28 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கேதாரம்
                                 - சிங்காது
தண்ணிறைந்து நின்றவர்தாம் சார்திருக் கேதாரத்தில்
பண்ணிறைந்த கீதப் பனுவலே -

திருக்கேதாரத்தில் குறைவற்ற, அருள் நிறைந்து விளங்கும் சிவபெருமானை, அருள் நிரம்பப் பெற்ற சான்றோர்கள் சார்வர். அங்கு பண்ணிசையாய், இசைப்பயனாய்  விளங்குகிறான் கேதார ஈஸ்வரன்.

இது ஜோதிர்லிங்கத்தலம். ஹரித்வாரிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார்  - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

27 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திரு அனேகதங்காவதம்
                                         - நீடுபவம்
தங்கா தவனேக தங்கா பதஞ்சேர்ந்த
நங்காத லான நயப்புணர்வே -

'அனேகதங்கா பதம் சேர்ந்தவர்க்கு நீடுபவம் தங்காது' - நம் காதலனனான விரும்பத்தக்க ஞானமயமானவன் சிவபெருமான். அவன் வீற்றிருக்கும் 'அனேகதங்காவதத்தை' நினைந்து வழிபட்டால்
பிறவிப் பிணி நீங்கிவிடும்.
ஹரித்துவாரத்திலிருந்து கேதார்நாத் செல்லும் வழியிலுள்ள கெளரிகுண்டம் என்ற இடமே இத்தலம். உமையம்மை தவம் செய்த தலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

26 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

இந்திர நீலப்பருப்பதம்
                                      -போகிமுதல்
பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடிவைத்த தெய்வத் திலகமே -

வடநாட்டுத்தலங்கள் ஐந்துள் இது இரண்டாவது தலம். இமயமலைச் சாரலில் உள்ளது.
நீலகண்ட சிகரம் என்ற அழகிய பெயரால் அழைக்கப்படும் இத்தலம் இந்திரன் வழிபட்டதாலும்,
மேகங்கள் சூழ்ந்திருப்பதாலும் இந்திர நீலப்பருப்பதம் என அழைக்கப்படுகிறது. இறைவன் நீலாசல நாதர். இறைவி நீலாம்பிகை.

தெய்வங்களுள் முதன்மையானவன் சிவபெருமான். இந்திரன்முதல் பலரும் நீலப்பர்வத இறைவனை போற்றிவழிபடுகின்றனர்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

25 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பருப்பதம்
                                - தாபமிலாப்
பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில்
யோகியர்கள் ஓதிட வாழ் ஒப்புரவே -
சர்க்கரைப் பாகும், வெல்லப்பாகும் எத்தனை இனிப்பானவை! மகிழ்ச்சியளிப்பவை! இனிப்பாக
யாராலாவது பேச முடியுமா? அன்பும் கருணையும் நிறைந்த சொற்கள் இனிப்பானவை. அத்தகைய இனிய சொற்களைக் கூறும் மங்கை உமையம்மை.
உமையம்மையோடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யோகியர்கள் போற்றிப்புகழ திருப்பருப்பதத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானே!
இத்தலம் ஆந்திர மாநிலத்தில் மல்லிகார்ச்சுனம் என்றும் சீசைலம் என்றும் வழங்கப்படுகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

24 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருக்கோகரணம்
                                                              - மண்ணகத்துள்
கோபலத்தில் காண்பரிய கோகரணம் கோயில் கொண்ட
மாபலத்து  மாபலமா  பலமே -

இப்பூவுலகில் அரசாள்கின்ற மன்னர்கள் தங்களுடைய  வலிமையால் வெற்றி காணமுடியாதவன் கோகரணத்து இறைவன். இப்பதியில் மாபலம் என்ற கோயிலில் மகாபலசாலியாய், மாபலேச்சுரன் என்ற நாமத்தோடு விளங்கும் சிவபெருமானே உம்மை வணங்குகிறேன்.

இராவணன் இலங்கையில் ஸ்தாபிக்க சிவபெருமானிடம் சிவலிங்கத்தைப் பெற்றுக்
கொண்டான்.தேவர்களின் விருப்பப்படி விநாயகர் சிவலிங்கத்தை இத்தலத்தில் கீழே வைக்கும்படிச் செய்தார். கயிலை மலையையே தூக்கியவன் இராவணன். தன்பலம்  முழுமையும் திரட்டி சிவலிங்கத்தை எடுக்க முயன்றும் முடியாமையால் இது 'மாபலலிங்கம்' என்றான். இராவணன் எடுத்த போது சிவலிங்கம் பசுவின் காதுபோல் குழைந்து நீண்டபடியால் இத்தலம் கோகர்ணம். கோ- பசு, கர்ணம் - காது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

23 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிரும்பை மாகாளம்
                                            - பக்தியுள்ளோர்
எண்ணும் புகழ்கொள் இரும்பைமா காளத்து
நண்ணும் சிவயோக நாட்டமே -

புகழ் நிறைந்த திருவிரும்பை மாகாளத்து சிவபெருமானை பக்தியுள்ளோர் விரும்புவர்.

இவ்வூர் புதுச்சேரி திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ளது. மாகாளர் வழிபட்டதலம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

22 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவரசிலி
                                - தேர்ந்தவர்கள்
தத்தமது மதியால் சாரும் அரசிலியூர்
உத்தம மெய்ஞான ஒழுக்கமே -

 ஞானம் அளிக்கும் நூல்களை ஓதிய அறிவுத் தெளிவுடையவர்கள் வந்துசேரும் ஊர் அரசிலி.
இங்கு சிவபெருமான் தன்னை வந்தடைந்தவர்க்கு மேன்மையான நன்னெறியை புகட்டுபவனாக
விளங்குகிறான்.

ஒழிந்தியாப்பட்டு என்று வழங்கப்படும் இத்தலம் கிளியனூர் வழி புதுச்சேரி சாலையில் உள்ளது.
இங்கு பிரதோஷ வழிபாடு சிறப்பு.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

21 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவக்கரை

                                                          -எம்மதமும்
சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே -

உபநிடதங்கள் பரம்பொருள் ஒன்றே என்ற கொள்கையை உணர்த்துவன. சிவமே உபநிடதங்கள்
 கூறும் பரம்பொருள்! எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய வினையை
நீக்கித் தாங்குபவர் திருவக்கரை சிவபெருமான் ஆவார்.

'வக்கிரன்'  வழிபட்டதால் வக்கரை. திருவக்கரை காளியைக் காணக் கண்கோடி வேண்டும்.
அங்கு ஏதோ ஒரு அற்புதமான சக்தி இருக்கிறது. பவுர்ணமி நாளில் வழிபடுவது சிறப்பு.
திண்டிவனம், மயிலம்வானூர் வழி பாண்டிச்சேரி செல்லும் பாதையில் உள்ளது. இறைவன் -சந்திரசேகரர், இறைவி -வடிவாம்பிகை.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

20 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


அச்சிறு பாக்கம்
                                                - துன்னுபொழில்
அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே -

அச்சிறுப்பாக்கத்தில் தேன்மலர்ச் சோலைகள் உள்ளன. மலர்களிலிருந்து தேன் பொழிகிறதாம்! அப்படியானால் எவ்வளவு தேன் இருந்திருக்க வேண்டும்! இவ்வூர் மக்கள் அவரவர் பின்பற்றி வந்த மதங்களிலிருந்து விலகி பரசிவஞான வழியை ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்த சிவபெருமானே, வந்தனங்கள்.

அச்சரப்பாக்கம் என்று வழங்கப்படும் இவ்வூர் சென்னை விழுப்புரம் சாலையில் உள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடம் ஆதலால் அச்சிறுப்பாக்கம். ( அச்சு+ இறு+ பாக்கம்)

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி  

19 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கழுக்குன்றம்
                                - நன்னெறியோர்
துன்னுநெறிக் கோர்துணையாத் தூய்கழுக் குன்றினிடை
முன்னும் அறிவானந்த மூர்த்தமே -

நல்ல நெறியில்  வாழுகின்ற  சான்றோர்களின் உள்ளமானது, அதிலிருந்து நீங்காமல் அவர்களைக் காத்து, துணையாய் விளங்குவது திருக்கழுகுன்றம். இங்கு சத், சித், ஆனந்தம் ஆகிய, உண்மை ,அறிவு, ஆனந்தம் மூன்றும் தனித்தனியாகவும், கலந்தும் நிற்பவர் சிவபெருமான் ஆவார்.

இவ்வூர் செங்கல்பட்டிலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ளது. மலைமேல் உள்ள கோயில் மலைக் கோயில் எனவும், ஊருக்குள் உள்ள கோயில் தாழக் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.ஒவ்வொரு நாளும் உச்சிப் பொழுதில் கழுகுகள் வந்து உணவு பெற்றுச் செல்கின்றன. மலை வலம் வந்தால் உடற்பிணி நீங்கும் எனக் கருதப்படுகிறது. இது மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். மணிவாசகருக்கு  இறைவன் குருவடிவாகக் காட்சிதந்த தலம். இறைவன் -வேதகிரீசுரர், இறைவி - பெண்ணின் நல்லாள்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி



18 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிடைச்சுரம் 
                                                               - ஈடில்லை
என்னும் திருத்தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின்
மன்னும் சிவானந்த வண்ணமே -

சிவபெருமானை மிகச்சிறப்பாக எந்தக் குறைபாடும் இல்லாது வழிபடுகின்ற திருத் தொண்டர்கள்
வாழும் இடம் திருவிடைச்சுரம்.  சச்சிதானந்தமாய் விற்றிருக்கும் சிவபெருமானை ஈடிணையற்ற இத்தொண்டர்கள் போற்றுகிறார்கள்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

17 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கச்சூர் ஆலக்கோயில்

                                           - தூவிமயில்
ஆடும் பொழிற்கச்சூர் ஆலக் கோயிற்குள் அன்பர்
நீடும் கனதூய நேயமே -

அழகிய சிறகை விரித்து ஆடுகின்ற மயில்கள் விளையாடும் சோலைகள் நிறைந்த ஊர் திருக்கச்சூர்.
தூய்மையான அன்புருவம் கொண்டு அன்பர்களின் அன்பு பெருகுகின்ற வண்ணம் இங்கே சிவபெருமான்
கோயில் கொண்டுள்ளான்.

சுந்தரர் இத்தலம் வந்தபோது பசியால் வருந்தினார். இறைவன் அந்தணர் வடிவம் கொண்டு அடியார்களிடம் உணவு பெற்று பசியாற்றிய தலம்.
சிங்கப்பெருமாள் கோயிலுக்கு வடமேற்கில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

16 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவான்மியூர்
                                                  - கார்திரண்டு
வாவுகின்ற சோலை வளர்வான்மி யூர்த்தலத்தில்
மேவுகின்ற ஞான விதரணமே -

கார்மேகங்கள் ஒன்று திரண்டு சோலைகளிலுள்ள மரங்கள் மீது தாவிச் செல்லும் தலம் திருவான்மியூர்.
அங்கே தயாளகுணமே வடிவாய் வீற்றிருக்கிறான் மருந்தீசப் பெருமான்.

அகத்தியருக்கு மூலிகைகளைப் பற்றி இறைவன் உபதேசித்த அருளிய தலம். எனவே மருந்தீசர்.
இப்பதி மயிலாப்பூருக்குத் தெற்கில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திரு ஆல்மியூர் என்பது திருவான்மியூர் என மருவியது. இதன் பொருள் அழகிய ஆலமரத்தின் அருகே உள்ள ஊர் என்பதாகும்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

15 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமயிலாப்பூர்
                              - பாற்காட்டும்
ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
கீர்த்தி பெற்ற நல்வேத கீதமே -

வேதங்களை ஏற்ற இறக்கங்களுடன் உரக்கச் சொல்லும்போது சங்கீதமாய் ஒலிக்கும்.
இறைவனின் இடப்பாகம் பெற்ற மனநிறைவோடு, மயில் வடிவு கொண்டு உமையம்மையார்
வழிபட்டார். இங்கு இறைவனின் பெயர் கபாலீஸ்வரர். இறைவி பெயர் கற்பகவல்லித் தாயார்.

உமையம்மை மயிலாய் வழிபட்டதால் மயிலாப்பூர்.  நொச்சி எனப்படும் பூவகையுள் ஒன்று மயிலைப்பூ.
மயிலைப்பூ நிறைய இருந்ததால் மயிலாப்பூர். சென்னையில் உள்ளது. திருஞானசம்பந்தர் 'மட்டிட்ட' என்ற பதிகம் பாடி இறந்த பூம்பாவையின் எலும்பைப் பெண்ணாகச் செய்தார்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா, 263
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

14 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருவேற்காடு
                          -மல்லல்பெறும்
வேற்காட்டர் ஏத்துதிரு வேற்காட்டின் மேவியமுன்
நூற்காட் டுயர்வேத நுட்பமே -

திருவேற்காட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வேல்காடும் நூல்காடும் தெரியுமா?
வேல்களால் நிறைந்த காடு! பகைவர்களுடன் போரிட நேர்ந்தால் தேவைப் படும் எனச் செல்வச் செழிப்புமிக்க அரசர்கள் வேற்படையைச் செய்து குவித்து வைத்துள்ளனர். அறிவு புகட்டி, சிந்தையைச் சீர் செய்து, நல்வழிகாட்டும் நூல்களாகிய காடு! திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் - நூற்காடுகளாம்!  எல்லா நூல்களினும் உயர்ந்த வேதங்களின் உட்பொருளாகி விளங்கும் சிவபெருமானை வேற்படை மன்னர்கள் போற்றி வழிபடுகின்றனர்.

சென்னை பூவிருந்தவல்லிக்கு வடக்கே உள்ளது. நான்மறைகளும் வெள்வேல மரங்களாய் நின்றதால்
வேள்காடு என அழைக்கப்பட்டு வேற்காடு ஆகியது. விஷம் தீண்டாத தலம் எனும் பெருமையுடைத்து.
இறைவன் வேற்காட்டீசர், இறைவி வேற்கண்ணி.தலமரம் -வெள்வேலமரம்.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா, தலம் 262
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி





13 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருமுல்லை வாயில்
                                - துன்பமற
எல்லை வாயிற் குள்மட்டும் ஏகில் வினை யோடுமெனும்
முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே -

திருமுல்லை வாயில் எனும் இத்தலத்துள் நுழைந்து விட்டால் அனைத்துத் துன்பங்களும் ஓடிப் போய் விடும் எனும் பெருமையை உடையது இத்தலம். இங்கு முக்திக்கு வித்தாய் சிவபெருமான் வீற்றிருக்கிறார். 

மிகஅழகிய, அமைதியைத் தரும் இக்கோயில் அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் வழியில் உள்ளது.
மீஞ்சூர் திருவுடைநாயகியம்மை, திருவொற்றியூர் வடிவுடையம்மை, இத்தலத்துக் கொடியுடையம்மை
ஆகிய மூன்று திருவுருவங்களும்  ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை பெளர்ணமி சேர்ந்து வரும்  நாளில்  காலையில் திருவுடையாளையும்,மதியம் வடிவுடையாளையும், மாலையில் கொடியிடையாளையும் வழிபடுவது சிறந்தது எனக் கருதப்படுகிறது.
இறைவன் மாசிலாமணிநாதர், இறைவி கொடியிடைநாயகி.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

12 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவலிதாயம்
                                  - ஊற்றுமெய்
அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில்
இன்பமில் ஞான இலக்கணமே - 

நீரூற்றைப் போல சுரந்து பொங்கிப் பெருகும் உண்மையான அன்பு உடைய
தொண்டர் குழாம் கூடிப் போற்றும் திருவலிதாயத்தில் இன்பத்தைக் கொடுக்கும்
அழகே, சிவபெருமானே.

சென்னையில் ஆவடிக்கு அருகில் உள்ள 'பாடி' என்ற இடம்தான் திருவலிதாயம் என வழங்கப்படுகிறது.
இறைவன் வலிதாயநாதர்; இறைவி தாயம்மை.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

11 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவொற்றியூர்

                              -ஆள் அத்தா
வொற்றியூர் என்ன வினையேன் வினைதவிர்த்த
ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே -தெற்றிகளில்
பொங்குமணிக் கால்கள் பொலம்செய்திரு ஒற்றிநகர்
தங்கும் சிவபோக சாரமே - புங்கவர்கன்
சேர்ந்து வலங் கொள்ளும் திருவொற்றி யூர்க்கோயில்
சார்ந்து மகிழ்அமுத சாரமே - தேர்ந்துலகர்
போற்றும் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர்
சாற்றும் புகழ்வேத சாரமே -

ஒற்றியூர் எத்தகையது?
''தெற்றிகளில்  பொங்குமணிக் கால்கள் பொலம் செய் திரு வொற்றி''!
தெற்றி எனில் தெருத் திண்ணை! திண்ணைகளில் பொன்னாலான கால்கள்! ( தூண்கள்)
அத்தூண்கள் மணிகள் கட்டப் பட்டு அழகாக விளங்குகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த, ஒற்றியூர்த் தலைவனே, என்னை ஆள்பவனே என்று நான் சொல்ல,துன்பங்களுக்குக் காரணமான தீவினைகளை எல்லாம் போக்கி என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பொங்கிப் பெருகும் அன்பு மயமான இறைவனே.
மிகச் சிறந்த ஒழுக்கம் உடைய அடியார்கள் கூடி மகிழ்வோடு வலம் வரும்  ஒற்றியூரனே.
சிறந்தபதியெனத் தேர்ந்தெடுத்து பெரியோர்கள் சூட்டும் பாமாலைகளை அணிபவனே.
வேதங்களின் சாரமாகவும், அமுதத்தின் சாரமாகவும், சிவபோகசாரமாகவும் விளங்குபவனே.

வள்ளல் பெருமானுக்கு மிகவும் விருப்பமான ஊர் திருவொற்றியூர். ஒற்றியூரப்பனிடம் அவர் கொண்ட
பக்திச் சிறப்பை திருவருட்பாவை ஓதி அறியலாம்.

சென்னை மாநகரின் ஒருபகுதி ஒற்றியூர். பட்டினத்தார் முக்தியடைந்த தலம். தியாகேசரின் சிறப்பு சன்னதி உள்ள தலம். இச்சன்னதியில் திருமணங்கள் நடைபெறுகின்றன.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி







9 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்காளத்தி
                                     - எள்ளலுறும்
கோளத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய்திருக்
காளத்தி ஞானக்  களஞ்சியமே -

இகழத்தக்க கொலை பாதகங்கள் மனக் கட்டுப்பாடு இல்லாதவர்களால் செய்யப்படுகிற தீமைகளாம்.
இத்தீய உணர்வுகளை நீக்கிய நற்குணம் உடையவர்க்கு திருக்காளத்தியில் ஞானக் களஞ்சியமாய்
வீற்றிருக்கும் சிவபெருமான் அருள் செய்கிறான்.

சுவர்ணமுகி என்ற பொன்முகலியாற்றின் கரையில் உள்ள வாயுத்தலம். பஞ்ச பூதத் தலங்களில் ஒன்றான இது தட்சிணகைலாசம் என வழங்கப்படுகிறது. ஶ்ரீ =சிலந்தி, காளம் =பாம்பு, ஹஸ்தி = யானை என்ற மூன்றும் வழிபட்டு முக்தி பெற்றதலம் எனவே ஶ்ரீ காளஹஸ்தி என்ற பெயர்.
கண்ணப்ப நாயனார் கண் கொடுத்து முக்தியடைந்த தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி 

8 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கள்ளில்
                                   -பண்பார்க்கும்
நள்ளிப் பதியே நலம்தரும் என்று அன்பர்புகும்
கள்ளில் பதிநம் கடப்பாடே -

ஆலயங்களில் இறைவனைப் பண்களால் பாடித் துதிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. இறைவன்
விரும்பிக்கேட்கும் இசை ஒலி முழங்கும் தலமே நமக்கு நன்மைதரும் என அன்பர்கள் மகிழ்ந்து வாழும் திருக்கள்ளில் எனும் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானே! கொடை வள்ளலே!

திருக்கள்ளம், திருக்கண்டலம் என வழங்கப்படும் இத்தலம் சென்னையில் இருந்து சுமார் 35 கி. மீ. தொலைவில் உள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

7 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெண்பாக்கம்
                                                                       - தேசூரன்
கண்பார்க்க வேண்டுமெனக் கண்டூன்று கோல்கொடுத்த
வெண்பாக்கத் தன்பர்பெறும் வீறாப்பே -

தேசு ஊரன் - நம்பியாரூரர் எனப் பெயர் பெற்ற சுந்தரர் கண் பார்வை இழந்த போது அவருக்கு உதவியாக ஒரு ஊன்றுகோலைக் கொடுத்து அருள் புரிந்த திருவெண்பாக்கத்து சிவபெருமானே,
வணங்குகிறேன்.
சுந்தரர் ஒற்றியூரில் தங்கியிருந்த போது சங்கிலியாரை மலர் மண்டபத்தில் கண்டு காதல் கொண்டார். அவரை விட்டுப் பிரியேன் என இறைவன் முன்னிலையில் சபதம் செய்து மணம் செய்து கொண்டார்.
ஆனால் சிறிது காலம் சென்ற பின் ஆரூர் செல்ல மிகுந்த ஆவல் கொண்டு ஒற்றியூரை விட்டு நீங்கியவுடன் கண்பார்வை இழந்தார். அப்போது இவ்வூர் வந்து இறைவனைத் துதித்துப் பாட, சிவபெருமான் அவருக்கு ஊன்று கோல் தந்து அருளிய தலம் திருவெண்பாக்கம்.

'ஏராரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட காராரும் மிடற்றான்,' எனப் பாடுகிறார் சுந்தரர்.

இக்கோயில் நீர் நிலைக்குள் மூழ்கிவிட்டது. தற்போது புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  -அருட்பெருஞ் சோதி

5 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாசூர்
                                        - ஞாலம்சேர்
மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
பாசூரில் உண்மைப் பரத்துவமே -

இவ்வுலக வாழ்வில் அச்சம் தரும் அனைத்தையும் நீக்கக்கூடிய நல்லறிவு உடையவர்கள் சூழ்ந்திருக்கும்
ஊர் திருப்பாசூர்.மேன்மைதரும் உயர் பொருளை உணர்த்துபவனாக சிவபெருமான் இங்கே வீற்றிருக்கிறார்.

இவ்வூர் திருவள்ளூருக்கு வடமேற்கில் உள்ளது. சிவபெருமான் மூங்கிலடியில் தோன்றியருளிய தலம்.
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

4 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாலங்காடு
                               -சொற்போரில்
ஓலம்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
ஆலங் காட்டிற்சூழ் அருள்மயமே -

திருவாலங்காட்டுக்கு முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பழையனூர் என்ற இடம். அவ்வூரில் வசித்து வந்த வணிகன் ஒருவன் தன் மனைவியைக் கொன்றான். அவள் பேய் வடிவம் எடுத்து, அவனைப்
பழிவாங்கினாள். அவளே பழையனூர் நீலி! அவள் சப்தமிட்டுப் பேசி, தன் பொய் வெளியாகாமல் இருக்க பொய்க் கண்ணீர் வடித்தாளாம். இதிலிருந்து வந்ததுதான் 'நீலிக்கண்ணீர்' வடிப்பது என்ற சொல் வழக்கு! பலவிதமாக இந்தக் கதை சொல்லப் பட்டு வருகிறது.

