13 May 2014

அருணாசல அட்சரமணமாலை- ஶ்ரீ ரமண மகரிஷி


அட்சரமணமாலையின் மலர்களைக் கண்டும், நுகர்ந்தும் நம்மை  மறந்து இன்புறுமுன் அம்மாலையை அருணாசலனுக்கு அணிவித்து அழகு பார்த்த   ஶ்ரீரமணரது சரிதத்தை மிகச் சுருக்கமாகக் காண்போம்.

அம்மை மீனாட்சி அருளாட்சி புரியும் மதுரைமாநகரில் இருந்து 30 கல்தொலைவில் உள்ளது திருச்சுழி என்னும் கிராமம்.1879 ஆம் ஆண்டு, டிசம்பர் 30 ஆம் நாள். அதாவது  பிரமதி வருடம், மார்கழி 16, இரவு 1 மணி.  ஆருத்ரா தரிசன நாள் என சைவர்கள் கொண்டாடும் திருவாதிரைத் திருநாள்!
அந்த புனிதமான விடியலில் திரு. சுந்தரம் ஐயருக்கும், அழகம்மைக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர்தான் ஶ்ரீ ரமணமகரிஷி. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கடராமன்.

சிறுவயதில் படிப்பில் அதிக ஆர்வமற்றும், விளையாட்டுகளில் தீவிர கவனம் செலுத்துபவராயும் இருந்தார் வெங்கடராமன். ஒரு நாள் அவர் குடும்ப சினேகிதரை வழியில் பார்த்ததும்,'எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்க, அவர் 'அருணாசலம்' என்றார். அது எங்கே உள்ளது என்று கேட்க, 'ஓ, உனக்கு திருவண்ணாமலையைத் தெரியாதா? அதுதான் அருணாசலம்'' என்று சொல்ல ஶ்ரீ ரமணரின் இதயம் சில்லிட்டது. மனம் துள்ள, இனம் புரியாத இன்பம்  ஏற்பட்டது.

ஒருசில மாதங்களுக்குப் பின் வீட்டிலிருந்த 'பெரியபுராணம்' புத்தகம் அவர் கையில் கிடைத்தது. அதுவே அவர் படித்த மதம் சார்ந்த முதல் புத்தகமாகும். அறுபத்து மூன்று நாயன்மார்களின் அசைக்க முடியாத இறை நம்பிக்கையும், ஆழ்ந்த பக்தியும், தானென்ற அகந்தையற்ற சரணாகதியும், உள்ளுணர்வால் இறைவனுடன் கொண்ட தொடர்பும், இறைவனின் கருணையும் அவரைக் கவர்ந்தன.

1896!
17 வயது வெங்கடராமனுக்கு ஒரு அதிசயமான அனுபவம் ஏற்பட்டது. அதுவே அவர் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அவருடைய அனுபவத்தை அவரே சொல்லக் கேட்போம்.
''என் மாமாவின் இல்லத்து முதல் மாடியில் ஒரு நாள் நான் அமர்ந்திருந்தேன். நல்ல ஆரோக்யமான உடல் என்னுடையது. நோய்நொடிகளால் நான் துன்புற்றதில்லை . ஆனால் அன்று திடீரென்று எனக்கு மரணபயம் ஏற்பட்டது. உடனே மரணிக்கப் போவது எது? இந்த உடலா? அதையும் பார்ப்போம்  என்று தோன்ற நான் கைகால்களை நீட்டிப் படுத்துக் கொண்டேன். மூச்சை அடக்கிக் கொண்டு, வாயை இறுக மூடிக்கொண்டேன். சரி, இந்த உடம்பு இறந்துவிட்டது. மயானத்துக்கு எடுத்துச் சென்று இதனை எரித்து விடுவார்கள். இந்த உடல் பிடி சாம்பல் ஆகிவிடும். ஆனால் இந்த உடம்பு இறந்தாலும் 'நான்' இறந்தேனா? நான் இந்த உடலா? இந்த உடல் அசையாமல் அமைதியாய்க் கிடக்கிறது! உடல் உணர்வின்றி 'நான்' என்ற உணர்வுமட்டும் மேலோங்குகிறது. அப்படியென்றால் இந்த 'நான்' எனும் உணர்வு என்ன? 'நான்' யார்? நான் என்பது ஆத்ம சொரூபமே! இந்த உடல் மரணிக்கும், ஆனால் நானென்ற ஆன்ம உணர்வுக்கு மரணமில்லை. நான் மரணமற்ற ஆன்மா.

