமலர்களைப் பற்றிக் கொண்டவர்க்கு துன்பத்தில் அழுந்தும் நிலை வராது. (இங்குதல் எனில் அழுந்துதல் என்று பொருள். இங்கு+ ஆர்+ பதம்- துன்பத்தில் அழுந்திய நிலை.)

காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.வயல் மத்தியில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

23 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவோணகாந்தன் தளி

                                     - நாற்றமலர்ப்
பூந்தண் தளிவிரித்துப் புக்கிசைக்கும் சீரோண
காந்தன் தளிஅருட் ப்ரகாசமே -

ஓணன், காந்தன் என்ற இரு அசுரர்கள் பூசித்த தலம். திரு என்ற அடைமொழி சேர்ந்து 'திருவோணகாந்தன் தளி,' எனப் பெயர் பெற்றது. இவ்வூர் இறைவனுடைய அருளாகிய ஒளியினால்,
ஒளிமயமாய்த் திகழ்கிறது! இந்த ஊரின் சிறப்பு என்ன? நறுமணம் மிக்க மலர்கள். அவற்றில் பனித்துளிகள் நிரம்பியுள்ளன. இந்த நீர்த்துளிகளை மலர்கள் தெளிக்க, பூக்களின் வாசம் இந்நகரிலே
புகுந்து என்ன செய்யும்? வந்தேன் எனப் பரவி இசை பாடும்!  இரண்டு வரிகளில் ஒரு காவியமே கண்முன்
விரிகிறது!
இறைவன் பெயர் ஓணகாந்தேசுவரர். ஏகாம்பேரேசுவரர் கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

22 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்.

கச்சித் திருமேற்றளி
                                   - ஆகுந்தென்
காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழில்கச்சி
மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே -

கச்சிமேற்றளி - காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 'பிள்ளையார் பாளையம்' என்ற இடத்தில்
இக்கோயில் உள்ளது. திருமேற்றளி எனவும் வழங்கப்படுகிறது. இவ்வூரில் தென்றல் காற்று சுமந்து செல்லும் நறுமணம் நிறைந்த மலர்ப் பொழில்கள் உள்ளன. தேனுண்ணும் வண்டுகள் இம்மலர்களை நாடிச் செல்லுகின்றன. இறைவனிடம் பக்தி செலுத்துவதே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பர். பக்தி செய்வோர் எல்லாருக்கும் அவன் உறவினன் ஆகிறான். வண்டுகள் மலர்களை நாடிச் செல்வது போலும், தென்றல் காற்று மலர் மணத்தை சுமப்பது போலும் பக்தர்கள் இறைவனை நாடிச் செல்கின்றனர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

20 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

தொண்டை நாடு - திருவேகம்பம் -காஞ்சி

                                    - கண்ணார்ந்த
நாகம்ப ராம்தொண்ட நாட்டில் உயர்காஞ்சி
ஏகம்பம் மேவும்பே ரின்பமே -

அழகு பொருந்திய தொண்டைநாட்டில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் ஊர் காஞ்சிபுரம்.
காஞ்சிமாநகரில் ஏகாம்பர நாதர் என்ற பெயரோடு அன்பர்களின் பேரின்பத்திற்குக் காரணமானவனாக
விளங்குகிறார் சிவபெருமான். ஏகம்பன் என்றால் காஞ்சிபுரத்துச் சிவன்.

காஞ்சிபுரம் என வழங்கப்படுகிறது. பஞ்ச பூதத் தலங்களில் ப்ருத்வித் தலம். (மணல் லிங்கம்) உமாதேவியார் சிவபெருமானைப் பூசித்து 32 அறங்களை வளர்த்தார் எனப்படுகிறது.க்ஷேத்திர வெண்பா பாடிய ஐயடிகள் காடவர்கோன் அரசாண்ட தலம். சாணக்கியர், பரிமேலழகர், பொய்கையாழ்வார், சியாமா சாஸ்திரிகள் வாழ்ந்த ஊர். சுந்தரர் தனக்கு கண்பார்வை மீண்டதைக் குறித்து அழகிய திருப்பதிகம் பாடியுள்ளார்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

