31 December 2012

76.பெரிய புராணம்


               வாழ்த்து

     உலகெலாம்  உணர்ந்து  ஓதற்கு  அரியவன்

     நிலவுலாவிய  நீர்மலி   வேணியன்

     அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

     மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

              திருச்சிற்றம்பலம்


      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
               -------------------------

      வாடுதல் நீக்கிய மணிமன்று இடையே
      ஆடுதல் வல்ல அருட்பெருஞ்சோதி.

      அருட் பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி
      தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி.    -1.1. 2013

75. திருவருட்பா - சிவ நேச வெண்பா


                   நினைப்பித்தா     நித்தா      நிமலா   எனநீ

                   நினைப்பித்தால்     ஏழை    நினைப்பேன் - நினைப்பின்

                   மறப்பித்தால்    யானும்    மறப்பேன்   எவையும்

                   பிறப்பித்தாய்    என்னாலென்  பேசு.


                   உருவாய்    உருவில்      உருவாகி   ஓங்கி

                   அருவாய்     அருவில்    அருவாய்  -  ஒருவாமல்

                   நின்றாயே   நின்ற   நினைக்காண்ப    தெவ்வாறோ

                   என்தாயே    என் தந்தை   யே.

                                       திருச்சிற்றம்பலம்

                      

30 December 2012

74. திருவருட்பா -சிவநேச வெண்பா


       கண்ணப்பன்  ஏத்துநுதற்  கண்ணப்ப  மெய்ஞ்ஞான

       விண்ணப்ப   நின்தனக்கோர்  விண்ணப்பம் - மண்ணில்சில

       வானவரைப்  போற்றும்  மதத்தோர்  பலருண்டு

       நானவரைச்  சேராமல்  நாட்டு.


       பொன்னின்  றொளிரும்  புரிசடையோய்  நின்னையன்றிப்

       பின்னொன்   றறியேன்   பிழைநோக்கி - என்னை

       அடித்தாலும்  நீயே  அணைத்தாலும்   நீயே

       பிடித்தேனுன்  பொற்பாதப் பேறு.

               

                             திருச்சிற்றம்பலம்

29 December 2012

73. ஶ்ரீ ரமண ஜெயந்தி.

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என்றும் வாழ்கவே.

பிராணன் ஒடுங்கில் பிரக்ஞை ஒடுங்கும் என்போன் பாதம் வாழ்கவே;
பிராணா  யாமம்  சாதனம் என்னும் பெரியோன் பாதம் வாழ்கவே.

பெண் ஆண் பேதம் போக்கிடு என்று பகர்வோன் பாதம் வாழ்கவே;
பிறருக்கு ஈவது தமக்காம் என்னும் பெருமான் பாதம் வாழ்கவே.

குற்றம் செயினும் குணமாக் கொள்ளும் குரவன் பாதம் வாழ்கவே;
அணியார் அருணா சலத்தில் வாழும் அமலன் பாதம் வாழ்கவே.

திருச்சுழி என்னும் தலத்து உதித்த செல்வன் பாதம் வாழ்கவே;
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ரமணன் பாதம் வாழ்கவே.

                         -- ஶ்ரீ ரமண பாத மாலை, ஶ்ரீ சிவப்பிரகாசம் பிள்ளை.

                            திருச்சிற்றம்பலம்



28 December 2012

72. ஆருத்ரா தரிசனம் --திருவருட்பா

கங்கைச் சடையழகும் காதன்மிகும்  அச்சடைமேல்
திங்கட் கொழுந்தின் திருவழகும் -திங்கள்தன் மேல்

சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்

நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் -தேக்குதிரி

புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்
கண்டவர்பால் ஊற்றுகின்ற கன்ணழகும் - தொண்டர்கள்தம்

நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த
நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற

முல்லை முகையாம் முறுவலழ கும்பவள
எல்லை வளர் செவ் விதழழகும் - நல்லவரைத்

தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
வாவென் றருளும் மலர் வாயழகும்

சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மேனி யினழகும்
பார்த்திருந்தால் நம்முட் பசி போங்காண்.




