7 July 2014

53. அருணாசல அட்சரமணமாலை

                                     
நகைக்கிட மிலைநின் நாடிய எனைஅருள்
நகையிட்டுப் பார் நீ அருணாசலா 

நகை - பரிகாசமாக சிரித்தல், ஆபரணம்.

அருணாசலனே! நீ யார்? ஆதியன், சோதியன்,காக்கும் காவலன், காண்பரியப் பேரொளி, தில்லைக் கூத்தன்! நானோ உன் கால் தூசு!  அப்படி இருக்கும்போது உன்னைக் காண வேண்டும், அடையவேண்டும், இரண்டறக் கலக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறேன் என்று என்னைப்
பரிகாசம் பண்ணிச் சிரிக்க இதுவா நேரம்?
என்னைப் பார்த்து நகைக்காமல், எனக்கு உன் அருளாகிய நகையை, சற்று அணிவித்து அழகு பாரேன்.

இறைவனின் அருள்நகையை அணிந்த அருளாளர்கள் அட்சரங்களால் ஆன மணமாலைகளை அவனுக்கு அணிவித்து அழகு பார்த்தனர். வள்ளலாரின் திருவருட்பா மாலை, அருணகிரியின் திருப்புகழ் மாலை, நாயன்மார்களின் தேவார மாலை, ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்த மாலை, ஶ்ரீஅரவிந்தரின் 'சாவித்ரி' மாலை எத்தனை எத்தனை சொல்மாலைகள்! அத்தனை மஹான்களின் பாதகமலங்களுக்கும் வந்தனங்கள்.

6 July 2014

52. அருணாசல அட்சரமணமாலை

தோடமில்  நீஅகத்  தோடொன்றி என்றுஞ்சந்
      தோடம் ஒன்றிட அருள் அருணாசலா

தோடம் என்பது 'தோசம்' -'தோஷம்';அகத்தோடொன்றி - அகத்துடன் இரண்டறக் கலந்து;
சந்தோடம் - சந்தோஷம்.

எந்தக் குற்றமும் அற்றவன் நீ! பல குற்றங்களும் குறையும் உள்ளவன் நான்.
அதனால் எனக்கு உன்னோடு ஒன்றுகின்ற சக்தியில்லை. ஆனால் அந்த உரிமை, சக்தி உனக்கு உண்டு.
நீ என்னோடு ஒன்றினால்  மகிழ்ச்சியானது என்னோடு ஒன்றும்! சதா சர்வ காலமும் நான் ஆனந்தத்தில் திளைத்திருப்பேன்!அருள்வாயாக அருணாசலனே!

5 July 2014

51.அருணாசல அட்சர மணமாலை

தொட்டருட் கைமெய் கட்டிடா யெனிலியான்
நட்டமாவேன் அருள் அருணாசலா

கைமெய் - மெய்கை உண்மையான கரங்கள்; கட்டிடாயெனில் -கட்டாவிட்டால், வேரொடு நீக்காவிட்டால்; நட்டமாவேன் - இப்பிறவிப் பயனை இழப்பேன்

அருள் நிறைந்த நின் திருக்கரங்களால் உண்மையான என் ஆன்மாவாய் விளங்கும் பரசிவத்தோடு, அகந்தையை வேரறுத்து என்னைக் கட்டியணைக்காவிடில், சேராவிடில் இந்தப் பிறவியால் என்ன பயன்?

உருவமற்ற இறைவனுக்கு கரங்கள் ஏது? எப்படி மெய்யைக் கட்டமுடியும்?
சூரிய ஒளியினால் எப்படி நமக்கு வெம்மை கிடைக்கிறது?ஒரு மலரில் உள்ள மென்மையான மணம் இருக்கும் இடத்தை நம்மால் காண முடியுமா? அது போல்தான் இறைவனின்'அருட்கை தொட்டு மெய் கட்டும்'.  காணமுடியாது!
''கருத்து மகிழ்ந்து என் உடலில் கலந்து,உளத்தில் கலந்து, கனிந்து உயிரில்கலந்து, அறிவில் கலந்து'' என்று இறையொளி தன்னோடு கலந்த பேரின்பத்தைப் போற்றுவார் வள்ளல் பெருமானார்.

