8 November 2012

22.அன்பு மாலை

அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே

அற்புதப் பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே

தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே

செங்கனியே மதிஅணிந்த செஞ்சடை எம்பெருமான்

மருள் நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு

மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே

இருள் நிறைந்த மயக்கம் இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்

என்னுடைய நாயகனே இது தருணங் காணே.

                              -அருட் பிரகாச வள்ளலார்


                திருச்சிற்றம்பலம். 

7 November 2012

21.சித்தர் பாடல்கள்

வாயிலே குதித்த நீரை எச்சிலென்று சொல்கிறீர்

வாயிலே குதப்பு வேதம் வரம் எனக்கடவதோ?

வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்

வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.


ஓதுகின்ற வேதம் எச்சில்; உள்ள மந்திரங்கள் எச்சில்,

போகங்களான எச்சில்: பூதலம் ஏழும் எச்சில்:

மாதிருந்த விந்து எச்சில்; மதியும் எச்சில், ஒளி எச்சில்

ஏதில் எச்சல் இல்லதிலை இல்லை இல்லை இல்லையே?

6 November 2012

20.சித்தர் பாடல்கள் -சிவவாக்கியர்

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்

ஐயன் வந்திங்கென்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்,

ஐயன் வந்திங்கென்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்

வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பது இல்லையே.



கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே,

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதுவும் இல்லை இல்லை இல்லையே.

                 திருச்சிற்றம்பலம் 

5 November 2012

19.சித்தர் பாடல்கள் -சிவவாக்கியர்

அஞ்செழுத்திலே பிறந்து அவ்வஞ்செழுத்திலே வளர்ந்து

அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!

அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்துகூட வல்லீரேல்

அஞ்சலஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.


ஓடமுள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;

ஓடமுள்ள போதெல்லாம் உறுதி பண்ணிக் கொள்ளலாம்;

ஓடமும் உடைந்த போதங்கு ஒப்பில்லாத வெளியிலே

ஆடுமில்லை கோலுமில்லை ஆருமில்லை ஆனதே.

                         



                   திருச்சிற்றம்பலம்







4 November 2012

18.சித்தர் பாடல்கள்- சிவவாக்கியர்

அஞ்சு மூணும் எட்டதாய் அநாதியான மந்திரம்

நெஞ்சிலே நினைந்து கொண்டு நீர் உருச் செபிப்பீரேல்

பஞ்சமான பாதகம் பண்ணூறு கோடி செய்யினும்

பஞ்சு போல் பறக்கும் என்று நான் மறைகள் பன்னுமே.



அண்டவாசல் ஆயிரம் பிரசண்ட வாசல் ஆயிரம்

ஆறிரண்டு நூறுகோடி யான வாசல் ஆயிரம்

இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாம்

எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே?


                 திருச்சிற்றம்பலம்

3 November 2012

17.சித்தர் பாடல்கள்--சிவவாக்கியர்

ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்

ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவல் உற்றவே.



மண்ணும் நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும் நீ;

எண்ணும் நீ எழுத்துநீ இசைந்த பண்ணெழுத்தும் நீ

கண்ணும் நீ மணியும்நீ கண்ணில் ஆடும் பாவை நீ

நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.


                திருச்சிற்றம்பலம்

28 October 2012

16.வடிவுடை மாணிக்க மாலை

கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே

உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே

அடல்விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே

மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே.

மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே

கானேர் அளகப்பசுங்  குயிலே அருட் கரும்பே

தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே

வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே. -வள்ளலார்
               
                  திருச்சிற்றம்பலம்