26 May 2014

11. அருணாசல அட்சர மணமாலை


ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தினில் நீஇலையோ அருணாசலா

முந்தைய கண்ணியில் ஐம்புலன்கள் உன் இதயகுகையில் சிறைப்பட்டிருக்கும் என்னை வெளியே இழுக்க முயல்கையில் தூங்குவதுபோல், ஒன்றும் அறியாதவனைப் போல் சும்மா இருப்பது அழகோ, ''ஏனிந்த உறக்கம், இது உனக்கு அழகோ?'' என்றார். 

ஐந்து புலன்களைக்  கள்வர்கள் என்கிறார்! கள்வர்கள்தான் எப்படியாவது வீட்டினுள் நுழைந்து பொருட்களைக் கொள்ளையடிக்கப் பார்ப்பார்கள்! கண்ணும், காதும், மூக்கும், வாயும்தான் மனிதர்களை என்னபாடு படுத்துகின்றன? ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்ய முடிகிறதா? நம்மை அறியாமலே நம்மை ஆட்டிப் படைக்கும் கள்வர்கள்!
 உன்னிலே மனம் ஒருமித்து இருக்கிற என்னை வெளியே கொணர என்னுள்ளே புகுந்தார்களே அப்போது நீ எங்கே போயிருந்தாய்? உனக்குத் தெரியாதா?அகத்தில் நீ இருந்திருந்தால் அவர்கள் உள்ளே நுழைய முடியாது அல்லவா?
ஐம்புலன்களும் நம்முள்ளே இருக்க எங்கிருந்து நுழைவது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? 
ஆம், நம்முள்ளே இருக்கிற ஐம்புலக் குதிரைகள்? மனம்தான் சாரதி! சாரதியின் கையில் சாட்டையாக இருக்குமாறு ஆன்மாவாகிய சக்தியிடம் கொடுத்து சரணாகதி அடைவதுதான் ஒரேவழி!

இறைவனுடைய திருவருள் இல்லாவிட்டால் ஆன்ம வாழ்வில் முன்னேற முடியாது என்பதை அழகாகச் சொல்கிற வரிகள்.
இல்லையோ? என்னும் போது இருக்கிறாய் அதனால் புலனடக்கம் பெற்றேன் என்று சொல்வது விளங்கும். எனவே பிரிவேதும் இல்லாமல் என்னைக் காப்பது உன் கடன் என்று அருணாசலத்திற்கு உணர்த்துகிறார்.


No comments:

Post a Comment