27 December 2012

71. திருவருட்பா - வள்ளலார்


அற்புதப் பொன்  அம்பலத்தே ஆடுகின்ற அரசே

                ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே

கற்புதவு    பெருங்கருணைக் கடலே என் கண்ணே

                 கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே

வெற்புதவு  பசுங்கொடியை  மருவுபெருந்  தருவே

                  வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே

பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்

                   பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.


                             திருச்சிற்றம்பலம்

                  

26 December 2012

70. திருவாய்மொழி--நம்மாழ்வார்.

       என்னுள்  கலந்தவன்  செங்கனிவாய் செங்கமலம்

       மின்னும்  சுடர்மலைக்குக்  கண்பாதம் கைகமலம்

       மன்னுமுழு வேழுலகும் வயிற்றினுள்

       தன்னுள் கலவாதது எப்பொருளும் தானிலையே.


       பலபலவே  ஆபரணம்  பேரும் பலபலவே

       பலபலவே  சோதிவடிவு  பண்பெண்ணில்

       பலபல கண்டுண்டு  கேட்டுற்று மோந்தின்பம்

       பலபலவே ஞானமும்  பாம்பணை மேலாற்கேயோ!

25 December 2012

69. கடல் ஞாலம் - நம்மாழ்வார்

                 


            கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்

            கடல் ஞாலம் ஆவேனும்  யானே  என்னும்

            கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்

            கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்

            கடல்  ஞாலம் உண்டேனும் யானே என்னும்

            கடல் ஞாலத்து ஈசன்  வந்தேறக் கொலோ?

            கடல்  ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?

            கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே. 

24 December 2012

68. திவ்யப் பிரபந்தம் - நோற்ற நோன்பு


                  நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும்
                                                     இனியுன்னை விட்டொன்று

                  ஆற்றகிற்கின்றிலேன் அரவினணையம்மானே!

                  சேற்றுத்தாமரை செந்நெலூடுமலர் சிரீவரமங்கலநகர்

                  வீற்றிருந்த எந்தாய்! உனக்குமிகையல்லேனங்கே.


                  அங்குற்றேனல்லேன் இங்குற்றேனல்லேன் உன்னைக்
                                                         காணுமவாவில் வீழ்ந்து  நான்

                  எங்குற்றேனுமல்லேன் இலங்கை செற்றவம்மானே!

                  திங்கள்சேர் மணிமாட நீடு  சிரீவரமங்கல நகருறை

                  சங்குசக்கரத்தாய்! தமியனுக்கருளாயே.


                                                                           --   நம்மாழ்வார்

23 December 2012

67.திருவருட்பா- வள்ளலார்



பாடற்  கினிய  வாக்களிக்கும்  பாலும்  சோறும்  பரிந்தளிக்கும்

கூடற்  கினிய  அடியவர்தம்    கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்

ஆடற்  கினிய   நெஞ்சேநீ      அஞ்சேல் என் மேல்  ஆணை கண்டாய்

தேடற்  கினிய சீர் அளிக்கும்  சிவாயநம என்று இடு நீறே. 


                     திருச்சிற்றம்பலம்

22 December 2012

66. திருவருட்பா -வள்ளலார்


ஓடு  கின்றனன் கதிரவன் அவன்பின்

ஓடு  கின்றன ஒவ்வொறு நாளாய்

வீடு  கின்றன என்செய்வோம் இனிஅவ்

வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே

வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே

மார்க் கண்டேயர் தம் மாண்பறிந்திலையோ

நாடு கின்றவர் நாதன் தன்   நாமம்

நமச்சிவாயம் காண் நாம்பெறும் துணையே. 

                    ........................

நமச்சிவாயத்தைத்  துணையாக்கிக்  கொண்டால் காலன் அணுக மாட்டான்.


        திருச்சிற்றம்பலம். 

21 December 2012

65. நமோ நம ஓம் சக்தி

   செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்

        சிறுமைகள் என்னிடம் இருந்தால் விடுக்க வேண்டும்

  கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்

        கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்

  தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்

       துணையென்று நின் அருளைத் தொடரச் செய்தே

   நல்லவழி  சேர்ப்பித்துக்  காக்க வேண்டும்

      'நமோ நம ஓம் சக்தி' என நவிலாய் நெஞ்சே!


