28 May 2014

13. அருணாசல அட்சர மணமாலை

ஓங்காரப் பொருள் ஒப்புயர் வில்லோய்
உனையார் அறிவார் அருணாசலா

ஓங்காரப் பொருளாய் ஒப்பும் உயர்வும் அற்று விளங்குபவனே. உன்னை  உண்மையில் அறிய வல்லவர் யார்?
ஓம் என்பது பிரணவ மொழி. பிரபஞ்சத்தின் அத்தனை தோற்றங்களுக்கும் ஆதாரமாகக் கருதப்படுவது 'ஓம்' எனும் ஒலியாகும். ஓம் என்பதனுள் அகரமும், உகரமும், மகரமும் உள்ளன.''ஓங்காரத்து உள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்,'' ஓம் என்ற பிரணவத்தின் உள் ஒளியாய் உள்ள பெருமானே எனப்பாடுகிறார் வள்ளலார்.  ஓங்காரம் ஒளியுடையது போலவே ஒலியுடையது.
இறைவன் ஓங்காரத்து உருவாய் நிற்பதால் சிந்திக்கும் உள்ளத்தில் அவன்  காட்சி தருகிறான்.
''ஓமெழுத்தில் அன்பு  மிக  ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே,'' என்பார் அருணகிரி.
''உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா,'' என்பது சிவபுராணம். என் உள்ளத்தில் ஓங்காரமாய் நீ ஒலித்துக் கொண்டிருப்பதை நான் அறிந்து கொள்ளும் போது எனக்கு முக்தி கிடைக்கும்!
பிரபஞ்சம் முழுவதிலும் ஓங்காரமாக இறைவன் ஒலித்துக் கொண்டிருக்கிறான். நம் உடலை ஆன்மிக வாழ்வுக்காக சீர் படுத்தினால் நாமும் நம் உள்ளத்தில் ஓங்கார ஒலியைக் கேட்கலாம்.


இது முழுமையானது. எனவே ஒப்பிட்டுக் கூற ஏதுமற்றது. இதை விட உயர்ந்தது எதுவும் இல்லை. எனவே 'ஒப்புயர்வு இல்லோய்' என்றார்.
அவனை முழுமையாக உணர்ந்தவர் யாருமிலர்.
அவனை முழுமையாக உணர்ந்தவர் யாருமிலர்.எனவே 'உனையார் அறிவார்' என்றார்.
அருணாசல அருட்பெருஞ்சோதி!

No comments:

Post a Comment