26 August 2014

107,108. அருணாசல அட்சர மணமாலை

107. பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
        பொறுத்தருள் இஷ்டம்பின் அருணாசலா

பூதரம் என்றால் மலை;  பூமியால் தாங்கப்படுவதால் காரணப்பெயர். திருவண்ணாமலை பொறுமையாம் மலை. மலை வடிவில் இருந்தாலும் மலையே சிவலிங்கமாகக் கருதப்படுவதால் பெருமை பெற்றது.
பொறுமையின் வடிவே, அருணாசலா, நான் உனக்குச் சூட்டும் இந்த அட்சரமணமாலையை ஏற்றுக் கொண்டு அருள்வாய்.

108. மாலை அளித்த அருணாசல ரமணஎன்
         மாலை அணிந்தருள் அருணாசலா

இந்தச் சொல் மாலையை எனக்கு அளித்தவன் அருணாசலனாகிய நீயே! நீயே ரமணன், என்னை மகிழச் செய்பவன்! இந்த மாலையை உனக்கே அணிவிக்கிறேன்! அணிந்து கொண்டு அருள் புரிவாய்

அருணாசலம் வாழி! அன்பர்களும் வாழி! அட்சரமணமாலை வாழி!
















25 August 2014

105. அருணாசல அட்சர மணமாலை

105. என் போலும் தீனரை இன்புறக் காத்துநீ
         எந்நாளும் வாழ்ந்தருள் அருணாசலா!

எந்நாளும் என்போன்ற எளியவரை இன்பமடையும்படிக் காத்து வாழ்ந்து அருள் புரிவாயாக.
ஶ்ரீரமணரைப் போன்று தன்னை உணர்ந்து தன் மயமானவர்கள்,  அகந்தையற்றவர்களாதலின்
தற்பெருமையற்றவர்கள். எனவே 'என் போலும் தீனரை' என்று தன்னையும் அடியார் கூட்டத்தில் ஒருவர் ஆக்கினார். அடியாருக்கும் எனக்கு அருளியது போல 'தன்னை அறியும்'  விழிப்புணர்வை அருள்வாய்.

106. என்பு உருகு  அன்பர்தம் இன்சொல்கொள் செவியுமென்
          புன்மொழி  கொளஅருள் அருணாசலா

ஆன்றோர்களின் எலும்பையும் உருகச் செய்யும் அன்பு நிறைந்த இனிய சொற்களைக் கேட்கும் செவிகள்!
இன்சொல் கேள் ''தோடுடைய செவிகள்!''
''அன்பர் மொழித் தேன் பரவும் வள்ளைச் செவியழகு'' என்பார் வள்ளலார்.

இத்தகைய உன் செவி என் புன்மொழிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்! இது வெளிப்படையான
கருத்து. ஆனால் இதன் உட்பொருள் என்ன?

அட்சரங்களால் தொடுக்கப்பட்ட இம்மணமாலை புன் மொழியாகுமா? தன்னைத் தான் அறிய,
வழி காட்டும் 'மறையாக' அல்லவா மணமாலை விளங்குகிறது!
இம்மணமாலையை அன்பர்களும் படித்து என்புருகி அருணாசலனின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்
என்பதே இப்பாடலின் கருத்தாகும்.
தன்னடக்கம் என்பது யோகிகள் அணியும் மணிமகுடம்.







24 August 2014

104. அருணாசல அட்சர மணமாலை

104. அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
          அன்பனாயிட அருள் அருணாசலா

இறைவனின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும்?
நினைந்து, நெகிழ்ந்து, உணர்ந்து, அன்பே நிறைந்து, உச்சரிக்க வேண்டும்!

'எப்படிப் பாட வேண்டும்? ''வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்'
என்பார் வள்ளல்! சும்மா கண் எங்கோ பார்க்க, மனம் எங்கோ திரிய வாய் அசைத்தால் மட்டும் போதாது. இறைவன் நாமத்தை உளத்தோடும், உயிரோடும், கலந்து ஒத வேண்டும்.

இறைவன் நாமத்தை ஒருவர் ஓதும் பொழுது கேட்பவர் நிலை எத்தகையதாக இருக்க வேண்டும்?
மீண்டும் வள்ளலார் பதில் தருகிறார்!
திருவாசகத்தை 'ஓதக் கேட்ட பொழுது அங்கிருந்த கீழ்ப் பறவைச் சாதிகளும்,வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பன்றே.'