19 January 2014

சிவத்தலங்கள் - திருவருட்பா

திருவண்ணாமலை
                                    - யாமேத்தும்
உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
அண்ணா மலைவாழ் அருள்சுடரே -

நாங்கள் வழிபடும் உண்ணாமுலை என்ற திருநாமத்தோடு விளங்குகின்ற உமையம்மையோடு
காட்சிதரும் திருவண்ணாமலையில் கோயில் கொண்டுள்ள அருட்சுடரே,அருணாசலேஸ்வரனே!
உன்னைப் போற்றி வணங்குகிறோம்.

பஞ்சபூதத் தலங்களில் நெருப்புக்குரிய தலம். காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி.
பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை. ஆனால் மனதால் நினைத்தாலே முக்திதரும் தலம் திருவண்ணாமலை. அருணகிரிநாதருக்கு முருகன் காட்சியளித்த தலம். மகரிஷி  ஸ்ரி ரமணர் தவம் செய்த திருத்தலம். கார்த்திகை தீபத்திருவிழாவும், கிரிவலமும் சிறப்புடன் நடை பெறும் பெருமைவாய்ந்தது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட் பெருஞ்சோதி

திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிச்செய்த  'உண்ணாமலை உமையாளொடு உடனாகிய'
என்ற தேவாரப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். சுட்டி கீழே:-


http://gaana.com/playlist/karunanidhi-2-emmkay-thevaram-by-dharumapuram-swaminathan

18 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாமாத்தூர்

                                         - சூர்ப்புடைத்த
தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
ஆமாத்தூர் வாழ்மெய் அருள்பிழம்பே -

சூரபத்மன் என்ற அசுரனின் ஊரில் ஒரு மாமரம் இருந்தது. அது தன்னை நெருங்கியவரைத் தாவிப் பற்றிக் கொல்லும் மரம். அதுவே அவ்வூரின் காவல் மரம். இந்த மரத்தை வீழ்த்தி, சூரபன்மனை வெற்றிகொண்ட முருகப் பெருமானும், கணேசனும் அருட்பிழம்பான சிவபெருமானுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இடம் திருஆமாத்தூர்.
இவ்வூர் பம்பை எனும் ஆற்றங்கரையில் உள்ளது. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் சமாதி இங்கு உள்ளது. மூவர் பாடல் பெற்ற தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

17 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

பனங்காட்டூர்

                                   - பெண்தகையார்
ஏர்ப்பனங்காட் டூரென்று இருநிலத்தோர் வாழ்த்துகின்ற
சீர்ப்பனங்காட் டூர்மகிழ்நி க்ஷேபமே -

ஏர்ப்பு +அனம்+ காட்டு + ஊர் =ஏற்பவர்க்கு உணவை அளிக்கும் ஊர்.
ஐயா, பசி என்று இரந்து வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல்
உணவு அளிக்கும்  நற்குணம் வாய்ந்த மங்கையர் வாழ்கின்ற ஊர் என
தேவருலகிலும், பூமியிலும்  உள்ளோர் வாழ்த்துகின்ற ஊர் பனங்காட்டூர்.
பசியுடன் வந்து வாயிலில் நிற்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் 
உணவளிப்பது மிக உயர்ந்த செயல். எனவே இருநிலத்தோர் வாழ்த்துகின்றனர்.

'பனையபுரம் 'என்று வழங்கப்படுகிறது. சூரியன் வழிபட்டதலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

இன்று தைப்பூச நன்னாள். வள்ளலார் வழி நின்று இயன்றவரை அன்னதானம் செய்வோமாக.
வடலூர் சோதி தரிசனம். நம் உள்ளத்தில் ஒளிமயமாக விளங்கும் இறைவனை அறிய முயல்வோமாக. 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.'


16 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமுண்டீச்சுரம்
                                   - சீர்பொலியப்
பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததுஎனும்
முண்டீச் சுரத்தின் முழுமுதலே -

முழுமுதலாய் விளங்கும் சிவபெருமான் முன்பொரு காலத்தில் சிறப்புமிக்க இத்தலத்தில் வீற்றிருக்க விரும்பினான் என்னும் பெருமையுடய தலம் திருமுண்டீச்சுரம்.

கிராமம் என்று வழங்கப்படும் தலம். பிரமன், இந்திரன் வழி பட்டதலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

15 January 2014

திருப்பாதிரிப்புலியூர்


திருப்பாதிரிப்புலியூர்

                                      - மாணுற்ற
பூப்பா திரி கொன்றை புன்னைமுதற் சூழ்ந்திலங்கும்
ஏர்ப்பா திரிப்புலியூர் ஏந்தலே - 
சிறந்த அழகும் பொன்னிறமும் உடைய பாதிரி, கொன்றை, புன்னை மலர்கள் பூத்துச் சொரியும் 
மரங்களால் சூழப்பெற்ற திருப்பாதிரிப் புலியூர்த் தலைவனே உம்மை வணங்குகின்றோம்.

இங்குள்ள பாடலீசுவரர் சிவன் கோயிலில் தலமரம்  பாதிரி. எனவே திருப்பாதிரிப் புலியூர்.
திருநாவுக்கரசரை சமணர்கள் கல்தூணில் கட்டிக் கடலில் தள்ளிவிட அவர் 'சொற்றுணை 
வேதியன்' எந்ற நமச்சிவாயத் திருப்பதிகம் பாடி கரையேறப் பெற்ற தலம்.

கடலூர் என்று வழங்கப்படுகிறது. இறைவந் பெயர் தோன்றாத் துணைநாதர், இறைவி தோகையம்பிகை.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி





14 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமாணி குழி
                                     - ஆற்றமயல்
காணிக் குழிவீழ்  கடையர்க்குக் காண்பரிய 
மாணிக் குழிவாழ்  மகத்துவமே -

காணி -100 குழி அளவுள்ள நிலம்; குழி - ஒரு நில அளவு.
மனிதனுடைய மண்ணாசை இங்கு சொல்லப்படுகிறது. மனிதன் அடக்க முடியாத பேராசையால் காணி, நிலம், என்று பொருள் சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறான்.  ஆனால் காண்பதற்கு அரியவனும், மகத்துவம் மிக்கவனுமான சிவபெருமானின் திருவருள் பொருளாசை மிக்கவர்களுக்கு கிடைப்பதில்லை.

'மாணி ' என்பதற்கு பிரம்மச்சாரி என்பது பொருள். திருமால் மாவலியை அழித்த பழி தீர இங்கு வந்து வழிபட்டார்.
இத்தலம் கடலூர் குமணங்குளம்  பாதையில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட் பெருஞ்சோதி 

13 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

வடுகூர்
                                                   - நேசமுற
வேற்றா வடுகூர் இதயத்தி னார்க்கென்றும்
தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே-

(நேசமும் உறவும் ஏற்றா -நட்பும் உறவும் ஏற்றுக் கொள்ளாத, வடுகூர் இதயம் -குற்றங்கள் செய்யும்
இயல்புடையவர்) மனதிலே ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தக் கூடிய குற்றங்கள் செய்பவரை நட்பும், உறவும் ஒதுக்கித் தள்ளும். அத்தகையோருக்கு இறைவன் என்றுமே புலப்படாதவன். தானேதானாய் சோதிமயமாய் காட்சியளித்தாலும் தீயோரின் கண்களால் அறியப்பட மாட்டாதவன். வடு -கூர் இதயத்தினார்க்கு வடுகூர்ச் சிவபெருமான்  அரிதானவன்.

பாண்டிச்சேரி சாலையில் வளவனூருக்கு அடுத்து இத்தலம் உள்ளது. வடுகர் வழிபட்ட தலம் ஆதலால்
வடுகூர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

12 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருத்துறையூர்
                            - மல்லார்ந்து
மாசும் துறையூர் மகிபன்முதல் மூவருஞ்சீர்
பேசும் துறையூர்ப் பிறைசூடி -

மல்யுத்தம் செய்யும் வலிமை மிக்க  மல்லர்கள்  எழுப்பும் ஒலியால் மாசுபடியும் ஊர் துறையூர்.
இவ்வூரில் அரசனோடு, நாவுக்கு அரசரான திருநாவுக்கரசரும்,  சம்பந்தரும், சுந்தரரும் புகழ்ந்து
பாடும் பிறைசூடிய பெருமான் கோயில் கொண்டுள்ளான்.

திருத்தளூர் என்று வழங்கப்படும் இத்தலம் பண்ருட்டி அரசூர் சாலையில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

11 January 2014

திருவருட்பா

இன்றைக்கு வைகுண்ட ஏகாதசி. திரு வள்ளலார் பாடியுள்ள பாடல்கள் முருகப் பெருமானையும், சிவபெருமானைப் பற்றியுமே ஆகும். திருமாலைப் பாடியுள்ள பாடல்கள் குறைவானவையே. இன்று அற்புதமான ஒரு பாடல் தியானத்தில் இடம் பெறுகிறது.

வள்ளலார் இறை அனுபவம் பெற்றபின் பாடிய பாடல்களில் 'அனுபவமாலை' ஒன்று. இதில் நூறு முத்துக்கள் உள்ளன.

சிவபோக அனுபவம் என்பது சொல்லுக்கு எட்டாதது ஆகும். எனவே ஒரு தலைவி தன் தோழியிடம் கூறுவது போல் கற்பனைப் பாத்திரங்களால் தன் இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் வள்ளலார்.

புராணக்கதைகள் திருமால் மோகினி அவதாரம் எடுத்ததைச் சொல்கின்றன. அதனால் திருமால் சிவபெருமானின் மனைவி ஆகிறார். வள்ளலார் தன்னைத் தலைவியாகவும், சிவபெருமானைத் தன் தலைவனாகவும் பாடுகின்றார்.

கீழ்வரும் பாடலைப் படியுங்கள்:

தாழ்குழல்நீ  ஆண்மகன்போல் நாணம் அச்சம்  விடுத்தே
                  சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
வாழ்வகைஎன்  கணவர்தமைப்  புறத்தணைந்தாள் ஒருத்தி
                   மாலெனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
                   ஆள்கின்றாள் ஆண்மகனாய்  அறிந்திலையோ அவரைக்
கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
                   கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.

தலைவி  தன் தோழியிடம் சொல்கிறாள்,'தோழி, என் கண்மணி அனையார், என் உயிர் நாயகனார்
அருட் சோதி ஒளி வீச, நாத ஒலிகள் மிகுதியாய் ஒலிக்க, திருமேனியில் தெய்வ மணம் கமழ வந்து கொண்டிருக்கிறார். கற்பூர விளக்கை எடுத்து வா,'
தோழி:  'என்ன நீ, சிறிதும் பெண்களுக்குரிய அச்சமும்,  நாணமுமில்லாமல் எல்லோருக்கும் முன்னால் உன் கணவரை நோக்கிச் செல்கின்றாய்.'
தோழி  உனக்கு ஒன்று தெரியுமா? நான் செல்லாவிட்டால்............!
என் கணவரை  சில நாட்களுக்கு முன் வேறு ஒரு பெண் அணைத்துக் கொண்டாள்! அவள் பெயர் என்ன தெரியுமா? 'மால்' என்ற பெயர் அவளுக்கு! சங்கு, சக்கரம் என்ற இரு படைகளை கையில் ஏந்தியிருக்கிறாள்.
ஆழ்கடலில் தூங்குகின்றவள்! அழகுடைய பெரிய மணிமண்டபத்தில் ஆண்மகனாய்த் தோன்றி ஆட்சி செய்கின்றாள். நான் முன்னே போகாவிட்டால் என்ன ஆகும் சொல்? அதனால்.....
என் உள்ளத்தே உள்ள ஒளிமயமான அவரோடு இரண்டறக் கலந்து அவருடைய கருணைக்கு ஆளானேன். எனவே நான் ஆண்மகனுக்குரிய பண்பைப் பெற்றது என்ன அதிசயம்?

