30 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சிராப்பள்ளி

                                 - மற்செய்
அராப்பள்ளி மேவும் அவனின்று வாழ்த்தும்
சிராப்பள்ளி  ஞானத் தெளிவே -

கண்ணனாய்ப் பிறந்து மற்போர் செய்து, பாம்பணையில் கிடந்து அருள் புரியும் திருமால் வணங்கி வாழ்த்தும் சிவபெருமான், திருச்சிராப்பள்ளியில்  ஞானவடிவாய், தாயுமானவனாய் அருள்செய்கிறான்.

சிரா என்ற பெயருடைய முனிவர் பள்ளி அமைத்து வாழ்ந்த குன்று ஆதலால் 'சிராப்பள்ளிக் குன்று' என வழங்கலாயிற்று. அடிவாரத்தில் மாணிக்க விநாயகர். மலையின் நடுவே தாயுமானவர் திருக்கோயில்.மேலே 258 படிகள் ஏறினால் உச்சிப் பிள்ளையார் கோயில்.

இறைவன் : தாயுமானேஸ்வரர்
இறைவி    : மட்டுவார் குழலி

திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் ஒன்று உங்களுக்காக.

நன்றுடையானைத்  தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக்  கூறஎன்னுள்ளங் குளிருமே.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

29 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

 உறையூர்  திருமுக்கீச்சரம்

                                                    - சிற்சுகத்தார்
பிற்சநநம் இல்லாப் பெருமை தரும் உறையூர்ச்
சற்சனர்சேர் முக்கீச் சரத்து அணியே -

ஞானத்தினால் சுகம் அடைந்த நல்லவர்களுக்குப் பிறப்பில்லாத பெருவாழ்வு அளிக்கும்  சிவபெருமான்
திருமுக்கீச்சரத்துக் கோயிலில் எழுந்தருளி அழகு செய்கிறார். (சிற்சுகமாம் ஞானசுகம் அடைந்தவர்க்கு பிற்சனனம் இல்லை)

திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதி உறையூர். இதுதான் முக்கீச்சுரம் எனப்படுகிறது. உதங்க முனிவருக்கு
 இறைவன் ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சி கொடுத்த தலம். எனவே இறைவனுக்குப்
 பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர்.
இறைவன் : பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவி    : காந்திமதியம்மை
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

28 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கற்குடி

                                                       - கூழும்பல்
நற்குடியும் ஓங்கி நலம்பெருகு மேன்மைதிருக்
கற்குடியில் சந்தான கற்பகமே -

'கற்பகமரம்' வேண்டுவார் வேண்டுவனவற்றைக் கொடுப்பது என்பர்.  (சந்தான கற்பகம்) வழிவழியாகத் 
தொடர்ந்து உதவுவது. திருக்கற்குடியில் வீற்றிருக்கும் சிவபெருமான் பக்தர்கள் வேண்டுவனவற்றை
யெல்லாம் கொடுத்து அருள்புரியும் சந்தான கற்பகமாய் விளங்குகிறார். திருக்கற்குடியோ பலவகைப்பட்ட விளை பொருட்களும், நல்ல மனிதர்களும் வாழ்வதால் நன்மை பெருகி மேன்மையடைந்த ஊர். இத்தகைய பெருமை மிக்க ஊரில் கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு 
நமஸ்காரம்.

இவ்வூர் உய்யக்கொண்டான் திருமலை என அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் சாலையில் உள்ளது. மார்க்கண்டேயரைக் காப்பாற்ற இறைவன் அருள் புரிந்த தலம்.

இறைவன் : உச்சி நாதேசுரர், கற்பகநாதர்
இறைவி    : அஞ்சனாட்சியம்மை
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலி வெண்பா
திருச்சிற்றம்பலம்

27 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பராய்த்துறை

                                 - மல்ல லொடு
வாழும் பராய்த்துறைவான் மன்னவரும் மற்றவரும்
சூழும் பராய்த்துறைவாழ் தோன்றலெ -

மிகுந்த செல்வத்தால்  வளம் பொருந்தி வாழும் மக்கள் இவ்வூர் அரசனையும், மற்றும் செலவந்தர்களையும்  போற்றித் துதிக்கிறார்கள். அதனால் பெருமையடைந்த மனனனும்
பிறரும் திருப்பராய்த் துறைச் செல்வமான சிவபெருமானை வணங்கிப் போற்றுகிறார்கள்.
பராய் மரங்கள் நிறைந்த நீர்த்துறையாதலால் பராய்த்துறை ஆயிற்று.

இவ்வூர் திருச்சி கரூர் சாலையில் உள்ளது. தாருகாவனம் எனவும் வழங்குகிறது. இந்திரன், குபேரன்
வழிபட்டதலம் என்பர்.
இறைவன் : பராய்த்துறை நாதேஸ்வரர்
இறைவி    :பொன் மயிலாம்பிகை அம்மை
தலமரம்    : பராய் மரம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

26 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கடம்பந்துறை

                                   - கோட்போக்கி
நில்லும் கடம்ப நெறிபோல் எனப்பூவை
சொல்லும் கடம்பந் துறைநிறைவே -

கோணலற்ற தூண்போல் நேர்ப்பாதையிலே செல்லுங்கள் என மரங்களில் வாழும் மைனாப் பறவைகள்
கூறும் திருக்கடம்பந்துறை ஈசனே, பக்தர்கள்  உள்ளத்தில் திருப்தி என்ற நிறைவை அளிப்பவனே உனக்கு நமஸ்காரம்.

குளித்தலை, குழித்தலை, கடம்பர் கோயில் என்று வழங்கப்படுகிறது.
காலைக்கடம்பர், மதியச்சொக்கர், அந்தி ஈங்கோய் என்று சோமாஸ்கந்த வடிவில் அமைந்த மூன்று திருத்தலங்களை ஒரே நாளில் வழிபடுவது சிறப்பு.

இறைவன் : கடம்பவனநாதேஸ்வரர்
இறைவி    : முற்றிலா முலையாள்
தலமரம்     : கடம்பு

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

25 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

சோழ நாட்டுக்  காவிரி தென்கரைத் தலங்கள்

திருவாட்போக்கி

                                                 - ஓங்காது
நாட்போக்கி நிற்கும் நவையுடையார் நாடரிதாம்
வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே -

பெருமையுடைய செயல்களைச் செய்யாமல் வாழ்நாளை வீணாகப் பொழுதுபோக்கிக் கழிக்கும் குற்றமுடையவர்கள் இறைவனை வழிபட மாட்டார்கள். திருவாட்போக்கி என்னும் தலத்தில்
வீற்றிருக்கின்ற வள்ளலே அவர்களுக்கும் அருள்புரிவாய்.

இவ்வூர் ஐயர் மலை, இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை என்றெல்லாம் வழங்குகிறது. மணப்
பாறையிலிருந்து குளித்தலை போகும் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோயில் மலை
மேல் உள்ளது.1140 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

இறைவன்: ரத்தினகிரீசுரர்
இறைவி   : கரும்பார்குழலம்மை
தீர்த்தம்    : காவிரி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்.


20 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

இதுவரை தரிசித்த சோழநாடு காவிரி வடகரைச் சிவத்தலங்கள் ஆடல் வல்லானோடு - விண்ணப்பக்கலிவெண்பா - திருவருட்பிரகாச வள்ளலார். 

