22 May 2014

7. அருணாசல அட்சர மணமாலை

7. உனையே மாற்றி ஓடாது உள்ளத்தின் மேல்
       உறுதியாய் இருப்பாய் அருணாசலா

(உனை- ஏமாற்றி= ஓடாது- உள்ளத்தின் மேல் உறுதியாய் உன்னை விடாமல் இருத்தல் வேண்டுமென வேண்டுகிறேன்.)

 பெற்ற தாயினும் பேரருள் புரிபவனாகிய நீ என் அகம் புகுந்து, என்னை ஈர்த்து, இரண்டறக் கலந்து, உன் இதயகுகையில்  சிறை வைத்தாய்! இனிமேல் உன்னை யார் விடப்போகிறார்கள் என்று கர்வம் கொண்டேன்!  ஆனால்....
என்னுடைய பொல்லாத உள்ளம் இருக்கிறதே அது எத்தகையது?
உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிப் போகத் தயாராக இருக்கிறது!
எந்த பேதமும் இன்றி எல்லாப் பொருட்களிலும் உட்காரும் ஈயைப் போன்று என் ஐம்புலன்கள் என்னை இவ்வுலக விஷயங்களுக்கு கட்டி இழுக்கிறது.

'உனை ஏன் நினைப்பித்தாய், யாருக்காக என்னை ஆண்டனை, 'என்றெல்லாம் கேட்டவர் இப்போது விண்ணப்பம் செய்கிறார்!

அப்பனே, என் மனதை அடக்கும் சக்தி எனக்கு இல்லை. நீதான் என் உள்ளத்திற்கு தெளிவைக் கொடுத்து சாதனையில் உறுதியோடு நிற்குமாறு அருள் புரிய வேண்டும்.

தியானம் செய்வதற்கும், ஆன்மிக வாழ்வை உறுதியோடு பின் பற்றுவதற்கும் இறைவன் துணை வேண்டும்.

(உள்ளம், மனம் எல்லாம் ஒன்றே. மனம்  சதா எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது.
யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அது  வேறொன்றையும் பற்றாமல் அதையே பற்றிக் கொண்டு செல்லும். அது போல மனதையும் ஒரு நாம ஜபத்திலோ, அல்லது உருவ நினைப்பிலோ
இருக்குமாறு பழக்கினால்  மனமும் அதையே பற்றிக் கொண்டிருக்கும் என்பது ஶ்ரீரமணர் வாக்கு.)






No comments:

Post a Comment