5 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பூந்துருத்தி

                                     - சீலநிறை
வாந்துருத்தி கொண்டுள்ளனல் எழுப்பு வோர்புகழும்
பூந்துருத்தி மேவுசிவ புண்ணியமே -

(சீல நிறைவாம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும் பூந்துருத்தி மேவும் சிவ புண்ணியமே)
துருத்தி- உலையூதுங்கருவி, தோல்பை; கொல்லர் இத்துருத்தி மூலம் காற்றை எழுப்பித் தீயை எழச் செய்வர்; அதுபோல யோகியர் மூச்சுப் பயிற்ச்சியால் மூலாதாரச் சக்கரத்திலிருந்து குண்டலினி சக்தியை சஹஸ்ராரம் எனப்படும் தலை உச்சிக்கு கொண்டு செல்வர். பரசிவ ஆனந்தத்தை அனுபவிப்பர்.
அதுவே யோகத்தின் முடிவாம்! இதற்கு நல்லொழுக்க வாழ்வு வாழ வேண்டும்.
நல்லொழுக்க நிறைவு எனப்படும் துருத்தியைக் கொண்டு உள் அனல்( மூலத்தீயை) என்ற அந்தராக்னியை யோகத்தால் எழுப்பிடும் யோகியர் புகழும் திருப்பூந்துருத்தியில் சிவ பக்தர்களின் புண்ணியப் பயனால் எழுந்தருளியிருக்கும் சிவமே உம்மை வணங்குகிறேன்.

இதையே அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில்,
''துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன் சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே'' என்பார்.

திருக்கண்டியூர்க்கு மேற்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இரண்டு ஆறுகளுக்கு
இடையில் உள்ள தலம் 'துருத்தி' எனப்படும். இத்தலம் காவிரிக்கும், குடமுருட்டிக்கும் இடையில் உள்ளது.சப்தஸ்தானத்தலங்களில் ஒன்று.சிவபெருமான் நந்தியை விலகச் செய்து காட்சிதந்தாராம்!
இத்தலத்தில் சம்பந்தர் அறியாவண்ணம் அவர் வந்த பல்லக்கைத் திருநாவுக்கரசர் தாங்கினாராம்.

இறைவன்: புட்பவனநாதர்
இறைவி   : அழகாலமர்ந்த நாயகி
தலமரம்   : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment