29 May 2014

14. அருணாசல அட்சர மணமாலை

ஒளவை போல் எனக்கு உன் அருளைத் தந்து எனை
   ஆளுவது உன் கடன் அருணாசலா!

ஒளவை என்றால் தாய்.'ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிவோய்,' என்றாரே முன்னால்!
இங்கு மீண்டும், ஒரு தாயைப் போல் உன் அருளினால் என்னை ஆளுவது வேண்டும் என்கிறார்.
அரசன் நாட்டு மக்களை ஆள்கிறான்.
தன் குழந்தைகளை ஆளும் அரசி அன்னை! தன்னுடைய சுகத்தைச் சற்றும் சிந்தியாது, இரவு பகல் பாராது, தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெற்ற நாளிலிருந்து ஒரு தாயின் கருணைக்கும்  பராமரிப்புக்கும் எல்லையே இல்லை!
 சிவபெருமானோ அம்மையப்பன் அல்லவா?
வள்ளல் பெருமான், சிவமே தந்தை, தாய், குரு, நட்பு, துணை, மருந்து, மந்திரம்,பொன், நிதி என அனைத்தும் சிவமே என உருகுவார். எத்தனை சத்தியமான சொற்கள்? தாய் தான் ஒரு குழந்தையின் முதல் குரு, சினேகிதன், துணை! அம்மா என்ற சொல் மருந்து, துன்பங்கள் வரும் போது மந்திரம்!

''அருளைத் தந்து ஆளுவது,'' என்ன? ஆம்,அது பூரண சரணாகதி.
''பாட்டுவித்தால் பாடுகிறேன், பணிவித்தால் பணிகிறேன், ஊட்டுவித்தால் உண்கிறேன், ஆட்டுவித்தால் ஆடுகிறேன்,'' அவன் செய்வது எப்படியோ, அப்படியே ஆகட்டும் - வள்ளல்!

ஆகவே ஒரு தாய் போல உன்னருள் கொண்டு என்னைப் பராமரிப்பாய். அது 'உன் கடன் ' என்கிறார்.
அது என்ன 'கடன்'?
பெற்ற கடன் என்பார்களே?
மதுரையில் ஏதுமறியாத சிறுவனாய் இருந்த போது,'அருணாசலம் என்ற பெயரை, ஊரைக் காட்டி, வலிய வந்து இடத்திலிருந்து கிளப்பி, அகம் புகுந்து, இரண்டறக் கலந்து, அக குகையில் சிறைவைத்து, தப்பிவிடாமல் காத்து, ஊர் சுற்றும் உளத்தை அடக்கி, ஞானமளித்தவன் ஆயிற்றே?
தன்னிடம் அழைத்துக் கொண்டு வந்தவன் அல்லவா? அவனையன்றி வேறு யார் பார்த்துக் கொள்வார்கள்?
திருவண்ணாமலையில் ஶ்ரீ ரமணர் சமாதியில் ஆழ்ந்த போது பலரையும் அனுப்பி அன்னை போல் உணவளித்துக் காத்தவன்!அதை நினைவு கூர்ந்து   'என்னை ஆளுவது உன் கடன்'' என்றார்.

'அ' முதல் 'ஒள' வரை பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் தொடங்கும் கண்ணிகளைப் பார்த்தோம்.
அதன் வரி வடிவம் அடுத்த பதிவில்.


No comments:

Post a Comment