                                                           -   பாரதியார்.

20 December 2012

64.நாச்சியார் திருமொழி

                    கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?

                      திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?

                    மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

                       விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.


                    செங்கமல நாண்மலர்மேல்  தேன் நுகரும் அன்னம்போல்

                         செங்கண் கருமேனி வாசுதேவனுடைய

                    அங்கைத்தலமேறி அன்னவசஞ்செய்யும்

                         சங்கரையா! உன்செல்வம் சாலவழகிதே.

19 December 2012

63. சரணாகதி


மனமகிழ்ந்து   திருமகளும்  மண்மகளும்  நப்பின்னையும்

நனிவிழைந்து  துளிர் தளிக்கும்  தன்ரோஜாத் திருக்கரத்தால்

தினம்வருட அவர் கரத்துத் திருச்சிவப்புத் தொற்றியதோ

எனச் சிவந்த நினதடியை வேங்கடவா சரண்புகுந்தோம்.

18 December 2012

62. சரணாகதி


வேங்கடத்தான் விரிமார்பில் விழைந்தமர்ந்த கருணையளே

பூங்கமலத்  தளிர்க் கரத்தால் பொறுமை வளர் பூதேவி

ஓங்கியசீர் குணம் ஒளிரும் உயர்தனிப்பேர் தவத்தாயே

வேங்கடத்தான் திருத்தேவி நின்பாதம் சரண் புகுந்தோம்.



கருணைஎனும் திருக்கடலே  காத்தளிக்கப் படைத்தவனே

பெருந்தாயைப் பிரிந்தறியா பெரியோனே வல்லவனே

ஒரு முதல்வா பாரிஜாத உயர்மலரே துயர் களையும்

திருவடிகள் பற்றி உய்ய வேங்கடவா சரண் புகுந்தோம்.
                              ------------
திருவேங்கடத்தான் திருவடிகளே சரணம்.

17 December 2012

61.திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி

அருணனும்தான் வந்துதித்தான்  அலர்ந்தனவால் தாமரைகள்

பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்

திருமார்பா வைணவர்கள் மங்கலங்கள் மிக மொழிந்தார்

அறுதியிலேன் அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்.


விழித்துஎழு நற்காலையில் இத்திருப்பள்ளி எழுச்சிதனை

விழைந்துணர்ந்து படிப்பவரைக் கேட்பவரை நினைப்பவரை

வழுத்துகின்றார் எவரெவர்க்கு வரங்களொடு முக்திதர

எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்.




16 December 2012

60.திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி.

         பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா

         சத்தியனே  மாதவனே  ஜனார்த்தனனே சக்ரபாணி

         வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே

         உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்.


        மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிங்கா

        நற்சிவந்த  வாமனனே பரசுராமா ரகுராமா

       மெச்சுபுகழ் பலராமா திருக்கண்ணார் கல்கியனே

       இச்சகத்து வைகுண்டா வேங்கடவா எழுந்தருள்வாய்.

15 December 2012

59.திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி

நல்கமுகு  தென்னைகளில் பாளைமணம் நெகிழ்ந்தனவால்

பல்வண்ண மொட்டுகள்தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்

புல்லரிக்கும்  மெல் ஈரப் பூந்தென்றல் தவழ்கிறதால்

எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்/


நின்  திருப்பேர் பலகேட்டு நின்னடியார் மெய்மறக்க

நின் கோயிற் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி

நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும்புகழை மிழற்றிடுமால்

நின்செவியால் துய்த்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்.

14 December 2012

58. திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி

தொலைவிடத்தும்  பலவிடத்தும் சுழன்றுதிரி ஏழ் முனிவர்

சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியாவந்தனம் முடித்து

நிலைபெறுநின்  புகழ்சொல்லி   நின்பாதம்  சேவிக்க

மலையடைந்து காத்துளர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்.


ஆங்கந்த பிரம்மாவும் ஆறுமுகனும் தேவர்களும்

ஓங்கி உலகளந்த உயர்கதைகள் பாடுகின்றார்

ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்

தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய். 

13 December 2012

57. திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி.

போர் புரிந்து மதுகைடர் தமையழித்தான் உளத்தொளியே

பார் அனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே

பாரகத்தார்  விழைந்தேத்தும்   சீர்    சீலப்   பெருந்தாயே

கார் வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.


திங்கள் ஒளித் திருமுகத்தில் பொங்கும் அருள் பொழிபவளே

இங்கு கலை வாணியுடன்  இந்திராணி  அம்பிகையாம்

மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி

செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.

12 December 2012

56. திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி


வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்

சிந்துமொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது.

மந்திரங்கள் வாய் மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்

செந்திருக்கண் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்.


எழுந்தருள்வாய் வெங்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் திருக்கமலை விழை மார்பா எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் கோவிந்தா, வேங்கடவா எழுந்தருள்வாய்.



11 December 2012

55.வெள்ளைத் தாமரை


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;

கொள்ளை யின்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;

உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;

கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத் துட்பொருளாவாள்.




10 December 2012

54. திருவாசகம்

             குயிற்பத்து

தேன் பழம் சோலை பயிலும் சிறுகுயிலே இதுகேள் நீ

வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட் கொண்ட வள்ளல்

ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்

மான் பழித்து ஆண்டமென் நோக்கி மணாளனை நீ வரக் கூவாய்.

பொருள்:  சோலைச் சிறுகுயிலே, வானுலகை விட்டு, பூமிக்கு வந்து, மனிதர்கள் உடல் உணர்வை விடுமாறு செய்து, அவர்களுடைய  உள்ளம் புகுந்து, உணர்வு மயமாகி ஆட் கொள்ளும் பார்வதி மணாளனை இங்கு வரும்படிக் கூவுவாய்.

          திருச்சிற்றம்பலம்

9 December 2012

53. திருவாசகம் -திருப்பொற்சுண்ணம்

முத்து அணி கொங்கைகள் ஆட ஆட

மொய்  குழல்  வண்டு இனம் ஆட ஆடச்

சித்தம் சிவனொடும் ஆட ஆடச்

செம் கயல் கண் பனி ஆட ஆடப்

பித்து எம்பிரானொடும் ஆட ஆடப்

பிறவி பிறரொடும் ஆட ஆட

அத்தன் கருணையொடு ஆட ஆட

ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

பொருள்: முத்துமாலைகள் அணிந்திருக்கும் முலைகள் குலுங்க,  அடர்ந்த  கூந்தலில் வண்டுகள் திரண்டிருக்க, மனமானது சிவபெருமானிடம் லயித்திருக்க, சிவந்த கெண்டை மீன் போன்ற கண்களில் நீர் அரும்ப, நான் என் இறைவனிடம் பித்துக் கொள்ள,பக்தர் அல்லாதார் பிறவிப் பிணியில் அழுந்திக் கிடக்க, என் தந்தை சிவபெருமான் யாண்டும் கருணையோடு கூடியிருக்க, அவன் நீராடுதற்கு  நாம் பொற்சுண்ணம் இடிப்போம்.

                                             திருச்சிற்றம்பலம்



8 December 2012

52. திருவாசகம் -திருப்பொற்சுண்ணம்

[பலவகை வாசனைப் பொருட்களை உரலில் இட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். இது பொன் போன்ற நிறமுடையது. சிறிது பொன்னும் சேர்க்கப்பட்டு  இது   திருமஞ்சனத்திற்காக    உபயோகிக்கப்படுகிறது.]

சூடகம்  தோள்வளை  ஆர்ப்ப  ஆர்ப்பத்
தொண்டர்  குழாம் எழுந்து  ஆர்ப்ப ஆர்ப்ப
நாடவர் நம் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பரா பரனுக்கு
ஆடகம் மாமலை அன்ன கோவுக்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

பொருள்: கைவளையும், தோள்வளையும் ஒலிக்க,தொண்டர் கூட்டம் ஆரவாரம் செய்கிறது.    உலகமக்கள் இவையெல்லாம் பயன்படாத வேலை என ஏளனம் செய்ய, அவர்கள் அறிவீனர்கள்
என நாம் ஓலமிடுகிறோம். தன் மெல்லிய திருவடிகளில் பாடகம் அணிந்திருக்கும் பார்வதி தேவியின் மணாளனும், பெரிய பொன் மலை போன்ற பரம் பொருளுமாகிய சிவனாரைப் போற்றிப் பாடி ஆடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம்.

                                            திருச்சிற்றம்பலம்

7 December 2012

51. திருவாசகம் - திருச்சாழல்

(சாழல் என்பது ஒருவகை மகளிர் விளையாட்டு.
தடையும் தடைக்கு ஏற்ற விடையும் பாடுவது  இதில் 
இடம் பெறுகிறது)

கோயில் சுடுகாடு  கொல்  புலித் தோல் நல் ஆடை


தாயும் இலி  தந்தை இலி  தான் தனியன் காண் ஏடி


தாயும் இலி தந்தை இலி தான் தனியன் ஆயிடினும்


காயில் உலகு அனைத்தும் கல்பொடி காண் சாழலோ.

பொருள்: குடியிருப்பது சுடுகாட்டில். அணிவது புலித்தோல். தாய் தந்தை இல்லாதவன்.ஒற்றைஆள்!
இவனும் ஒரு தெய்வமா?
பிரபஞ்சம் அழியும் தன்மையுடையது என்பதைச் சுடுகாடு உணர்த்தும். ஆணவத்தை அழித்தற்கு அறிகுறி
கொல்புலித்தோல். அவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். முழுமுதற்பொருள். ஆதலால் அவன் தனியன்.
உலகம் இருப்பதும் போவதும் அவன் சங்கல்பத்தைப் பொறுத்து இருக்கிறது.
நிலையற்ற உலகில் எதையும் சொந்தம் பாராட்டாதே என்ற கோட்பாட்டைத் தன் வடிவில் வைத்துள்ளான் சிவன்! 
                                       திருச்சிற்றம்பலம்

6 December 2012

50. திருவாசகம் -திருச்சாழல்

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை

ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ.

                        பொருள்

பூசுவது வெண்ணீறு. அணிவது சீறுகிற பாம்பு. பேசுவது வேதம்.

தெய்வம் எனும் பொருளுக்கு இவையெல்லாம் பொருந்துமா?

ஈசன் தானே இயற்கையாகவும், அதில் உள்ள உயிர்கள்

அனைத்துமாகவும் இலங்குகின்றான்.அவனது இயல்பே

இப்படி மூன்று விதங்களில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.

                  திருச்சிற்றம்பலம்  

5 December 2012

49. திருவாசகம்


கடவுளே போற்றி என்னைக் கண்டு கொண்டு அருளு போற்றி

விட உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி

உடல் இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி

சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.

எல்லாமாகி நிற்கும் இறைவா!  உன் அருளுக்கு நான் தகுதி அற்றவன் என்பதை அறிந்தாலும் என்னை ஆட்கொள்.  நெகிழும்படி என் உள்ளத்தை  உருக்கு. உடலை உதிர்த்துவிட்டு நான் விரைவில் முக்தி அடையும்படிச் செய். கங்கையைச் சடாமுடி மேல் தாங்குபவனே, சங்கரனே உன்னை வணங்குகிறேன்.

                                                        திருச்சிற்றம்பலம்

4 December 2012

48. திருவாசகம்

போற்றி என்போலும் பொய்யர்

தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்

போற்றி நின்பாதம் போற்றி

நாதனே போற்றி போற்றி

போற்றி நின் கருணை வெள்ளம்

புதுமது புவனம் நீர் தீ

காற்று இயமானன் வானம்

இருசுடர்க் கடவுளானே.