1.தில்லைச்சிற்றம்பலம் பெரும்பற்றப் புலியூர் தெய்வம் 2.திருப்புலியூர்க் கோயில் குணக்குன்றம் 3.திருவேட்களத்து விழுப்பொருள் 4.திருநெல் வாயில் நீள் ஒளி 4.திருக்கழிப்பாலைக் களிப்பு 5திருநல்லூர்ப்பெருமணம் வாழ் நன்னிலை 6.திருமயேந்திரப் பள்ளியின் இன்பவாழ்வு 7 தென்திருமுல்லைவாயில் மணிவிளக்கு 8.திருக்கலிக்காமூர் கரும்பு 9.திருசாய்க்காட்டின் தடங்கடல்
10.திருப்பல்லவனீச்சரத்துப் பாவனம் 11.திருவெண்காட்டு மெய்ப்பொருள் 12.கீழைத்திருக்காட்டுப்பள்ளியின் சிவக்கொழுந்து 13. திருக்குருகாவூர்க் கோ14.சீர்காழித்திரவியம்
15.திருக்கோலக்காவின் கொடையாளி 16.புள்ளிருக்கு வேளூர் புரிசடையான் 17.கணமும் திசை மணக்கும் திருக்கண்ணார்க் கோயில் 18.திருக்கடைமுடியின் கருத்தா 19.ஞாலமெல்லாம் வாழ்த்துகின்ற திருநின்றியூர் 20. திருப்புன்கூர்ச்சிவன் 21.திருநீடூர் நிழல் தரு.22.திரு அன்னியூர் அதிபதி 23.திருவேள்விக்குடி வித்தகன் 24.திருஎதிர்கொள்பாடிப் பரம்பொருள் 25.திருமணஞ்சேரியின்
இன்பப்பொருள் 26.திருக்குறுக்கை வீரட்டத்து வியனிறைவு 27.திருக்கருப்பறியலூர் அரசு 28.திருக்குரக்குக்காவின் இன்பக் கனசுகம் 29.திருவாழ் கொளிபுத்தூர் மணிச்சுடர் 30.மண்ணிப்படிக்கரை மங்கலம் 31.திருவோமாம் புலியூர் உத்தமன் 32. திருக்கானாட்டு முள்ளூர் கலைக்கடல் 33.திருநாரையூர் நடுநிலை 34 திருக்கடம்பூர்க் கண் 35. திருப்பந்தணைநல்லூர் பசுபதி
36. திருக்கஞ்சனூர் கண்மணி 37. திருக்கோடிக்காவின் குளிர்மதி 38. திருமங்கலக்குடியின் தேன் 39. திருப்பனந்தாளின் பாலுகந்த பாகு 40. திருவாப்பாடியின் இன்ப வாரிதி 41. திருச்சேய்ஞலூர் செழுங்கனி 42.  திருந்துதேவன்குடித் தெள்ளமுது 43. திருவியலூர் வெற்பு 44. திருக்கொட்டையூர்க் கோமளம் 45. திருஇன்னம்பூர் உறவு 46. திருப்புறம்பயம் உயிர் 47. திருவிசயமங்கை குரு 48. திருவைகாவூர் வாழ்முதல் 49. திருவட குரங்காடு துறை நட்பு 50. திருப்பழனத்து உயிர்க்குயிர்
51. திருவையாறு மேவிய என் ஆதரவு 52. திருநெய்த்தானத்து நித்தியம் 53. பெரும்புலியூர் வாழ் கருணப்பேறு 54. திருமழபாடி வச்சிரம் 55. திருப்பழுவூர் மரகதம் 56. திருக்கானூர்த் தங்கக் கட்டி 57. அன்பில் ஆலந்துறை அணிமுத்து 58. திருமாந்துறையின் மாணிக்க மாமலை 59. திருப்பாற்றுறைப் பரஞ்சுடர் 60. திருவானைக்காவின் அற்புதம்  61. திருப்பைஞ்ஞீலிமேவும் பராபரம் 62. திருப்பாச்சில் ஆச்சிராமத்து அருள்நிலை 63. திருவீங்கோய் மலை இலஞ்சியம் .

இனித் தொடர இருப்பது சோழ நாடு காவிரித் தென்கரைத் தலங்கள்.

திருச்சிற்றம்பலம்.





18 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவீங்கோய்மலை

                                                                  - நீச்சறியா
தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே -

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் இறைவன் அடி சேர்ந்தவர். சேராதவர் துன்பமுறுவர் என்பது வள்ளுவர் வாக்கு. பிறவி எடுத்து  வரும் துன்பத்தைத் தாங்க முடியாது திகைத்து நிற்பவர்களுக்கு அடைக்கலம் அளித்து பாதுகாப்பவர் திருவீங்கோய் மலையில் கோயில் கொண்டிருக்கும் ஈசனாவான். எது போல?
ஆர்ப்பரிக்கும் கடலிலே வீழ்ந்து தவிப்பவரைக் காக்கும் மரக்கலம் போல துன்பம் நேர்கையில் சிவபெருமான் அருள்புரிவார்.

இத்தலம் திருவிங்கநாதமலை என்று வழங்கப்படுகிறது. திருச்சி சேலம் வழியில் முசிறிக்கு அருகில் உள்ளது. அகத்தியர் ஈ வடிவில் சென்று தரிசித்ததால் ஈங்கோய்மலை எனப்படுகிறது. கோயில்
மலையின் மேல் உள்ளது. நக்கீரர் ஈங்கோய் எழுபது பாடியுள்ளார்.

இறைவன் : மரகதாலேசுரர்
இறைவி    : மரகதவல்லியம்மை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

இத்துடன் சோழ நாட்டு காவிரி வடகரைத் தலங்கள்  முடிவுற்றன. இனி தென்கரைத் தலங்கள்.

