26 August 2014

107,108. அருணாசல அட்சர மணமாலை

107. பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
        பொறுத்தருள் இஷ்டம்பின் அருணாசலா

பூதரம் என்றால் மலை;  பூமியால் தாங்கப்படுவதால் காரணப்பெயர். திருவண்ணாமலை பொறுமையாம் மலை. மலை வடிவில் இருந்தாலும் மலையே சிவலிங்கமாகக் கருதப்படுவதால் பெருமை பெற்றது.
பொறுமையின் வடிவே, அருணாசலா, நான் உனக்குச் சூட்டும் இந்த அட்சரமணமாலையை ஏற்றுக் கொண்டு அருள்வாய்.

108. மாலை அளித்த அருணாசல ரமணஎன்
         மாலை அணிந்தருள் அருணாசலா

இந்தச் சொல் மாலையை எனக்கு அளித்தவன் அருணாசலனாகிய நீயே! நீயே ரமணன், என்னை மகிழச் செய்பவன்! இந்த மாலையை உனக்கே அணிவிக்கிறேன்! அணிந்து கொண்டு அருள் புரிவாய்

அருணாசலம் வாழி! அன்பர்களும் வாழி! அட்சரமணமாலை வாழி!
















25 August 2014

105. அருணாசல அட்சர மணமாலை

105. என் போலும் தீனரை இன்புறக் காத்துநீ
         எந்நாளும் வாழ்ந்தருள் அருணாசலா!

எந்நாளும் என்போன்ற எளியவரை இன்பமடையும்படிக் காத்து வாழ்ந்து அருள் புரிவாயாக.
ஶ்ரீரமணரைப் போன்று தன்னை உணர்ந்து தன் மயமானவர்கள்,  அகந்தையற்றவர்களாதலின்
தற்பெருமையற்றவர்கள். எனவே 'என் போலும் தீனரை' என்று தன்னையும் அடியார் கூட்டத்தில் ஒருவர் ஆக்கினார். அடியாருக்கும் எனக்கு அருளியது போல 'தன்னை அறியும்'  விழிப்புணர்வை அருள்வாய்.

106. என்பு உருகு  அன்பர்தம் இன்சொல்கொள் செவியுமென்
          புன்மொழி  கொளஅருள் அருணாசலா

ஆன்றோர்களின் எலும்பையும் உருகச் செய்யும் அன்பு நிறைந்த இனிய சொற்களைக் கேட்கும் செவிகள்!
இன்சொல் கேள் ''தோடுடைய செவிகள்!''
''அன்பர் மொழித் தேன் பரவும் வள்ளைச் செவியழகு'' என்பார் வள்ளலார்.

இத்தகைய உன் செவி என் புன்மொழிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்! இது வெளிப்படையான
கருத்து. ஆனால் இதன் உட்பொருள் என்ன?

அட்சரங்களால் தொடுக்கப்பட்ட இம்மணமாலை புன் மொழியாகுமா? தன்னைத் தான் அறிய,
வழி காட்டும் 'மறையாக' அல்லவா மணமாலை விளங்குகிறது!
இம்மணமாலையை அன்பர்களும் படித்து என்புருகி அருணாசலனின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்
என்பதே இப்பாடலின் கருத்தாகும்.
தன்னடக்கம் என்பது யோகிகள் அணியும் மணிமகுடம்.







24 August 2014

104. அருணாசல அட்சர மணமாலை

104. அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
          அன்பனாயிட அருள் அருணாசலா

இறைவனின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும்?
நினைந்து, நெகிழ்ந்து, உணர்ந்து, அன்பே நிறைந்து, உச்சரிக்க வேண்டும்!

'எப்படிப் பாட வேண்டும்? ''வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்'
என்பார் வள்ளல்! சும்மா கண் எங்கோ பார்க்க, மனம் எங்கோ திரிய வாய் அசைத்தால் மட்டும் போதாது. இறைவன் நாமத்தை உளத்தோடும், உயிரோடும், கலந்து ஒத வேண்டும்.

இறைவன் நாமத்தை ஒருவர் ஓதும் பொழுது கேட்பவர் நிலை எத்தகையதாக இருக்க வேண்டும்?
மீண்டும் வள்ளலார் பதில் தருகிறார்!
திருவாசகத்தை 'ஓதக் கேட்ட பொழுது அங்கிருந்த கீழ்ப் பறவைச் சாதிகளும்,வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பன்றே.'

இறைவன் நாமத்தைக் கேட்டவுடன் மெய்ஞானம் அடைய ஆவல் பெருகுமாறு ஓத வேண்டும்.

''பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும், படிக்க பக்க நின்று கேட்டாலும்,
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பு,' இறைவன். ( வள்ளலார்)

'அன்பருக்கு அன்பனே' என்கிறது திருவாசகம்.

'இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே,' என்பது அவ்வை வாக்கு.

'பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்'
என அடியார்பெருமையைப் பாடுகிறார் சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில்.

அன்போடு இறைவன் நாமத்தை உச்சரிக்கக் கேட்கின்ற அன்பர்களுக்கும் அன்பர்கள் உள்ளார்கள்.
அவர்களுக்கும் நான் அன்பானாக அருள் புரிவாய் அருணாசலா.

'அருணாசல' என்ற ஐந்தெழுத்து நாமம்  ஓதுதற்கு எளியது. அருணாசல நாமத்தை ஓதினாலும்,  ஓதுவதைக் கேட்டாலும், மனதால் நினைத்தாலும் இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமாகலாம்.











23 August 2014

103. அருணாசல அட்சர மணமாலை

சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச்
   சிறையிட்டு உண்டனை அருணாசலா

சிலந்தி தன் வலையில் அகப்பட்ட இரையை அப்படியே இறுகக்கட்டி, தப்பிக்கவிடாமல் செய்து பின்னர் அதனை உண்ணும்.  அது போல அருணாசலனே உன்னுடைய அருளாகிய வலையில் என்னை மிகவும் கவனத்தோடு கட்டவேண்டுமென்று சிந்தித்துச் செயலாற்றினாய்! என்னைத் தப்பிக்க முடியாதவாறு தன்மயமாக்கிக் கொண்டாய்!
சிறையிட்டு உண்ணுதல் - தன்மயமாக்கிக் கொள்ளுதல்.

22 August 2014

101. அருணாசல அட்சர மணமாலை

 101. அம்புவில் ஆலிபோல் அன்புரு உனில் எனை
           அன்பாக் கரைத்தருள் அருணாசலா

(அம்பு - தண்ணீர், ஆலி -பனிக்கட்டி, )
தண்ணீர் திரவ வடிவிலும், பனிக்கட்டி திடரூபத்திலும் உள்ளது. பனிக்கட்டி உருகினால் மீண்டும் தண்ணீருடன் இரண்டறக்கலக்கிறது. கலந்ததும் பேதங்கள் மறைந்து போவது போல் அன்புருவாகிய உன்னில் என்னை கரைத்து தன்மயமாக்கிக் கொள்வாய் அருணாசலா.
ஆன்மா எனப்படும் மெய்ப்பொருளும், சீவனும் உண்மையில் ஒன்றே! அறியாமையினால் நாம் அவற்றை இரண்டாகக் காண்கிறோம்.

102. அருணையென்று எண்ணயான் அருட்கண்ணில் பட்டேன் உன்
         அருள்வலை தப்புமோ அருணாசலா
அருணாசலம் என்று நினைத்த மாத்திரத்தில் நான் உன் அருள் நிறைந்த கண்ணில் பட்டேன்! உன் அன்பு வலையில் அகப்பட்டுக் கொண்டேன். அதிலிருந்து என்னால் தப்பமுடியுமா? அருணாசலா.
இறைவனின் அருட்பார்வை இருந்தால் எல்லாம் செயல்கூடும் அல்லவா?

21 August 2014

97. அருணாசல அட்சரமணமாலை

97. வீடுவிட்டு  ஈர்த்துஉள  வீடுபுக்குப்  பையஉன்
      வீடுகாட் டினையருள் அருணாசலா

நான் வாழ்ந்து வந்த மதுரையம்பதி வீட்டைவிட்டு என்னை இடம் பெயர்த்து, என்னுடைய  இதய வீட்டில் புகுந்து, மெதுவாக உன் ஆன்மவீட்டைக் காட்டி எல்லாவற்றுக்கும் முடிவான முக்திவீட்டைக் காண்பித்தாய் அருணாசலா.

98. வெளிவிட்டேன் உன் செயல்  வெறுத்திடாது
      உன்னருள் வெளிவிட்டு எனைக்கா அருணாசலா
யாரும் அறியாது என் மனதினை கொள்ளை கொண்டு, என்னை நீ தன்வயமாக்கிக் கொண்டதை உன்னருளாலேயே நான் வெளியே அனைவரும் அறியச் செய்தேன் என்பதற்காக என்னை வெறுத்திடாமல் என்னைக் காத்து அருள் புரிவாயாக.

99. வேதாந் தத்தே வேறற விளங்கும்
      வேதப் பொருள் அருள் அருணாசலா

வேதவியாசர் எழுதிய நூல் வேதாந்தம்! இதன் முடிந்த முடிவான பொருள் ஆன்ம ஞானமாகும். இதனை எனக்கு அனுபவமாக்கிய அருணாசலனே உம்மை வணங்குகிறேன்.

100. வைதலை வாழ்த்தா வைத்தருட் குடியா
         வைத்தெனை விடாதருள் அருணாசலா

நான் இகழ்ந்து கூறுவது போல் தோன்றும் என் உரைகளை புகழுரைகளாக ஏற்றுக் கொண்டு
உன் அடியார்களுள் ஒருவனாய் என்னையும் சேர்த்துக் கொண்டு எப்பொழுதும் என்னைக் கை விடாது
அருள் புரிவாய் அருணாசலா.




   










20 August 2014

96. அருணாசல அட்சர மணமாலை


96. விட்டிடிற்  கட்டமாம்  விட்டிடாது உனை  உயிர்
      விட்டிட அருள்புரி அருணாசலா

யாரை விட்டால் யாருக்குக் கஷ்டம்? இறைவன் அடியாரைக் கை விட்டுவிட்டால் அடியார்களுக்கு மாறாத கஷ்டம்; அடியார்கள் இறைவனை மறந்துவிட்டால் அப்போதும் அவர்களுக்கே துன்பம்.
எனவே அருணாசலா, உயிர் உடலைவிட்டுப் பிரியும் போதும் என்னைக் கை விட்டுவிடாதே. உன் நினைவிலேயே  என் உயிர் பிரிய அருள்வாய்.

அபிராமிப் பட்டர் என்ன சொல்கிறார்? காலன் என்மேல் வரும்போது,'வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து வெளிநிற்க வேண்டும்,' என்றும், 'உயிர் உறவு அற்று அறிவு மறக்கும்
பொழுது என் முன்னே வரல் வேண்டும்,' என்று அபிராமி அம்மையை வேண்டுகிறார்.