25 March 2014

திருநீற்றுப் பெருமை

''வேலேந்திய முருகா, மயிலேறிய மணியே, ஆறாக்கரப் பொருளே, குமராசிவ குருவே, பாலாகதிர்வேலா, முகமாறுடை முதல்வா, கந்தாசிவன் மைந்தா, கண்ணா எமதண்ணா,''
என்றெல்லாம்  போற்றி குளிர் நீறணிந்தால் என்ன பயன்? ''புண்ணிய நீற்று மான்மியம்,''
என்ற தலைப்பில் வல்ளல் பெருமான் பத்து பாடல்களில் திருநீற்றின் பெருமையைக்
கூறுகிறார்.
ஒரு பாடலை பார்ப்போம்:

'சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமுமோர்
நந்தாவெழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
இந்தாவெனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
கந்தாசிவன் மைந்தாவெனக் கனநீறணிந்திடிலே'

கந்தா, சிவன் மைந்தா எனச் சொல்லி பெருமை பெற்ற திருநீறை அணிந்து கொண்டால்
அணிபவர்களுக்கு என்ன கிடைக்கும்?

நினைத்ததை எல்லாம் தரும் அபூர்வமான சிந்தாமணியால் கிடைக்கப் பெறும் செல்வங்கள்,
அரிச்சந்தனம்,கற்பகம், சந்தானம்,பாரிஜாதம், மந்தாரம் எனச் சொல்லப்படும் ஐந்து தெய்வ மரங்கள்
வளரும் இந்திர உலகம், ஒப்பற்ற அழகு வாய்ந்த மேனி, சிறந்த நன்மைகள், நற்கதி இவற்றை
அடைவர். அதுமட்டுமா? தம்மிடம் வந்து யாசிப்பவர்க்கு எல்லாம் இந்தா, பெற்றுக் கொள் என வாரிவழங்கும் நல்லியல்பையும் பெறுவர்.

திருநீறு பசுஞ்சாணத்தில் இருந்து மிக மிகக் கவனமாகத் தயாரிக்கப் படுவதாகும். இந்த சுத்தமான திருநீற்றின் தண்ணீரை அருந்தாமல் உணவு உண்ணமாட்டார்கள் சிலர். இத்திருநீறு இருக்கும் இடம் தெரியாமல் நெற்றியிலே துலங்கும். காயங்கள், வலிகளை மாற்றும் தன்மை இதற்கு உண்டு என்பது
நிதர்சனமான உண்மை.

அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை!




23 March 2014

போதும் என்று சொல் மனமே.........

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல் லாம்கட்டி
ஆளினும் கடல் மீதிலே
ஆணைசெல வேநினைவர்; அளகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து ரச வாத வித்தைக்கு அலைந்திடுவர்;
நெடுநாள் இருந்த பேரும்
நிலையாக வேனும் காயகற் பம்தேடி
நெஞ்சுபுண் ஆவர்;எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்;
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதுஅற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்;
பார்க்கும் இடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே!

போதுமென்ற மனம் உடையவர்களை எங்கேனும் பார்க்கமுடியுமா?
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். அனைத்திற்கும்
ஆசைப்படு, தவறில்லை என்கிறார்கள் இன்று!மண்,பெண், பொன்
ஆசைகளே மனிதனுக்கு தீமைதரும் என்பது ஆன்றோர் வாக்கு.
இந்த ஆசைகள் உலகம் தோன்றிய நாள் முதல் இருந்துவருகிறது.
அளவோடு ஆசைப்பட்டால்தான் நன்மை விளையுமோ?

தாயுமானவ சுவாமிகள் என்ன சொல்கிறார்? ஆசைக்கு அளவே இல்லை.
உலகம் முழுவதையும் ஆண்டாலும் கடலையும் ஆளவேண்டும் என
ஆசைப் படுகிறான் அரசன்.
குபேரனிடம் உள்ள அளவு செல்வம் இருந்தாலும் தாமிரத்தைத் தங்கமாக்கும்
ரசவாத வித்தையைத் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறான் செல்வந்தன்.

வயது முதிர்ந்து கிழப் பருவம் வந்தாலும் காயகல்பம் எங்கே கிடைக்கும்,
மரணமே இல்லாமல் வாழலாம் என்று தேடி அலைந்து நெஞ்சம் புண் ஆவர்.

யோசித்துப் பார்க்கும்போது இந்த வாழ்க்கையில் என்ன சாதனை புரிந்துள்ளோம்,
என ஆராயுமிடத்து, உண்டு உண்டு உறங்கி, நான் நான் எனவும், நான்செய்தேன்
எனப் பெருமையுற்றது தவிர வேறில்லை!
இறைவனே இந்த உலகப் பாசக் கடலுக்குள் வீழாமல் உள்ளதே போதும் என்ற
மனநிறைவைத் தருவாய்! மனமே அற்ற பரிசுத்த நிலையைத் தருவாய்.
பார்க்கின்ற இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே! சிவமே!










22 March 2014

எங்குமுள்ள ஈசனார்!

இறைவா உன்னைக் காண வேண்டுமென்று என் மனம் அவாவுறுகிறது.  இறைவன் எங்குளான் என ஆன்றோரிடம் கேட்டேன். அவன் எங்குமுள்ளான், எதிலுமுள்ளான் என்கின்றனர். உன்னை எங்கும் எதிலும் தேடும் என் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாறாத பக்தி உடையவர். விடியற்காலைப் பொழுதில் செக்கச் சிவந்து, வானமகளின் வண்ணஜாலங்கள் நிறைந்து கிடக்கும் ஆகாயத்தைப் பார்த்ததும் அவருக்கு சிவபெருமானின் திருமேனி நினைவுக்கு வருகிறது.''காலையே போன்றிலங்கும் மேனி,''
எனப் பரவசப் படுகிறார்.

பொழுது போகிறது. நண்பகல் நேரம்!கடல் அலைகள் சூரியக் கதிர்களின் அடர்த்தியால் வெண்மை படர்ந்து காணப்படுகிறது. அம்மையாருக்கோ சிவபெருமானின் திருமேனியில் பூசப்பட்ட வெண்ணீறு போலத் தோன்றுகிறது.''கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு,''

அந்திப் பொழுதும் வருகிறது. வானம் சூரியனின் அஸ்தமனத்தில் மீண்டும் வர்ணக்கலவையாகிறது.
திருமேனியும்,வெண்ணீறும் கண்ட கண்களில் அந்திப் பொழுது அவனின் மிளிர்கின்ற சடாமுடியை
நினைவு படுத்துகிறது.''மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை,'' என்கிறார்.

''மற்றவர்க்கு வீங்கிருளே போலும் மிடறு''-இரவுப் பொழுது. எங்கும் இருள். இந்த இருள் கூட சிவனின்
கரிய நஞ்சுண்ட திருக்கழுத்தை நினைவு கூறுகிறது. நீலகண்டம்!

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு -மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

காலையும்,மதியமும், மாலையும், இரவும் சிவபெருமானைச் சிந்தையில் கொண்டு அவனை எப்போதும்,எதிலும் காண்கின்ற அம்மையாரின் பக்தி நம்மையும் ஆட்கொள்கிறது அல்லவா?






21 March 2014

முருகப் பெருமான்- தரிசனம் வேண்டுமா?


சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
கார்கொண்ட வண்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே

ஶ்ரீராமலிங்க அடிகள் தம் இல்லத்து மாடிஅறையில் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம்.
அவருக்கு கண்ணாடியில் முருகப் பெருமான் தரிசனம் அளித்தார். அப்போது பாடிய பாடல்களில்
ஒன்று இது.
வள்ளல் பெருமானுக்கு எப்படிக் காட்சி அளித்தான் முருகன்?

கார்மேகங்கள் உலாவரும்
செழிப்பு மிக்க தணிகை மலை, கண்முன்னே!
மயில் வாகனம்,
அதன் மீது
தெய்வீக ஒளி பொருந்திய ஆறு முகங்கள்
நறுமணம் வீசும் கடப்பமலர் மாலை அணிந்த
பன்னிரு தோள்கள்,
தாமரைமலர் போன்ற திருவடிகள்.
கையில் பகைவரை அழிக்கும் கூர்மையான வேல்,
கோழிக்கொடி!
ஆகா, முருகன், அழகன், குமரன், குகன்,சரவணன்,
சண்முகன் கண்முன்னே! பேசவும் கூடுமோ?
கண்ணுற்றதே.......

திருத்தணிகை முருகப் பெருமான் திருவருட் காட்சியை படம் பிடித்துக் காட்டும் வள்ளல்
பெருமான் மலரடிகளுக்கு வந்தனங்கள்.



20 March 2014

என்ன தவம் செய்தேனோ?

நம் நாட்டில் நடக்கும் கோயில் திருவிழாக்களின் போது இறைவன், இறைவியரை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். இத்தகைய உற்சவங்களுக்காகவே 'உற்சவ மூர்த்தி,' எல்லாக் கோயில்களிலும் உண்டு. அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் திரு உருவங்கள், பல்லக்குகள், அந்த அந்த தெய்வங்களுக்கு உரிய வாஹனங்களில் சங்கீதம் முழங்க திருவீதி உலாவரும். அவரவர் வீட்டு வாசலில் வரும் போது, தங்கள் வீட்டிற்கே வந்ததுபோல் தரிசனம் செய்து மகிழ்வார்கள்.
பெண் ஒருத்தி இந்த ஊர்வலத்தைப் பார்க்கிறாள். இறைவன் மீது பித்துக் கொண்ட பெண் அவள்.ஆகா என்ன தவம் செய்தேன் என்று தன்னை மறந்து இறைவனைப் போற்றித் துதிக்கிறாள். வள்ளல் பெருமான்
நாயகி பாவத்துடன் பாடியுள்ள பத்து பாடல்களில் ஒன்றைப் பார்ப்போம்.

வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி
வேணிப் பெருமான் ஒற்றிநகர்
செல்வப் பெருமான் சிவபெருமான்
தியாகப் பெருமான் திருஅழகைக்
கல்வைப் புடைய மனம்களிக்கக்
கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
இல்வைப் புடையேன் அம்மாநான்
என்ன தவந்தான் செய்தேனோ.

 திருவொற்றியூரில்  சிவபெருமான் திருவீதி உலாவருகிறார். பெண்கள் எல்லோரும் வீதியில் நின்று தரிசனம் செய்கிறார்கள். காதலாகிக் கசிந்து பெண் ஒருத்தி சொல்கிறாள்,  எம்பெருமானைப்
பாருங்கள்! திருவொற்றிநகரில் கோயில் கொண்டவன், செல்வப் பெருமான், தியாகேசன் என்ற பெயருடையவன்.  அழகிய சடைமுடியில் பசுமையான வில்வமாலை அணிந்தது போதாதென்று,பொன் நிறமான கொன்றைமலர் மாலையும் அணிந்துள்ளான்.  அதுதான் எத்தனை அழகு!
சிவபெருமானின் திருவழகைக் கண்டு கல்போன்ற என் மனம் மகிழ்கிறது. கண்கள் களிக்கின்றன.
என்னால் பார்வையை விலக்கவும், இடம் பெயரவும் முடியவில்லை தெரியுமா? இல்லற வாழ்க்கை
வாழ்ந்து வரும் நான் திருவருட் தரிசனம் பெற என்ன தவம் செய்தேனோ? என்னுடைய தவப் பேற்றினால்தான் இது வாய்த்தது.

கோயில்களுக்குச் செல்லும் போதும், திருவிழாக்களின் போதும் மனம் இறைவனிடம் ஒருமைப்படுகிறது.
அமைதியும், ஆனந்தமும் அடைகிறது. அது ஒரு தனி அனுபவம்!

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி! தனிப் பெருங்கருணை அருட்பெருஞ் சோதி!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

                                                         *******************************







19 March 2014

காணக்கிடைக்குமோ?

உலகில் மனிதர்களாய்ப் பிறந்த எல்லோருக்குமே பிரிவு என்று ஒன்று உண்டு.
பிரிந்தவர்களுக்கு மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஏக்கம் உண்டு. இது
உலக இயல்பு.
ஆனால் இறைவனிடம் பேரன்பு பூண்டு அவனைக் காண வேண்டும் என்று
துடித்தவர்களில் திருவள்ளல் பெருமானை விஞ்ச யாரும் இல்லை.
பாருங்களேன், பத்து பாடல்களில், 'இறைவனின் திருமுகத்தை, முக்கண்களை,
களத்தின் அழகை, பொற்றோளின் சுந்தரத்தை,பொன்னேர் இதழிப் புயத்தை,
திருவடிச்சீரை,செவ்வண்ண மேனித் திறத்தை,' காணப் பெற்றிலேன், என ஏங்கி
ஏங்கிப் பாடுகிறார். இறைவனது திருவுருவைக் கண்டு இன்பம் அடைய விரும்பி
அது நிறைவேறாமையால் மனம் வருந்தி வாடும் ஒருவர் பாடும் பாடலாக,'திருக்
காட்சிக்கு இரங்கல்,' என்ற தலைப்பில்  உள்ள பத்து பாடல்களில் ஒரு பாடலைப்
பார்ப்போம்.

மருள் ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
இருள் ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
அருள் ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே

இறைவனே! இன்றைக்கு என்னுடைய நிலை எவ்வாறு இருக்கிறது என்று தெரியுமா?
என் வினைப் பயன்கள் என்னை பயப்பட வைக்கின்றன.
துன்பம் தரும் நோய்கள், அதனால் வரும் துயரம்!
நோயும், துன்பமும் நிறைந்த உள்ளத்தில் ஒளி இருக்குமா?
இருண்டு போன நெஞ்சம்!
இவையெல்லாம் என்னை நாலாபக்கமும் மொத்துகின்றன.
நான் ஏழை. ஆனால் நீயோ தெளிவான ஞானச்செல்வமுடையவன்!
எனக்கு என்ன ஆசை தெரியுமா?
உன்னுடைய கருணை நிறைந்த முகத்தின் முக்கண்கள்! அதனால் அழகுமிளிரும்
உன் திருமுகம்!உன் முக அழகைப் பார்த்து இன்புற ஆசைப் படுகிறேன்.
என்னுடைய  எல்லாத்  துன்பங்களையும் நீக்கும் சக்தியுடையது  உன் திருமுகம்!
எனக்கு அருள் புரிவாயா?

எத்தனை பெரிய ஆசை? எவ்வளவு உரிமையோடு கேட்கிறார்! இறைவனைக் காணவேண்டும்
என்று விருப்பமுறுவது ஒரு வேள்வி!  நாமும் சற்று முயல்வோமா?

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி!
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி!











18 March 2014

திருவடித் தாமரைகள்

குழந்தை அழுதால் உடனே தாய் என்ன வேலை செய்தாலும் ஓடி வருவாள்.
அது போல தன்னை உளங்குழைந்து,'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி,'
கூப்பிட்டால் இறைவன் வருவான் என ஆழ்வார்களும், நாயன்மார்களும்
உறுதிபடக் கூறினார்கள். ஆனால் சிவபெருமான் காதில் கேட்ட உடன் வருவாரா........?
வள்ளல் பெருமான் என்ன சொல்கிறார்?

பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது
மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப்
பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின்
பொற்றாள் பொறாஎம் புலம்பு - சிவநேசவெண்பா

சிலதாய்மார்கள் குழந்தை அழுதால் உடனே ஓடிப்போய்ப் பார்க்க மாட்டார்களாம்! இருடா கண்ணே
சற்றுப் பொறு, இதோ வந்து விட்டேன், ஒரு நிமிடம், இதோ, அதோ எனக் காலதாமதம் செய்வார்கள்! சிவபெருமானே! நீயும் பெற்றதாய் போல் சிறப்பு வாய்ந்தவன் தான். ஆனாலும் நீகூட சில சமயங்களில் கொஞ்சம் தாமதம் செய்யக்கூடும்! ஆனால் உன் திருவடித்தாமரைகளோ தாயைவிட உயர்ந்தது, உனக்குத் தெரியுமா? நீ பொறுத்தாலும் என்னுடைய புலம்பலைக் கேட்டு விட்டால் கணமும் தாமதிக்காது உடனே எம்மை நோக்கி ஓடோடி வந்துவிடும்.
உன்பொன் போன்ற திருவடிகளுக்கு வந்தனங்கள்!




17 March 2014

எப்பொழுது நீ எனக்கு அருள்வாய்?

இன்றோ பகலோ இரவோ வருநாளில்
என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
நாயனையேன் வாழ்கின்ற நாள் --சிவநேச வெண்பா

மன்றோங்கும்- அம்பலத்திலே சிறந்து விளங்கும்
தாயனையாய் - அன்னையைப் போன்றவனே
நின்னருளாம் தண்ணமுதம் -உன்னுடைய திருவருளாகிய அமிழ்தத்தை
உண்டு வந்து -( உண்டு உவந்து) உண்டு மகிழ்ந்து
நாயனையேன் வாழ்கின்ற நாள் - நாயனையேன் உன் அருளினால் நல்வாழ்வு வாழ்கின்ற நாள்
இன்றோ, பகலோ, இரவோ, வருநாளில் - இன்றைக்கோ, பகல்போதோ, இரவுப் பொழுதோ
என்றோ அறியேன் எளியேனே - என்று வருமோ அறியேன்.

அம்பலத்தாடும் ஐயனே, தாயனையானே, உன் திருவருள் அமிழ்தத்தை உண்டு மகிழ்ந்து வாழ்கின்ற நாள் என்று வரும்? இப்போதா, பகலிலா, இரவிலா இல்லை வேறு எப்போதா என்று எளியவன் அறிய மாட்டேன். தெரிவித்து அருள் புரிவாயாக!
இறைவனின் திருவருட் பேறு கிடைக்காத நாட்கள் எல்லாம் வீணான நாட்களே!


7 March 2014

மகாயோகி ஶ்ரீ அரவிந்தர் -அன்னை

ஶ்ரீ அரவிந்தரும் அன்னையும் நூறு ஆண்டுகளுக்கு முன் 1914 ஆம் ஆண்டு மார்ச் 29  ஆம் நாள் மதியம்
3.30 மணியளவில், 41, ரூ ஃப்ரான்கொய்ஸ் மார்ட்டின் வீதியில், அரவிந்தர் வசித்து வந்த வீட்டில்  முதன் முதலில் சந்தித்தனர். இவர்களின் சந்திப்பு ஆத்மசாதனை எனும் 'ஒளி நிறைந்த பாதையில்,' பயணிக்க விரும்பும் ஆர்வமுடையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இது  யோகியரின் சந்திப்பு!காவியச்சிறப்பு வாய்ந்ததது.

பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த ஶ்ரீமிர்ரா, இந்தியாவில் பிறந்தும் இங்கிலாந்து நாட்டில் கல்வி கற்று, இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி, கண்ணன் காட்டிய வழியில் பாண்டிச்சேரி அடைந்து, யோக வாழ்வின் மேல்நிலையில் ஒளிச்சுடராய்த் திகழ்ந்தவர் ஶ்ரீ அரவிந்தர்.

ஶ்ரீ அரவிந்தருடன் இணைந்து அன்னை யோகசாதனை புரிந்த இடம் பாண்டிச்சேரி. இந்த ஆண்டு அவர்கள் சந்திப்பின் நூறாவது ஆண்டு. இதனை பாண்டிச்சேரி அரசு கொண்டாடி வருகிறது. நாமும் கொண்டாடுவோம்.


The epoch - making event of the meeting of the Mother and Sri Aurobindo took place 100 years ago
on 29th March 1914 .                  
                                  ________________________________________
                                   Here first she met on the uncertain earth
                                   The one for whom her heart had come so far.......
                                   The mist was torn that lay between two lives;
                                   Her heart unveiled and his to find her turned;
                                   Attracted as in heaven star by star
                                   They wondered at each other and rejoiced
                                   And wove affinity in a silent gaze
                                   A moment passed that was eternity's ray
                                   An hour began, the matrix of new Time.
                                 
                                  (Savitri, pp.393, 399)                        SriAurobindo
                                  _________________________________________
                         
A new Dawn at Puducherry     
                                                                                                                            (தொடரும்)





2 March 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்


திருவெள்ளிமலை, திருகயிலைமலை

                                - வான்தோய்ந்த
இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்
வந்து இறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுதல்
தாய்க்கும் கிடையாத தண்ணருள் கொண்டு அன்பர் உளம்
வாய்க்கும்  கயிலை மலையானே -

வெண்பனி மூடப்பெற்ற இமயமலைச் சிகரங்களில் ஒன்று வெள்ளிமலை. மேருமலை, பொன்மலை என்றும் அழைக்கப்படுகிறது. இமயத்தின் ஒருபகுதி கயிலை.

வானுலக இந்திரர்களும், பிரமர்களும், திருமால்களும் வந்து வணங்கி வழிபடும் தலம் வெள்ளிமலை.
ஈன்றெடுத்த தாயினும் சாலப் பரிந்து, சுகம் தரும் அருள் மழை பொழிபவன், மெய்யன்பர்
உள்ளத்தில் காட்சியளித்துத் திருவருள் புரிபவன்,  கயிலை மலையில் வீற்றிருப்பவன்.

இத்துடன் விண்ணப்பக்கலிவெண்பாவின் வள்ளலார் பார்வையில் 279 திருத்தல தரிசனம் நிறைவு
பெறுகிறது. 

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி



1 March 2014

திருவருட்பா - சிவத்தலங்கள்

திருநொடித்தான் மலை
                                     - எண்ணிறைந்த
சான்றோர்  வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
தேன்தோய் அமுதச் செழுஞ்சுவையே -

கயிலாயத்தின் தென்பகுதி, வானவர் வந்து எதிர் கொள்ள  வெள்ளை யானையின் மீது சுந்தரர்
சென்று சேர்ந்த விண்கயிலை இது என்பர். மனித உடலுடன் சென்று வணங்குதற்கு இயலாதது
என்று அறிஞர்கள் கூறும் தலம்.
எண்ணிக்கையில் அடங்காத சிவத் தொண்டர்கள் சென்று வணங்கும்படியானது இம்மலை. இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமான் தேன்கலந்த பாலின் சுவையாய் விளங்குபவன்.
இச்சுவையை அனுபவிக்க இயலுமே தவிர எழுத்தால் எழுதவொண்ணாது.
இருந்த இடத்தில் இருந்தபடியே கயிலைநாதனை வணங்குவோமாக.

திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா 
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி