15 July 2014

61. அருணாசல அட்சரமணமாலை

61. நைந்துஅழி கனியால் நலன்இலை பதத்தின்
            நாடி உட்கொள் நலம் அருணாசலா

அருணாசலனே!
நினைந்து, உணர்ந்து,  அகம்குழைந்து உருகி உன்னைச் சரணடைந்தேன்.
 என் உள்ளக் கனியானது நீஆட்கொள்ள தகுதியுடையதாக இருக்கிறது.
நீ அதனை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!
நைந்து அழுகிப் போன கனி எதற்கும் பயன்படாது.
அதுபோல எனக்கு அருள் செய்ய நீ காலம் தாழ்த்தினால் என் வாழ்வும் வீணாகிவிடும்.
எனவே அருள்செய்வாயாக.
அழுகிய கனியால் பயன் இல்லாதது போல பக்தி நெறியினின்று வழுவி, ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் என் மனம் அடங்குமானால் இந்தப் பிறவியால் பயனில்லை.
'நாடி உட்கொள்' -நீயே என்னைத் தேடி வந்து ஆட்கொள்வாயாக.

14 July 2014

60. அருணாசல அட்சர மணமாலை

நேசமில் எனக்கு உன் ஆசையைக் காட்டிநீ
     மோசம் செய்யாதருள் அருணாசலா

உன்மீது எனக்கு சிறிதும் நேசம் அதாவது அன்பு இல்லாதிருந்தது.என்றாலும்
உன் மீது பக்தி செய்ய வைத்து அருள் செய்தாய்  அருணாசலா.

'ஆசை காட்டி மோசம் செய்தல்' என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே  இருக்கிறது. இது தினசரி வாழ்வில் காணப்படும் ஒன்றே. நாம் விரும்பத ஒன்றைத் தருவதாகக் கூறி பிறகு அதனைத் தர முடியாது என்று சொல்பவரை மோசம் செய்தான் என்கிறோம்.

இங்கு ஶ்ரீ ரமணர் உன்னை அறியாதிருந்த வயதில் உன்னைக் காண்பித்து, ஆசையை உண்டாக்கி
மோசம் செய்யாமல் அருள் செய்தாய் என்றும், மற்றுள பக்தர்களுக்கும் அருள் செய்ய வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.


12 July 2014

58.அருணாசல அட்சர மணமாலை

நூலறி வறியாப்  பேதையன் என்றன்
    மாலறி வறுத்தருள் அருணாசலா

(நூலறிவு - புத்தகங்களைப் படிப்பதால் வரும் அறிவு; மாலறிவு -குழப்ப அறிவு, அரைகுறை அறிவு; மால் - மயக்கம்.)
எந்த நூல்களையும் கற்றறியாத எனக்கு ஆன்ம ஞானத்தை அருளிய அருணாசலனே, உம்மை வணங்குகிறேன்.
ஆன்ம ஞானம் தரக் கூடிய நூல்கள் எதனையும் படித்து அறியாத பேதைமை உடையவன் நான். என் மனதினால் எனக்குள்ள அரை குறை அறிவினை நீக்கியருள் அருணாசலா.( இது பக்தர்களுக்கு)

புத்தகங்களைப் படிப்பதனால் ஆன்ம அறிவு உண்டாவதில்லை. அவை நமக்கு சந்தேகங்களையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. 
ஸ்ரி ராமக்ருஷ்ண பரம ஹம்சர் கல்வி கற்றவர் அல்ல. அவருடைய தூய உள்ளத்திலிருந்து தோன்றிய தெய்விகச் சொற்களைக் கேட்டு இன்புற்றது மானுடம்.

நூல்களைப் படிக்காமலேயே எனக்கு அனைத்தையும் உணரச் செய்த அருட்பெருஞ் சோதியே என்பார் வள்ளலார்.
'ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ் சோதி' - அகவல்

11 July 2014

57. அருணாசல அட்சரமணமாலை

நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
      எண்ணலை இறும் என்ற அருணாசலா

நுண்ணுரு - நுட்பமான உரு, ஆன்ம உணர்வு; விண் - ஆகாசம்;  நண்ணுதல் - ஒன்றுதல்;
இறும்- அற்றுப் போகும்.

நுண்மையான ஆன்ம உணர்வான உன்னை நான் மன ஆகாயத்தில் அடைந்து ஒன்றிட
எண்ணங்களாகிய அலைகள் ஓய்ந்து நான் அமைதி அடைவேன் அருணாசலா.
ஒவ்வொரு மனிதனிடத்தும் நுண்மையான அணு வடிவில் ஆன்ம உணர்வாய் விளங்கும்
அருணாசலன் பிரபஞ்சம் முழுமையும் தாங்கி நிற்கும் ஆகாய வடிவினனாகவும் விளங்குகிறான்.

''விண்உறு விண்ணாய் விண்நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ் சோதி''
உறு விண் அணுக்களாகவும்  அவற்றைத் தாங்கி நிற்கின்ற நிலை விண் அணுக்களாகவும்
பொருந்தி அவற்றை இயக்கும் அருட்பெருஞ் சோதியே.
                                                           (  வள்ளலார், அகவல் -விளக்கம் சேலம் திரு. இரா. குப்புசாமி)

  

10 July 2014

56. அருணாசல அட்சரமணமாலை

நீநானறப்  புலி  நிதங்களி  மயமா
      நின்றிடு  நிலையருள்  அருணாசலா

நீ நானற - நீ நான் அற; புலி - புல்லி(இடை எழுத்து குறைந்தது);களி -இன்பம்.

நீ நான் என்பது மறைந்து போய், இருவரும் ஒன்றாகக் கலந்து தினமும்,  சதாசர்வ காலமும்
சச்சிதானந்தத்தில் நிலைத்து நிற்க அருள் புரிவாய்.







9 July 2014

55. அருணாசல அட்சரமணமாலை

நின்னெரி  எரித்தெனை  நீறாக்  கிடுமுன்
                 நின்னருள் மழை பொழி அருணாசலா
கருணைமயமானவன் இறைவன். அவனால் தன் பக்தர்களை எரித்து சாம்பலாக்க முடியுமா?
நம்முடைய மனதில் ஏற்படும் பல்வேறு உணர்வுகளும் நம் உடலின் நாடி நரம்புகளை பாதிக்கின்றன.
ஆன்ம சாதனை புரியும் ஒருவன் சரியான வழிகாட்டும், குருவின் துணை கொண்டே அப்பாதையில் நடக்கமுடியும். இல்லாவிடில் பல பாதிப்புகள் ஏற்படும்.ஆன்ம சாதனையின் உச்சத்தில் உடல் வெம்மையுறும்.

 உன்னை அடைய வேண்டும் என்ற என் தாபத்தால் ஏற்பட்ட உஷ்ணமானது என்னை எரித்து சாம்பலாக்கும் முன் உன் அருள் மழையால் என்னைக் குளிர்விப்பாய் என வேண்டுவதாகச் சொல்கிறது இக்கண்ணி.

நீறு -திருநீறு, விபூதி, வடிவம்


8 July 2014

54. அருணாசல அட்சரமணமாலை

நாணிலை  நாடிட நானாய்  ஒன்றிநீ
   தாணுவா நின்றனை அருணாசலா

குழந்தைகள் ஒளிந்து விளையாடுவார்கள். அந்த விளையாட்டில்  நடுநாயகமாக இருப்பது தாச்சிக் கம்பம்.  அந்தக் கம்பத்தில் சாய்ந்து கொண்டுதான் கண்ணை மூடிக் கொண்டு எண்ணுவார்கள்.
அதைப் போல மனிதர்களுக்குத் தாணுவாக, சாய்ந்து கொள்ளத் தூணாக இருப்பவன் அருணாசலன்!
ஆத்திகனோ, நாத்திகனோ நோய்க்கு மருந்தாய், ஆறுதல் அளிக்கும் நாயகனாய் நிற்பவன்!

அருணாசலனே! என் அகந்தையை விட்டொழித்து, சிறிதும் என் விருப்பத்தைச் சொல்ல வெட்கப்படாமல் உன்னை நாடி நின்றேன். மிகுந்த கருணையுடன் 'நீ'  என்னோடு கலந்து ' நானாகி' உறுதியுடன் நின்றாய். என்ன தவம் செய்தனன் !

நானாய் நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவாய் நின்றனை? எனக்கு நாணம் இல்லை, அருணாசலா.
உனக்கு ''நாணிலை"? நான் நாடிட நானாய் ஒன்றி நீ தாணுவாய் நின்றனையே?
இறைவனை நாடி அவனாய் ஒன்றி நிற்போம்!