11 July 2015

விரை சேர் சடையாய்


இன்றைய அருட்பா --- 'விரை சேர் சடையாய்'

விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
விகிர்தா விபவா விமலா அமலா
வெஞ்சேர் பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பரனே(1)

அரைசே குருவே அமுதே சிவமே
அணியே மணியே அருளே பொருளே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதியே (2)

உருவே உயிரே உணர்வே உறவே
உரையே பொருளே ஒளியே வெளியே
ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர நம்பரனே(3)

அருவே திருவே அறிவே செறிவே
அதுவே இதுவே அடியே முடியே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதியே (4)


1. கொடிய பஞ்சு போன்ற நஞ்சினை உண்டதால் நீல கண்டன் எனப் போற்றப்படுபவனே, ஞானசபையான சிதம்பரத்தில் கோயில் கொண்டவனே, மணம் கமழும் சடாமுடியுடையவனே, காளையூர்தி உடையவனே, விளையாடுபவனே, ஒளி நிறைந்தவனே, தூய்மையானவனே,தலைவனே.

2. அரசனே, குருவாகவும்,அமுதமாகவும் விளங்கும் சிவனே. அணியாக,மணியாக அருள்பவனே. பரம்பொருளே, வந்து என்னை ஆள்வாய், சிற்றம்பலத்துப் பதியே.

3.என் உருவாய், உயிராய், உணர்வாய், உறவாய்,சொல்லாய்,பொருளாய்,ஒளியாய் விளங்கி உன்னையே எனக்கு அளித்தவனே!

4.அரு உரு, அறிவு செறிவு, அது இது, அடிமுடி எனவிளங்குபவனே வந்து என்னை ஆட்கொள்வாய்.



ஆங்கிலத்தில் ('tongue twisters') என்ற வாக்கிய அமைப்பு உண்டு. பொதுவாகப் பிரசித்தி பெற்ற வாக்கியம் 'She sells sea shells in the sea shore' என்பதாகும்.
தமிழ் மொழியில் இத்தகைய வாக்கியங்கள் நிறைய உள்ளன.  திருப்புகழ், திருவருட்பாஆகிய இலக்கியங்களில் நிறைந்திருக்கும் இவ்வரிகளைப் படிக்கப் படிக்க உச்சரிப்பு சரியாக வரும். உச்சரிப்பு சரியாக அமைந்தால் எழுத்துப் பிழைகள் வராது.
ல, ள, ழ -எழுத்துகள் வரும் வாக்கியங்களை வேகமாகப் படிப்பது ஒரு விளையாட்டு. இந்தப் பாடல்களை பிழையில்லாமல் வேகமாகச் சொல்ல முடிந்தால் ஏற்படும் ஆனந்தத்துக்கு அளவேது?
தமிழ் மொழி இலக்கியங்கள் தமிழோடு பக்தியை வளர்த்ததா,பக்தியுடன் தமிழை வளர்த்ததா?

No comments:

Post a Comment