உடனே மரணபயம் நீங்கிற்று. ஆனால் 'நான்' என்ற ஆதாரசுருதி என்னை ஆள ஆரம்பித்தது. மற்ற எண்ணங்கள் வந்து போயினும் 'நான்' என்ற ஆன்ம உணர்வே  நின்றது. பேசினாலும், படித்தாலும், எந்த வேலை செய்தாலும்  என் ஆன்மாவிலேயே என் மனம் நிலைத்து நிற்க ஆரம்பித்தது.''

படிப்பிலே நாட்டம் குறைந்தது. மனம் தியானத்திலிருந்து விடுபட முடியாமல் போயிற்று. வெங்கடராமன் ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறி திருவண்ணாமலையை அடைந்தார். 'அப்பனே, உன் ஆணைப் படி உன்னிடம் வந்துவிட்டேன். இனி உன் பொறுப்பு,' என சரணாகதி அடைந்தார்.
அருணாசலத்தின் பல பகுதிகளில் தங்கினார். உணவுக்காக அவருடைய அன்பர்கள் ஊருக்குள் செல்லும் போது பாடுவதற்காக ஒரு பாடல் வேண்டுமென்றனர். ஒருநாள் கிரிவலம் வருகையில் அருணாசலன் மீது தாம் கொண்ட அன்பின் மிகுதியால் உணர்ச்சி மேலோங்க ஶ்ரீரமணர் பாடிய 108 கண்ணிகளே அருணாசல அட்சரமணமாலை.

திருவாசகம், திருவருட்பா, திருமந்திரம், திருப்புகழ், தேவாரம், நாலாயிர திவ்யப்பிரபந்தம் அனைத்துமே  பக்திரசம் சொட்டச் சொட்டப் பாடப்பட்ட தமிழ்ப் பாமாலைகள் தான். என்றென்றும் வாடாத சொல்மாலைகள். இறைவனுக்குச் சூட்டப்பட்ட மணமாலைகள்!

அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில்,'ஆசைமிகுந்த பக்தனாகிய நான் மனதாகிய தாமரை மலரை, அன்பான நூல்கொண்டு, நாவினால் சித்திரம் போல் கட்ட, அவை ஞான வாசம் வீசிப் பிரகாசிக்க, தூய்மையான பக்தர்களுடை மனம் ஆனந்தமடைய,  'மாத்ருகா புஷ்ப மாலையை,' உன் அழகிய பாதங்களில் அணிவிக்க மாட்டேனோ? ' என்று உள்ளம் உருகப் பாடுகிறார்.

அருணாசல அட்சரமணமாலை ஶ்ரீ ரமணபக்தர்களால் தினந்தோறும் அருணாசலத்திற்கு அர்ப்பணிக்கப் படுகிறது. நாமும் அணிவிப்போம். அட்சரமணமாலை, ரமணமாலை, மணமாலை. மாலை சூடுவோம்.

அருணாசல சிவ அருணாசலசிவ அருணாசல சிவ அருணாசலசிவ அருணாசலா.

















1 comment:

  1. வரும்படி சொல்லிலை வந்தென்படியள வருந்திடுன் தலைவிதி அருணாசலா

    Divotee demands the GOD and dominate HIM. Superb state

    ReplyDelete