11 April 2014

கைவிடேல் எனையே

நம்முடைய உடம்பு நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆதார பீடமாகும்! அதனால்தான் யோகிகள் தங்கள் உடலை வலிமையுடையதாக, தூய்மையுடையதாகப் பாதுகாத்தனர்.
உடல் வலிமைக்கு ஆதாரம் மனத்தூய்மை! 
கோபம், பொறாமை, அகங்காரம், அற்பமான எண்ணங்கள் ஆகியவற்றை விட்டு அன்பு நிறைந்ததாக மனதை வைத்துக் கொள்ளுதல் உடல் நலத்துக்கு ஏற்றம்தரும்.  
புரையோடிப் போன புண் என்கிறோமே, அது என்ன? உடலுக்குள்ளே ஊடுருவி இனி மருத்துவம் செய்யமுடியாத நிலை அது! அதே போல தீய எண்ணங்கள் மனதில் ஊடுருவி விட்டால் அதை வெளியேற்றுவது என்பது கடினமாகும். இதைத்தான்,'புரைபடா மனமும்' என்கிறார் வள்ளலார். இதுமட்டும் போதுமா? 
பொய்மை எனும் கருமை அணுத்துணையும் நம்மிடத்தே வாசம் செய்ய விடலாகாது.
பின் என்ன! இறைவனை உள்ளத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்! எப்படி? ஒரு விளக்கை ஆடாமல் அசையாமல் காற்றில் அணையாமல் பாதுகாப்பது போல, இரவும் பகலும், எண்ணங்களைச் சிதறவிடாமல்  கருத்திலே வைத்து வணங்குதல் வேண்டும்.
ராமகிருஷ்ண பரம ஹம்சர் சொல்வார்: ஒரு வேலையாள் பணக்காரர் வீட்டில் வேலை செய்கிறார். அவருடைய மனம் மட்டும் வீட்டிலே உள்ள தன் குழந்தையைப் பற்றியதாக இருக்கும். அதுபோல என்ன செய்தாலும் சிந்தனை மட்டும் இறைவனிடம் இருத்தல் வேண்டும்.

நான் உண்கிறேன், உடுக்கிறேன். ஆனால் உலக மக்களை நம்புவதில்லை.
என்னுடைய நண்பன், எனக்கு நன்மை மட்டுமே நாடுகின்ற நல்ல தோழன் நீதானே?
உன்னை மட்டுமே நம்பி வாழ்கின்ற என்னை நீ கைவிடுதல் கூடாது.

 'அபயத்திறன்' ( அடைக்கலம் புகல்) என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடல்! பாடலைக் கீழே காண்க. 

புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும்நின் தனையே
கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
                                  - வள்ளலார்
அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை!




No comments:

Post a Comment