பொருள்: பொய்யான இந்த உடலில் ஆசை வைத்துள்ள என் போன்றவர்க்கு அருள் புரிவதால் நீ வள்ளல் ஆகிறாய்!  உன் கருணையோ புத்தம் புதிய தேனுக்கு ஒப்பானது. ஐம்பெரும் பூதங்கள்,  சூரியன், சந்திரன், ஜீவாத்மா, ஆகிய எட்டு  மூர்த்திகளாய்  நீ  இருக்கின்றாய். உனக்கு  என் வந்தனங்கள்.

                                                திருச்சிற்றம்பலம்



3 December 2012

47.திருவாசகம்

போற்றி ஓம் நமச்சிவாய                                

புயங்கனே மயங்கு கின்றேன்

போற்றி ஓம் நமச்சிவாய

புகல் இடம் பிறிது ஒன்று இல்லை

போற்றி ஓம் நமச்சிவாய

புறம் எனைப் போக்கல் கண்டாய்

போற்றி ஓம் நமச்சிவாய

சய சய போற்றி  போற்றி.

பொருள்:    ஓம் நமச்சிவாய என்னும் மந்திர வடிவானவனே. பாம்பை அணிந்திருப்பவனே. உலக வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கின்ற எனக்கு போக்கிடம் வேறில்லை. என்னைப் புறக்கணிக்காமல் எனக்கு  அருள் புரிவாய். உனக்கு வெற்றி உண்டாகுக.


                                                          திருச்சிற்றம்பலம்

2 December 2012

46. திருவாசகம்


                                                             காருண்யத்திரங்கல்


                                                தரிக்கிலேன்  காய வாழ்க்கை

                                                சங்கரா  போற்றி  வான

                                                விருத்தனே போற்றி எங்கள்

                                                விடலையே போற்றி ஒப்பு இல்

                                                ஒருத்தனே போற்றி உம்பர்

                                                தம்பிரான் போற்றி தில்லை

                                                நிருத்தனே போற்றி எங்கள்

                                                நின்மலா போற்றி போற்றி.


பொருள்; சங்கரா, சிதாகாசனே, அண்ணலே, ஒப்பில்லாத முழுமுதல் பொருளே, தேவதேவனே, 


தில்லையில் ஆனந்த தாண்டவம் செய்யும் நிர்மலனே உன்னையே வணங்குகிறேன்.
      

1 December 2012

45. திருவாசகம்


சிந்தனை நின்தனக்கு  ஆக்கி நாயினேன் தன்

கண் இணை நின்  திருப்பாதப் போதுக்கு ஆக்கி

வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்

மணி வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர

வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை

மால் அமுதம் பெரும் கடலே மலையே உன்னைத்

தந்தனை செம் தாமரைக்காடு அனைய மேனித்

தனிச்சுடரே இரண்டும் இல் இத்தனியனேற்கே.

பொருள்: அமிர்தப் பெருங்கடலே, மலையே, செந்தாமரை மேனியனே, ஜோதி வடிவே என் மனதை உனக்கு உரியதாக்கினாய்;  கண் இரண்டும், என் வழிபாடும்  உன் திருப்பாத மலர்களுக்கு.  பேச்செல்லாம்  உன்  பெருமையைப் புகழ, ஐம்புலன்களும் உன் அருட்பிரசாதம் பெற   அருளினாய்.   என் உள்ளே நீ புகுந்திருப்பது வியப்புக்கு உரியது. 

                                                  திருச்சிற்றம்பலம்

44. திருவாசகம்


                        வான் ஆகி  மண் ஆகி
                             
                                வளி ஆகி  ஒளிஆகி
                     
                        ஊன் ஆகி  உயிர் ஆகி

                                உண்மையும் ஆய்  இன்மையும் ஆய்க்

                        கோன் ஆகி யான் எனது என்று

                                அவர் அவரைக் கூத்தாட்டு

                        வான் ஆகி நின்றாயை

                                 என் சொல்லி வாழ்த்துவனே!

      ஐம்பூதங்களும், உடலும், உயிரும், தோற்றமும், தோன்றா நிலையும் ஆகி, இறைவனாகி, நான்

      எனது  என்று  அனைவரையும்  கூத்தாடச்  செய்கின்ற   உன்  மகிமையை    என்னால்   

      எப்படி  விளக்க முடியும்.

                                            திருச்சிற்றம்பலம்