31 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பழையாறை வடதளி

                                              - துட்டமயல்
தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க
ஓங்குபழை  யாறையிலென் உள் உவப்பே - பாங்குபெற
ஆர்ந்த  வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
சார்ந்த வடதளிவாழ் தற்பரமே - 

பட்டீச்சரத்துக்கு கிழக்கே உள்ளது, பழையாறை. சோழர்களின் தலைநகரங்களில் ஒன்று. வடதிசையில்
அமைந்த சிவாலயம் பழையாறை வடதளி. இரண்டும் வேறு வேறாக உள்ளன. சமணரால் வடதளிக் கோயில் மறைக்கப்பட்டிருந்தது. அதை அறிந்த திருநாவுக்கரசர் அங்கு உண்ணாவிரதம் இருந்ததாகவும், மன்னன் முயற்சியால் மறைக்கப் பட்டிருந்த கோயில் வெளிப்பட்டதாகவும் தல
புராணம் கூறுகிறது.
இனி வள்ளல் பெருமான் கூறுவதைக் கேட்போம் - தீயசெயல்கள் அறிவின்மையால் ஏற்படும் மயக்கத்தாலேயே உண்டாகின்றன.  தீமைபுரியாத நன்மக்களை வான் உலகு சென்று உள்ளமெல்லாம் இன்பவெள்ளம் பாயுமாறு  வாழ்விப்பவர் பழையாறை நகரிலே, வீற்றிருக்கும்  சிவபெருமான்!
ஆலிலைமேல் துயின்ற திருமாலும், அன்னப் பறவையை ஊர்தியாகக் கொண்ட பிரமனும் நாள்
தோறும் வந்து வடதளி ஈசனை வணங்கிச் செல்கிறார்கள்.

இறைவன்:தர்மபுரீஸ்வரர்
இறைவி   : விமலநாயகி
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி.

30 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பட்டீச்சரம்

                                          - பத்தியுற்றோர்
முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
பட்டீச் சரத்துஎம் பராபரமே -

(ஈச்சுரம் - இறைவன் உறையும் கோயில்) (பத்தி) பக்தி
சிவபக்தியுடையவர் பராபரமான சிவபெருமான் உள்ள திருக்கோயிலைக் காண எந்தத் தடையும் இல்லாவகை பட்டீச்சுரத்தில் கோயில் கொண்டு  அருள் பாலிக்கிறார்.

பட்டீச்சரத்திற்கும் சத்திமுற்றத்துக்கும் இடையே ஒரு தெருதான் உள்ளது.காமதேனுவின் புதல்வி
பட்டி பூசித்ததால் பட்டீச்சரம். இங்கு ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தர் அருளினார்.
ஞானசம்பந்தர் வரும் காட்சியைக்  கருவறையிலிருந்து  காண நந்தியை விலகி இருக்கச் சொன்னாராம். எனவே இத்தலத்தில் உள்ள ஐந்து நந்திகளும் சந்நிதியிலிருந்து விலகியுள்ளன.
வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அஷ்டபுஜ துர்க்கை விசேஷம். ஊர் பழையாறை. கோயில் பட்டீச்சரம். வாலியைக் கொன்றதால் இராமபிரானுக்கு ஏற்பட்ட சாயா தோஷம் இங்குதான் நீங்கியது.
இராமபிரான் ஸ்தாபித்த லிங்கம் இன்னும் வழிபாட்டில் உள்ளது. இக்கோயில் கிழக்கு மேற்கில் 650  அடி,தெற்கு வடக்கில் 295 அடி. இங்குள்ள துர்க்கை வரப்பிரசாதி. சம்பந்தர் பதிகம் உள்ளது.
இறைவன் :பட்டீச்சரர்,தேனுபுரீஸ்வரர்
இறைவி    : பல்வளை நாயகி, ஞானாம்பிகை
தலமரம்     : வன்னி

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்  - அருட்பெருஞ்சோதி





29 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சத்தி முற்றம்

                                           - ஓவாது
சித்திமுற்ற யோகம் செழும் பொழிலில் பூவைசெயும்
சத்திமுற்ற மேவும் சதாசிவமே -

திருச்சத்தி முற்றம் எனும் சோலைகள் சூழ்ந்த ஊரில் சதாசிவமாய் வீற்றிருக்கும் பரம்பொருளே! இவ்வூர்ப் பறவைகளான மைனாக்கள் சற்றும் நிறுத்தாமல் எண்வகை சித்திகளும் கிடைப்பதற்காக
யோகம் செய்யும் புண்ணியம் செய்துள்ளன!

கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சத்திமுத்தம் என்று வழங்கப்படுகிறது. இங்கு இறைவனை அம்பிகை வழிபட்டு லிங்கத்தைத் தழுவி முத்தமிட்ட திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.  இங்கு  மனமார வேண்டிக்கொள்வதெல்லாம் நிறைவேறும்.

இறைவன் : சிவக்கொழுந்தீசர்
இறைவி    : பெரிய நாயகி
தீர்த்தம்     : சூலதீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

28 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

ஆவூர்ப் பசுபதீச்சுரம்

                                        - மல்லார்ந்த
மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
ஆவூரி லுற்ற எங்கள் ஆண்தகையே -

 உயர்ந்த சிகரங்களையுடைய   திருஆவூர்ப்பசுபதீச்சுரத்தில் ஆண்தகையாய்  பெருமையுடன் வீற்றிருக்கிறார் சிவபெருமான்!  வளம் மிக்க ஏழு குதிரைகளைப் பூட்டிய பொன்னிறத் தேரில்
கதிரவன் கடலிலிருந்து எழுந்து வந்து வையம் முழுவதையும், ஆவூரின் சிகரங்களையும் தழுவுகிறான்.

கும்பகோணம் புகை வண்டி நிலையத்திலிருந்து  13 கி.மீ தொலைவில் உள்ளது. ஆவூர் என வழங்கப்படுகிறது. காமதேனுவிற்கு வசிட்டரால் ஏற்பட்ட சாபம் நீங்க இங்கு வந்து வழிபட்டதால் நீங்கியது.எனவே ஆவூர். ஆ- பசு. பசுபதீச்சுரம் என்பது கோயில் பெயர்.

இறைவன் : பசுபதீஸ்வரர்
இறைவி    : மங்களநாயகி, பங்கஜவல்லி
தலமரம்     : அரசு

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி


27 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநல்லூர்

                                                 - சீலத்தர்
சொல்லூர் அடியப்பர் தூயமுடி மேல் வைத்த
நல்லூர் அமர்ந்த நடுநாயகமே -

இந்த ஊர் நல்ல ஊர்! ஏன்? (சீலத்தார் சொல்லூர் அடி) சைவ ஒழுக்கமுடைய பெரியோர் புகழ்ந்து பேசும் இறைவனின் திருவடிகள் -  நடுநாயகமாகத் திகழ்கிறது இவ்வூரில்!அப்பர் பெருமானுடைய தூய
முடிமேல் தன் திருவடிகளை வைத்து சிவபெருமான் அருள் புரிந்தார். அப்பர் திருச்சத்தி முற்றத்தில்
தன் முடி மேல் அடி வைக்கும்படி வேண்டியதற்கு, இறைவன் இந்தத் திருநல்லூரில் தம் திருவடியை
அவரது முடி மேல் வைத்தருளினார்.
                 
மூலவர் சிவலிங்கத் திருமேனி சுயம்பு! ஒரு நாளில் ஆறு நாழிகைக்கு ஒரு முறை ஐந்து முறை நிறம்
மாறுகிறது.  இதனால் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயர் உள்ளது. வண்டு வடிவம் கொண்டு பிருங்கி முனிவர் வழிபட்டார்.அதனால் சிவலிங்கத்தில் துளைகள் உள்ளன.

கும்பகோணத்திலிருந்து  தஞ்சாவூர் செல்லும் பாதையில் வலங்கைமான் செல்லும் சாலையில் உள்ளது.
இறைவன் : பெரியாண்டேஸ்வரர்
இறைவி    : திரிபுர சுந்தரி
தீர்த்தம்     : சப்தசாகர தீர்த்தம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி

26 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பாலைத் துறை

                                                    - முருகார்ந்த
சோலைத் துறையில்  சுகஞ்சிவநூல் வாசிக்கும் 
பாலைத் துறையிற் பரிமளமே -

அழகும், மணமும், தேனும் நிறைந்த மலர்ச்சோலைகள்! அவை வளம்பெற நீர்த்துறைகள்! இங்கு
படிக்கப் படிக்க சுகம் தரும், இன்பமளிக்கும் சிவபெருமானைப் போற்றும் சைவ நூல்களை ஓதும்
அறிஞர்கள்!சிவஞான மணம் கமழும் ஊர் திருப்பாலைத் துறை.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திற்கு முன்பாக உள்ளது. பாண்டவர்கள் வனவாசத்தின்
பொழுது அர்ச்சுனன் இங்கு வந்து வில்வித்தை நுட்பங்களை உணர்ந்ததாக தலபுராணம் கூறுகிறது.
இறைவன் :பாலைவனநாதர்
இறைவி   : தவளை வெண்ணகையாள்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி.

24 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கருகாவூர்

                                              - மிக்க
அருகாவூர் சூழ்ந்தே அழகு பெற ஓங்கும்
கருகாவூர் இன்பக் கதியே -

மிக்க அண்மையில்  வளமான ஊர்கள் சூழ்ந்து அழகு பெற்று ஓங்கும் திருக்கருகாவூரின் இன்பமே. நீயே கதியென உன்னை வணங்குகிறோம்.

பாபநாசம் புகை வண்டி நிலையத்திலிருந்து தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பஞ்சாரண்யத் தலங்களில் ஒன்று.திருக்களாவூர் என்றும் வழங்கப்படுகிறது. இத்தலத்தை வழிபடும்
கருவுற்ற பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.

இறைவன் : முல்லைவனநாதர்
இறைவி   : கர்ப்பரட்சாம்பிகை
தலமரம்   : முல்லை

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெரும்சோதி

23 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சக்கரப்பள்ளி

                                                       - கள்ளமிலஞ்
சக்கரப் பள்ளிதனில் தாம்பயின்ற மைந்தர்கள்சூழ்
சக்கரப் பள்ளிதனில்  தண்ணளியே -

(கள்ளமிலஞ் சக்கரப் பள்ளி - கள்ளம் + இல் + அஞ் சக்கரம் + பள்ளி
அஞ்சக்கரம் - நமசிவாய எனும் ஐந்து அட்சரங்கள்; திருவைந்தெழுத்து )
திருச்சக்கரப்பள்ளியில் சிவநெறித் திருமடங்கள் உள்ளன. இம்மடங்களில் கூடும் இளைஞர்கள்
நமசிவாய மந்திரத்தை ஓதுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சக்கரப் பள்ளியில் பக்தர்கள் மனதைக் குளிரச் செய்கிறார் சிவபெருமான். அவரை வணங்குகிறேன்.

இவ்வூர் தற்போது அய்யம்பேட்டை என வழங்கப்படுகிறது. இங்கு திருமால் வழிபட்டு சக்ராயுதம் பெற்றார். சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.

இறைவன் : சக்கரவாகீஸ்வரர்
இறைவி   :  தேவநாயகி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி!

22 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்புள்ள மங்கை

                                               - நன்குடைய
உள்ள மங்கை மார்மேல் உறுத்த தவர்புகழும்
புள்ள மங்கை  வாழ்பரம போகமே -

நன்மை நிறைந்த தம் மனத்தை சான்றோர் சிற்றின்ப போகத்தில் செலுத்த மாட்டார்கள்.  அத்தகைய
மன உறுதி உடையவர் வாழும் ஊர் திருப்புள்ளமங்கை. இவ்வூரில் மேன்மையடையச் செய்யும் சிவபோகத்தைத்தருபவர் சிவபெருமான். சான்றோர் எப்போதும் திருப்புள்ளமங்கைச் சிவனை புகழ்ந்து போற்றுவர். நாமும் அவரைப் போற்றி, வாழ்த்தி வணங்குவோமாக.

இவ்வூர் திட்டையை அடுத்துள்ள புகைவண்டி நிலையமான பசுபதி கோயிலுக்கு வடமேற்கில் 2 1/2 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு மஹிஷாசுரமர்த்தினி (துர்க்கை) சிறப்புடையது. திருப்புள்ளமங்கை, பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம்  ஆகிய இம்மூன்று ஊர்களிலும் உள்ள துர்க்கைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை மூன்றும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. அமுதம் கடைந்த போது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்பது தலபுராணச்செய்தி. இது சக்கரப்பள்ளி சப்தமங்கைத் தலங்களுள் ஒன்றாகும்.

இறைவன் : ஆலந்தரித்தநாதர்
இறைவி    : அல்லியங்கோதை

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ்சோதி! 

11 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

தென் குடித் திட்டை

                                      - கோதியலும்
வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
தென்குடித் திட்டைச் சிவபதமே -

(கோது - குற்றம். திட்டை - புன்செய் நிலம்)
குற்றம் செய்யும் வன்மனக் குடியினர் வாழும் இடத்தைச் சேராமல் நல்ல மனமுடைய சான்றோர் விரும்பியடையும் திருத்தென்குடித் திட்டை என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவனே உம்மை வணங்குகிறேன்.
நவக்கிரஹங்களில் குருவுக்கு உரிய தலம். காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் திட்டில் அமைந்துள்ளதால் திட்டை எனப்படுகிறது. தேனுபுரி என்ற பெயரும்
உண்டு. ஈஸ்வரன் சுயம்புத் திருமேனி. கருவறையின் சிவலிங்கம் இருக்கும் பகுதியின் மேல் சந்திரகாந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளதால் சிவலிங்கத்தின் மீது அரைமணிக்கு ஒரு சொட்டு நீர்
விழுகிறதாம். இங்குள்ள திருநீற்றுக் கோயில் காணத்தக்கது.

இறைவன் : பசுபதி நாதர்
இறைவி    : உலகநாயகி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

8 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவேதிகுடி

                                    - ஆற்றலிலாத்
தீதிக் குடிஎன்று செப்பப் படார்மருவும்
வேதிக் குடியின்ப வெள்ளமே - 

இவர்கள் நல்லவர் அன்று. தீயவர்களான இவர்களுடன் வாழ்வது குற்றம் என்று சொல்லக்கூடிய அளவில் சிலர் இருப்பார்கள். அதனால்தான் 'துஷ்டரைக் கண்டால் தூர விலகு,' என்னும் பழமொழி வழங்குகிறது.
மேலும் 'தீயாரைக் காண்பதுவும் தீதே, திருவற்ற தீயோர் சொல் கேட்பதுவும் தீதே,' எனத் தீய குணமுடையாரிடமிருந்து  விலகிப் போகிறோம். இன்ப வெள்ளமாக விளங்கும் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் திருவேதிக்குடியில் நல்லவர்களே வந்து வழிபடுகிறார்கள். (குடி - குடியிருப்பு)

இவ்வூர் திருக்கண்டியூர்க்குக் கிழக்கில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. இங்கு இறைவன் அர்த்த நாரீஸ்வரர் வடிவில், வலப்புறம் உமையும், இடப்பால் சிவனுமாக அமர்ந்திருக்கிறார். இது ஒரு திருமணப் பிரார்த்தனைத் தலமாகும்.

இறைவன் : வேதபுரீஸ்வரர்
இறைவி    : மங்கையர்க்கரசி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

7 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருச்சோற்றுத்துறை

                         - கொண்டியல்பின்
வேற்றுத் துறையுள் விரவா தவர் புகழும்
சோற்றுத் துறையுள் சுகவளமே -

 திருச்சோற்றுத் துறை என்னும் பதியில் தன்னை வணங்குபவர்க்கு சுகத்தையும், வாழ்க்கை வளத்தையும் தரும் சிவபெருமானை யார் புகழ்கிறார்கள்? சிவ நெறியை மட்டுமே பற்றிக் கொண்டு பிற சமயத் துறைக்
குள் கலவாத சிவபக்தர்கள் புகழ்கிறார்கள்! சோறு - முக்தியின்பம்.

இவ்வூர் கண்டியூர்க்குக் கிழக்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்று.
இறைவன் : தொலையாச்செல்லர்
இறைவி    : அன்னபூரணி

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்



6 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருக்கண்டியூர்

                                          - காந்தருவத்
தண்டியூர் போற்றும் தகைகாசிக் கண் செய்து
கண்டியூர் வாழும் களைகண்ணே -

காந்தர்வர்கள் விரும்பும் அழகைக் காசி நகருக்குத் தந்தவர் சிவபெருமான். அதுபோன்ற சிறப்பை
திருக்கண்டியூர் பெரும் வண்ணம் கோயில் கொண்டு அனைத்து உயிர்க்கும் அருள் செய்யும் சிவமே!

இவ்வூர் திருவையாற்றுக்குத் தெற்கில் காவிரித் தென்கரையில் இருக்கிறது. மாசிமாதம் 13,14, 15 நாட்களில்மாலையில் சூரிய ஒளி ஈஸ்வரன் மீது படுகிறது.

இறைவன் : வீரட்டானேஸ்வரர்
இறைவி    : மங்களநாயகி
தலமரம்     : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்


5 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருப்பூந்துருத்தி

                                     - சீலநிறை
வாந்துருத்தி கொண்டுள்ளனல் எழுப்பு வோர்புகழும்
பூந்துருத்தி மேவுசிவ புண்ணியமே -

(சீல நிறைவாம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும் பூந்துருத்தி மேவும் சிவ புண்ணியமே)
துருத்தி- உலையூதுங்கருவி, தோல்பை; கொல்லர் இத்துருத்தி மூலம் காற்றை எழுப்பித் தீயை எழச் செய்வர்; அதுபோல யோகியர் மூச்சுப் பயிற்ச்சியால் மூலாதாரச் சக்கரத்திலிருந்து குண்டலினி சக்தியை சஹஸ்ராரம் எனப்படும் தலை உச்சிக்கு கொண்டு செல்வர். பரசிவ ஆனந்தத்தை அனுபவிப்பர்.
அதுவே யோகத்தின் முடிவாம்! இதற்கு நல்லொழுக்க வாழ்வு வாழ வேண்டும்.
நல்லொழுக்க நிறைவு எனப்படும் துருத்தியைக் கொண்டு உள் அனல்( மூலத்தீயை) என்ற அந்தராக்னியை யோகத்தால் எழுப்பிடும் யோகியர் புகழும் திருப்பூந்துருத்தியில் சிவ பக்தர்களின் புண்ணியப் பயனால் எழுந்தருளியிருக்கும் சிவமே உம்மை வணங்குகிறேன்.

இதையே அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில்,
''துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன் சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே'' என்பார்.

திருக்கண்டியூர்க்கு மேற்கில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இரண்டு ஆறுகளுக்கு
இடையில் உள்ள தலம் 'துருத்தி' எனப்படும். இத்தலம் காவிரிக்கும், குடமுருட்டிக்கும் இடையில் உள்ளது.சப்தஸ்தானத்தலங்களில் ஒன்று.சிவபெருமான் நந்தியை விலகச் செய்து காட்சிதந்தாராம்!
இத்தலத்தில் சம்பந்தர் அறியாவண்ணம் அவர் வந்த பல்லக்கைத் திருநாவுக்கரசர் தாங்கினாராம்.

இறைவன்: புட்பவனநாதர்
இறைவி   : அழகாலமர்ந்த நாயகி
தலமரம்   : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்



4 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவாலம்பொழில்

                                                   - மருக்காட்டு
நீலம் பொழிற்குள் நிறை தடங்கட் கேர் காட்டும்
ஆலம் பொழில் சிவயோ கப்பயனே -

நல்ல மணம் வீசும் மலர்ச் சோலை; சோலையின் நடுவே தண்ணீர் நிறைந்த நீர் நிலை.
அந்த நீர்நிலையில் நீல நிறமலர்கள் நிறைந்திருக்கின்றன. இத்தகைய தோற்றப் பொலிவு நிறைந்த திருவாலம்பொழில் என்ற பெயருடைய இவ்வூரில் சிவயோகப் பயனாய் விளங்குகிற சிவ பெருமானுக்கு வந்தனங்கள்.

இவ்வூர் தஞ்சைக்கு வடக்கில் திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி என்ற ஊர்களுக்கு அப்பால் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதி. அப்பர் ஒரு பதிகம் படியுள்ளார்.

இறைவன் : ஆத்மநாதேஸ்வரர்
இறைவி    : ஞானாம்பிகை
தலமரம்     : ஆல்

திருவருட்பிரகாச வல்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

3 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

மேலைத் திருக்காட்டுப் பள்ளி

                                                       - எண்ணார்
தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோர் சூழும்
திருக்காட்டுப் பள்ளியில்வாழ்  தேவே -

பகைவர்களுடைய செருக்கை (கர்வத்தை) அழிப்பதற்கு மனவலிமை வேண்டும்.  இத்தகைய மனவலிமை
உடையவர்கள்  திருக்காட்டுப் பள்ளி இறைவனை சூழ்ந்து துதிக்கிறார்கள்.

இவ்வூர் திருக்காட்டுப் பள்ளி என அழைக்கப்படுகிறது. அக்னீஸ்வரம் என்ற பெயர் இக்கோயிலுக்கு உண்டு.

இறைவன் : தீயாடியப்பர்
இறைவி    :செளந்தரநாயகி
தலமரம்     : வன்னி, வில்வம்

திருவருட்பிரகாசவள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் 

2 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநெடுங்களம்

                                              - துன்றுகயல்
கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ்
தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே -

(துன்றுகயல் கண்ணார் - நெருங்கிய மீன் போல் விளங்கும் கண்களையுடைய பெண்டிர்)
(தண்ணார் நெடுங்களம் - குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த திரு நெடுங்களம்
என்ற ஊர்) கயல்போலும் கண்களையுடைய பெண்டிரின் காம வலையில் வீழாது தங்களுடைய
மனதை வென்ற தவயோகியருக்கு ஆதாரமாக விளங்குபவர் திரு நெடுங்களத்துச் சிவன்.
அவரை வழிபடுங்கள் என்றவாறு.

 திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் துவாக்குடி என்ற ஊரிலிருந்து 3 கி. மீ.
தொலைவில் உள்ளது. திருஞானசம்பந்தர் இடர்களையும் பதிகம் ஒன்றைப் பாடியுள்ளார்.

இறைவன்: நெடுங்களநாதர், நித்யசுந்தரேஸ்வரர்
இறைவி   : ஒப்பிலாநாயகி
தலமரம்    : வில்வம்

திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்






1 July 2013

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருவெறும்பியூர்

                                                                      - இராப்பள்ளி
நின்றெழல்மெய் அன்று எனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற
நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே -

இரவில் உறங்கச் செல்பவன் விழித்தெழுவான் என்பது நிச்சயமில்லை. எனவே செய்யவேண்டிய நற்காரியங்களை உடனுக்குடன் செய்துவிட வேண்டும்.  நிலையாமையை உணர்ந்தவர்கள் அறம் நிலைபெற்ற திருவெறும்பியூரில்  எழுந்தருளியுள்ள சிவபெருமானை வாழ்த்தி வணங்குவார்கள்.

இவ்வூர் திருவரம்பூர், திருவெறும்பூர், பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினகூடம், பிரமபுரம், எறும்பீசம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது.தென்கயிலாயம் எனவும் வழங்கப்படும். இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு வழிபட்டனர் ஆதலால் எறும்பியூர் எனப்பட்டது.
இக்கோயில் அமைந்துள்ள கற்பாறை, யானைபோல் காட்சியளிக்கிறது. இதனடியில் உள்ள ஊர் எறும்பியூர் எனப்பட்டது. 'எறும்பி' என்றால் யானை.

இறைவன்: எறும்பீசுரர்
இறைவி  : நறுங்குழல் நாயகி
தலமரம்   : வில்வம்

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்