என்னுயிர்நீ யென்னுயிர்க்கோ ருயிருநீ யென்
இன்னுயிர்க்குத் துணைவனீ யென்னை யீன்ற
அன்னைநீ யென்னுடைய வப்பனீ யென்
அரும்பொருணீ யென்னிதயத் தன்புநீ யென்
நன்னெறிநீ யெனக்குரிய வுறவுநீ யென்
நற்குருநீ யெனைக்கலந்த நட்புநீ யென்
றன்னுடைய வாழ்வுநீ யென்னைக் காக்குந்
தலைவனீ கண்மூன்று தழைத்த தேவே
எல்லா உறவுகளும் இறைவனே, என்று வாழ்வது இந்த உலகில் எல்லோருக்கும் முடியுமா?
வள்ளல் பெருமான் இறைவனிடம் கொண்ட பக்தியும், பரிபூரண சரணாகதியும் எண்ணி எண்ணி இன்புறத்தக்கன. எப்படி வனைந்து வனைந்து இறைவனை ஆராதிக்கிறார் பாருங்கள்.
இறைவனே நீயே என் உயிர்.
அந்த உயிருக்கு உயிராய் இருப்பவனும் நீயே!
என் உயிருக்கு உயிராய் விளங்கும் என் இன்னுயிருக்குத் துணைவன் நீ.
உமையம்மையை இடப்பாகம் கொண்ட அம்மையப்பனல்லவோ நீ?
ஆதலின் என்னை ஈன்ற தாயும், தந்தையும் நீயே!
மிக அரிதாக எனக்குக் கிடைத்த செல்வம் நீ,
என் இதயத்தினின்றும் பொங்கிப் பெருகுகின்ற அன்பும் நீயே,
என்னுடைய சன்மார்க்க நெறியும் நீ,
என் அகத்திலே பிரிவறக் கூடியிருக்கும் உறவும் நீ,
என் ஆன்மாவின் பக்குவம் கண்டு அருள்நெறி காட்டும் சற்குரு நீ,
என்னோடு இரண்டறக் கலந்த சினேகிதனும் நீ,
என் பேரின்ப வீட்டின் வாழ்வு நீ,
என்னை எப்பிறப்பிலும், எவ்வுலகிலும் பாதுகாக்கின்ற தலைவன் நீ,
முச்சுடர் விழிகளும் தழைக்கப் பெற்ற தேவனே. உம்மை வணங்குகிறேன்.
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.
No comments:
Post a Comment