17 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாச்சில் ஆச்சிராமம்

                                           - எஞ்ஞான்றும்
ஏச்சிரா மங்கலத்தோடு இன்பம் தரும்பாச்சி
லாச்சிரா மஞ்சேர் அருள்நிலையே -

எக்காலத்திலும் (ஏச்சு இரா) எவராலும் குற்றம் சொல்லுதற்கு இடமே இல்லாமல் மங்கலத்துடன்
இன்பமும் தரும் இடம் பாச்சிலாச்சிராமம். இவ்விடத்தில் நின்று அருள்பாலிக்கும் சிவபெருமானின்
திருவடிகளுக்கு வந்தனங்கள்.

திருவாசி என்றழைக்கப்படும் இவ்வூர் திருச்சி- சேலம் சாலையில் உள்ளது. இங்கு  கொல்லி மழவன்
மகளுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் முடக்கு நோய் நீக்கத் திருப்பதிகம் பாடினார் ஞானசம்பந்தர்.

இறைவன் : மாற்றறிவரதர்
இறைவி    : பாலசெளந்தரி
தலமரம்     : வள்ளி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

16 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பைஞ்ஞீலி

                                      -  மானைப்போல்
மைஞ்ஞீல வாட்கண் மலராள் மருவுதிருப்
பைஞ்சீலி மேவும் பராபரமே -

மான்களின் கண்கள் அழகானவை. மருட்சி உடையவை.கருநீல நிறத்தோடு, வளைந்து மலர் போல் ஒளி நிறைந்தவை. அத்தகைய அழகுடைய விசாலமான கண்களுடைய அன்னை தழுவும் திருப்பைஞ்ஞீலிச் சிவனே உம்மை வணங்குகின்றேன் என்றவாறு.

இவ்வூர் திருச்சியிலிருந்து மண்ணச்ச நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது. நீலி என்பது ஒரு வகை வாழை. இதை மனிதர் பயன்படுத்துவது இல்லை. இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு நீரில் விட்டு விடுவர்.
பசியால் வாடிய அப்பருக்குச் சிவன் அந்தணர் வடிவில் வந்து கட்டமுது தந்த இடம்.
இறைவன் : நீலகண்டேஸ்வரர்
இறைவி    : விசாலாட்சியம்மை
தலமரம்     : நீலி வாழை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்


15 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவானைக்கா

                                            -   நாற்றிசையும்
தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென்றா க்குவிக்கும்
ஆனைக்கா மேவியமர் அற்புதமே -

திருவானைக்கா என்ற ஊர் ஆனைகள் இருந்த சோலை எனப்பொருள்பட ஆனைக்கா எனப்படுகிறது.
இது நான்கு திசைகளிலும் சோலைகள் உள்ள ஊர். இச்சோலைகளில் நறுமணம் வீசும் மலர்கள். மலர்களிலோ தேன்! இவ்வாறு நாற்றிசை மலர்களிலிருந்தும் வழிகின்ற தேன் கடல் போல் காட்சி அளிக்கிறதாம்! 'தேன்கடலென்றாக்குவிக்கும்' ஆனைக்காவில் அற்புதவுருவினராய் விளங்குகிறார்
சிவபெருமான்.

திருச்சிராப்பள்ளி நகரில் காவிரி வடகரையில் அமைந்துள்ளது  இவ்வூர். இக்கோயிலின் கருவறை
காவிரி ஆற்று நீரின் மட்டத்துக்குக் கீழே இருப்பதால் நீர் ஊறிய வண்ணம் உள்ளது. இது பஞ்ச பூதத்
தலங்களில் அப்புத் தலம்.(அப்பு - நீர்) ஆதிசங்கரர் இங்கு யந்திரப் பிரதிஷ்டை செய்துள்ளார். அகிலாண்டேஸ்வரியின் உக்கிரத்தைத் தணிக்க கோயில் முன்பு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, இரு செவிகளுக்கு ஆபரணமாக ஶ்ரீ சக்கரங்கள் இரண்டினைச் செய்து அவற்றைத் தாடங்கமாக அணிவித்துள்ளார். இக்கோயிலின் நான்காவது மதில் சுவர் முப்பத்திரண்டு அடி உயரம், எட்டாயிரம் அடி
நீளம் உடையது. இங்கு வெள்ளை யானையும், சிலந்தியும் வழிபட்டுள்ளன. சிலந்தியே மறுபிறவியில்
கோச்செங்கட் சோழனாய் பிறந்து முக்தி அடைந்தது என்பர்.

இறைவன் : ஜம்புகேஸ்வரர்
இறைவி    : அகிலாண்டேஸ்வரி
தலமரம்     : வெள்ளை நாவல் மரம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்




14 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாற்றுறை

                                           - ஏந்தறிவாம்
நூற்றுறையில்  நின்றவர்கள் நோக்கிமகிழ் வெய்துதிருப்
பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே -

உயர்வான நல்லறிவைத் தரும் நூல்களை ஓதும் நன்னெறியில் நிற்கும் பெரியோர்கள் என்ன செய்வார்கள்? தெய்விகச் சுடரொளியாய் திருப்பாற்றுரையில் வீற்றிருக்கும் சிவபெருமானை நோக்கி
வணங்கி  மகிழ்வெய்துவார்கள். உயர்ந்த நூல்கள் எவை? திருமந்திரம், திருவாசகம், திருவருட்பா, திருப்புகழ், திருக்குறள், தேவாரம், திவ்யப்பிரபந்தம் முதலியன.

ஏந்தறிவாம்  நூற்றுறை - உயர்ந்த அறிவைத்தரும் கல்வி நூல் வகைகள்

திருப்பாத்துறை என்று அழைக்கப்படும் இவ்வூருக்கு மகப்பேறு இல்லாதவர்கள்  வந்து அம்பிகையை வழிபட்டுச் செல்கின்றனர்.

இறைவன் : ஆதிமூலேஸ்வரர்
இறைவி    : மேகலாம்பிகை
 தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

13 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமாந்துறை

                                          - நீலங்கொள்
தேந்துறையில் அன்னமகிழ் சேக்கை பலநிலவு
மாந்துறைவாழ்  மாணிக்க மாமலையே -

நீர் நிலைகளில் நீலநிற மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்தக் கருங்குவளை மலர்களில் தேன் நிறைந்து மணம் பரப்புகிறது. அன்னப்பறவைகள் மகிழ்வுடன் அமர்ந்து கொள்ளும் தாமரைமலர்கள்
பலவும் காணப்படுகிற திருமாந்துறை எனும் ஊர். இங்கே மாணிக்கமலை போல் வீற்று ஒளிமழை
பொழியும் சிவபெருமானை வணங்குகிறேன்.

இவ்வூர் லால்குடிக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. வடகரை மாந்துறை என்று வழங்கப்
படுகிறது.

இறைவன் : ஆம்ரவனேஸ்வரர்
இறைவி    : அழகம்மை
தலமரம்     : மா

திருவருட்பிரகாசவள்ளலார்  :  விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

12 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திரு அன்பில் ஆலந்துறை

                                                               - நானூறு
கோலம் துறைகொண்ட கோவையருள் கோவைமகிழ்
ஆலந்  துறையின் அணிமுத்தே -

நானூறு அகப்பொருள் துறைகளைக் கொண்ட நூல் திருக்கோவையார். இந்த நூலை ஒரு அரசனாய்
(கோவாய்) மகிழ்ந்து ஏற்றுக் கொண்ட அன்பில் ஆலந்துறையின் அழகிய முத்தே சிவபெருமானே.

அன்புடையார் இல்லம் அன்பில். திருக்கோவையார் மாணிக்க வாசகர் அருளியது. அது நானூறு அகத்துறைகளை உடையது. இதனை மாணிக்கவாசகர் சொல்ல இறைவர் எழுதினார் என்பர்.

ஊர்ப்பெயர் அன்பில்.கோயிலின் பெயர் ஆலந்துறை. திருச்சியிலிருந்தும் லால்குடியிலிருந்தும்
செல்லலாம். பிரமன், வாகீச முனிவர் வழிபட்டதலம்.

இறைவன் : சத்தியவாகேஸ்வரர், ஆலந்துறைநாதர்
இறைவி    : செளந்தரநாயகி
தலமரம்     : ஆலமரம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

11 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கானூர்

                                 - தேய்க்களங்கில்
வானூர் மதிபோல் மணியால் குமுதமலர்
கானூர் உயர்தங்கக் கட்டியே -

தேய்கின்ற களங்கம் உள்ள  நிலவின் ஒளியால் குமுதமலர்கள் இரவில் மலரும். ஆனால் திருக்கானூர் என்னும் இப்பதியில் கோயில் கொண்டிருக்கும் சொக்கத்தங்கமாகிய சிவனின் அருளால், தேயாத  குற்றமற்ற முத்துக்களின் ஒளி குமுதமலர்களை மலர்விக்கும் சிறப்புடையது.

தற்பொழுது இவ்வூர் இல்லை. ஒருசில குடியிருப்புகள் மட்டும் உள்ளனவாம். இவ்விடம் மணல்மேடு
எனப்படுகிறது. கொள்ளிடக்கரையில் கோயில் மட்டுமே உள்ளது.

இறைவன்: செம்மேனிநாதர்.
இறைவி   : சிவலோகநாயகி
தீர்த்தம்    : கொள்ளிடம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்    



10 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பழுவூர்

                                              - துன்னுகின்ற
நாய்க்குங் கடையேன் நவைதீர் நற்கருணை
வாய்க்கும் பழுவூர் மரகதமே -

நாயைவிடக் கீழான என்னுடைய குற்றங்களெல்லாம் நீங்கும் பொருட்டுத் திருவருள் செய்யும் திருப்பழுவூர் மரகதமே, உம்மை வணங்குகிறேன். இறைவனுடைய சந்நிதானத்தில் தன்னைத்
தாழ்த்தி, கடவுளை உயர்த்திக் கூறுதல் மரபாகும். அதனால் நாய்க்கும் கடையேன் என்றார்.
மரகதம் பச்சை நிறமுடையது. பசுமை குளிர்ச்சி தரும். இறைவன் கருணை குளிர்ச்சி தரும்.
எனவே மரகதம் என்றார்.
இவ்வூர் திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ளது. இப்போது கீழப்பழுவூர் என்று
வழங்கப்படுகிறது. இங்கு ஆல்( பழு) தல மரமாதலால் பழுவூர். இங்கு அம்பிகை தவம் செய்தாள்
எனவே யோகவனம் எனப்பட்டது.

இறைவன் : வடமூலநாதேஸ்வரர்
இறைவி    : அருந்தவநாயகி
தலமரம்     : ஆல்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்


9 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமழபாடி

                                                           -   விரும்பிநிதம்
பொன்னும் கெளத்துவமும் பூண்டோன் புகழ்ந்தருளை
மன்னு மழபாடி வச்சிரமே -

விருப்பத்துடன் தினமும் பொன்னாடையும், கெளத்துவ மணிமாலையும் அணிந்த திருமால்
வழிபடும் திருமழபாடியில் வீற்றிருக்கும் வைரத்தூண் போன்ற பெருமானே, உம்மை வணங்கு
கிறேன். (உறுதியான மரத்தை வச்சிரம் பாய்ந்த மரம் என்பர். வச்சிரம்- மரத்தின் காழ். மூங்கில்,
வாழை, பப்பாளி இவையெல்லாம் வச்சிரம் இல்லாத மரங்கள்.  மன உறுதி இருப்பவர்கள் வச்சிரம்
பாய்ந்த மரம் போன்றவர்கள். இல்லாதவர்கள் பொத்தல் மரமொப்பர். வச்சிரத்தை வைரம் என்பர்.)

இவ்வூர் திருவையாற்றுக்கு வடமேற்கில் கொள்ளிடத்தின் மேலைக்கரையில் 6 கி.மீ. தொலைவில்
உள்ளது. இத்தலத்தில் கொள்ளிடம் வடக்கு முகமாகப் பாய்கிறது.
''பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே யுன்னையல்லால் இனியாரை நினைக்கேனே'' சுந்தரர் தேவாரம்
இறைவன் : வஜ்ரத்தம்பேஸ்வரர்
இறைவி    : அழகாம்பிகை
தீர்த்தம்     : கொள்ளிடம்
தலமரம்    : பனை
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

8 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

பெரும்புலியூர்

                                                                         - மைத்த 
கரும்புலியூர்க் காளையொடும்  கண்ணோட்டம் கொள்ளும் 
பெரும்புலியூர்  வாழ்கருணைப் பேறே -

அமாவாசை இருட்டு என்பார்களே அதுபோல இருண்ட இரவு நேரம்.அந்த இரவில் தன் காதலியைத் தேடி வந்தவன் எதிரே ஒரு புலி தோன்றுகிறது. இரவில் அதுவும் கருமையாய்த் தோன்ற அதன் மேல்
அவன் ஏறிக் கொண்டு கொள்ளிடக் கரையை அடைந்தான். அவன் புலிக்கு இரையாகாதபடி பெரும்
புலியூரில் வாழும் கருணைத் தெய்வமாம் சிவபெருமான் காப்பாற்றினார்.

இது திருப்பெரும்புலியூர். ஐந்து புலியூர்களில் இதுவும் ஒன்று. தில்லை ஸ்தானத்திலிருந்து
4 கிலோ மீட்டத் தூரத்தில் உள்ளது. 

இறைவன் : வியாக்கிரபுரீஸ்வரர்
இறைவி    : சவுந்தர நாயகி
தீர்த்தம்     : காவிரி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

7 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெய்த்தானம்

                                          - பொய்யாற்றி
மெய்த்தான   நின்றோர்  வெளித்தான மேவுதிரு
நெய்த்தானத்  துள்ளமர்ந்த நித்தியமே -

சொல்லிலும் செயலிலும் பொய்யர்களாய் நடப்பார்கள். நல்லொழுக்கம் உள்ளவரைப் போல் நடித்து
ஏமாற்றுவார்கள். அவர்களது வஞ்சத்தை, அனைவரும் அறியும்படி செய்யும்  திருநெய்த்தானம் என்ற பதியில் வீற்றிருக்கும் என்றும் உள்ள பொருளாம் சிவமே உம்மை வணங்குகிறேன்.

இத்தலம் மக்களால் தில்லை ஸ்தானம் என வழங்கப்படுகிறது. திருவையாற்றுக்கு 3 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. சப்தஸ்தானங்களில் ஒன்று.சரஸ்வதி, காமதேனு, கெளதம முனிவர் ஆகியோர்
வழிபட்டதலம்.

இறைவன்: நெய்யாடியப்பர்
இறைவி   : பாலாம்பிகை
தீர்த்தம்    : காவிரி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்


6 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவையாறு

                                                       -  பண்பகன்ற
வெய்யாற்றி  னின்றவரை மெய்யாற்றி  னேற்றுதிரு
ஐயாற்றின்   மேவியஎன்  ஆதரவே -

நற்பண்புகள் இல்லாத தீயவர்களை  நல்வழிப்படுத்தி  உயர்த்துவதற்காக திருவையாற்றில்  கோயில் கொண்டு துணை இருக்கும் சிவமே! உமக்கு நமஸ்காரம்.

தஞ்சாவூரிலிருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. அப்பர் பெருமான்
கயிலைக் காட்சியைக் கண்டு களித்த தலம். மரகத, ஸ்படிக லிங்கங்களுக்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் பதிகங்கள் உள்ளன.

இறைவன் : பஞ்சநாதேஸ்வரர், ஐயாற்றீசர்
இறைவி    : அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 


5 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பழனம்

                                               - மாத்தழைத்த
வண்பழனத்  தின்குவிவெண்  வாயில்தேன்வாக்கியிட
உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே -

 தழைத்து வளர்ந்துள்ள மாமரங்கள், வளம் நிறைந்த வயல்வெளிகள், குவிந்து கிடக்கும் வெண்மையான மணல்! உயரமான மரங்களில் தேனீக்கள் கூடுகளை அமைத்திருக்கின்றன. கொம்புத்தேன் சிந்துகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பழனத்தில் கோயில் கொண்டிருப்பவர் என் உயிருக்கு உயிரான
சிவபெருமானாவார். அவரை வணங்குகிறேன்.

இத்தலம் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. கதலிவனம் என்றபெயரும் உண்டு. சந்திரன் வழிபட்டதலம்.

இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி    : பெரிய நாயகி அம்மை
தலமரம்     வாழை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

4 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவடகுரங்காடு துறை

                                         -  உய்யும் வகைக்
காத்தும் படைத்தும் கலைத்துநிற்போர் நாடோறும்
ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே -

மனிதர்கள் வாழும் பொருட்டு முத்தொழிலும் செய்கின்ற பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகியோர் நாள்தோறும் வழிபாடு செய்கின்ற குரங்காடு துறைச் சிவனே, நீயே என்னுடைய நண்பனாவாய்.

ஆடுதுறை பெருமாள்கோயில் என வழங்கப்படும் இத்தலம் திருவையாற்றுக்குக் கிழக்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது.வடகுரங்காடுதுறையில் வாலியும், தென்குரங்காடு துறையில் சுக்ரீவனும்
வழிபட்டனர் என்பர்.
கர்ப்பிணிப்பெண் ஒருத்தி தாகத்தால் தவித்தபோது அவள்தாகத்தைத் தீர்க்கத்  தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்று பெயர்.
சிட்டுக்குருவி வழிபட்டதால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றுஇறைவன் பெயர் வழங்குகிறது. நடராஜர் சிவகாமியம்மையுடன்  சிலாவடிவில் காட்சியளிக்கிறார்.சம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

இறைவன் : குலைவணங்கீஸ்வரர், அழகுசடைமுடிநாதர்
இறைவி    : அழகுசடைமுடியம்மை
தலமரம்     : தென்னை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்
  

3 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவைகாவூர்

                                                                - மண்ணுலகில்
வைகாவூர் நம்பொருட்டால் வைகியதென்று அன்பர்தொழும்
வைகாவூர் மேவியவென் வாழ்முதலே.

இதுவரை இந்த பூமியிலே தோன்றாத ஊர் நமக்காக நாம் கடைத்தேறும் பொருட்டுத் தோன்றியுள்ளது!
நாம் சென்று மனித வாழ்க்கைக்கு முதல்வனாய் விளங்கும் சிவபெருமானை தொழுது உய்வோம் என
அன்புடையவர்கள் வந்து வணங்கும் திருவைகாவூர் சிவனே உன்னை வணங்குகிறேன்.

வாழ்முதல் - வாழ்வுக்கு முதற் பொருளாக இருப்பவன். 'போற்றி என் வாழ்முதலாகிய பொருளே' எனத் தொடங்குகிறது  மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில்  அருளிய திருப்பள்ளிஎழுச்சி.
முற்காலத்தில் இதன் பெயர் 'வைகா' என்பதாகும். வில்வவனம், திருவைகா என்ற பெயர்களும் உண்டு.
நந்தி ஈஸ்வரனைப் பார்த்துக் கொண்டிராமல் கிழக்கு நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் சிவராத்திரி சிறப்பு. வேடன் ஒருவனைப் புலி துரத்த, பயந்த அவன் வில்வமரத்தில் ஏறி
அமர்ந்து கொண்டான். உறங்காமல் இருக்க வில்வ இலைகளைப் பிய்த்து ஒவ்வொன்றாகக் கீழே
போட்டான். அன்று சிவராத்திரி நாள். மறுநாள் காலையில் இறைவன் வேடனுக்கு அருள் புரிந்தார்.
சம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளர்.
இறைவன்  : விக்னேஸ்வரர்
இறைவி     : வளைக்கையம்மை
தலமரம்      : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்



2 June 2013

திருவருட்பா -- சிவத்தலங்கள்

திருவிசயமங்கை

                                                 -மாற்கருவின்
கண்விசைய மங்கைக் கனிபோல் பெறத்தொண்டர்
எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே -

ஆன்மாக்கள்  மீண்டும் மீண்டும் கருவிலே உருவாகிப் பிறக்கும். வருந்தும். இவ்வாறு பிறவாமல் இருக்க
தொண்டர்கள் விசயமங்கையில் கோயில் கொண்டிருக்கும் குருநாதனாம் சிவபெருமானிடம் சென்று வேண்டி வழிபடுவர். உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அவர்களது எண்ணம் நிறைவேறுவது திண்ணம்.
விசையமங்கை- விசய மங்கலம். மங்கலம் என்பது மங்கை என மருவி வழங்கும்.

இப்பதி புறம்பயத்துக்கு மேற்கில் 4 கி. மீ தொலைவில் உள்ளது.
இறைவன் : விஜயநாதர்
இறைவி    : மங்களாம்பிகை
தீர்த்தம்     : அர்ச்சுன தீர்த்தம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

திருச்சிற்றம்பலம் 

1 June 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புறம் பயம்

                                                         - முன்னம்பு
மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம்
ஏற்கும் புறம்பியம் வாழ் என்னுயிரே -

முன்னொரு காலத்தில் (அம்புமால்) ஊழிவெள்ளமாகிய நீர்ப்பெருக்கு (புறம்பியலா) இவ்வூர் எல்லையைத் தாண்டி நிற்கும் என அருள் செய்ய இப்பெயர் பெற்றது. இவ்வூரில் வாழும் என்
உயிரனைய சிவமே உம்மை வணங்குகிறேன்.

இவ்வூர் கும்பகோணத்திற்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கல்யாணமாநகர், புன்னாகவனம் என்பது வேறு பெயர்கள். பிரளயங் காத்த விநாயகர் சிறப்பு. ஆண்டுக்கு ஒரு முறை விநாயக சதுர்த்தியன்று மட்டும் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இறைவன் : புன்னைவனநாதர்
இறைவி    : கரும்பன்ன சொல்லம்மை
தலமரம்     : புன்னை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா

திருச்சிற்றம்பலம்