4 July 2014

50.அருணாசல அட்சரமணமாலை

தைரிய  மோடுமுன்  மெய்யக  நாடயான்
   தட்டழிந்தேன் அருள் அருணாசல

அருணாசலனே,
நான் யார் என்பதை நீயே எனக்குக் காட்டிக் கொடுப்பாய்,
'தானே தானே தத்துவம்,
திரும்பி அகந்தனை அகக் கண்ணால் பார்,
உன்னை ஆன்மவிசாரத்தால் துப்பறிந்து கண்டுபிடி, ' என்றவர்,
 தூய மனம், மொழி உடையாருக்கே தரிசனம் தரும் உன் உண்மையான அகம் தோய வேண்டும் என்று சொன்னவர்,
இறைவனே நீ எத்தனை பெரியவன்? பரிபூரணனான உன்னை அடைய தைரியமோடுதான் வந்தேன்! உன்னை மறைத்திருந்த மாயத் திரையை நீக்கி,
என் அகந்தை அழியச் செய்து,  உன் அருளால் உன்னை அடையச்செய்தாய்.

3 July 2014

49. அருணாசல அட்சர மணமாலை

தேடா துற்றநல் திருவருள் நிதிஅகத்
 தியக்கம் தீர்த்தருள் அருணாசலா

நிதி - செல்வம்.
தேடாது உற்ற - தேடி அலையாமல் எனக்குக் கிடைத்த
திருவருள் நிதி - இறைவனுடைய அருளாகிய செல்வம்
அகத்து இயக்கம் - என் மனதின் எண்ணங்களின் வேகத்தை
தீர்த்தருள் - அடக்கி ஆளுதல்

எங்கும் தேடித் திரியாது தமக்கு இறையருள் ஆகிய செல்வம் கிடைத்ததையும்,
எண்ணங்கள் அடங்கி, மனம் அமைதியுற்று ஆனந்தபரிபூரணத்தில் ஒடுங்கியதையும்
இங்கு எடுத்துச் சொல்கிறார்.

2 July 2014

48. அருணாசல அட்சரமணமாலை

தெய்வமென்று உன்னைச்  சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாசலா


சார்தல் - புகலடைதல், சரணடைதல்.
தெய்வம் நீயே என்று நான் உன்னிடம் புகலடைந்தேன். என் சரணாகதியை ஏற்றுக் கொண்டு என் அகந்தையை அடியோடு ஒழித்து நானாகிய என்னைத் தானாக்கிக் கொண்டாய் அருணாசலா.

''யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ,''  நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ,''
''நான்ஆனான்  தான்ஆனான் நானும்தா  னும்                                                                                              ஆனான்,''  என்று ஆனந்தக் கூத்தாடுகிறார்                                                                                                வள்ளல் பெருமானார்.
                                                                                         

1 July 2014

47. அருணாசல அட்சரமணமாலை

தூய்மன  மொழியர்  தோயுமுன்  மெய்யகந்
     தோயவே  அருள்என்  அருணாசலா

தூய்மையான மனம் உடையவர்களே, தூய இன்சொற்களைப் பேசவல்லவர்.''மனத்துக்கண் மாசிலன் ஆதல்" என்றார் வள்ளுவப் பெருந்தகை.
(தோயுமுன் -தொடுதல் செய், மெய்யகம்- உண்மையான உட்பொருள், ஆன்மா)
தூயமனம் உடையவர்களின் இனிய மொழிகள் உன்னை அலங்கரிக்கின்றன. அத்தகைய உன் ஆன்மாவில் தோய்ந்து ஒன்றுபடும்படி அருள்வாயாக.
பாலில் மோர் சேர்த்தால் இரண்டும் தோய்ந்து தயிராகிறது. அதுபோல என்னை உன் அருட் சக்தியுடன் தோய்த்து, நானே நீயாகும்படி அருள்வாயாக.