12 May 2014

அட்சரமணமாலை - திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் திருக்கோயில்



"அதுவே தலம் அருணாசலம் தலம் யாவிலும் அதிகம்
அது பூமியின் இதயம் அறி; அதுவே சிவன் இதயப்
பதியாம் ஒரு மருமத்தலம் பதியாம் அவன் அதிலே
வதிவான் ஒளி மலையா நிதம் அருணாசலம் எனவே" -அருணாசல மகாத்மியம்

பெங்களூரிலிருந்து பாண்டிச்சேரி ( புதுச்சேரி) செல்லும் வழியில் செங்கம் சாலையில் உள்ளது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் எனப் பெருமை பெற்ற இத்தலம் தென் கயிலாயம் எனவும் போற்றப் படுகிறது.

இங்குள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம்  பஞ்சபூதத் தலங்களில் ஒன்று. லிங்கம் தேஜோலிங்கம் எனப்படுகிறது. அதாவது (நெருப்பு) ஒளிவடிவ லிங்கம்! ஆறு ஆதாரத் தலங்களில் மணிபூரகத் தலம்.

 புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்தின்படி இமயமலை தோன்றுவதற்கும் முந்தைய காலத்தது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்னரே, சுமேரிய கண்டத்தினை அழித்த சுனாமி அலைகளால் தொடப்படாதது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப் பட்டது.

திருவண்ணாமலையின் சிறப்பு யாது? மலையே சிவலிங்கமாகப் போற்றப் படுகிறது.  2682 அடி உயரமுள்ள இம்மலை சிவந்த மலை. அருணா -சிவப்பு, அசலம் - மலை. சிவப்புமலை!  
அண்ணாமலை பரசிவத்தின் ரகசிய இதயத்தானம் எனப்படுகிறது. சிவபெருமான் செந்நிறமான தூணாய் அடி முடி காண இயலாதவராக உருவெடுத்த கதை அனைவரும் அறிந்ததே. சிவ பெருமான் பிரம்ம விஷ்ணு தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மலை உருவாய் தன்னைக் குளிர்வித்துக் கொண்டாராம். கதையை விட்டுவிடுவோம்.

வெகு தூரத்திலிருந்து பார்க்குங்கால் வெண்மேகங்களின் அரவணைப்பில் வெண்ணீரணிந்தவனின்
முகம் காட்டும், அருகிலோ செம்மை காட்டும்!

''பைம் பொன்னே பவளக்குன்றே பரமனே பால் வெண்ணீற்றாய், செம்பொனே'' என வர்ணிக்கிறார் திருநாவுக்கரசு அடிகள்.

13 கிலோமீட்டர் சுற்றளவு உடைய இம்மலை பலசிகரங்களையும், சிறு குன்றுகளையும், குகைகளையும், மரச்சோலைகளையும், தீர்த்தங்களையும், சிறு அருவிகளையும் உடையது. ஆங்காங்கே பாராங்கற்களும் உள்ளன. இம்மலையைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் சிவலிங்கங்கள் உள்ளன. சூரிய லிங்கமும் உள்ளது.
இம்மலையை பெளர்ணமியன்று சுற்றி வருவது நலம்தரும் என நம்பப்படுகிறது. 

இம்மலை அடிவாரத்தில் அருணாசலேஸ்வரரின்  கோயில் காணப்படுகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் தமிழ் நாட்டின் மிகப் பெரிய கோயிலாகும்.ராஜ கோபுரம் 217 அடி உயரத்துடன் 11 அடுக்குகள் கொண்டது. ஆறு பிரகாரங்களும், ஒன்பது  கோபுரங்களும் உள்ளன.

'கிரி  உருவாகிய கிருபைக் கடலே, கீழ்மேலெங்கும் கிளரொளி மணி, கருணைமாமலை,' என்றெல்லாம் 
போற்றுகிறது மணமாலை.

இம்மலையே சிவலிங்கம். இம்மலையை ஆன்மாவாகக் காண்பவர் உள்ளத்தில் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும் என்பதில் ஐயமில்லை.

அருணாசல அருட்பெருஞ் சோதி. 










No comments:

Post a Comment