இறைவன் நாமத்தைக் கேட்டவுடன் மெய்ஞானம் அடைய ஆவல் பெருகுமாறு ஓத வேண்டும்.

''பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும், படிக்க பக்க நின்று கேட்டாலும்,
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பு,' இறைவன். ( வள்ளலார்)

'அன்பருக்கு அன்பனே' என்கிறது திருவாசகம்.

'இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே,' என்பது அவ்வை வாக்கு.

'பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்'
என அடியார்பெருமையைப் பாடுகிறார் சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில்.

அன்போடு இறைவன் நாமத்தை உச்சரிக்கக் கேட்கின்ற அன்பர்களுக்கும் அன்பர்கள் உள்ளார்கள்.
அவர்களுக்கும் நான் அன்பானாக அருள் புரிவாய் அருணாசலா.

'அருணாசல' என்ற ஐந்தெழுத்து நாமம்  ஓதுதற்கு எளியது. அருணாசல நாமத்தை ஓதினாலும்,  ஓதுவதைக் கேட்டாலும், மனதால் நினைத்தாலும் இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமாகலாம்.











23 August 2014

103. அருணாசல அட்சர மணமாலை

சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச்
   சிறையிட்டு உண்டனை அருணாசலா

சிலந்தி தன் வலையில் அகப்பட்ட இரையை அப்படியே இறுகக்கட்டி, தப்பிக்கவிடாமல் செய்து பின்னர் அதனை உண்ணும்.  அது போல அருணாசலனே உன்னுடைய அருளாகிய வலையில் என்னை மிகவும் கவனத்தோடு கட்டவேண்டுமென்று சிந்தித்துச் செயலாற்றினாய்! என்னைத் தப்பிக்க முடியாதவாறு தன்மயமாக்கிக் கொண்டாய்!
சிறையிட்டு உண்ணுதல் - தன்மயமாக்கிக் கொள்ளுதல்.

22 August 2014

101. அருணாசல அட்சர மணமாலை

 101. அம்புவில் ஆலிபோல் அன்புரு உனில் எனை
           அன்பாக் கரைத்தருள் அருணாசலா

(அம்பு - தண்ணீர், ஆலி -பனிக்கட்டி, )
தண்ணீர் திரவ வடிவிலும், பனிக்கட்டி திடரூபத்திலும் உள்ளது. பனிக்கட்டி உருகினால் மீண்டும் தண்ணீருடன் இரண்டறக்கலக்கிறது. கலந்ததும் பேதங்கள் மறைந்து போவது போல் அன்புருவாகிய உன்னில் என்னை கரைத்து தன்மயமாக்கிக் கொள்வாய் அருணாசலா.
ஆன்மா எனப்படும் மெய்ப்பொருளும், சீவனும் உண்மையில் ஒன்றே! அறியாமையினால் நாம் அவற்றை இரண்டாகக் காண்கிறோம்.

102. அருணையென்று எண்ணயான் அருட்கண்ணில் பட்டேன் உன்
         அருள்வலை தப்புமோ அருணாசலா
அருணாசலம் என்று நினைத்த மாத்திரத்தில் நான் உன் அருள் நிறைந்த கண்ணில் பட்டேன்! உன் அன்பு வலையில் அகப்பட்டுக் கொண்டேன். அதிலிருந்து என்னால் தப்பமுடியுமா? அருணாசலா.
இறைவனின் அருட்பார்வை இருந்தால் எல்லாம் செயல்கூடும் அல்லவா?

21 August 2014

97. அருணாசல அட்சரமணமாலை

97. வீடுவிட்டு  ஈர்த்துஉள  வீடுபுக்குப்  பையஉன்
      வீடுகாட் டினையருள் அருணாசலா

நான் வாழ்ந்து வந்த மதுரையம்பதி வீட்டைவிட்டு என்னை இடம் பெயர்த்து, என்னுடைய  இதய வீட்டில் புகுந்து, மெதுவாக உன் ஆன்மவீட்டைக் காட்டி எல்லாவற்றுக்கும் முடிவான முக்திவீட்டைக் காண்பித்தாய் அருணாசலா.

98. வெளிவிட்டேன் உன் செயல்  வெறுத்திடாது
      உன்னருள் வெளிவிட்டு எனைக்கா அருணாசலா
யாரும் அறியாது என் மனதினை கொள்ளை கொண்டு, என்னை நீ தன்வயமாக்கிக் கொண்டதை உன்னருளாலேயே நான் வெளியே அனைவரும் அறியச் செய்தேன் என்பதற்காக என்னை வெறுத்திடாமல் என்னைக் காத்து அருள் புரிவாயாக.

99. வேதாந் தத்தே வேறற விளங்கும்
      வேதப் பொருள் அருள் அருணாசலா

வேதவியாசர் எழுதிய நூல் வேதாந்தம்! இதன் முடிந்த முடிவான பொருள் ஆன்ம ஞானமாகும். இதனை எனக்கு அனுபவமாக்கிய அருணாசலனே உம்மை வணங்குகிறேன்.

100. வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா
         வைத்தெனை விடாதருள் அருணாசலா

நான் இகழ்ந்து கூறுவது போல் தோன்றும் என் உரைகளை புகழுரைகளாக ஏற்றுக் கொண்டு
உன் அடியார்களுள் ஒருவனாய் என்னையும் சேர்த்துக் கொண்டு எப்பொழுதும் என்னைக் கை விடாது
அருள் புரிவாய் அருணாசலா.




   










20 August 2014

96. அருணாசல அட்சர மணமாலை


96. விட்டிடிற்  கட்டமாம்  விட்டிடாது உனை  உயிர்
      விட்டிட அருள்புரி அருணாசலா

யாரை விட்டால் யாருக்குக் கஷ்டம்? இறைவன் அடியாரைக் கை விட்டுவிட்டால் அடியார்களுக்கு மாறாத கஷ்டம்; அடியார்கள் இறைவனை மறந்துவிட்டால் அப்போதும் அவர்களுக்கே துன்பம்.
எனவே அருணாசலா, உயிர் உடலைவிட்டுப் பிரியும் போதும் என்னைக் கை விட்டுவிடாதே. உன் நினைவிலேயே  என் உயிர் பிரிய அருள்வாய்.

அபிராமிப் பட்டர் என்ன சொல்கிறார்? காலன் என்மேல் வரும்போது,'வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து வெளிநிற்க வேண்டும்,' என்றும், 'உயிர் உறவு அற்று அறிவு மறக்கும்
பொழுது என் முன்னே வரல் வேண்டும்,' என்று அபிராமி அம்மையை வேண்டுகிறார்.


19 August 2014

95. அருணாசல அட்சர மணமாலை

95. வாஎன்று  அகம்புக்கு உன் வாழ்வுஅருள் அன்றேஎன்
      வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா

அகம் புகுந்து ஈர்த்து, 'உன் அக குகையில் எதற்காக சிறை வைத்தாய்' என்று முதலிலேயே கேட்டார் அன்றோ? அதற்கான பதில் இங்கே வருகிறது.

வா என்று அழைத்து என்னை உன்னுடைய இதய வீட்டிற்குள் அழைத்துச் சென்றது  எனக்கு அருள் செய்வதற்குத்தான் என்று எனக்குப் புரிந்துவிட்டது! அந்தக் கணமே நான் என்னுடைய வாழ்வின் சுதந்திரத்தை இழந்துவிட்டேன்.  உன்னிடம் என் வாழ்வை சமர்ப்பித்தேன்! சரணாகதி அடைந்தேன், இனி 'எனது' என்பதும், 'நான்' என்பதும் இல்லை! எல்லாம் நீயேயாகி  என்வாழ்விற்கு நீயே பொறுப்பானாய்.

பூரண சரணாகதியே பக்தியின் முதல், கடைசிப் படிகளாகும்.

      

18 August 2014

94 அருணாசல அட்சர மணமாலை


94. வரும்படி சொலிலை வந்து என் படிஅள
      வருந்திடு உன் தலைவிதி அருணாசலா

(சொலிலை - சொன்னாய்; படிஅளத்தல் -வேலைக்கு கூலி கொடுத்தல்; தலைவிதி - பொறுப்பு)

அருணாசலனே, இளம் பருவத்தில் திருவண்ணாமலை என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே எனது அகத்தில் புகுந்து கொண்டாய். மரண அனுபவத்திற்குப் பின் தந்தையாகிய உன்னைத்  தேடி வரும்படி யாரும் அறியாமல் அழைத்தாய்! உன் அழைப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே நான் உன்னிடம்
வந்துவிட்டேன். இனி என்னைப் பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு! கடினம்தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனாலும் அது உன் தலைவிதி ஆகிவிட்டது என்று தன் அன்பு மிகுதியால் கூறுகிறார்.

ஸ்ரிரமணர், அரவிந்தர், வள்ளலார், ராமகிருஷ்ணபரமஹம்சர் ஆகிய யோகியர் எவரும் தங்கள்கையில்
பணம் வைத்துக் கொண்டவர்கள் இல்லை. ஆனால் இறைவன் அவர்களுக்குத் தேவையானவற்றை தேவையான போதுகளில் அளித்து வந்திருக்கிறான். இவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் இதனை தெள்ளத்தெளிவாய் எடுத்து இயம்புகின்றன.
 

17 August 2014

92, 93 அருணாசல அட்சரமணமாலை

92. லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனைப்
       பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா

லட்சியம் -இலக்கு, அஸ்திரம்- கருவி, பாணம், பட்சித்தாய் - உண்டாய்

என்னை இலக்காக வைத்து, அருள் என்ற அஸ்திரத்தால், 'நான்' என்ற அகந்தை உணர்வை
முழுமையாக அழித்து என்னைத் தன்வயமாக்கிக் கொண்டாய் அருணாசலா.
அருணாசலத் தந்தை தன் மகனாகிய ரமணரை இலக்காக வைத்து, அருளாகிய அஸ்திரத்தால் ஆட்கொண்டானாம்! போற்றுகிறார் அவதாரபுருஷர் ரமணர்.

93. லாபநீ இகபர லாபமில் எனைஉற்று
          லாபமென் உற்றனை அருணாசலா

எல்லாவற்றிலும் லாபநஷ்டக் கணக்கு பார்ப்பது மனித இயல்பு!
மனிதனுக்கு கிடைத்தற்கரிய இறையருள் கிடைப்பது பெரிய அதிர்ஷ்டமாகும்.
ஆனால் எல்லாம் வல்ல இறைவனுக்கோ மனிதர்களால் ஆகப் போவது ஏதும் இல்லை.
இதையே ஸ்ரிரமணர் இங்கு வினவுகிறார்.
'இந்தப் பூவுலகிலோ, மறு உலகிலோ என்னால் உனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று
குறி வைத்து உன் அருள் அஸ்திரத்தால் என்னை ஆண்டுகொண்டாய்? சொல்வாய் அருணாசலா!

இறைவன் வள்ளல் பெருமானுக்கு ஞானக்கண்  கொடுத்தான்! பெருமானே,' உன்தயவை எண்ணுந்தோறும் என் இதயம் உருகித் தளதள என்று இளகித் தண்ணீராய் அருத்திப் பெருநீர் ஆற்றொடு சேர்ந்து அன்புப் பெருக்கில் கலந்தது,' என்று ஆனந்திக்கிறார் வள்ளலார்.

ஶ்ரீரமணர் ஆன்ம ஞானத்தால் பூரணமடைந்தவர். இறைவனோ பூரணமானவர்.முழுமையோடு முழுமை கலந்தால் அது முழுமையேயாகும் அன்றோ?







16 August 2014

91. அருணாசல அட்சரமணமாலை

ராப்பகல் இல்லா வெறுவெளி வீட்டில்
ரமித்திடுவோம் வா அருணாசலா

இரவும் பகலும் இல்லாத இதய வெளி ஆத்மா எனப்படுகிறது. இந்த ஆத்மப் பரவெளி வீட்டில் நாம் இருவரும் இன்புற்றிருப்போம் அருணாசலனே, வருவாயாக.

தன்னிடத்தில் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை உணர்ந்த தவத்தினருக்கு இரவு பகல் என்ற பேதங்கள் இல்லை. அதையே 'வெறு வெளி வீடு,' என்பார். வெறு வெளி வீடே ஆத்மா. அது ஒன்றே!
'ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை அன்றென விளங்கிய அருட்பெருஞ் சோதி'-
 அகவல்.  ஒன்றா, இரண்டா, இரண்டும் சேர்ந்த ஒன்றா என எவரும் அறியவியலா சக்தியே இறைவன்.
'நானாகித் தானாய் நடித்தருள்கின்றாய் அபயம்,' என்கிறது அருட்பா.

'அல்லும் பகலுமில்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப் போதாய் இனி மனமே,'
(கந்தரலங்காரம்,17)
மனதில் வஞ்சகமில்லாதவர் அடையும் பரவெளியில் நினைப்பும் மறப்பும் இல்லை, அங்கே சும்மா இருக்கும் சுகமே ரமித்தல்,' ஆகும்.

'போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாத ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம் தானேதரும்................'கந்தரலங்காரம்,73
போக்கும்வரவும் அற்ற உனது திருவருள் துணைசெய்து மனோலயம் தந்து சொல்லொணா இன்பம் தருகிறது என்று ஆனந்திப்பார் அருணகிரிநாதர்.
இதையே, ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில் ரமித்திடுவோம் வா,' என்கிறார் ரமணர்.







14 August 2014

90. அருணாசல அட்சரமணமாலை

ரமணன்என்று உரைத்தேன் ரோசங்கொளாது எனை
  ரமித்திடச்  செயவா அருணாசலா

யாருக்கும் தெரியாது என்மனதை மயக்கி கொள்ளை அடித்துப் போனவன் எவன்? என்று முந்தைய பாடலில் கேட்டவர் இப்பாடலில் பதில் சொல்கிறார்.

இது வரையிலும் யாருக்கும் தெரியாத ரகசியம் அது! சொல்லி விடட்டுமா? அதுதான், அவன்தான்,
'கருணை மாமலை, ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிபவன், குரு உருவாய், கருணைக் கடலாய்,
எனக்கு அருள் நகையிட்டுப் பார்த்தவன், என் பித்தம் தெளி மருந்து, மலை மருந்து,' அனைத்து உலகிற்கும் இதத்தைத் தரும் ரமணன்!
ஓ என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயா என்று கோபிக்காமல், 'மெய் அக மென்மலர் அணையில் தன்மயமானதை அனுபவிக்க வாராய், என் அருணாசலனே'!


13 August 2014

89. அருணாசல அட்சரமணமாலை

யாரும் அறியாது என் மதியினை மருட்டி
    எவர் கொளை கொண்டது அருணாசலா

யாருக்கும் தெரியாமல் என் புத்தியை மயக்கி, என்னைக் கொள்ளையடித்துச் சென்றது யார்?
'ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார் உன் சூதே இது அருணாசலா,' என்று  முதலிலேயே கேட்டார் தானே?
பொருளைக் கொள்ளை அடிக்கலாம், மதியைக் கொள்ளையடிக்க முடியுமா? முடியும் என்கிறது அன்பு!
இந்த அன்புக்கு ஒரே சாட்சியாக இருப்பது மனது! எண்ணங்களின் உற்பத்தித்தலம்! இந்த எண்ணங்களைப் பற்றிக் கொண்டு செல்வது ஆன்ம விழிப்புணர்வுக்கு வழி வகுக்கும்!
யாருக்கும் தெரியாமல், அகம் புகுந்து ஈர்த்து அருணாசலன் தன்னை அவன் மயமாக்கிக் கொண்டான் என்பதை இங்கு உணர்வு பூர்வமாகச் சொல்கிறார் ரமணர்.

12 August 2014

88. அருணாசல அட்சர மணமாலை

யவன் என் வாயில் மண்ணினை அட்டி
   என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா

இறைவனின் அருட் செயலை பரிகசிப்பது போல்  வாழ்த்துகிறார் மகரிஷி. சாதாரணச் சிறுவனாக இருந்த தன்னை இறைவன் தன் திருவருளால் ஆட்கொண்டதை இங்கு எடுத்துச் சொல்கிறார்.
என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டான் என்று கூறக் கேட்கிறோம். இங்கோ 'என் வாயில் மண்ணினை அட்டியது.... பிழைப்பு ஒழித்தது....யார் என்று கேட்காமல் 'யவன்' என்கிறார்.

விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அகந்தை வழிச் செல்லக்கூடிய  மனதை 'நான் யார்' என்று விசாரித்து அறிதல் மூலம் தெளிவுறச் செய்தாய், இறைவா, இந்தப் பேறு யார்க்கு வாய்க்கும்? என்பதையே,'என் வாயில் மண்ணினை அட்டி ' உலக வாழ்வாகிய அல்லல் பிழைப்பிலிருந்து என்னைக்
காப்பாற்றி விட்டாய் என்று இரு பொருள் தோன்றப் பாடுகிறார்.








11 August 2014

87. அருணாசல அட்சர மணமாலை

மெளனியாய்க் கல்போல் மலராது இருந்தால்
மெளனம் இது ஆமோ அருணாசலா

மெளனம் என்றால் என்ன? பேசாமல் இருப்பது.
சாதாரண மனிதர்கள் மேற்கொள்வது மெளன விரதம்.
பேசாமல் இருப்பவரைப் பார்த்து 'இன்றைக்கென்ன மெளன விரதமா? வாயில் என்ன கொழுக்கட்டையா?' என்றெல்லாம் கேட்கிறோம்.

