11 December 2014

அம்மைத் திருப்பதிகம் - திருவருட்பா

சிவகாமி அம்மை மீது பாடப்பட்ட திருப்பதிகம்

அபிராமி அந்தாதி பாடிய அபிராமிப் பட்டர் பதினாறு செல்வங்களைப் பற்றிப் பாடுகிறார்.

வள்ளல் பெருமானோ பதினோரு செல்வங்கள் வேண்டும் என விண்ணப்பிக்கிறார்.

          பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும்வீண்    
                  போகாத நாளும் விடயம்                           
           புரியாத மனமுமுட் பிரியாத சாந்தமும்                   
                    புந்திதள ராத நிலையும்
            
           எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை                                                                                                    என்றும்மற வாத நெறியும்
             இறவாத தகவும்மேற் பிறவாத கழியும்இவ்          
                    ஏழையேற் கருள்செய் கண்டாய்              
                                                                                        
            கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
                      கோமளத் தெய்வ மலரே                      
           கோவாத முத்தமே குறையாத மதியமே
                      கோடாத மணிவி ளக்கே                              
                                                                                       
             ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்                    
                       அண்ணலார் மகிழும் மணியே                                
            அகிலாண்ட  மும்சரா சரமும்ஈன்  றருள்பரசி
                       வானந்த வல்லி உமையே.        (பாடல் எண் 3, திருவருட்பா நான்காம் தொகுதி)

பொய் சொல்லாத வாய்,
மயக்கம் செய்யாத செய்கை,
பயன் இல்லாது கழியும் வாழ் நாள்,
ஐம்புல ஆசை கொள்ளாத உள்ளம்,
உள்ளத்தில் இருந்து நீங்காத அமைதி,
அறிவு தளராத நிலை,
வறுமையால் தாழ்வடையாத வாழ்க்கை,
குறைகளை நினைந்து வருந்தாத மனநிறைவு,
எந்த நாளும் உன்னை மறவாத செந்நெறி,
இறத்தலும் பிறத்தலும் அற்ற சிவகதி - இவற்றை எனக்கு அருளுவாய்.

யாரை அருளுமாறு கேட்கிறார்?
அண்டசராசரங்களையும், அவற்றுள் வாழ்கின்ற அத்தனை ஜீவராசிகளையும்
படைத்தும் காத்தும் திருவிளையாடல்    புரிகின்ற   சிவானந்த வல்லியாம்
உமையம்மையைக் கேட்கிறார்.

அவள் எத்தகையவள்? பறிக்கமுடியாத, குவிவதும் வாடுதலும் இல்லாத
நறுமணம் வீசும் அழகிய தெய்வ மலர்! கோர்க்கப்படாத முத்து! தேய்தலும்
வளர்தலும் இல்லாத முழுநிலவு! கோணாத மணிவிளக்கு! தில்லையம்பதியில்
ஐந்து முகத்தோடு எழுந்தருளியிருக்கின்ற அண்ணல் மகிழும் மணி!

இந்தப் புத்தாண்டில் அன்னை சிவகாமி அனைவருக்கும் அனைத்து நலங்களையும்
தந்து அருள் புரிவாளாக.


                                                                                                              
                                                                               












No comments:

Post a Comment