24 April 2014

மகாதேவமாலை

(தேவர்களுக்கு எல்லாம் தேவனாக, பெருந் தலைவனாக, விளங்கும் பரம்பொருளே மகாதேவன்.
மகாதேவன் மீது பாடிய பாமாலை ஆதலின் மகாதேவமாலை எனப்படுகிறது)

                                          காப்பு

கருணைநிறைந்  தகம்புறமுந்  துளும் பிவழிந்
   துயிர்க்கெல்லாம்  களைகணாகித்
தெருள்நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
   கண்ணுடையோய்!  சிதையா ஞானப்
பொருள்நிறைந்த  மறையமுதம் பொழிகின்ற
   மலர்வாயோய்! பொய்ய னேன்றன்
மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையுமுட்
   கசிந்துருக்கும் வடிவத் தோயே!

மஹாதேவனாகிய சிவபெருமானின் வடிவம் எத்தகையது? திருவருட்பாவின் அநேக பாடல்களில்
இறைவனின் வடிவழகை வள்ளலார் சொல்லியிருக்கிறார். வள்ளலார் இறைவனின் தரிசனம் பெற்றவர் ஆதலின் அவர் கண்கள் வழியே நாமும் தேவாதி தேவனை தரிசிப்போம்.

இறைவனுடைய கண்கள் எத்தகையவை? ஓவியர் கேசவ் அவர்களின் கண்ணன் ஓவியங்களில் 'கண்கள்' அப்படியே உயிர் பெற்றிருக்கும். கருணையும், அமைதியும் நிரம்பி வழியும். எப்படி இவ்வாறு கண்களுக்கு உயிர் கொடுக்கிறார் என நான் ஆச்சர்யப்பட்டதுண்டு. இந்தப் பாடலைப் படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது அவருடைய ஓவியங்களே! வள்ளலார் காட்டுவது சொல்லோவியம்!

இறைவனுடைய கண்களில் கருணை, இரக்கம் நிரம்பி வழிகிறதாம்! உள்ளே நிறைந்து இடமில்லாமல் வெளியேயும் பால் பொங்குவது போல பொங்கி வழியும் கருணை. அந்தக் கருணை என்ன செய்கிறது?
இவ்வுலக உயிர்களுக்கெல்லாம் ஆதரவு காட்டி அணைக்கிறது. அதனால்  மனத்தெளிவு ஏற்படுகிறது.
அதுமட்டுமா? இன்பத்தைத் தரவில்லை, வளர்க்கிறதாம்! 'இன்ப நிலை வளர்க்கின்ற கண்ணுடையோய்' என்கிறார் வள்ளல். மனிதர்களுக்கு இரு கண்கள்! மகாதேவனுக்கோ கருணை செய்யும் முக்கண்கள்!

அவனுடைய வாய் எத்தகையது? என்றும் அழியாத ஞானப் பொருள் நிறைந்த வேதங்களின் ஆழ்ந்த உட்பொருளாகிய அமிழ்தத்தை பொழிகின்ற மலர்வாய். வேதங்கள் எவை? திருவருட்பா, திருவாசகம், திருமந்திரம், தேவாரம் எல்லாம் வேதங்கள்தான்.

நம் கண்களால் காண இயலாத 'இன்பநிலை வளர்க்கின்ற கண்ணுடையவன், மறையமுதம் பொழிகின்ற மலர் வாயனு'டைய வடிவம் எப்படி இருக்கும்?

உண்மை பேசியே அறியாத மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு பொய் நூறாக, ஆயிரமாக வளரும். அது இயல்பாகிவிடுகிறது. ஆனால் தாங்கள் பொய் பேசுவதை உணராதவர்களாக, அன்பு, கருணை, இரக்கம் அற்றவர்களாக கருங்கற்பாறை போல இறுகிக் கிடக்கும் மனமுடையவர்களைப் பற்றி தினமும்
படிக்கிறோம். தன்னம்பிக்கை அற்றவர்கள்தான் பயம் காரணமாக பொய் பேசுவார்கள். அகங்கார மயக்க
முடையவர்களாக அவர்கள் இருப்பார்கள். அத்தகைய பாறை மனமுடையவர்களையும் மனம் உருகிக் கசிந்து, நெகிழ்ந்து போகும் படிச் செய்யவல்ல வடிவம் உடையவன் இறைவன்.

இவ்வுலக உயிர்களுக்கு எல்லாம்  இன்பம் தரும் துணையாக  இருக்கும் கண்களும், உயர்ந்த செம்மொழி பேசும் திருவாயும், கற்பாறையையும் 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க' உருக்கும்
வடிவமும் உடையவன் இறைவன்.

அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.












No comments:

Post a Comment