16 May 2014

1. அருணாசல அட்சர மணமாலை

அருணாசலசிவ     அருணாசல சிவ
      அருணாசலசிவ    அருணாசலசிவ

'ஓம்' என்ற பிரணவத்தின் முதல் எழுத்து  அகரம் ஆகும். அ+ உ+ ம்= ஓம். பிரபஞ்சம் முழுமைக்கும் ஆதாரம் பிரணவமே!
தமிழின் முதல் எழுத்து அகரமே.
'அகர முதல எழுத்தெல்லாம்' எனத் தொடங்குகிறது திருக்குறள்.
அருணாசலத்தின் முதல் எழுத்து 'அ'கரம்.
அதுவே அக்ஷரமணமாலையின் முதலெழுத்து.
முதல் மூன்று கண்ணிகளிலும் மூன்றுமுறை அகரம் வருகிறது.

1. அருணாசலமென அகமே நினைப்பவர் 
    அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

நினைத்தாலே முக்தி தரும் தலம் அருணாசலம். அருணாசலம் என்று ஒருமையுடன் மனதில்  நினைப்பவர்களின் அகந்தையை வேரோடு அழிப்பவன் அருணாசலன்.

என்னால்தான் அனைத்தும் நடக்கிறது, என்று எண்ணுவது மனித இயல்பு. எல்லோரும் தாங்கள் சொல்வதும் செய்வதும்தான் சரியானது, என்று தங்களைப் பற்றிமட்டும் உயர்வாக நினைக்கிறார்கள். அதுவே அகந்தை எனப்படும். தான் என்ற உணர்வை ஏற்படுத்துவது  அகந்தை. அதை அழித்தால்தான் ஆண்டவனைக் காண முடியும்.
அகந்தையை மனித யத்தனத்தால் அழிக்கமுடியாது. அருணாசலனை உணர்ந்து  அவனாலே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிந்து, அவனிடம் சரணடைந்தால் அவர்களது அகந்தையை அருணாசலன் வேரோடு அழிப்பான்.



No comments:

Post a Comment