மெளனமே இறைவனுடைய தியானத்தில் மனம் ஒன்றிக் கிடக்கும் யோகியருக்கு சமாதி என்ற நிலைக்கு அழைத்துச் செல்கிற வழியாக அமைகிறது. அந்நிலையில் இதயத் தாமரை மலரும். தன்னைதானே
உணரும் ஆன்ம நிலை சித்திக்கும்!

கல் இரவோ பகலோ, மழையோ வெயிலோ, எந்த பாதிப்பும் இன்றி மவுனித்துக் கிடக்கிறது. அதற்கு மலர்களைப் போல் மலர்தலும் வாடுதலும் இல்லை! வாழ்க்கையின் இன்ப துன்ப மழையில் நனைந்தாலும் எந்த பாதிப்பும் இன்றி தன்னிலை மாறாமல் இறைவுணர்வில் தோய்ந்து கிடைக்கும் நிலையே மெளனம் என்னும் நிலையோ? சொல்வாய் அருணாசலா!

அருணாசலப் பெயரைக் கேட்டதும் ஆன்ம இன்பம் மேலிடவும், மரணத்தை அனுபவித்துக் கிடைத்த ஆன்ம தரிசனத்தாலும் திருவருணையை அடைந்த ஶ்ரீபகவான் தன்னுணர்வற்று இருந்தார்.  பத்து ஆண்டுகளுக்குப் பிறகே அவரால் அந்த தெய்விகப் பரவெளி ஆனந்தத்திலிருந்து வெளியே வந்து பேச முடிந்தது என்கிறது அவர் வரலாறு.




9 August 2014

86. அருணாசல அட்சர மணமாலை

மோகந் தவிர்த்துன் மோகமா வைத்துமென்
      மோகந் தீராய் என்அருணாசலா

இன்பம் தருகின்ற உலகப் பொருட்கள் மேல் எனக்குள்ள ஆசைகளை நீக்கி
உன் மீது பக்தியால் பித்தடையச் செய்தாய். எத்தனை முயன்றாலும் உன் மீது நான் வைத்துள்ள மோகத்தை விட முடிய வில்லை! அருணாசலனே உன் மீது நான் கொண்டுள்ள ஆசையை நீக்கி
ஆன்மப் பேரின்பத்தில் முழுமையாக மூழ்குமாறு அருள் புரிவாய்.

'ஈசனோடாயினும் ஆசை அறுமின்' என்பது திருமூலரின் திருமந்திர வாக்கு.

8 August 2014

85.அருணாசல அட்சர மணமாலை

மொட்டை யடித்தென்னை வெட்ட வெளியில்நீ
  நட்டமா டினையென் அருணாசலா

(மொட்டையடித்தல் - தலைமுடியை நீக்குதல் என்பது பொதுவான பொருள்,
முற்றிலும் ஒன்றை நீக்குதல், முழுவதும் கவர்ந்து கொள்ளுதல்
வெட்ட வெளி - இதயப் பர வெளி, நட்டமாடினை - நடனமாடினை)

என் அகந்தையை நீக்கி, என்னை முழுவதும் கவர்ந்து கொண்டு, தூய்மையான என் இதயப் பரவெளியில் ஆனந்த நடனம் ஆடுகின்றனை, அருணாசலா.

சிவபுராணம் 'நள்ளிருளில் நடனம் பயின்றாடும் நாதனை, தில்லைக் கூத்தனை,' அழைக்கிறது.

'அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே'
ஆன்மா என்ற சிற்றம்பலத்தில் இருந்து நடனமாடி யாவற்றையும் இயக்கும் நிறைவான பொருளே
இறைவன் என்கிறார் வள்ளலார் தன் அகவலில்.

அருணாசல அருட்பெருஞ் சோதி!


7 August 2014

84. அருணாசல அட்சரமணமாலை


மைமயல் நீத்துஅருள் மையினால் உனது உண்
மைவச மாக்கினை அருணாசலா

மை - கண்ணில் பெண்கள் தீட்டிக் கொள்வது, வசிய மருந்து, கருமையைக் குறிப்பது
மயல் - மனமயக்கம்,  உண்மைவசம் -முழுமையான ஆன்ம உணர்வு

இருள் நிறைந்த  அகந்தை மயக்கத்தை, உன்னுடைய ஒளி பொருந்திய அருள் மையினால் நீக்கினாய்.
அதனால் எனது அகந்தையிருள் நீங்கிற்று. பிறகு என்னை உன் மெய்யுணர்வு அறியுமாறு செய்து என்னை ஆட்கொண்டனையே அருணாசலா.

மை வைத்து விட்டான் என்று சொல்லக் கேட்கிறோம். இங்கு அருணாசலனே தன் அன்பனின் மன மயக்கத்தை நீக்கித் தன் அருள் காட்டி அவனைத் தன் வசமாக்கிக் கொள்கிறான் என்கிறார். நாம் இறைவனிடம் அன்பு செலுத்தலாம். ஆனால் இறைவனே நம்மிடம் அன்பு செலுத்துவானானால் அதை விடப் பேரின்பம் என்னவாக இருக்க முடியும்? இதையே ஶ்ரீ ரமணர், வள்ளலார் வாழ்விலிருந்து அறிகிறோம்.



6 August 2014

83. அருணாசல அட்சர மணமாலை

மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர் சேர்ந்துநீ
    மேன்மை  யுற்றனைஎன் அருணாசலா

மேன்மேல் -மேலும்மேலும், தாழ்ந்திடும் - பணியும், மெல்லியர் -எளியவர், மேன்மை - உயர்வு

மீண்டும் மீண்டும் அகந்தையற்றதால் உன்னைப் பணிந்து தொழும் எளிமையான அடியவர்களைச்
சேர்ந்ததால் நீ உயர்வடைந்தாய், என் அருணாசலா.
எல்லாம் வல்ல ஈசனுக்கு உயர்வு, தாழ்வு என்ற பேதங்கள் இல்லை. யாரேயாகிலும் தன்னை முழுதுமாக சமர்ப்பிக்கும்  அன்பருக்கு அருள் செய்வான். மீண்டும் இறைவனுக்கு ஏது மேன்மையும், தாழ்வும்?
தன்னைப் பணியும் அன்பர்களால் அவன் மேன்மையாக்கப் படுகிறான்!

தாழ்ந்த நிலத்தில்தான் தண்ணீர் சேர்ந்து நிற்கும். அதுபோல பணிவுடையவர் உள்ளத்தில் அருள் நிறைந்து இருக்கும். எதனால்? அகந்தையற்றவர் மனதில்தான் பணிவு வரும்.
''பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
  அணியுமாம் தன்னை வியந்து'' என்ற வள்ளுவர் வாக்கை நோக்குக.




5 August 2014

82.அருணாசல அட்சரமணமாலை

மெய்யகத் தின்மன மென்மலர ணையினான்
  மெய்கலந்திட அருள் அருணாசலா

(மெய் அகத்தின் மன மென் மலர் அணையில் நான்
மெய் கலந்திட அருள் அருணாசலா)

மென்மையான மலர்கள் தூவப்பட்ட பஞ்சணை! எங்கிருக்கிறது? ஆழ்மனதே பஞ்சணை. அமைதி எனும் மலர்கள் நிரம்பியிருக்க இறையுணர்வோடு, தன்னைத் தான் அறிந்த விழிப்புணர்வு இரண்டறக் கலந்துவிட அருள்வாய் அருணாசலா.
மெய் அகம் - ஆன்மா
இந்த ஊனுடம்பே ஆலயம், உள்ளம் பெருங் கோயில்! எண்ணங்களற்ற பெரு வெளியில், தன்னைத் தான் இழந்து மெய் மறந்து சும்மா இருப்பதே சுகம்!

4 August 2014

81. அருணாசல அட்சர மணமாலை

மூக்கிலன் முன்காட்டு முகுரமா காதெனைத்
  தூக்கி யணைந்தருள் அருணாசலா

மூக்கு இலன் முன் காட்டும் முகுரம் ஆகாது என்னைத்
தூக்கி அணைந்து அருள் அருணாசலா


மூக்கிலன் - மூக்கில் குறைபாடுடையவன்
முகுரம் - கண்ணாடி

மூக்கில் குறைபாடுடையவனை மூக்கறையன் என்பார்கள். அவன் முன்னால் முகம் பார்க்கும் கண்ணாடியைக் காண்பித்தால் தன் அங்கக் குறையை எண்ணி மிகவும் வருந்துவான்.

அருணாசலனே! நான் அகந்தை மிகுதியாலும், ஐம்புலக் கள்வர்களின் ஆதிக்கத்தாலும்
பல குறைகளை உடையவன்.  நீயே என்னை பிரதிபலிக்கும் கண்ணாடி!

என் அருட் குருவாய் விளங்கும் உனக்கு என்னைப் பார்த்தவுடனேயே என் குற்றங்குறைகள் எல்லாம் தெரியும்!
அதனைக் காட்டி என்னை கேலி செய்யாமல், பொருட்படுத்தாமல் என்னைத் தூக்கி அணைத்துக் கொள்! என்னைத் திருத்து. உன் அருளுக்கு ஏற்றவனாய் என்னை ஆக்குவிப்பாய்.

''குற்றம்புரிதல் எனக்கு இயல்பே, குணமாக்கொளல் உன் கடமை,'' என்பார் வள்ளல் பெருமான்.








3 August 2014

80. அருணாசல அட்சரமணமாலை

முடியடி காணா முடிவிடுத் தனைநேர்
   முடிவிடக் கடனிலை அருணாசலா

முடி - அகந்தையாகிய சிக்கல் முடிச்சு
காணாமுடி - ஆன்ம வடிவம்
நேர்விடுத்தனை - நேரிடையாக சேர்ப்பித்தாய்
கடனிலை - கடமை அல்லவா
அனை நேர்- அன்னைக்கு நிகராக

அன்னைக்கு நிகரான அருணாசலனே!  ஆரம்பமும், முடிவும் அற்ற உன்னைக் காணத் தடையாக இருந்த சிக்கலான அகந்தை முடிச்சை அவிழ்த்து நீக்கி, நேரிடையாக உன்னை வந்து அடையும்படிச் செய்தாய்.

பிரமனும், திருமாலும் முயன்றும் காண இயலாத உன்னுடைய திருவடிவைக் காணுமாறு என் அஞ்ஞானத்தை நீக்கி அருள் புரிந்தாய்!

''ஆதியனே அந்தம் நடுவாகி நின்றானே,'' ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதியை யாம் பாட,'' என்கிறது திருவாசகம்.

''படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா
அடிமுடி எனும்ஓர் அருட்பெருஞ் சோதி'' - அகவல், திருவருட்பா, வள்ளலார்.




2 August 2014

79. அருணாசல அட்சரமணமாலை

மீகாமன் இல்லாமல் மாகாற்று அலைகலம்
   ஆகாமல்காத்து அருள் அருணாசலா

மீகாமன் - மாலுமி, கப்பலைச் செலுத்துபவன்
மாகாற்று - புயற்காற்று
அலைகலம் - அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படும் கப்பல்
வாழ்க்கை - கடல்
உடல் - கப்பல்
உடலின் மாலுமி - அருணாசலன்

நடுக்கடலில் செல்லும் கப்பலின் மாலுமியைக் காணவில்லை. இறந்து விட்டான் போலும்! கடுமையான புயற்காற்று வீசுகிறது. அலைக்கழிக்கப்படும் கப்பல் செலுத்துவாரின்றித் தவிக்கிறது!
என்னுடைய வாழ்வும் வாழ்க்கைக் கடலின் இன்ப துன்ப அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுத் திண்டாடுகிறது! என்னுடைய உடலாகிய கப்பலின் பார்த்த சாரதி, மாலுமி, வழிகாட்டி, தந்தை, தாய், குரு  அனைத்தும் நீயேயன்றோ? 'நான் யார்?'  என்ற ஆன்ம விசார திசைகாட்டி கொண்டு  என்னை வழி நடத்துவாயாக!



1 August 2014

78.அருணாசல அட்சர மணமாலை


மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்ச அறிவன்யான்
   வஞ்சியாது அருளெனை அருணாசலா

அப்பனே அருணாசலா! மிகுந்த துன்பம்  என்னை வருத்தினால், போதும் இது போதும், இனி என்னைச் சோதியாதே என்று உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளக் கூடிய சிற்றறிவு உடையவன் நான்!
மிகுந்த இன்பமோ, துன்பமோ எப்போதும் உன்னையே தஞ்சமாய்க் கொள்ளும் பேரறிவு எனக்கில்லை ஆயினும் என்மீது கோபம் கொள்ளாது  எபோதும் எனக்கு நீ அருள் புரிதல் வேண்டும்.

அருணாசல அருட்பெருஞ் சோதி வாழ்க.