10 April 2014

எல்லோருக்கும் கருணை!

இறைவனது கருணையைப் பெற மனிதர்கள் என்ன செய்வார்கள்? பூமாலை அணிவிப்பார்கள். மந்திரங்கள் ஓதுவார்கள், பாடுவார்கள், இறைவன் புகழ் சொல்லும் நூல்களைப் படிப்பார்கள், படிக்கத்தெரியாவிட்டால் படிப்பதைக் கேட்பார்கள். இது ஒன்றும் அறியாதவர்கள் அப்பனே காப்பாற்று என்று கும்பிடுவார்கள். எதுவுமே செய்யாதவர்க்கும் அருள் புரியும் கருணை வள்ளல் இறைவன் என்கிறார் வள்ளலார்.

'பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
        படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
அணிந்தறியேன் மனமுருகக் கண்களின்நீர் பெருக
         அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
         தானறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
          சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே

இறைவனே, சிவபெருமானே, உன் பாதங்களில் அன்பு மிகுந்து வணங்கி அறியேன், சரிதான் வணங்கவில்லை என்றால் என்ன? 
ஏதாவது பாடலாம் என்றால் பாடவும் எனக்குத் தெரியாதே!
பாடத் தெரியாது,  போகட்டும் உன் புகழைப் படிக்கலாமென்றால் அதுவும் தெரியாது.
யாரோ படிக்கிறார்கள்,காது கொடுத்து அதைக் கேட்கலாம்! அதையும் செய்யவில்லை. 
வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. அவற்றை மாலையாகக் கட்டி உனக்கு அணிவித்து
அழகாவது பார்த்துள்ளேனா என்றால் அதையும் செய்ததில்லை.
உன் சந்நிதியில் என் மனம் உருகமாட்டேன் என்கிறது!
உன்னை, உன் அருளை வேண்டி அழத்தெரியவில்லை. 
ஞான சம்பந்தப் பெருமான் அழுததைக் கேட்டதும் அம்மையோடு வந்து அவருக்கு ஞானப் பாலைப் புகட்டினாயே!
அழத் தெரியாதவனுக்கு தொழத்தெரியுமா?
ஆனால் இறைவா இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் என் அகங்காரம், நானென்ற உணர்வு நீங்க வேண்டுமல்லவா? என்அகங்காரமும் தணியவில்லை.
பிற உயிர்களிடம் தயவும் கருணையும் என்னிடம் இல்லை.
சத்திய வாசகங்களையும் பேசி அறியேன். 
உளுந்து எனும் தானியத்தை உதிர்ப்பதற்காக உள்ள தடியைப் போன்றவனாய், உணர்வற்றவனாய் இருந்தேன்!

ஆனால் நீ என்ன செய்தாய்? பணிந்தோ, பாடியோ, படித்தோ, கேட்டோ, அழுதோ, தொழுதோ அறியாத எனக்கு மிகுந்த துணிச்சலுடன் கருணை செய்தாய். இவனுக்கு நாம் அருள வேண்டும் என என் உள்ளத்தே கோயில் கொண்டாய்! 

அதுமட்டுமா என் இதயக் கோயிலில் ஞானநடனம் புரிகின்றாய். பெருமானே உம்மை வணங்குகிறேன்.

அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
















No comments:

Post a Comment