வள்ளல்பிரான் இதையே இங்கு குறிப்பிடுகிறார். சொற் போரில் சப்தமிட்டுப் பேசும் பழைனூர் நீலியின்
தீமை மேலும் பெருகாதவாறு ஆலங்காட்டில் அழிக்கப்பட்டாள்.  பெருமை வாய்ந்த ஆலங்காட்டு அருள்மயமான இறைவனே உம்மை வணங்குகிறேன்.

பழையனூர் ஆலங்காடு எனப்படுகிறது.பஞ்ச சபைகளில் ஒன்றான இரத்தினசபையை உடைய தலம்.
காலை மேலே தூக்கி ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். இங்கு அவ்வாறு காட்சியளிக்கிறார். காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து அருளிய தலம்.

இறைவியின் பெயர் வண்டார் குழலி.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி









3 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவிற்கோலம் - கூவம்
                                                                     - தீதுடைய
பொற்கோலம் ஆம்எயிற்குப் போர்க்கோலம் கொண்ட திரு
விற்கோலம் மேவுபர மேட்டிமையே -

எயில் என்றால் கோட்டைச் சுவர்.
திரிபுராசுரனின் கோட்டையை அழிக்கப் போர்க் கோலம் பூண்ட, வில்லேந்திய கரங்களுடன் காட்சியளிக்கும் 'திருவிற்கோலத்தில்' சிவபெருமானை வணங்குவோம்.

திருவிற்கோலம் 'கூகம் அல்லது கூவம்' என்ற பெயருடன் விளங்குகிறது.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

2 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

இலம்பையங் கோட்டூர்
                                      - மாறுபடு 
தீது மிலம்பயங்கோட் டீரென்று அடியார்புகழ்
ஓது மிலம்பயங் கோட் டூர்நலமே -

தன்னையும் அறியாது துன்பத்தைச் செய்து விடுவோமோ என்ற பயத்தை நீக்கினீர் நீங்கள் என்று அடியார்களால் புகழ்ந்து பேசப்ப்படும் இலம்பையங் கோட்டூர் சிவபெருமானே உம்மை வணங்குகிறோம்.

"எலுமியன் கோட்டூர்" என வழங்கப்படும் இவ்வூர் அரம்பையர் வழிபட்ட தலம். ரம்பையங் கோட்டூர் என வழங்கப்பட்டு பிற்காலத்தில் இலம்பையங்  கோட்டூர் என மருவியது.

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

1 February 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருஊறல் - தக்கோலம்
                                        - ஏற்புடைவாய்
ஊறல் அடியார் உறத்தொழுது மேவுதிரு
ஊறல் அழியா உவமையே - 
நமக்குப் பிடித்த செயல்களைச் செய்தாலோ, நமக்குப் பிடித்தவர்களை நினைத்தாலோ உள்ளத்தில் அன்பு ஊறி நிற்கும். அதுபோல இறைவன்பால் அன்பு கொண்டவர்கள் பக்தி மிகுதியால் வாய் நிறைய இறைவனைப் போற்றித் துதிப்பர். அத்தகைய அன்பர்கள் சேர்ந்து துதிக்கும் சிறந்த திரூஊறல் சிவபெருமான் அன்பர்களுக்கு எப்போதும் அழியா இன்பத்தைத் தருபவன்.

தக்கோலம் என அழைக்கப்படும் இவ்வூர் கோயில் நந்தியின் வாயிலிருந்து நீர் எப்பொழுதும் விழுந்து கொண்டிருந்ததால் திரு ஊறல் எனப் பெயர் பெற்றது. தற்போது நீர் ஊறுவதில்லை!

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி -