உலகில் மனிதராய்ப் பிறந்த எல்லோருக்கும் பிடித்தமான சொல் அம்மா. 'அ' என்ற எழுத்து உலகில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் ஆதாரம். சுகமான தருணங்களை விடுங்கள், துயரம் வரும் போது மருந்தாய் இருப்பது அம்மா என்ற சொல்தான். மா, மாதா, அம்மே, அம்மை, அம்மகாரு, மம்மி, மாம் எல்லாம் அம்மாதான்.
ஆனால்........
திருவருட்பா, ஆறாம் திருமுறையைப் படித்துக் கொண்டிருந்த போது பாடலொன்று கண்ணில் பட்டது. பெரும்பாலும் அருட்பாவில் வள்ளலார் சிவபெருமானை அப்பா என்று அழைத்துதான் உருகுவார். அவருக்குத் தந்தை சிவபெருமான். அதேபோல சிவபெருமானும் தன்னை 'மகனே' என்றழைத்து அருள் புரிந்ததையும் கூறுகிறார். அது ஒரு தந்தை மகனுக்கான அற்புத உறவு!
அந்த உறவு ''சாலையப்பனை வேண்டுதல்'' என்ற தலைப்பில் உள்ள ஐந்து பாடல்களில் காணக்கிடக்கிறது.
அது என்ன சாலையப்பன்? அறச்சாலை, கல்விச்சாலை, பாடசாலை, சிறைச்சாலை என்று கேள்விப்படுகிறோமே! சாலை என்றால் என்ன?சாலை என்பது ஒரு இடம். அவ்வளவுதான்.
கடலூரிலிருந்து சுமார் 30 கல் தொலைவில் உள்ளது பார்வதிபுரம் என அழைக்கப்படும் வடலூர். அங்கு வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையும், சமரச வேத தருமச்சாலையும் உள்ளன.
அங்கு எழுந்தருளியுள்ள சோதியே சாலையப்பன்!
ஐந்து பாடல்களில் நாற்பது முறை அப்பாவைக் கூப்பிடுகிறார் வள்ளலார். எளிமையான பாடல்கள் ஆதலின் பாடல்களை மட்டும் பிரித்து எழுதியுள்ளேன்.
''மன்னப்பா, மன்றிடத்தே மா நடஞ்செய் அப்பா, என்தன்னப்பா, சண்முகங்கொள் சாமியப்பா,
எவ்வுயிர்க்கும் முன்னப்பா, பின்னப்பா, மூர்த்தியப்பா, மூவாத பொன்னப்பா, ஞானப் பொருளப்பா தந்தருளே.( மன்னப்பா -நிலை பெற்ற தந்தை, மாநடம்- ஆனந்த நடனம், மன்று -பொன்னம்பலம்
மூர்த்தி- வடிவுடை தெய்வம்,சிலைகள்)
ஆதி அப்பா, நம் அனாதி அப்பா, நங்கள் அம்மை ஒரு பாதி அப்பா, நிருபாதி அப்பா, சிவபத்தர் அனுபூதிஅப்பா, நல்விபூதி அப்பா, பொற்பொது நடஞ் செய் சோதி அப்பா, சுயஞ் சோதி அப்பா எனைச்
சூழ்ந்தருளே.(நிருபாதி -அரசன்,அனுபூதி -அனுபவப் பொருள், சுயஞ்சோதி - எதனையும் சாராது தானாகவே ஒளியுள்ளது)
அண்ட அப்பா, பகிர் அண்ட அப்பா, நஞ்சணிந்த மணிகண்ட அப்பா, முற்றும் கண்ட அப்பா, சிவகாமி எனும் ஒண்தவப் பாவையைக் கொண்ட அப்பா, சடை ஓங்கு பிறைத் துண்ட அப்பா, மறை விண்ட அப்பா எனைச் சூழ்ந்தருளே.( அண்டம்,பகிரண்டம் - பிரபஞ்சத்தில் உள்ள உலகங்கள், ஒண்தவப்பாவை- உமை)
வேலை அப்பா, படை வேலை அப்பா, பவ வெய்யிலுக்கோர் சோலை அப்பா, பரஞ்சோதிஅப்பா, சடைத் துன்று கொன்றை மாலை அப்பா, நற் சமரச வேத சன்மார்க்க சங்கச் சாலை அப்பா, எனைத் தந்த அப்பா, வந்து தாங்கிக் கொள்ளே. (வேலை - கடல், பவம்- பிறவித்துன்பம், சடைத்துன்று -சடையில் பொருந்தியுள்ள)
மெச்சி அப்பா, பாவலர் போற்றப் பொதுவில் விளங்கிய என் உச்சி அப்பா, என்னுடைய அப்பா, என்னை உற்றுப் பெற்ற அச்சி அப்பா, முக்கண் அப்பா, என் ஆருயிர்க்கான அப்பா, கச்சி அப்பா, தங்கக் கட்டி அப்பா எனைக் கண்டு கொள்ளே.''
பெற்றவர்கள் குழந்தைகளைக் கண்ணே, மணியே, செல்லமே, தங்கமே என்றெல்லாம் கொஞ்சுவார்கள். வள்ளல் பெருமான் எப்படியெல்லாம் சிவபெருமானை அப்பா அப்பா என்று உருகி உருகிக் கொஞ்சுகிறார்!மேற்கண்ட பாடல்கள் மீண்டும் மீண்டும் படிக்கச் செய்து மனதை உருக்குகிறது இல்லையா?
உங்களில் யாராவது அப்பாவைப் போற்றுபவர் உண்டா?
அருட் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.