12 April 2014

கண்குளிரக் காட்சிதருவாய்

இறைவனைக் காண வேண்டும் என்ற ஆசை இந்த உலகில் பிறந்த எல்லோருக்குமே உண்டு.
இறைவன் பார்க்க எப்படி இருப்பான் என்று யாருக்காவது தெரியுமா? அவரவர் கற்பனைக்கேற்ப
பல உருவங்களை நாம் கடவுளுக்குக் கொடுத்து அலங்கார ஆராதனைகள் செய்து ஆனந்தப்படுகிறோம்.
பக்தியின் முதற்படி உருவ வழிபாடு!

Image Courtesy: Google Andavar


வள்ளல் பிரானுக்கோ சிவபெருமான் மீது பக்தி. 'பரசிவம்  சின்மயம் பூரணம் பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம்' என 'திருவடிப் புகழ்ச்சி'யில் உருவமற்ற சிவத்தைப் பாடுகிறார். சிவபெருமான் எப்படி இருப்பார்?அந்தக் காட்சியைப் பாருங்கள்............



அதோ இளமையுடைய எருது வருகிறது. அதன் மேல் நறுமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மை ஒரு பாகத்தில் அமர்ந்திருக்க கம்பீரமாக சிவபெருமான் காட்சி அளிக்கிறார்!

சிவந்த பவளத்தால் ஆன ஒரு சிறுமலையை அன்றோ காண்கின்றேன்!
இறைவனுடைய அருள் என்னை ஆனந்தமடையச் செய்கிறதே!
நன்கு பழுத்த சுவைமிக்க கனியாய்  இனிக்கின்றானே  முக்கண்ணுடைய தேவன்!
மூப்பும் அழிவும் அற்ற நிலம், நீர், தீ, காற்று, வான் முதலியவற்றுக்கு அரசன்,
என் ஆருயிர்க்கு காவலனான சம்பு, சங்கரன்,
வெண்பனி போர்த்திய கயிலையின் விரும்புவார் விரும்பியவற்றை அளிக்கும் கற்பகத் தரு!
சிவபெருமான்!

 உமையொரு பாகனாய் 'மழவிடைமேல்  வருங் காட்சி'யை வழங்குவாய் என அந்தக் காட்சியையே நம் கண்முன்னால் காட்டுகிறார் வள்ளல் பெருமான்.

 நான்காம் திருமுறைப் பாடலைப் படித்து இன்புறுங்கள்.

''செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
அம்புவிநீர் அனல்வளிவான் ஆதியாய
அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
வம்பவிழ்மென் குழல் ஒருபால் விளங்க ஓங்கும்
மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.

அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!





No comments:

Post a Comment