17 April 2014

தணிகை மலையைச் சாரேனோ?

தணிகை மலையைச் சாரேனோ
         சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ
        பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ
        ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ
         பார்மீ திரங்கும் நீரேனே

முருகப் பெருமானிடம் காதல் கொண்ட நங்கை ஒருத்தி பாடுவதாக அமைந்த பாடல் இது.
தணிகை மலை நாதனிடம் காதல் கொண்டவள் சொல்கிறாள், தணிகை மலைக்கு இப்போதே போகவேண்டும், முருகப் பெருமானின் திருவழகைக் கண்குளிரக் காண வேண்டும். அவனிடம் நான் கொண்ட காம நோயாகிய துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.அவனிடம் மிகுந்த காதல் கொள்ள வேண்டும்.
முருகப் பெருமானுக்கு அணிகலன் அன்பருக்கு அருளுதல். பொங்கிப் பெருகும் அவனுடைய அருளாகிய நீரை அருந்தி அவன் மீது நான் கொண்ட அன்பாகிய தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவனுடைய அடியார்கள் கூட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். இவ்வுலக மக்களிடம் அன்பும் கருணையும் உடைய தணிகை ஈசனே அருள் செய்வாயாக.





No comments:

Post a Comment