இங்கே வள்ளலார் தான் சிவத்தோடு இரண்டறக் கலந்ததை எடுத்துக் கூறுகின்றார்.
திருமால் மோகினி அவதாரம் எடுத்தது இங்கே கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு வள்ளல் பெருமான் தானும் திருமாலும், சிவபெருமானும் ஒன்றேயான தன் அனுபவத்தை அழகுறப் பாடுகிறார். அனுபவமாலைப் பாடல்கள் ஒவ்வொன்றும் இறை அனுபவம் தரவல்லவை.



















10 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெண்ணெய் நல்லூர்
                                               - இடையாது
சொல்லூரன் தன்னைத் தொழும்புகொளும் சீர் வெண்ணெய்
நல்லூர் அருள்துறையின் நற்பயனே -

சிவபெருமானின் திரு உள்ளத்தால் தோற்றுவிக்கப்பட்டவர் சுந்தரர். அவர் இறைவனுக்குப் பூமாலை தொடுத்து சமர்ப்பிக்கும் பணியைச் செய்து வந்தார். ஒருமுறை உமையம்மையின் சேடியரைக் கண்டு
மனம் தடுமாறியதால் பூமியில் பிறக்குமாறு அவரை சிவபெருமான் பணித்தார். திருமுனைப்பாடி நாட்டுத்
திருநாவலூரில் பிறந்த சுந்தரர் நம்பியாரூரர் என்ற பெயருடன் வளர்ந்து, திருமண வயது எய்தி சடங்கவியாரைத் திருமணம் செய்து கொள்ள முற்பட்டபோது சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் அவருக்கு காட்சி அளித்து ஆட்கொண்டான். திருவெண்ணெய் நல்லூர் ஆலயத்தின் பெயர்
அருள்துறை. இந்த செய்தியே மேற்கண்ட இருவரிகளில் சொல்லப்படுகிறது.

தங்குதடையின்றி செந்தமிழ்ச் சொற்களால் பாடும் திறன் பெற்ற நம்பியாரூரனை அடிமை கொண்ட திருவெண்ணெய் நல்லூர், அருள்துறை இறைவனே உம்மை வணங்குகிறேன்.

சிவபெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரர் முதல் தேவாரப் பாடல் பாடிய தலம். சிவபெருமான்
'பித்தா' என்று அடியெடுத்துக் கொடுக்க தன்னை மறந்து சுந்தரர் பாடிய பாடல் 'பித்தா பிறை சூடி' என்ற பாடலாகும்.

பண்ருட்டியிலிருந்து அரசூர் செல்லும் சாலையில் உள்ளதலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



9 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிடையாறு

                               - தாவாக்
கடையாற்றி  னன்பர்தமைக் கல்லாற்றி னீக்கும்
இடையாற்றின் வாழ்நல் இயல்பே -

முக்தி அடைய வேண்டும் என விரும்பும் அடியார்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கி
திருவிடையாறு என்னும் திருத்தலத்தில் நன்மைதரும் இயல்புடைய சிவபெருமான் அருள்செய்து வருகிறார். ( கல்லாறு - இடையூறுகள் நிறைந்த வழி)

திருவெண்ணெய் நல்லூருக்கு  வட மேற்கில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

8 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

அறையணி நல்லூர்
                                  - ஆவலர்மா
தேவா இறைவா சிவனேஎனும் முழக்கம்
ஓவா அறையணிநல் லூர் உயர்வே -

மகாதேவா, இறைவா, சிவனே என்று அடியவர்கள் முழங்கும் பேரொலி இடைவிடாமல் கேட்கும்
ஊர் அறையணிநல்லூர் சிவன் கோயில் ஆகும்.

அரசுகண்ட நல்லூர் என்று வழங்கப்படும் இவ்வூர் திருக்கோயிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


7 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருக்கோவலூர்
                                           - சொல்வண்ணம்
நாவலர் போற்றி நலம் பெறவே ஓங்குதிருக்
கோவலூர் வீரட்டம் கொள்பரிசே -

நம்முடைய அன்பைத்  தெரிவிக்கும் பொருட்டு பரிசுப் பொருள்களை பிரியமானவர்களுக்கு வழங்குகிறோம். திருக்கோவலூர் என்ற அட்டவீரத் தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானோ
தானே பரிசுப் பொருளாகத் தன்னை நாடி வந்தவர் மனம் மகிழுமாறு விளங்குகிறான். பூக்களுக்குதான் வண்ணம் உண்டு. சொற்களுக்கு உண்டா? ஆழ்ந்த பொருளுடைய சொற்களுக்கு  நிறமும், வாசனையும் உண்டு . நாவன்மையுடைய அறிவுமிக்கவர் சொல்வண்ணப் பூக்களால் போற்றி இறைவனின் அன்பைப் பெற்று நன்மை அடைவர். அவர்களுடைய கண்களுக்கும், மனதுக்கும் பரிசாக விளங்குபவன் திருக்கோவலூர் சிவபெருமான்.

பண்ருட்டி திருவண்ணாமலை சாலையில் உள்ள இவ்வூர் திருக்கோயிலூர் எனவும் வழங்கப்படுகிறது. 
பலசிறப்புகள் உடையது இவ்வூர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி





6 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெல்வெண்ணெய்
                                          - அன்றகத்தின்
நல்வெண்ணெய்  உண்டு ஒளித்த  நாரணன்வந்து ஏத்துகின்ற
நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே -

இந்த இரு வரிகளில்  கோகுலத்தில் கண்ணன் செய்த லீலையைச் சொல்கிறார் வள்ளலார்.
முன்னொரு காலத்தில் வீடுகள்தோறும் சென்று யாரும் அறியாமல் வெண்ணெய் திருடித் தின்று கோபியர் கண்களுக்குப் புலப்படாமல் ஒளிந்து லீலைகள் செய்தான் கண்ணபிரான்.அந்தத் திருமாலாகிய நாராயணன் வந்து வழிபாடு செய்த திருநெல்வெண்ணெய் சிவயோகமே உம்மை வணங்குகிறேன்.

கண்ணனுக்கு வெண்ணெய்
இவ்வூர் 'நெய்வெணை' என்று வழங்கப்படுகிறது. உளுந்தூர்ப் பேட்டை ரயில் நிலையத்திலிருந்து  ஆறு கி. மீ. தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

5 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமுதுகுன்றம்

                                  - தேவகமாம்
மன்றமமர்ந்த வளம்போல் திகழ்ந்துமுது
குன்றம் அமர்ந்த அருட் கொள்கையே -

தேவகமாம் மன்று- சிதம்பரம், வளம் - நன்மை.
சிதம்பரம் எனும் திருத்தலத்தில் அமர்ந்து அன்பர்களுக்கு அருள் வளம் அளிப்பது போல் திருமுதுகுன்றத்திலும் அருள்செய்வதையே கொள்கையாக உடைய சிவபெருமானுக்கு வந்தனங்கள்.

இவ்விடமே விருத்தாசலம். விருத்த காசி எனப்படும் இவ்வூர் காசியினும் சிறந்ததாகும்.
விருதம் - பழமை, உசலம் -மலை. - பழமலை - முதுகுன்றம்.
ஆழத்துப் பிள்ளையார் சிறப்பு. மூவர் பாடல் பெற்றதலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

4 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநாவலூர்
                              - பன்னரிதாம்
ஆவலூர் எங்களுடைய ஆரூரன் ஆரூராம்
நாவலூர் ஞானியருள் ஞாபகமே -

திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூர் ஒரு ஊர். அவ்வூரில் வாழ்ந்து வந்த சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் சிவபெருமான் திருவருளால் பிறந்தவர் சுந்தரர். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர்  நம்பியாரூரர்.
 ஆரூரன் என்றழைக்கப்பட்ட சுந்தரர் பிறந்த ஆரூராம் திருநாவலூரின் புகழை மிகுந்த ஆவலுடன் சொல்ல விரும்பினாலும் சொல்லுவதற்கு வார்த்தைகள் கிடைக்காத புகழ் உடையது. அவ்வூரில் ஞானியர்களின் ஞானமாக விளங்குகிறான் சிவபெருமான்.

திருமாநல்லூர் என்று வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி


3 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவதிகை வீரட்டம்
                                     - வார்கெடிலச்
சென்னதிகை ஓங்கித் திலகவதி யார்பரவும்
மன்னதிகை வீரட்ட மாதவமே -

திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார். அவர் தங்கி சிவபெருமானை வழிபட்டு வந்த தலம் வீரட்டம்.
இத்தலம் கெடிலம் ஆற்றின் வடகரையில் உள்ளது.
தன்னுடைய தவப்பயனால் கெடிலம் நதிக்கரை திருவதிகை வீரட்டத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு திலகவதியார் தொண்டாற்றினார்.

அப்பர் பதினாறு பதிகங்கள் பாடியுள்ளார். அட்ட வீரத்தலங்களில் ஒன்று.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

2 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சோபுரம்
                                                                  - தீங்குறும் ஒன்
னார்புரத்தை வெண்ணகைத்தீ யாலழித்தாயென்று தொழச்
சோபுரத்தின் வாழ்ஞான தீவகமே -

தாரகாசுரனின் புதல்வர்கள் செய்த தவத்திற்கு இரங்கி பிரமதேவர் அவர்கள் விரும்பியவாறு பொன், வெள்ளி, இரும்பினாலாகிய பறக்கும் கோட்டைகளை அருளினார். அந்த முப்புரங்களையும் சிவபெருமான் தன் வெண்பற்கள் தோன்றச் சிரித்து, தன் கோபத்தீயால் அழித்தாரென்று அடியார்கள் தொழ திருச்சோபுரத்தில் ஞானவிளக்காய் அருள் செய்கிற சிவபெருமானுக்கு வந்தனங்கள்.

தியாகவல்லி,சோபுரம் என வழங்கப்படுகிறது. இத்தலம் மணலினால் மூடப்பட்டிருந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட்து.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

1 January 2014

திருவருட்பா - சிவத்தலங்கள் -1.1.2014


திருத்தினைநகர்
                                                               - நம்புவிடை
ஆங்கும் தினையூர்ந் தருளாய் என்று அன்பர்தொழுது
ஓங்கும் தினையூர் உமாபதியே -

திருத்தினைநகர் வாழ் அன்பர்கள் உமாபதியாகிய ஈஸ்வரனைத் தொழுது என்ன வேண்டுகிறார்கள்?
(நம்பு- விரும்புதல், ஆங்கும் - மனநிறைவு)(விடை-காளை) இறைவன் விரும்பி ஏறும் காளை மன நிறைவு அடையுமாறு  உண்ண தினைப் பயிர் நன்கு விளைய அருள் புரிக என்று இறைவனை வணங்கி வேண்டுகிறார்களாம்! தாங்கள் உண்ண அதிகம் விளைய வேண்டும் என்னாது உயிரினங்கள் வயிறு நிறைய வேண்டும் என வேண்டுவது எண்ணி இன்புறத்தக்கது. தினைநகர்-தினையூர் என வந்தது.  

தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. பெரியான் என்ற உழவனுக்கு சிவபெருமான் தினை விளைத்து அருள் புரிந்த காரணத்தால் தினைநகர் என்ற பெயர் வந்தது. இங்குள்ள இறைவியின் பெயர் கருந்தடங்கண்ணி. 
கருந்தடங்கண்ணியும், சிவக்கொழுந்தீசரும் அனைவருக்கும் நல்ல ஆரோக்யத்தையும், அமைதியும்
மனநிறைவும் தரும் வாழ்க்கையையும் அருள்வார்களாக.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி